விமர்சனங்களை வெற்றியாக்கிய சோனாஜாரியா

“உனக்கெல்லாம் கணிதம் வராது, வாழ்க்கையில் உன்னால் சாதிக்கவே முடியாது” எனத் தன்னுடைய பள்ளிக் காலத்திலிருந்தே கசப்பான வார்த்தைகளைச் சந்தித்தவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சோனாஜாரியா மின்ஸ். ஆனால், அவர்தான் இன்றைக்கு நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் சோனாஜாரியா மின்ஸ். தெற்காசியாவின் மிகப்பெரிய பழங்குடிகளான ஒரான் பழங்குடிகள், திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த குருக் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். பெரும்பாலான பழங்குடிகளின் மொழிகளைப் போலவே குருக் மொழியும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக இல்லை. இதனால் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கச் சென்றார் சோனாஜாரியா. ஆனால், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருக்குப் பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தாய்மொழி அல்லாத இந்தி மொழியைப் பயிற்று மொழியாக எடுத்து தன்னுடைய பள்ளிக் கல்வியில் காலடி எடுத்துவைத்தார் சோனாஜாரியா.

கல்வியே ஆயுதம்

பழங்குடி என்ற காரணத்தால் சிறுவயதிலேயே பாகுபாட்டை அனுபவிக்க நேர்ந்த காரணத்தால் கல்வியை தன்னுடைய திறமைக்கான ஆயுதமாக மாற்றினார். குறிப்பாக கணிதப் பாடத்தில் சிறந்த மாணவியாக விளங்கினார் சோனாஜாரியா. இவரின் திறமையை ஊக்குவிக்கப் பல ஆசிரியர்கள் பக்கபலமாக இருந்தனர். ஆனால், அதேநேரத்தில் பழங்குடியின மாணவி என்ற காரணத்தால் பிற்போக்கு எண்ணம் படைத்த சில ஆசிரியர்களால் பலநேரங்களில் அவமானங்களையும், இடர்ப்பாடுகளையும் அவர் சந்திக்க நேரிட்டது.

இதுகுறித்து பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துள்ள அவர், “ஒரு முறை கணித ஆசிரியர் ஒருவர் நான் எழுதிய கணிதத் தேர்வுத்தாளை வைத்துக்கொண்டு ‘நீ ஒரு பழங்குடியினப் பெண். எப்படி உன்னால் சரியாக அனைத்துக் கணக்குகளையும் எழுத முடிந்தது. நிச்சயம் இந்தக் கணக்குகளை நீ எழுதியிருக்க வாய்ப்பில்லை’ என்ற அந்த ஆசிரியர் நான் பெறவிருந்த நூறு மதிப்பெண்ணைக் குறைத்து வழங்கினார்” எனக் கூறியுள்ளார்.

வகுப்பில் சிறந்த மாணவியாக இருந்தாலும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் சோனாஜாரியா மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதுபோன்ற பேச்சுகளால் முடங்கிவிடாமல் தன்னுடைய திறமையால் மற்றவர்களுடைய கருத்து தவறு என்பதை நிரூபிக்க நினைத்தார்.

சென்னையில் படித்தவர்

வட இந்தியாவில் அதிக அளவு நிலவும் சாதியப் பாகுபாடு காரணமாகக் கல்லூரி படிப்பைத் தமிழகத்தில் மேற்கொண்டார். சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்த சோனாஜாரியா முதுகலை கணிதவியலை மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் முடித்தார். படிப்பில் சிறந்த மாணவியாக மட்டுமல்லாமல் ஹாக்கி விளையாட்டில் பல்கலைக்கழக அளவில் சிறந்த வீராங்கனையாகவும் இருந்துள்ளார். பின்னர் பட்ட மேற்படிப்பிற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) கணினி அறிவியல் பாடத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முதல் பேராசிரியர் பணியைத் தொடங்கினார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார். கணினி அறிவியல் துறையில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதேநேரம் பேராசிரியராகப் பணியாற்றவும் ஜே.என்.யு சிறந்த இடமாக இருக்கும் என அவர் கருதினார். இதனையடுத்து 1992-ம் ஆண்டு ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். கடந்த 28 ஆண்டுகளாகப் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றியுள்ள அவர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வரும் பல மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஜே.என்.யு-வில் நடந்த வன்முறையில் வலதுசாரி அமைப்பினரால் தாக்கப்பட்ட பேராசிரியர்களில் சோனாஜாரியாவும் ஒருவர். அதேபோல் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றிவந்த 141 ஜார்க்கண்ட் பெண் தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தார்.

பொறுப்பும் கடமையும் அதிகரித்துள்ளது

இந்நிலையில் ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு சோனாஜாரியா விண்ணப்பித்திருந்தார். படிப்பு, பதவி உள்ளிட்ட தளங்களில் பாகுபாட்டையே அதிக அளவு சந்தித்த சோனாஜாரியா தான் துணைவேந்தராக நியமிக்கப்படுவோம் என எதிர்பார்க்கவில்லையாம்.

“நான் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செய்தி உண்மையில் எனக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒருநிமிடம் இது உண்மைதானா என யோசித்தேன். ஆனால், நான் துணைவேந்தராக அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு தளங்களைச் சேர்ந்த தலித் அமைப்பினர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போதுதான் என் முன்னால் உள்ள கடமையை உணர்ந்தேன். இப்போது என் தோளில் அதிக அளவு பொறுப்பும் கடமையும் உள்ளது என உணர்கிறேன். மூன்று வருடத் துணைவேந்தர் பொறுப்பு சிறப்பான விஷயங்களைச் செய்வதற்கான தருணம்” என்கிறார் சோனாஜாரியா மின்ஸ். இப்பணி முடிந்த பிறகு மீண்டும் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கே பேராசிரியர் பணியைத் தொடரவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE