லடாக், நேபாளம், சிக்கிம், பூடான், அருணாச்சல்; சீனாவின் ஐந்து விரல் உத்தி: அத்துமீறல்களின் பின்னணி!

By டி. கார்த்திக்

கரோனா பீதிக்கு அப்பால் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததுதான் தற்போது ஹாட் டாபிக். இதனால், எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. சீனப் பொருட்கள் புறக்கணிப்பு என்ற கோஷங்கள் ஆளும் பாஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நாடு கடந்த திபெத்திய தலைவர் லோப்சங் சங், இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை பொதுவெளியில் கவனம் ஈர்த்துள்ளது.

“லடாக்கில் சீனா மேற்கொண்ட அத்துமீறல் எதிர்பார்த்ததுதான். சீனாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தந்திரத்தை ‘திபெத் உத்திகளின் ஐந்து விரல்கள்’ (Five Fingers of Tibet strategy) என்று கூறுவார்கள். திபெத்துக்கு எதிராக சீனா தலைவர் மாசே துங் இதைத்தான் பயன்படுத்தினார். இதைச் சொல்லித்தான் சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்தார்கள். திபெத்தை முழுமையாக சீனா ஆக்கிரமித்த பிறகு அதன் தேசிய தலைவர் மாசே துங் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘திபெத் என்பது சீனாவின் பாதம். அதைக் கைப்பற்றிவிட்டோம். இனி பாதத்தின் ஐந்து விரல்களைக் கைப்பற்ற வேண்டும்’ என்று சொன்னார்.

திபெத்தின் ஐந்து விரல்கள் என்பது லடாக், நேபாளம், பூடான், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய ஐந்து பகுதிகள்தான்.” - லோப்சங் சங் விடுத்த எச்சரிக்கை இதுதான். சீனாவின் இந்த ‘ஐந்து விரல் உத்தி’ என்பது என்ன? அப்போது 1940. சீனப் புரட்சியின் மூலம் மாசே துங் தேசியத் தலைவராக உயர்ந்தார்.

திபெத்திய தலைவர் லோப்சங் சங்

அப்போதிருந்தே ‘ஐந்து விரல்’ உத்தியைப் பற்றி பேசிவந்திருக்கிறார் மாசே துங். திபெத்தும் அதன் அருகிலுள்ள பகுதிகளும் ஒரு காலத்தில் சீனப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்தன என்று எப்போதும் நம்பினார் மாசே துங். அதை அடைய வேண்டும் என்றும் விரும்பினார். 1950-களில் இருந்தே சீனா அண்டை நாடுகளின் பல பகுதிகளின் மீது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. காலங்களும் அந்நாட்டின் தலைவர்களும் மாறியபோதும், தனது அதிகாரத்தை இப்போது வரை விடாமல் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறது சீனா.

ஒரு காலத்தில் ஆசியாவில் சீனாவின் அண்டை நாடான மங்கோலியாதான் மிகப் பெரிய பேரரசாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வதுண்டு. ஆனால், சீனாவின் பேரரசில் திபெத் இருந்தது என்று சீனா விடாப்பிடியாக நம்பியது. சீனத் தலைவர் மாசே துங் திபெத்தை சீனாவின் பாதம் என்றும், அந்தப் பாதத்தின் ஐந்து விரல்கள் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், நேபாளம், பூடான் என்றும் வர்ணித்தார்.

சீனா தங்கள் பாதம் என்று வர்ணித்த திபெத்தில் சீனப் படைகள் 1959-ல் நுழைந்து, அந்தப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியது. சீனாவின் அந்த அத்துமீறலை அப்போது உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. திபெத்தின் சீனப் படைகளின் இந்த ஆக்கிரமிப்பை அமைதியை விரும்பும் நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் குறைந்தபட்சம் ஐ.நா. சபையில்கூட எழுப்பவில்லை. அன்று அரசியல் அடைக்கலம் கோரிய திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது. அவர் தனது மிகப் பெரும் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குள் வந்தார். அன்று திபெத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்ததைத் தடுத்திருந்தால், இன்று மற்ற பகுதிகளில் அதன் உரிமைக் கோரலைத் தடுத்திருக்க முடியும்.

ஐந்தாம் விரல் சிக்கிம்

இன்று இந்தியாவின் ஒரு மாநிலமாக உள்ள சிக்கிம், 1975-ம் ஆண்டுக்கு முன்புவரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. சிக்கிமில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, அதன் அடிப்படையில் 1975-ல் சிக்கிம் இந்தியாவின் ஓர் அங்கமானது. சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது முதலே சிக்கிமில் ஊடுருவல் அல்லது எல்லையில் நடமாட்டம் மேற்கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது சீனா.

நான்காம் விரல் அருணாச்சல்

வடகிழக்கு எல்லைப்புற முகமை (North East Frontier Agency) என்று அழைக்கப்பட்ட வடகிழக்கு எல்லைப்புற பிரதேசங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் ஒன்றியப் பகுதியாகவும், சுதந்திர இந்தியாவில் மாநிலங்களாகவும் மாறின. ஆனால், அருணாச்சலப் பிரதேசம் தங்களுடைய பகுதி என்று சீனா கூறத் தொடங்கியது. 1962-ம் ஆண்டில் இந்திய - சீனா இடையே போர் நடந்தபோது அருணாச்சலப் பிரதேசத்தில் மிக ஆழமாக ஊடுருவியது சீனா. அருணாச்சலப் பிரதேசத்தில் பல பகுதிகளை சீனா கைப்பற்றியது. இன்று வரையிலும் அருணாச்சலப் பிரதேசத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்கள் செல்லும்போதெல்லாம், அதிகாரபூர்வமாக எதிர்ப்புத் தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது சீனா. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதை சீனா ஏற்கவில்லை. அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து சீனா செல்வோருக்கு விசா வழங்குவதில்லை. அருணாச்சலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் முகாமிட்டு தொந்தரவு தருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது சீனா.

மூன்றாம் விரல் நேபாளம்

சீனா குறிப்பிடும் மூன்றாவது விரல் நேபாளம். ஒரு காலத்தில் நேபாளத்தின் பரம எதிரியாக சீனா இருந்தது. திபெத்தை சீனா கைப்பற்றியது முதலே, அது தங்களுக்கு ஏற்பட்ட காயமாக நேபாளம் நினைத்தது. நீண்ட காலமாகவே நேபாளத்தின் பல பகுதிகளை சீனா உரிமை கோரி வருகிறது. அப்போது முதலே நேபாளம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தியாவின் படைகள் நேபாளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சீனா மீதான அச்சத்தைப் போக்கிவந்திருக்கின்றன. கடந்த 70 ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நேபாளத்துக்கு இந்த உதவியைச் செய்துவருகிறது இந்தியா. ஆனால், இன்று நேபாளத்தின் எதிரி இந்தியா என்று அங்கே கட்டமைக்கப்படுகின்றன. இந்தியாவின் மூன்று பகுதிகளை தங்கள் வரைப்படத்தில் இணைத்துச் சீண்டிப் பார்க்கிறது நேபாளம். இதில் சீனாவின் ஐந்து விரல் உத்தியை நேபாளம் மறந்துவிட்டதுதான் நகைமுரண்.

இரண்டாம் விரல் பூடான்

கிழக்கு இந்தியாவின் முடிவில் உள்ள ஓர் அழகிய நாடு பூடான். இந்த நாட்டின் மீதும் சீனா தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயன்றுவருகிறது. நீண்ட காலமாகவே பூடானை சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இதுவும் சீனாவின் ஐந்து விரல்கள் உத்திகளில் ஒன்றுதான்.

இந்தியாவுக்கு பூடானுக்கும் ராணுவ ஒப்பந்தம் ஒன்று உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பூடானுக்கு இந்தியா ஆதரவு வழங்கிவருகிறது. பூடானின் பாதுகாப்பில் இந்தியப் படைகள் பங்காற்றிவருகின்றன. நீண்ட காலமாகவே சிறிய நாடான பூடானில் கவர்ச்சிகரமான அந்நிய முதலீடுகளை வழங்கி அந்நாட்டைக் கவரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுவருகிறது. ஆனால், சீனாவின் இந்த உதவிகளை பூடான் இதுநாள் வரை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது.

முதல் விரல் லடாக்

சீனாவின் முதலாவது விரல் லடாக். சீனாவால் அதிகம் உற்று நோக்கப்படும் பகுதி இது. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் ஊடுருவல்களை சீனா நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்தப் பிராந்தியத்தில் சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனா ஆக்கிரமிப்பு செய்யும் வரை, அக்சாய் சின் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்று அக்சாய் சின்னில் உட்கார்ந்துகொண்டு கல்வான் பள்ளத்தாக்கு வரை முன்னேறி வந்துள்ளது சீனா. கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தம் என்று பகிரங்கமாக உரிமை கொண்டாடவும் செய்கிறது சீனா.

அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளில் சீனா எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும் ‘ஐந்து விரல் உத்தி’களின் அடிப்படையில்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்