ஜூன் 21: சூரியன் மறைப்பைக் கண்டு களிக்கலாம்; 7 அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள்

By ஆதி

தமிழகம், சென்னையில் ஜூன் 21-ம் தேதி அன்று பகுதி சூரியன் மறைப்பு (கிரகணம்) தெரியும். பகல் 10.22-க்குத் தொடங்கும் இந்தப் பகுதி சூரியன் மறைப்பு 11.59-க்கு உச்சத்தை எட்டும். பிற்பகல் 1.41-க்கு நிறைவடையும். 3 மணி நேரம் 19 நிமிடங்களுக்கு இந்தப் பகுதி சூரியன் மறைப்பு தெரியும்.

சூரியன் மறைப்பு என்பது ஓர் சுவாரசியமான வானியல் நிகழ்வு. குழந்தைகள், அறிவியல் ஆர்வலர்களிடையே ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நிகழ்வு இது. அதேநேரம் சூரியன் மறைப்பு என்றவுடன் புரளிகளும் கட்டுக்கதைகளும் நிறைய உலாவரும். இது குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியானால் சூரியன் மறைப்பைப் பார்க்கலாமா, அது ஆபத்தானதா, சாப்பிடலாமா என்றெல்லாம் நிறைய கேள்விகள் வரும். கேள்விகளையும் பதில்களையும் பார்ப்போம்:

சூரியன் மறைப்பின்போது சூரியனிலிருந்து சிறப்புக் கதிர்வீச்சு இருக்குமா?

இல்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு எல்லா நாட்களிலுமே ஒன்று போலத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. உண்மையில் சூரியன், புவிக்கு இடையிலான நேர்கோட்டில் நிலவு வருவதால், சூரியன் மறைப்பு எங்கெல்லாம் தெரிகிறதோ அங்கெல்லாம் சூரியனின் கதிர்வீச்சு குறைவாகவே இருக்கும். அதேநேரம் கதிர்வீச்சு குறைவாக இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் சூரியனை வெறும் கண்களால் பார்க்க முயலக் கூடாது. சாதாரண நாட்களில் சூரியனை நேருக்கு நேர் பார்க்க முடியாது, கண் கூசும். இதன் மூலம் அதன் ஆற்றல் வாய்ந்த கதிர்வீச்சு நம்மைப் பாதிக்காமல் இயற்கையாகவே தடுக்கப்படுகிறது.

நிலவு புவியை விடவும் சிறியது. ஆனால் சூரியன் மறைப்பு நிகழ்வின்போது, எப்படி இந்தச் சிறிய துணைக்கோளால் சூரியனையே மறைக்க முடிகிறது?

சூரியனைவிட நிலவு 400 மடங்கு சிறியது. அதேநேரம் புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவுடன் ஒப்பிடுகையில், புவிக்கு 400 மடங்கு நெருக்கமாக நிலவு இருக்கிறது. அதனால், புவியிலிருந்து பார்க்கும்போது நிலவின் அளவு, சூரியனின் அளவை ஒத்ததுபோல் இருக்கிறது. முழு நிலவு நாட்களில் இதை உணர்ந்துகொள்ள முடியும். இடைப்பட்ட தொலைவே இந்த மாயத்தோற்றத்துக்குக் காரணம்.

சூரியன் மறைப்பின்போது சமைப்பது, சாப்பிடுவது போன்றவற்றைச் செய்யலாமா?

சூரியன் மறைப்பு என்பது இயற்கையான வானியல் நிகழ்வு. இது யுகம்யுகமாக நடைபெற்று வருகிறது. நமது இயல்பான செயல்பாடுகளில் சூரியன் மறைப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக, இதுவரை எந்தப் பதிவும் இல்லை. எனவே சமைப்பது, சாப்பிடுவது போன்ற செயல்பாடுகளில் சூரியன் மறைப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

கர்ப்பிணிகள் சூரியன் மறைப்பைப் பார்ப்பதால் அவர்களுக்கும் கருவில் உள்ள சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
மூடநம்பிக்கைகளின் காரணமாக சூரியன் மறைப்பை கர்ப்பிணிகள் பார்க்கக் கூடாது, அந்த நேரத்தில் வீட்டை விட்டு அவர்கள் வெளியே வரக் கூடாது என்று கருதப்படுகிறது. சூரியன் மறைப்பை கர்ப்பிணிகள் உட்பட அனைவரும் பார்க்கலாம். அதேநேரம் சூரியன் மறைப்பை நேரில் பார்ப்பதற்கான சூரியக் கண்ணாடி தேவை. சூரியக் கண்ணாடி மட்டுமே இந்த இடத்தில் அவசியம். வேறு எந்த விஷயமும் மனிதர்களைப் பாதிக்கப் போவதில்லை.

சூரியன் மறைப்பின்போது வெளியில் செல்வது பாதுகாப்பானதா?
இந்த அரிய வானியல் நிகழ்வை யார் வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்ப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உரிய பாதுகாப்பு வசதிகளுடன் சூரியனைப் பார்க்கலாம். வெறும் கண்களால் பார்ப்பது பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

சூரியன் மறைப்பு முடிந்த பிறகு குளிக்க வேண்டுமா?
தனிநபர் சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளிப்பது நல்லது. அதேநேரம் சூரியன் மறைப்புக்கு முன்னதாக, முடிந்த பிறகு, சூரியன் மறைப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது குளிக்க வேண்டிய அவசியமில்லை.

சூரியன் மறைப்பு துரதிர்ஷ்டங்களைக் கொண்டுவருமா?
சூரியன் மறைப்பு என்பது அரிய, இயற்கையான, அழகான வானியல் நிகழ்வு. இதை அனைவரும் நேரில் கண்டு ரசிக்கலாம். சூரியன் மறைப்பு யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

நன்றி: க்யூரியாசிட்டி இதழ், விஞ்ஞான் பிரசார் நிறுவனம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்