உலக இசை நாள்: காற்று வெளியிடை கொண்டாட்டங்கள்

By வா.ரவிக்குமார்

உலக இசை நாள் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ்தான் உலக இசை நாளின் தாய்வீடு! இன்றைக்கு 120 நாடுகளில் கொண்டாடப்படும் இசைத் திருநாளாக இது மாறியிருக்கிறது. இந்த நாளில் இசைக் கலைஞர்கள் பல இடங்களில் திரளாகக் கூடி இசைத்து மகிழ்வர். மகிழ்விப்பர். தெருக்கள், பூங்காக்கள், அரங்குகள், ரயில் நிலையங்கள் என எல்லா இடத்திலும் இசை கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும்.

இசை நாளின் வரலாறு

1980களில் பிரான்சில் இசை நாள் கொண்டாட்டங்கள் தொடங்கின. ஆனால் அதற்கும் முன்பாகவே அமெரிக்க இசைக் கலைஞர் ஜோயல் கோஹன் 1976லேயே கோடைக் காலத்தில் இசை நாள் கொண்டாட்டங்களைத் தொடங்கினார். அக்டோபர் 1981-ல் பிரான்ஸின் கலாச்சார அமைச்சகத்தைச் சேர்ந்த ஜாக் லேங்க், இசை மற்றும் நடனத் துறைக்கான இயக்குநராக மாரீஸ் ஃபிளெர்ட் என்பவரை நியமித்தார். இந்த இருவரும் இணைந்து வீடுகளிலும் தனிப்பட்ட அரங்குகளிலும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சிகளைப் பரவலாக்கி எல்லோருக்குமான இசையை அளித்தவர்கள்.

மாரீஸ் ஃபிளெர்ட் பிரான்ஸில் ஒரு சர்வே எடுத்தார். அதில் பிரான்ஸின் குடிமக்களில் இரண்டு பேரில் ஒருவருக்கு ஏதேனும் ஓர் இசைக் கருவியை வாசிப்பதிலோ, பாடுவதற்கோ தெரிந்திருந்தது. அதாவது பிரான்ஸின் ஒவ்வொரு வீட்டிலும் இசை இருந்தது. ஆனால் பிரான்ஸின் தெருக்களில் எங்கும் இசை ஒலிக்கவேயில்லை. இந்த நிலையை மாற்றி தெருவெங்கும் இசையை ஒலிக்க வைக்கும் நாளாக ஜூன் 21-ஐ மாற்றினார்.

120 நாடுகள் 700 நகரங்கள்

மாரீஸ் ஃபிளெர்ட் பிரான்ஸின் தொழில்முறை இசைக் கலைஞர்களையும் இசையில் ஆர்வத்துடன் இருக்கும் இளம் கலைஞர்களையும் ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இதைத் தொடர்ந்து 1982 ஜூன் 21-ல் பிரான்ஸின் தெற்கு ஹெமிஸ்ஃபியர் நகரத்தில் முதல் உலக இசை நாள் கொண்டாட்டங்கள் நடந்தன. இரவு வரை நீடித்தது அந்நாளின் கொண்டாட்டங்கள். பின்னாளில் பிரான்ஸின் தேசிய நாளாகவே ஜூன் 21 அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸில் தொடங்கிய இந்த இசை அலை வெகு சீக்கிரமாகவே சர்வதேசம் எங்கும் பரவியது. ஏறக்குறைய 120 நாடுகளில் 700 நகரங்களில் இன்றைக்கு உலக இசை நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அதில் இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பெரு, பிரேசில், ஈக்வடார், மெக்ஸிகோ, கனடா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் உண்டு.

வலைதளங்களில் வழியும் இசை

கரோனா பேரிடர் காலத்தில் உலகமே சிக்கித் தவிக்கும் இந்நாளில் உலக இசை நாளின் கொண்டாட்டங்கள் வீதிகளில் முடக்கப்பட்டிருந்தாலும், காற்று வெளியிடையில் வலைதளங்களில் உலகம் முழுவதும் பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறது.

`தி இந்தியன் பர்ஃபார்மிங் ரைட்ஸ் சொசைட்டி - மியூசிக் பிளஸ் அமைப்புடன் இணைந்து #CreditTheCreators எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர். திரைப் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பலரும் இந்த சமூக வலைதளப் பிரச்சாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பாடலின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான கதை அல்லது ஒரு சுவாரசியமான சம்பவம் இருக்கும். அது அந்தப் பாடலின் உருவாக்கத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அது போன்ற சுவாரஸ்யமான பாடல் உருவான சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதன்மூலம் மகத்தான கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதுதான் இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.

இதுகுறித்து ஐபிஆர்எஸ்ஸின் தலைவரும் பாடலாசிரியருமான ஜாவத் அக்தர், “வுட்ஸ்டாக்கில் சிதார் மேதை பண்டிட் ரவிஷங்கரும் தபேலா மேதை உஸ்தாத் அல்லா ரக்காவும் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி பன்முக கலாச்சாரத்தைப் பிரதிபலித்ததோடு மேற்குலக இசை அறிஞர்களின் கவனத்தையும் கவரும் வகையில் இருந்தது. நான் சொல்லும் இந்த விஷயம் நிறைய பேருக்குத் தெரியாது. மேற்குலகில் ஃப்யூஷன் பாணி என்பது 1960களின் மத்தியில்தான் தொடங்கியது. ஆனால் இந்தியாவில் இசையமைப்பாளர்கள் 1930களிலேயே மேற்கத்திய ஃப்யூஷன் பாணியில் இசையமைக்கத் தொடங்கிவிட்டனர். பங்கஜ் மாலிக், நௌஷத், அனில் பிஸ்வாஸ், சி.ராமச்சந்திரா ஆகியோர் நமது மரபார்ந்த ராகங்களில் மெட்டுகளைப் போட்டாலும், கிதார், பியானோ, டிரம்பட், செல்லோ, வயலின் போன்ற மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்தனர். காலத்தால் மறக்கமுடியாத படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கும் படைப்பாளிகளுக்கு நம்முடைய நன்றிகளைச் சொல்வதற்காகவே இந்தப் பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறோம்” என்றார்.

காற்றில் தேசிய கவி

மகாகவி பாரதியார் பீஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் துயர்படும் மக்களுக்காக `கரும்புத் தோட்டத்திலே..’ எனும் பாடலைப் பாடியிருப்பார். பாரதியார் ரஷ்யப் புரட்சியைப் பாடியிருக்கிறார். உலகத்தின் மகிழ்ச்சி, துயர், புரட்சி இப்படி எல்லாவற்றையும் தம்முடைய பாட்டில் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்திய பாரதியாரின் `கரும்புத் தோட்டத்திலே’ எனும் பாடலுக்கு இசையமைத்து பாடி உலக இசை நாளையொட்டி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார் `சிந்து பைரவி’ இசைக் குழுவைச் சேர்ந்த ஹரி விதார்த்.

பாடலைக் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்