விண்வெளிக்கும் ஆழ்கடலுக்கும் சென்ற முதல் பெண்

By சுஜாதா

விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் கேத்ரின் சல்லிவன். தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்!

1978-ம் ஆண்டு நாசாவில் பெண்கள் இடம்பெற்ற முதல் விண்வெளித் திட்டத்தில் சேர்ந்தார் கேத்ரின். 25 ஆண்டுகாலம் நாசாவில் பணியாற்றிய போது, 3 முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். 1984-ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலத்தைவிட்டு வெளியே வந்து 3.5 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். தனது 3 பயணங்களின் மூலம் மொத்தம் 532 மணி நேரத்தை விண்வெளியில் கழித்திருக்கிறார். 1993-ம் ஆண்டு நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற கேத்ரின், தனக்கு மிகவும் விருப்பமான கடலியல் துறையில் நுழைந்தார்.

என்ஓஏஏ (National Oceanic and Admospheric Administration) நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாகச் செயல்பட ஆரம்பித்தார். பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ட்ரெஞ்ச் மிக ஆழமான பள்ளத்தாக்கு. இதில் உள்ள மிக மிக ஆழமான பகுதி சேலஞ்சர். பூமியிலேயே மிக ஆழமான பகுதி இதுதான். 11 கி.மீ. ஆழத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் (கேத்ரினின் கூற்றுப்படி 291 ஜம்போ ஜெட் அல்லது 7,900 டபுள் டெக்கர் பேருந்துகளின் எடைக்கு இணையான அழுத்தம்).

‘லிமிட்டிங் ஃபேக்டர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் இதுபோன்ற கடலின் ஆழப்பகுதிகளுக்குச் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது. விக்டர் வெஸ்கோவோ என்ற ஆராய்ச்சியாளர் 5 கடல்களின் ஆழப்பகுதிகளுக்குச் சென்று, வரைபடம் தயாரிப்பதற்காக இந்த நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது.

வெஸ்கோவோவுடன் இணைந்துதான் சேலஞ்சர் பகுதிக்குச் சென்றார் கேத்ரின். இருவரும் 4 மணி நேரப் பயணத்திட்டத்தில் ஒன்றரை மணி நேரம் சேலஞ்சர் பகுதியில் இருந்து, அழுத்தத்தைச் சமாளித்து, படங்கள் எடுத்து வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார்கள். இந்தப் பயணத்தின் மூலம் கேத்ரின் உலகின் ஆழமான பகுதிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், விண்வெளிக்கும் கடல் ஆழத்துக்கும் சென்ற ஒரே பெண் என்ற சிறப்பும் இவருக்கே. வெஸ்கோவோவுக்கு இது மூன்றாவது பயணம்.

சேலஞ்சரிலிருந்து மேல் பகுதிக்கு வந்தவுடன் கேத்ரினும் வெஸ்கோவோவும் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களுடன் உரையாடினர். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“ஒரு விண்வெளி வீரராகவும் கடலியலாளராகவும் என் வாழ்நாளில் மிகச் சிறந்த நாள்” என்று இந்தச் சாதனையைக் குறிப்பிட்டிருக்கிறார் கேத்ரின் சல்லிவன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்