மனம் தவிக்கிறது; இசை உலகம் ஓர் அற்புதமான பாடகரை இழந்துவிட்டது: ஏ.எல்.ராகவன் மறைவுக்கு திருச்சி சிவா உருக்கம்

By கரு.முத்து

திமுக எம்.பி.யான திருச்சி சிவா பாடகர் ஏ.எல்.ராகவனுடன் நெருங்கிப் பழகியவர். இன்று ராகவன் மறைந்த நிலையில், அவரது மறைவுக்கு மிக உருக்கமான இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சிவா.

தனது குடும்பத்துடன் ராகவன் எத்தகைய நெருக்கம் கொண்டிருந்தார் என்பது உட்பட பல்வேறு தகவல்களை சுட்டிக்காட்டி சிவா எழுதியுள்ள அந்த இரங்கல் கடிதம்:

’’ஏ.எல்.ராகவன், இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். 1950-60-களில் திரைப்படங்களில் பல பிரபல நடிகர்களின் பின்னணிக் குரலாக ஒலித்த இவரது பாடல்கள் இன்றும் கேட்கத் தூண்டுபவை. ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்கின்ற 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் வரும் இவரது பாடல் அமைதியான இரவு நேரத்தில் கேட்கிறபோது மனதைப் பிசையும்.

காதல் தோல்வியுற்ற பின் எங்கோ வாழும் காதலி நலமுடன் இருந்திட வேண்டும் என விரும்புகிற நல்ல உள்ளங்கள் இன்றும் பாடுகிற, கேட்கிற ஒரு பாடலாக அது ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடிய இவர், கதாநாயகனாக ஒரு படத்திலும் நடித்தார். சற்றேறக்குறைய P.B.ஸ்ரீனிவாஸின் குரலை ஒத்த இனிமையான சாரீரம்.

ஜெமினி கணேசன், கல்யாண்குமார் குறிப்பாக, நாகேஷுக்கு ஏற்ற குரலாக இவருடைய குரல் அமைந்தது. தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல இருந்தார். இவரது மனைவி புகழ்பெற்ற நடிகை எம்.என்.ராஜமும் இவரும் என் மனைவியை மகள் என்றுதான் அழைப்பார்கள். மனம் அமைதி தேடுகிறபோது வந்து என் வீட்டில் நான்கைந்து நாட்கள் இருவரும் தங்கிவிட்டுச் செல்வார்கள். என் மகன் மிகவும் நெருக்கமாக இருந்தது இவர்களோடுதான். அவனைக் கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியதை எல்லாம் வாங்கித் தருவார்கள்.

பின்னணிப் பாடகி பி. சுசீலா, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருக்கு கலைப்பேரவை அமைப்பின் சார்பில் நான் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் பங்கேற்று வாழ்த்துரையாற்றிப் பெருமை சேர்த்தனர். அதைப்போல பழம்பெரும் கலைஞர்களில் வாழுகின்ற இணையரான இவர்கள் இருவருக்கும் பாராட்டு விழா நடத்திட வேண்டும் என்கின்ற விருப்பம் பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே சென்று இப்போது வெறும் எண்ணமாக மட்டுமே நிற்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

மனைவி எம்.என்.ராஜத்துடன் ஏ.எல்.ராகவன்

நேரம் கிடைக்கிற போதெல்லாம் அவர்கள் வீட்டுக்குச் சென்று ராஜம் அம்மா சமைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு அவரைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. வயது 80-ஐக் கடந்த நிலையிலும் அவர் உச்சஸ்தாயியில் பாடுவது ஆச்சரியத்தை அளிக்கும். என் பிறந்த நாளாகிய ஜூன் 6-ம் தேதிக்கு இரண்டு தினங்கள் முன்பு வாழ்த்துச் சொல்லிவிட்டு இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஓய்விற்காக திருச்சி வரச்சொல்லி அழைத்ததற்கு எங்கள் மகளில்லாத அங்கு வந்து என்னசெய்ய? என்ற பதில் வேகமாக வந்தது.

வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தில் தொடர்ந்து இருந்த அவர் கடந்த 9-ம் தேதியிலிருந்து பதிவு ஏதுமிடவில்லை. இன்று காலை வேதனை அம்பாய் அவரின் மறைவுச்செய்தி வந்தபோது துடித்துப் போய் நம்ப முடியாமல் தொலைபேசியில் அழைத்தபோது அவரின் மருமகள் பேசி, செய்தியை உறுதிப்படுத்தினார்கள். எனக்குக் கவலை ராஜம் அம்மாவைப் பற்றித்தான். அன்றில் பறவையாய் வாழ்ந்த அவர்களின் அன்பான வாழ்க்கையின் ஆழத்தை நானறிவேன். அவர் இந்தப் பிரிவை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களென்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. வயது எத்தனை ஆனால் என்ன? உடலைக் கடந்து உள்ளம் துணை தேடும் காலத்தில் ஒருவர்க்கு மற்றவர் துணையாய் ஒன்றி வாழ்ந்த இவர்கள் வாழ்வில் இப்படி ஒரு வேதனை.

ஓடிச்சென்று ஆறுதல் கூறிட இயலாத கரோனா காலக் கொடுமை. உற்றவரை இழந்தவர்களுக்கு எவரும் அருகே இருந்து ஆறுதல் கூறிட இயலா அவலம். மனம் தவிக்கிறது. திரை இசை உலகம் ஓர் அற்புதமான பாடகரை இழந்திருக்கிறது. நான் என் உயர்வினில் அக்கறை கொண்ட ஓர் அன்புள்ளத்தை இழந்திருக்கிறேன்.

அவர் இல்லையினி நம்மிடையே! ஆனால் தேனொத்த அவரின் குரல் காற்றுள்ளவரை ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவர் சிரஞ்சீவி!’’.

இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்