கடையை எப்ப சார் அடைக்கணும்?- சிக்கலில் தவிக்கும் சீர்காழி வர்த்தகர்கள்

By கரு.முத்து

நாகை மாவட்டம் சீர்காழியில் கடைகளை எத்தனை மணிக்கு அடைப்பது என்பது தொடர்பாக இரு வேறு வர்த்தக சங்கங்கள் முரண்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கிறார்கள் வணிகர்கள்.

எஸ்.கே.ஆர்.சிவசுப்ரமணியன் என்பவரின் தலைமையில் இயங்கும் 'சீர்காழி நகர வர்த்தக சங்கம்', வணிகர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ‘கரோனா பரவுவதைத் தடுக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் சீர்காழி நகர வர்த்தக சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் ஜூன் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 21 மற்றும் 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை முழுமையாக அடைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பி.கோபு என்பவர் தலைமையில் இயங்கும் ‘சீர்காழி வர்த்தக நல சங்கம்’ சார்பிலும் வர்த்தகர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக அரசு அறிவித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதென்று நமது சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்தபடி கடைகள் அனைத்தும் இரவு 8 மணி வரை இயங்கும் என்றும் அனைத்து வணிகர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகளை அடைத்து, கண்டிப்பாகக் காவல் துறைக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஏற்கெனவே கடைகளைத் திறக்க முடியாமல் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இந்தச் சங்கங்கள் வேறு போட்டி போட்டுக்கொண்டு இம்சிக்கின்றன” என்று சீர்காழி வணிகர்கள் புலம்புகிறார்கள். எந்த நேரத்தில் கடையை அடைப்பது என்று புரியாமல் அவர்கள் தவித்துவரும் நிலையில், “இரண்டுக்கும் இடையில் ஏழு மணிக்குக் கடையை அடைத்துவிடுங்களேன். யாருக்கும் பாதகம் இருக்காது” என்று புதியதாக ஒரு ரூட்டைப் போட்டுத் தருகிறார்களாம் சிலர்.

இப்படியெல்லாமா சோதனை வரும்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE