அப்போ எனக்கு நாலு வயசுதான் இருக்கும். மங்கலா அந்தச் சம்பவம் நியாபகம் வருது.
தேய்பிறை காலம். கிழக்கே எலந்த மரத்துக் கிளைகளுக்கு நடுவுல பழுப்பு நிறத்துல பாதி நிலா. அப்பத்தான் மேல வந்திருக்கும் போல.
எலந்தமரத்துல சிமிருகளுக்கு நடுவால காக்கா கூடு கட்டி குஞ்சு பொரிச்சிருந்தது. நிலா வெளிச்சத்துல குஞ்சுக லேசா கத்த, காக்கா எடம் மாறி உக்காருது.
நடுராத்திரி. கும்மிருட்டு. அக்காவும் நானும் வெளித்திண்ணையில படுத்திருந்தோம்.
» பன்முகக் கலைஞர் சிவகுமார் எழுதும் கோவை மண் மணக்கும் காவியம்; கொங்கு ‘தேன்’: 1- கோசாணம்
» முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் ரூ.25 லட்சம் உதவி
‘‘அய்யோ.., சாமீ... தலையில கல்லைப் போட்டுட்டுப் போயிட்டியேடா...!’’
அம்மாவோட குரல்.
‘விலுக்’குனு உதறீட்டு எழுந்தேன். அக்காவும் முழிச்சுக்கிச்சு. அக்காவுக்கு என்ன விட மூணு வயசு கூட இருக்கும்.
ரெண்டு பேரும் தூக்கக் கலக்கத்துல பாயிலிருந்து தவந்துகிட்டே வாசப்படிகிட்ட போயி, உள்ளே எட்டிப் பார்த்தோம். எங்கண்ணன் - 16 வயசு சண்முகம். அந்த வயசுலயே நெடுநெடுன்னு வளர்ந்தவன். குப்புறப்படுத்து கும்புட்டுட்டு இருந்தான்.
அகல் விளக்கு ஒண்ணு எரிஞ்சுட்டிருந்தது. அம்மாவுக்கு சுருட்டை முடி. மகனுக்கு வேப்பிலைக் கொழுந்து அரைச்சு தொடை இடுக்குல தடவீட்டு, பக்கத்தில வச்சிருந்த ‘கொழவி’க் கல்லை எடுத்து நெத்தியில அடிச்சு அழுதுட்டிருந்தாங்க.
நெத்தியிலயிருந்து சொட்டு சொட்டா ரத்தம் வடியுது. தலைமுடி கலைஞ்சு விரிஞ்சு கிடக்குது. கீழிருந்து விளக்கு வெளிச்சம் மூஞ்சியில அடிக்கிறப்போ தாவாக் கொட்டை, மூக்கு அடிப்பக்கம், புருவத்துக்கு கீழேன்னு வெளிச்சம் ஒரு மாதிரி அடிக்க, அம்மா மூஞ்சி பேய் மாதிரி இருந்துச்சு. அதை விட அம்மா நிழல் சுவத்துல பெரிசா பயமுறுத்துச்சு.
எதுத்தாப்பல எங்கம்முச்சி. கொஞ்சம் கறுத்த ஒடம்பு. தாரை, தாரையா கண்ணுல தண்ணி உட்டுட்டு தேம்பித் தேம்பி அழுதுட்டிருந்தது.
அம்மா ஏன் அழுகறாங்கன்னு எங்க அக்காகிட்ட கேட்டேன். ‘அண்ணன் செத்துப் போயிட்டாம்பா!’ அப்படீன்னு சொல்லுச்சு. சாவுன்னா 4 வயசுப் பையனுக்கு என்ன புரியும்? மலங்க மலங்க முழிச்சிட்டிருந்தேன். ஊட்ல எல்லோரும் அழுகறாங்கன்னு நானும் சேர்ந்து அழுதேன்.
அண்ணன் சண்முகன் என்னை விட 12 வயசு பெரியவன். அவன் எங்கூட அந்த ஊர்ல இருந்த மாதிரி நியாபகமே இல்லை.
பொள்ளாச்சி மாமா அவனைக் கூட்டீட்டுப் போயி, அங்கேயே அவனை ரெண்டு மூணு வருஷம், அவங்க ஊட்லயே தங்க வச்சு படிக்க வச்சிருக்காரு. லீவுல கிராமத்துக்கு வந்தவன் கூட ரெண்டு மூணு நாள் பழகுனதுதான். வேற அவனைப் பத்தி ஒண்ணும் தெரியாது.
முந்தின நாள் நாங்க குடியிருந்த சொந்த ஊட்ல பெருச்சாளி ஒண்ணு செத்து மொகட்டுலயிருந்து சாமி ரூமுக்குள்ளே உழுந்துடுச்சு. பெருச்சாளி செத்து விழுந்தா அங்கே ‘பிளேக்’ அறிகுறி இருக்குன்னு அர்த்தம். அதாவது அந்த வீட்ல இருக்கிறவங்களை பிளேக் கிருமி எந்த நிமிஷத்துலயும் தாக்கும். அப்புறம் என்ன, ஒரே நாள்ல 10, 20 பேர் பொத்து பொத்துன்னு உழுந்து சாவாங்க.
பெருச்சாளிய சுட்டு தூரத்துல எறிஞ்சுட்டு, அம்மா, ‘தென்புறத்து ஊட்டுக்கு குடிபோயிடலாம்!’ன்னு சொன்னாங்க. எங்க அண்ணன் முருகன் படத்தை தூக்கீட்டு வாசல்ல நடந்து வந்தது இன்னும் எம் மனசுல இருக்கு.
மறுநாள் காத்தால சந்தை நாளு. கிழபுறத்து ஊட்டு சுப்பையன் வண்டி மூட்டை முடிச்சோட சந்தைக்கு கிளம்புச்சு. சண்முகன் போயி 2 மூட்டையத் தூக்கி வண்டியில போட்டு உதவி செஞ்சான்.
கிழக்கால எங்க அத்தை வீடு இருக்கு -அப்பாவோட பொறந்த சின்ன அத்தை - ‘மசாத்தா’ன்னு பேரு. அண்ணன் அங்கே போனதும், ‘ராயிக்களி, கொத்துமல்லி சுண்டாங்கி பண்ணீருக்கேன் ஒரு வாய் சாப்பிடறியா சாமீ?’ன்னு அத்தை கேட்டிருக்காங்க.
‘நீயே ஒரு உருண்டை, சுண்டாங்கியை தொட்டுக் குடு’ன்னு கையில வாங்கி முழுங்கீட்டு, மேற்கே வந்திருக்கான் அண்ணன். 10 மணி வாக்குல லேசா ஒடம்பு சுடுதுன்னு சொல்லியிருக்கான்.
அம்மா தொட்டுப் பார்த்தாங்க. தொடை இடுக்குல எலுமிச்சம் பழ சைசுல ரெண்டு பக்கமும் கட்டி. அதுதான் ‘பிளேக்’கின் அறிகுறி. வேப்பிலைக் கொழுந்தை பறிச்சுட்டு வந்து அரைச்சு ‘பத்து’ப் போட்டிருக்காங்க. காய்ச்சல் எறங்கின மாதிரி தெரியலை.
‘கரண்ட்’ வசதிகளெல்லாம் என்னன்னு தெரியாத காலம். 7 மணிக்கு இருட்டின உடனே சுடு சோறோ, பழைய சோறோ சாப்பிட்டு முடிச்சுட்டு கண்ணசந்ததும் பாயைப் போட்டு படுத்துருவாங்க. 8 மணிக்கு ஊர்ல ஒருத்தரும் இல்லீங்கற மாதிரி அவ்வளவு நிசப்தமா இருக்கும்.
அப்படி நானும் எங்கக்காவும் வெளித்திண்ணையில படுத்திருந்தோம். அம்மாவும், அம்முச்சியும் சண்முகனை கவனிச்சுட்டு ஊட்டுக்குள்ளே உக்கார்ந்திருந்தாங்க. தன்னோட கடைசி நிமிஷம் சண்முகனுக்கு தெரிஞ்சுடுச்சு.
‘அம்மா.., போயிட்டு வாரேன். அம்முச்சீ.., போய்ட்டு வாரேன்!’னு ரெண்டு கையையும் தூக்கி கும்பிட்டுட்டு குப்புற திரும்பிப் படுத்தவன்தான். மூச்சடங்கீருச்சு.
அதுக்கப்புறம் என்னாச்சுன்னு எனக்கு நியாபகம் இல்லே. ‘எங்க அண்ணன் வேணும், எங்க அண்ணன் வேணும்!’ன்னு கத்தினேன் போலயிருக்கு. ராத்திரி ஒரு மணியத் தாண்டியிருக்கும். கிழபுறத்து வீட்டு சுப்பையன் வந்து என்னைத் தூக்கீட்டுப் போயி சமாதானப்படுத்தி தூங்க வச்சிருக்காரு.
‘‘செத்துப் போன அண்ணனை எப்படீம்மா அடக்கம் பண்ணினே?’’ன்னு பெரிசானதுக்கப்புறம் ஒரு நா எங்கம்மாட்ட கேட்டேன்.
‘‘சண்முகன் செத்த சேதி ராத்திரியே ஊரு பூரா தெரிஞ்சு போச்சுப்பா. பிளேக்கு நமக்கும் வந்துடும்ன்னு சட்டி பானையத் தூக்கீட்டு ஊரு சனம் விடியறதுக்குள்ளே சிட்டா பறந்துடுச்சு. அங்கங்கே தன்னோட சொந்த பந்தங்க ஊடுகளுக்கு குழந்தை குட்டியோட போயி தங்கீட்டாங்க. விடிஞ்சா ஊருல காக்கா குருவியக் காணோம். என்ன பண்ணப் போறோம்ன்னு தவிச்சுட்டிருந்தப்ப உங்க பெரியத்தை மகன் சுப்பையன் வந்தாரு. நெலமைய புரிஞ்சுகிட்டு அவரே கடப்பாரை, மண்வெட்டியெல்லாம் எடுத்துட்டு சுடுகாட்டுக்குப் போயி ஆறடி நீளம், ஆறடி ஆழம் குழிய வெட்டி நெஞ்செலும்பு, கைகால் எலும்பெல்லாம் அதுலயிருந்து தூக்கிப் போட்டுட்டு ஊட்டுக்கு வந்தாரு. ராத்திரி 12 மணிக்கு உசிரு போனது. 10 மணி நேரம் ஆயிருச்சு. ஒடம்பு விறைச்சு, விறகுக் கட்டையாட்டம் ஆயிடுச்சு. ஒத்தை ஆளா ஏணியத் தூக்கித் தோள்ல வச்சுட்டுப் போற மாதிரி உங்க அண்ணன் ஒடம்பை சுடுகாட்டுக்குத் தூக்கீட்டுப் போயி அடக்கம் பண்ணினாரு!’’ன்னு அம்மா சொன்னாங்க.
எல்லாம் முடிஞ்சு நானும் எங்கம்மாவும், எங்கக்காவும் ஊருக்கு தெக்கால ராமசாமி கவுண்டர் தோட்டத்து மாட்டுச் சாளையில மூணு மாசம் தங்கலாம்னு போனோம். வழியில சுடுகாட்டுல புதுசா 6 நீளம் வரப்பு மாதிரி ஒண்ணு தெரிஞ்சுது.
அம்மாவோட பார்வை அங்கேயே இருந்தது.
‘‘என்னம்மா?’’ன்னு கேட்டேன்.
‘‘அதுதான்... உங்கண்ணன் சம்முகம்!’ அப்படீன்னாங்க.
தொண்டைக் குழியில என்னமோ அடைச்சிருச்சு. கண்ணுல தண்ணி முட்டுச்சு. அதுதான் நான் சந்திச்ச முதல் மரணம்.
- சுவைப்போம்...
எழுத்தாக்கம்: கா.சு.வேலாயுதன்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
15 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago