அனுபவப் பகிர்வு: கரோனா வெல்ல முடியாத நோயல்ல!

By பால்நிலவன்

நான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிகச்சிறந்த சிகிச்சையின் மூலம் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். சிகிச்சையின் போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கு பகிர விரும்புகிறேன்.

தன் உடலுக்கு ஊறு விளைவித்துக்கொள்ளாமல் பெரிய அளவில் உடல் ஆரோக்கியம் குறித்து பிரத்யேமாக மெனக்கெடாத ஒரு நபர்கூட கரோனாவிலிருந்து விடுபட முடியும் என்பதுதான் நிதர்சனம். உண்மையில் கரோனா வெல்ல முடியாத ஒரு நோயல்ல என்பதை நான் என் அனுபவத்தால் உணர்ந்தேன்.

கடும் மூச்சுத் திணறலோடு அவதியுற்ற நான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பி ஒரு வாரமே ஆகியுள்ளது. கடந்த இரண்டு மூன்று வார காலமாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட கரோனா கால நினைவுகள் மெல்ல மெல்ல முகிழ்த்துக்கொண்டே உள்ளன.

உண்மையில், மூச்சுத்திணறலுக்கான அவசர சிகிச்சையின்போது பரிசோதனை செய்யப்பட்டபோதுதான் எனக்குக் கரோனா தொற்று என்பதே கண்டறியப்பட்டது. ''உங்களுக்கு கோவிட் பாஸிட்டிவ். நீங்க கரோனா வார்டுக்குப் புறப்படத் தயாராகுங்க'' என்ற குரல் வந்த திசையைப் பார்த்தேன். யாருமே இல்லை. அந்த நிமிடத்தில் நான் தங்கியிருந்த வார்டில் யாருமே இல்லாததும் எங்கிருந்தோ ஒரு குரல் என் நோயை அறிவிப்பதும் ஒருவிதமான திகில் மனதில் பரவியது. அங்கே மேசையிலிருந்து பாதுகாப்புக் கவசத்தை அணிந்துகொண்டு வெளியே வந்தேன். சுகாதாரப் பணியாளர் ஒருவர் முன்னே செல்ல நான் பின்தொடர்ந்தேன்.

கோவிட் வார்டில் நுழைந்தபோது நான் நினைத்தது போலன்றி எனக்கான அறை டீலக்ஸ் வசதி செய்யப்பட்டிருந்தது போலிருந்தது. கேபின் அறையைப் போன்ற ஒரு கண்ணாடி அறைக்குள் என்னை தங்கவைத்தனர். அதன் பின்னர் கரோனா வார்டில் அந்த கேபினில் தங்கி 10 நாட்கள் சிகிச்சை பெற்றேன்.

சிகிச்சையின் ஆரம்ப தினங்களிலேயே முற்றிலுமாக அல்ல என்றாலும் அபாயக் கட்டத்திலிருந்து என்னை மீட்டுவிட்டனர். எனக்கிருந்த மூச்சுத் திணறல் பிரச்சினையும், மூச்சு வாங்கலும் சரி செய்யப்பட்டுவிட்டது. அதுவும் போகப்போக தொடர்ச்சியாக ஊசி மருந்து தகுந்த சிகிச்சையில் சரிசெய்யப்பட்டதும் 8-வது நாளில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்து பத்தாவது நாளில் எனக்கு கோவிட் நெகட்டிவ் என்று வந்ததும் கனவா நனவா என்று யோசிக்கும்படியாக வேகவேகமாக நாட்கள் நகர்ந்துவிட்டன.

ஒரு காச நோயாளி

கோவிட் வார்டிலேயே நான் பார்த்த வரையில் ஒரு டிபி நோயாளி சாப்பிட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். நான் வருவதற்கு முன்பே இருந்த நிலையிலிருந்து நான் புறப்படும்போது சற்றே முன்னேற்றம் கண்டிருந்தார். அவருக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை மருத்துவர்கள் மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். கரோனாவுக்கு முன்பே அவர் ஒரு டி.பி.நோயாளி என்பதால் கரோனா தற்போது பாதித்த நிலையில் மிகவும் மோசமடைந்தார். எனினும் அவரையும் தற்போது மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர்.

இன்னும் சிலரையும் நான் பார்த்தேன். அவர்களிடம் கரோனா வைரஸ் இருக்கிறதே தவிர வைரஸின் எந்தவித பாதிப்பும் அவர்களிடம் இல்லை.

கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு கோவிட் வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் 20 வயதிலிருந்து 35க்குள் இருப்பர். நான் பார்த்தவரை வெளிக்காற்று வரும் ஓய்வறைப் பகுதியில் காலையிலும் மாலையும் அவர்கள் தொடர்ந்து காலையில் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட நீண்டநேரம் தங்கள் முறுக்கேறிய உடலுடன் முழுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒரு கட்டத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம், ''எங்களுக்கு ஒன்னும் இல்லை, எங்க உடம்பு நல்லாயிருக்கு. எங்களை வீட்டுக்கு அனுப்புங்க'' என்று கேட்டனர். அதற்கு மருத்துவர்கள், இப்போ உங்களுக்கு கரோனா தொற்று இருக்கு. இன்னொரு டெஸ்ட் எடுத்து அது நெகட்டிவ் வந்ததாதான் அனுப்ப முடியும், அதுவரையும் அமைதியாயிருங்க'' என்றனர்.

இதற்கிடையே சிலர் குணமடைந்து ஒவ்வொரு நாளும் வீடு திரும்பினர். ஓரிரு நாட்களில் அந்த உடற்பயிற்சி நண்பர்களும் சோதனை செய்யப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கும் நெகட்டிவ் முடிவு வரவே கரோனாவிலிருந்து மீண்ட நிலையில், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுவாசப் பிரச்சினையுள்ள பல கரோனா நோயாளிகள் மருத்துவர்கள், செவிலியர்களின் தன்னலமற்ற அக்கறைமிக்க சிகிச்சையில் சீராக குணமடைந்து வருவதையும் பார்த்திருக்கிறேன்.

கரோனா நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள அட்டெண்டர்களுக்கு அனுமதி இல்லை. (நோயாளியை உடனிருந்து பார்த்துக்கொள்ளும் உறவினர்களுக்கு) அனுமதியில்லை. நோயாளிகளுக்கு அதுஒரு தனிமைப்பயணம்தான்.

இந்நிலையில் கரோனா பாதிப்பு என்ற அளவில் தனித்தனியே படுக்கையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவரவர் உடல்நிலையின் முந்தைய நிலையைப் (case history) பொறுத்தே மருத்துவர்களின் ஓயாத முயற்சியினால் சிகிச்சையில் முன்னேற்றம் என்பது வசப்படுகிறது.

கோவிட் நெகட்டிவ் வந்தாலும்...

எனக்கு ஏற்பட்டிருந்த மூச்சுத் திணறல், மூச்சு வாங்கல் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு கோவிட் சிகிச்சையின்போது 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன். எனினும் சிகிச்சையின்போது இன்னொரு பிரச்சினை முளைத்தது.

அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கு முன் கடந்தவந்த நாட்களின் சில சம்பவங்களைச் சற்றே கூற வேண்டியுள்ளது.

சென்னையில், லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து நான் தங்கியிருந்த எனது சிறு அறைக்குள்ளேயே அடைபட நேர்ந்தது. மூன்று வேளை உணவுக்கும் வெளியே செல்லமுடியாத நிலை. மின் அடுப்பில் சமையல். கிட்டத்தட்ட 45, 50 நாட்களாக இதே நிலை தொடர்ந்தது. தேவைக்கு அதிகமாகவே கபசுரக் குடிநீர் எடுத்துக்கொண்டேன். அதிகம் வெளியில் நடக்கும் வேளையும் இல்லை. எல்லாமாகச் சேர்ந்து சிறுநீர் கட்டிக்கொண்டது. எவ்வளவு நீர் அருந்தினாலும் சிறுநீர் வருவதில்லை என்ற பிரச்சினை உருவானது. மெல்ல மெல்ல உடல் சோர்வும் தாக்க, உணவு சமைக்க முடியாத நிலையில் லாக்டவுன் தளர்த்தப்பட்டிருந்த நிலையில் வெளியில் அடிக்கடி டிபன் வாங்கி வரவேண்டிய சூழ்நிலை. இச்சமயத்தில்தான் எனக்கு எப்படியோ கரோனா பரவியிருக்கக் கூடும். மின் அடுப்பு சமையல் காரணமாக உடலில் ஏற்பட்ட சூட்டினால் உடல் பலவீனப்பட்டிருந்தது.

பலவீனமான உடல்நிலையில் உள்ளவர்களைக் கரோனா எளிதாகத் தாக்கும் என்பதையும் அறிந்திருந்தேன். அடுத்தடுத்த நாட்களில் இரவில் உறங்கும்போது மூச்சிறைத்தது. பகலிலேயே மூச்சு வாங்கியது.

இந்நிலையில்தான் ஊரில் ஏற்பட்டிருந்த ஒரு நெருங்கிய உறவினரின் மரணத்தைக் குறிப்பிட்டு இ-பாஸ் விண்ணப்பித்தேன். அதன் சப்மிட் எண்ணுடன், ஊருக்குத் திரும்பினேன். வழியெங்கும் நல்ல மழை என்பதால் எங்கள் வண்டிகளை நிறுத்தி யாரும் விசாரிக்கவில்லை. சோதனைச் சாவடிகளில் பரிசோதனையும் செய்யவில்லை.

ஊருக்கு வந்த பிறகு, அடுத்துவந்த நாட்களில் சிக்கல் உருவெடுத்தது. ஒருநாள் இரவு மூச்சுத்திணறல் அதிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றின் எமர்ஜென்ஸி வார்டில் அனுமதிக்கப்பட்டேன். என்றாலும் ஒரே நாளில் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

கரோனா சிகிச்சையின்போது இன்னொரு பிரச்சினை முளைத்ததாகச் சொன்னேனே அது வேறொன்றுமில்லை. கை, கால்கள் வீக்கமடைந்தன. அதைத் தொடர்ந்து கரோனா வார்டிலேயே எனக்கு நீர் வடிதல் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 10 நாட்களில் மிகச்சிறந்த சிகிச்சையினால் நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனால் எனக்கு கை, கால்களிலிருந்து நீரை வெளியேற்ற வேண்டிய சிகிச்சை பாக்கியிருந்ததால் என்னை உடனடியாக வீட்டுக்கு அனுப்பவில்லை. ஆனால் சிறப்பு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கரோனா வார்ட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

ஜெனரல் வார்டில் ஓரிரு நாட்கள் இருந்தேன். அங்கு பலவிதமான நோயாளிகளைக் கண்டேன். அனைவருக்கும் ஒரே பிரச்சினை, அங்கு நான் காண நேர்ந்த நோயாளிகளில் பெரும்பாலும் நுரையீரலில் சளி அடைத்துக்கொண்டதால் சரியான சுவாசம் இல்லை என்பதுதான். அவர்கள் யாரும் கரோனா நோயாளிகள் அல்ல. உடல் உபாதைகள் காரணமாக தானாக முன்வந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள். அவர்களில் பலருக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்றே வந்தது.

தீவிர நெஞ்சக சிகிச்சைப் பிரிவில்...

பல்வேறு மிகப்பெரிய உபகரணங்கள் உதவியோடு என்னைப் பரிசோதித்தனர். சிறப்பு மருத்துவர்கள் எனக்கு இதயம் சற்றே பலவீனமடைந்துள்ளதாகக் கூறினர். அதனால்தான் நீர்வடிதலில் பிரச்சினை ஏற்பட்டு கால்வீக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். தீவிர நெஞ்சக சிகிச்சைப் பிரிவில் சேர்த்து இதயத்தைப் பலப்படுத்துவதற்கான ஊசி, மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் இப்பிரச்சினை எளிதாக தீரும் என்று கூறி என்னை அதற்கான வார்டில் அனுமதித்தனர். தீவிர நெஞ்சக சிகிச்சைப் பிரிவு வார்டில் இதயத்தைப் பலப்படுத்தி அளிக்கப்பட்ட 5 நாள் சிறப்பு சிகிச்சையில் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிட்டன.

அதேநேரம் நெஞ்சக சிகிச்சைப் பிரிவில் நான் கண்ட இதர நோயாளிகள் குறித்தும் சிறிது கூற வேண்டியுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும் செயற்கை சுவாசம், நுரையீரலில் புகை செலுத்தி சளி எடுத்தல் போன்ற சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுக்கடங்காத அளவில் சாராயம் அருந்தி நுரையீரலைக் கெடுத்துக்கொண்ட 35 வயது நபர், குடும்பத்திற்காக மாடாக உழைக்கும் 50 வயதைத் தாண்டிய பெண்கள் போன்றவர்களையும் காண நேர்ந்தது.

65 வயதுப் பெரியவர் ஒருவர் மிகவும் மோசமான மூச்சுத் திணறலில் கிட்டத்தட்ட நள்ளிரவு 12 மணி அளவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றனர். அந்த நபர் ஒன்றரை மணி நேரத்தில் எழுந்து உட்கார்ந்துவிட்டார். சிறிதுநேரத்தில் உடன் வந்திருந்த தனது தங்கை அமர்ந்திருந்த இடத்திற்கே வந்து தரையில் அமர்ந்து அவருடன் கலகலவென பேசத் தொடங்கிவிட்டார்.

அவர் வீடுகளுக்கு மொத்த காண்ட்ராக்ட் எடுத்து வேலைசெய்யும் பெயிண்டிங் காண்டிராக்டர். பெயிண்டரும்கூட. ஒரு கெட்ட பழக்கமும் அவருக்கு இல்லை. மகன்கள், தம்பிகள் பிரிந்துவிட தனது நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு பணிவிடை செய்வதையே சமீப வேலையாக கொண்டிருப்பவர். அதனால் ஏற்பட்ட பாதிப்புதான் என்றார் அவரது தங்கை.

ஆக நான் கண்ட வரையில், நானே பாதிக்கப்பட்ட நிலையில் கூட உடல் உறுப்புகளைப் பலவந்தமாக குடி, போதை, அதீத உழைப்பு, உடல் சூடு, மோசமான வாழ்க்கை முறை, இயல்புக்கு மாறான இன்னும் பல பழக்கவழக்கங்கள் என்று கெடுத்துக்கொண்டால் ஒழிய, அல்லது நோய் எதிர்ப்பு சக்தி மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவராக இருந்தால் ஒழிய, கரோனா தனியாக வந்து ஒருவர் மீது கடும்தாக்குதலை நிகழ்த்தி உயிருக்கு உலை வைக்கும் என்று சொல்லிவிட முடியாது. கரோனாவை வெல்வதும் சாத்தியமே!

என்மூலம் மூன்று பேருக்குப் பரவிய கரோனா...

தனி அறை வாழ்க்கைக்குப் பிறகு சொந்த கிராமத்திற்கு வீட்டுக்கு வந்துவிட்ட நிலையில் இன்னொரு தனி வீட்டில் வந்து தங்கினேன. அங்கு எனக்கு ஒருவாரம்போல சாப்பாடு கொடுத்து உதவிய என் அண்ணி, 70 வயது மூதாட்டியான சின்ன அத்தை (மறைந்த அப்பாவின் தங்கை), அண்ணியின் கல்லூரி போகும் வயதில் உள்ள தங்கை மகன் மூவருக்கும் என் மூலமாக கரோனா பரவியதாக மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது எனக்குத் தகவல் கிடைத்தது. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

எனினும் சில நாட்களிலேயே அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். இத்தனைக்கும் 70 வயது மூதாட்டியான சின்ன அத்தை கேன்சர் வியாதியிலிருந்து மீண்டு வாழ்பவர். அடுத்து வந்த சில நாட்களில், தமிழக கரோனா கட்டுப்பாட்டு அறையிலிந்து தொலைபேசியில் அழைத்துக் கூறினார்கள், ''உங்கள் உறவினர்கள் மூவரும் எந்தவித பாதிப்பு மின்றி கரோனா நெகட்டிவ் வந்து வீடு திரும்பிவிட்டனர். நீங்களும் விரைவில் குணமாகி வீடு திரும்ப வாழ்த்துக்கள்'' என்று.

'ஆளப்பாத்து ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி' என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்த நிலையில் உள்ளவர்களையே கரோனா பாதிப்பு நிகழ்த்துகிறது. அவர்களது உடல் பலவீனத்தைப் பொறுத்து அது ஆட்சி செலுத்துகிறது என்றே தோன்றுகிறது. இதில் எந்த வயது வித்தியாசமும் இல்லை.

எனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக்கொண்டால்கூட சென்னை அறையில் 45 அல்லது 50 நாட்களில் நான் மின் அடுப்பை அதிகம் பயன்படுத்தியதாலும் அளவுக்கு அதிகமான கபசுரக் குடிநீர், நீராவி போன்றவற்றை எடுத்துக்கொண்டதாலும் எனக்குள் எதோ ஒரு தவறான ரசாயன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதுவே சிறுநீர் வாராமல், மூச்சிறைப்பு ஏற்படக் காரணமாகியுள்ளது. உடல் பாதிக்கப்பட்ட நிலையில் வெளியில் சென்று திரும்பியபோதுதான் வரும்போது கையோடு கரோனாவையும் சுமந்துகொண்டு நான் வந்திருக்கக் கூடும் என்றே இப்போது தோன்றுகிறது. நல்லவேளையாக உரிய நேரத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சையே கரோனாவிலிருந்து மீண்டுவர உதவியது.

காய்ச்சல், உடல் சோர்வு, சளி, இருமல், மூச்சுத் திணறல் இவற்றில் எது கடுமையாக பாதிக்கத் தொடங்கினாலும் உடனே பரிசோதனை செய்து கொள்வது மிக மிக முக்கியம். கரோனா சிகிச்சைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதினாலும் எந்தவித பாதிப்பும் வந்துவிடாது. மேலும் சிகிச்சையின்வழியே நம் உடல் பிரச்சினைகளிலிருந்தும் நாம் விடுபட இது ஒரு வாய்ப்பாக அமையும்.

அரசு மருத்துவர்களின் செவிலியர்களின் அற்புதமான சிகிச்சையில் கரோனாவின் உச்சபட்ச அறிகுறியான மூச்சுத்திணறலிலிருந்தே இதோ நான் மீண்டுவிட்டேன். ஏற்கெனவே டஸ்ட் அலர்ஜி போன்ற ஆஸ்துமா பிரச்சினையும் உண்டு. ரத்த அழுத்தமும் உண்டு, அதுவே சிறுநீர் பிரச்சினையை உருவாக்கியதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள். சிகிச்சைக்குப் பிறகு தகுந்த மருந்து மாத்திரைகளோடு இதயத்தையும் நல்லபடியாக சுத்திகரித்து அனுப்பியுள்ளார்கள். பல்வேறு வகையில் கடும்பாதிப்புற்ற நிலையிலும் என் உடலிலல் மிச்சம் மீதியிருந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாகவும் பலரது நம்பிக்கை வார்த்தைகளும் நான் குணமாகி வீடு திரும்ப வைத்துள்ளது. இதோ வாழ்வை புத்தம் புதிதாகக் காண்கிறேன். நான் புத்துயிர் பெற்றதாக உணர்கிறேன். வீடு திரும்பிய இந்தப் புதிய நாட்கள் புத்துணர்ச்சி மிக்கதாக மாறியுள்ளது.

பொதுவாக நான் மேலே குறிப்பிட்ட பலரும் கரோனாவை வெல்லக்கூடியவர்களாக இருப்பதையே காண முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்