‘டயாலசிஸ்’ மகனைக் காப்பாற்றப் போராடிய அம்மா: மூன்று ஆண்டுகளாக உதவிய உள்ளங்கள்

By கா.இசக்கி முத்து

மீராதேவி அம்மா, தன் மகன் சிவசங்கரனை அழைத்துக்கொண்டு மயிலாப்பூர் லஸ் அருகே வாரத்துக்கு மூன்று முறை வருவார். அப்படி வரும்போதெல்லாம் அவர்களைப் பார்க்கச் சென்றிருக்கிறேன். லயன்ஸ் கிளப் டயாலிசிஸ் சென்டரில்தான் சென்று பார்ப்பேன். ‘ரெண்டு கைலயும் ஊசி குத்தி குத்தி, வலிக்குது சார். கையைத் தூக்கவே முடியல சார். என் கையப் புடிச்சிக்கிட்டு அம்மாதான் கூட்டிட்டு வர்றாங்க சார். இதெல்லாம் எப்போ சார் மாறும்? பழையபடி நான் தெம்பாகுறது, வேலைக்குப் போறதெல்லாம் நடக்குமா சார்?’ என்று வெள்ளந்தியாகச் சிரித்துக் கொண்டே கேட்பார் சிவசங்கரன். அந்த சிவசங்கரன் இப்போது இல்லை. இன்று காலை இறந்துவிட்டார். அதிர்ந்துவிட்டேன். உடைந்தே போனேன்.

இன்றைய என்னுடைய நாள் வழக்கமான நாளாக இருக்கவில்லை. ஒல்லியாய், கண்கள் இடுங்கி, கன்னம் ஒடுங்கி, மிருதுவாகிவிட்ட உள்ளங்கைகளுடன் என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசிய சிவசங்கரனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

ஒருநாள், பாரதி தமிழன் அழைத்தார். சிவசங்கரன் எனும் இளைஞரைப் பற்றிச் சொன்னார். விரிவாகவே சொன்னார். கையில் பணம் கொடுத்தார். ‘சிவசங்கரன் அம்மா இருப்பாங்க. இதைக் கொடுத்துரு’ என்று சொல்லி, போன் நம்பரும் கொடுத்தார். அந்த அம்மாவின் பெயர் மீராதேவி.

மயிலாப்பூர் லஸ் கார்னருக்கு அருகில் உள்ள லயன்ஸ் கிளப் டயாலிசிஸ் சென்டர். சிவசங்கரனையும் அவரின் அம்மாவையும் பார்த்தேன். கிட்டதட்ட டயாலிசிஸ் மூலமாகத்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார். கிட்னி ஃபெயிலியர். அம்மாதான் எல்லாமே. உடல் நலப்பிரச்சினையால், வேலைக்குப் போவதும் தடைப்பட்டுவிட்டது. ஒருகுழந்தையைப் பார்த்துக்கொள்வது மாதிரி அம்மாதான் பார்த்துக்கொள்கிறார். அப்பா இல்லை. டயாலிசிஸ், மருந்து, மாத்திரைக்குப் பணமும் இல்லை.

அன்றைய டயாலிசிஸுக்கான தொகையைக் கொடுத்தபோது, அந்த அம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு நிம்மதியும் நம்பிக்கையும் சுடர்விட்டது. ''ஒவ்வொரு முறையும் பிச்சை எடுக்காத குறையா, டயாலிசிஸுக்கு பணம் பொரட்டுறதுக்குள்ளே போதும்போதும்னு ஆயிரும் தம்பி. உங்க தயவால அடுத்த முறை டயாலிசிஸ் பண்ணிடலாம்'' என்றார் கைகளைப் பிடித்துக்கொண்டு.

அதன் பிறகு, நாமும் நம்மால் முடியும்போது கொடுப்போம் என முடிவு செய்தேன். அதையடுத்து சிவசங்கரனையும் அவரின் அம்மாவையும் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தேன்.

திங்கள், புதன், சனி என வாரத்துக்கு மூன்று நாட்கள்... மூன்று முறை... டயாலிசிஸ் செய்துகொள்ளவேண்டும். ஒருமுறை செய்து கொள்ள 700 ரூபாய். அப்புறம் ஒரு ஊசியும் கூட!

’’சார், ரெண்டு கைலயும் மாறிமாறி ஊசி குத்திட்டே இருக்காங்களா. வலிக்குது சார். தாங்கமுடியல சார். கையைத் தூக்கக் கூட முடியல சார்’’ என்று சின்னக் குழந்தையைப் போல சொல்லும் சிவசங்கரனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் அப்படியே பக்கத்தில் நின்றுவிட்டு, ‘சரியாயிரும்’ என்று சொல்லிவிட்டு வருவேன்.

‘’கிட்னி கிடைச்சு, மாத்திட்டோம்னா பையன் பொழச்சுக்குவான் தம்பி. பைக்ல ஜம்முன்னு வேலைக்குப் போயிட்டிருந்தவன். என்னை ஒரு ராணி மாதிரி பாத்துக்கிட்டவன். அவனை இப்படிப் பாக்கவே முடியல என்னால! அதுக்கு எதுனா ஒரு வழி பண்ணமுடியுமா ராஜா’’ என்று மீராம்மா கேட்கும்போது, 'பாக்கலாம்மா. சீக்கிரம் சரியாயிரும்மா. கவலைப்படாதீங்கம்மா' என்று ஒவ்வொரு முறையும் ஆறுதலாக ஏதேனும் வார்த்தைகளைத் தேடித்தேடிச் சொல்லிவிட்டு வருவேன்.

சில சமயங்களில்... மாதக்கடைசி, திடீர் வண்டி வாகன ரிப்பேர் செலவு என்று இறுக்கிப் பிடிக்கும் வேளையில், யாரிடம் வாங்கலாம், கேட்டால் யார் தருவார்கள் என்றெல்லாம் யோசித்து, தயங்கி, கேட்டு... என்று தவித்துப் போய்விடுவேன். அப்படியான தருணத்தில்தான், நமக்கு நன்றாகத் தெரிந்த நம்மை நன்றாக அறிந்த நடிகர்களிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது. மயிலாப்பூர் லயன்ஸ் கிளப் கணக்காளர் பிரபுவும் பழக்கமாகிவிட்டிருந்தார். அவரிடம் ஒரு மாதம் முடியும்போது எவ்வளவு ஆகிறதோ அந்தத் தொகையை மொத்தமாகச் செலுத்தி விடுவதற்கு அனுமதி வாங்கினேன். அல்லது 20,000 வந்ததும் மொத்தமாகத் தருகிறேன் என்றேன். சம்மதித்தார். உண்மையிலேயே பிரபு... தாராள மனதுக்காரர். புரிந்து உணர்ந்து இதற்கு சம்மதித்தார்.

அதையடுத்து, ஆலந்தூர் பக்கமுள்ள வீட்டில் இருந்து சிவசங்கரனை அவரின் அம்மா அழைத்துக் கொண்டு மயிலாப்பூருக்கு வருவார். அவருக்கு டயாலிசிஸ் நடக்கும். கிளம்பிச் செல்வார்கள். பிரபு போன் செய்து, ‘சார்... 20,000 நெருங்கப் போவுது சார்’ என்பார். வாட்ஸ் அப்பில் அந்த மாதத்துக்கான ஸ்டேட்மென்ட் அனுப்புவார். இப்படியாக கடந்த வருடங்களில், கேட்கும்போதெல்லாம் சிவசங்கரனுக்கு உதவிய நடிகர்கள் பலர் உண்டு. லயன்ஸ் கிளப் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிவைத்துவிட்டுச் சொல்லுவார்கள் நடிகர்கள். சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி, ஜி.வி.பிரகாஷ், சூரி, யோகிபாபு, இயக்குநர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் எனப் பலரும் நிஜவாழ்வின் நாயகர்களாகவே தோன்றினார்கள் எனக்கு.

ஒவ்வொரு முறையும் லயன்ஸ் கிளப்பின் வங்கிக் கணக்கில் டயாலசிஸுக்கான தொகை சென்றுவிடும். உடனே யார் வழங்கினார்களோ அவர்களின் பெயரில் பில், நன்றிக்கடிதம் என அனுப்பிவைப்பார்கள். பத்திரிகையாளர் பிஸ்மி, அமெரிக்காவில் உள்ள ஆனந்த், அருண் முதலானோரும் சிவசங்கரனுக்கு உதவினார்கள். ’வூட்லேருந்து மயிலாப்பூருக்கு ஆட்டோ, திரும்பவும் இங்கேருந்து ஆட்டோ. மத்தபடி உங்க உதவியால ஒருகுறையும் இல்ல தம்பி’ என்று சொல்லும் அம்மாவின் முகத்தில் நம்பிக்கை இன்னும் இன்னுமாகத் துளிர்விட்டிருந்தது.

இப்படியாக, மூன்று ஆண்டுகள் சிவசங்கரனுக்கு டயாலிசிஸ் தொடர்ந்துகொண்டே இருந்தது. கரோனா வந்து ஒடுக்கிவைத்த வேளையில், என்ன செய்யப் போகிறோம், யாரிடம் கேட்பது என்று மீண்டும் தயக்கம்... குழப்பம். ஆனால் தயக்கமே இல்லாமல் யோசிக்காமல் அருள்நிதியும் யோகி பாபுவும் உதவினார்கள்.

இந்தநிலையில்தான், சிவசங்கரன், கடும் தலைவலி என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே ’வயிற்றில் ரத்தக்குழாய் வெடித்துவிட்டது’ என்று தெரியவரவே, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்த சிவசங்கரனுக்கு. நேற்று (26-ம் தேதி) மூளையில் ரத்தக்கசிவு எனும் கவலைக்கிடமான நிலைக்குப் போராடிக்கொண்டிருந்தார் சிவசங்கரன்.

ஆனால், இன்று (27ம் தேதி) காலை 5.30 மணிக்கு சிவசங்கரன் காலமாகிவிட்டார். கேட்டதும் அதிர்ந்து போனேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எமனுடன் போராடிக் கொண்டிருந்த 32 வயது இளைஞனின் உடலும் உயிரும் முடிவுக்கு வந்துவிட்டது. மனித வாழ்வில் இறுதியாக எமனே ஜெயித்துவிடுகிறான்.

‘’புருஷன் போய்ச் சேர்ந்துட்டாரு. இவனுக்கு நான் ஒருத்திதான் இருக்கேன் ராஜா. எப்படியாவது இவனைப் பொழைக்க வைச்சிட்டேன்னா, அப்புறம் வேலைக்குப் போயிருவான். ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சிட்டேன்னா, இந்தக் கட்டை திருப்தியாப் போய் சேந்துரும் தம்பி. இவனைக் காப்பாத்தியே தீருவேன்னு இந்த ஏழை அம்மா, ஒரு வைராக்கியத்தோட இருந்துட்டிருக்கேன். எம் புள்ளைக்கு நான் மட்டும்தானே தம்பி இருக்கேன்’’ என்று ஒருமுறை என் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே சொன்னார் சிவசங்கரனின் அம்மா.

இனி ஆட்டோ இல்லை. மயிலாப்பூர் இல்லை. லஸ் லயன்ஸ் கிளப் டயாலிசிஸ் சென்டருக்கு அந்த அம்மா வரவும் அவசியமில்லை. புருஷனையும் இழந்தவர், தன் ஒரே மகனையும் இழந்துவிட்டார்.

‘’என் புள்ள பொழச்சுக்கிட்டு, திரும்பவும் வேலைக்குப் போய் என்னை ராணி மாதிரி பாத்துக்குவானாப்பா’’ என்று கேட்ட அந்த அம்மாவுக்கு மெளனத்தைத் தவிர என்னிடம் பதிலேதுமில்லை. ''தம்பி... ஓடியோடி வந்து உதவி செஞ்சீங்களே... இப்போ எம்புள்ள பையன் போயிட்டான் தம்பி. என்னை அம்போனு விட்டுட்டுப் போயிட்டானேப்பா'' என்று காலையில் போன் செய்தபோதும் உடைந்து நொறுங்கிவிட்ட மனதில் இருந்து எந்த வார்த்தையும் வராமல், தெம்பற்று நின்றேன்.

கொள்ளி போட வேண்டிய பிள்ளை இறந்துவிட்டார். ‘எம் புள்ளையோட கடைசி சடங்கு சாங்கியத்துக்குக் கூட காசில்லாம கிடக்குதுப்பா இந்த ஜென்மம்’ என்று வெடித்துக் கதறினார் மீராம்மா.

விஷயத்தைச் சொன்னதும், ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ நண்பர்கள் பதறிப் போனார்கள். ‘எங்களால் ஆன எல்லாத்தையும் செய்றோம்’ என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அங்கே மனிதநேயம் ஜனிக்க மட்டுமே செய்யும்; ஒருபோதும் மரணிக்காது என்று நெகிழ்ந்து கரைந்தேன்.

யாரோ, யாருக்கோ, எங்கோ உணவுப்பொட்டலங்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உணவாக மட்டுமே இல்லாமல், ஏதேதோ உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடுப்பவர்களின் பெயர் வாங்குபவருக்கோ, வாங்கிக் கொண்டவரின் பெயர் கொடுப்பவர்களுக்கோ தெரியாமல், சத்தமின்றி உதவிகள் அன்புப் பிரவாகமெடுத்து வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

உயிர் பிழைக்க காத்துக் கொண்டிருந்த சிவசங்கரனின் டயாலிசிஸ் உடல், இப்போது உயிரற்று, இறுதிச்சடங்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. கரோனா சோதனைகளெல்லாம் முடிந்த பிறகுதான் உடல் ஒப்படைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே... இன்னும் எத்தனையெத்தனை சிவசங்கரன்களோ... உயிரின் நிமிஷ நீட்டிப்புக்காக உதவிக்கரம் நீளாதா என்று கைநீட்டி, காத்துக்கொண்டே இருக்கிறார்கள். ’எம் புள்ள பொழச்சு வந்து என்னை ராணியாட்டம் பாத்துக்குவான்’ என்று மீராம்மா போல் அம்மாக்கள், வயிற்றில் இன்னும் கரு சுமந்தபடி, மனதில் பிள்ளைகளைச் சுமந்தபடி நம்பிக்கையை நசியவிடாமல் அடைகாத்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆகாயத்தை நோக்கி இறைவனையும் பூமியின் பக்கம் திரும்பி மனிதர்களையும் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

‘’புருஷனை அப்பவே இழந்தேன். இப்போ... புள்ளையையும் இழந்துட்டு நிக்கிறேம்பா. என்ன பாவம் பண்ணினேனோ... புள்ளையோட இறுதிச்சடங்குக்குக் கூட காசில்லாம நிக்கிறேன். ஒலகத்துல எந்த அம்மாவுக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாதுப்பா’’ என்று சிவசங்கரனின் உடலின் வருகையை நோக்கியும் உதவிக்கு மனிதம் தேடியும் வழியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் மீராம்மா.

அந்த அம்மாவின் தேவைகளை நிறைவேற்றித் தர... கனத்த இதயத்துடன், கரங்களை இணைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உலகில், அன்புக்கரங்களுக்குப் பஞ்சமே இல்லை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்