பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுக: கபசுரக் குடிநீர் வழங்கி நாகை காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை

By கரு.முத்து

கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாய் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், காவலர்கள் நிலையான செயல்பாட்டு வழிமுறையைப் பின்பற்றி கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் அறிவுறுத்தியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நூறைக் கடந்துவிட்டது. இதன் தீவிரத்தை உணர்ந்து, நேரடி மக்கள் பணியில் இருக்கும் காவலர்களுக்கு நோய் தொற்றாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கபசுரக் குடிநீர் இன்று வழங்கப்பட்டது.

நாகை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலையில் காவலர்களுக்குக் கபசுரக் குடிநீரை வழங்கி, காவலர்கள் மத்தியில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், "கரோனோ வைரஸ் தொற்றில் இருந்து காவலர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை, முறையாகப் பின்பற்றிப் பெருந்தொற்றில் இருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும், நாம் அனைவரும் மக்கள் தொடர்பில் இருப்பதால் பெருந்தொற்றானது நமக்கு மிக எளிதாகப் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆகையால் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், அமைச்சகப் பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர், காவலர் நண்பர்கள் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். அத்துடன், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உபகரணங்களான முகக்கவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி உள்ளிட்டவற்றை முறையாகப் பயன்படுத்தி பெருந்தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

பெருந்தொற்றால் தீங்கு ஏற்படாத வகையில் இந்த சமூகத்தைப் பாதுகாப்பது நமது கடமை. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையத்திலும் நிலையான செயல்பாட்டு வழிகாட்டுதல்படி செயல்பட்டு கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE