காமெடி மருத்துவர்... கிரேஸி மோகன்;  இன்று கிரேஸி மோகன் நினைவுநாள்

By வி. ராம்ஜி


அந்த வசனத்துக்கு கைதட்டி, சிரித்திருப்போம். ஆனால் நாம் சிரித்துமுடிக்கும் வரையெல்லாம் காத்திருக்காமல், சிரிப்பு அடங்குவதற்குள் நான்கைந்து ஜோக்குகள் நம்மைக் கடந்துபோயிருக்கும். இரண்டரை மணி நேரப் படத்தில், முதல் முறை பார்க்கும்போது, 36 இடங்களில் சிரித்திருப்போம். இரண்டாவது முறை பார்க்கும்போது 57 இடங்களில் சிரிப்போம். இப்படி ஒவ்வொரு முறையும் பார்க்கப் பார்க்க, சிரிப்பின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். இதென்ன மேஜிக்? இதுதான் கிரேஸி மோகனின் எழுத்து செய்த மேஜிக்.


''படத்துக்கு யார் வசனம் தெரியும்ல’’ என்று ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் பேசிக்கொண்டது, அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது. கலைஞர் வசனம், இளங்கோவன் வசனம், ஆரூர்தாஸ் வசனம், ஸ்ரீதர் வசனம், பாலமுருகன் வசனம், பாலசந்தர் வசனம், பாக்யராஜ் வசனம், ஏ.எல்.நாராயணன் வசனம், சுஜாதா வசனம், பாலகுமாரன் வசனம் என்று வசனம் எழுதியவர்களுக்காகவே படம் பார்த்ததெல்லாம் உண்டு. ஒரு காட்சியை வசனங்களையும் வார்த்தை எடக்குமடக்குகளையும் கொண்டே அந்த வார்த்தைக்குள் ஜிம்மிக்ஸ் வைத்து ஹாஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனதுதான் அவரின் ஸ்டைல். தனி ஸ்டைல்.
‘படத்துக்கு யார் வசனம் தெரியும்ல’ என்று கேட்டுவிட்டு, பெயரைச் சொன்னதும் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் சிரிப்பு வந்து உட்கார்ந்து கொள்ளும். அந்தச் சிரிப்புக்குக் காரணகர்த்தா... கிரேஸி மோகன்.

பொறியியல்தான் படித்தார். புகழ் பெற்ற நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனாலும் மனசு முழுக்க எழுத்திலும் அந்த எழுத்து முழுக்க நாடகத்திலும் அந்த நாடகம் முழுக்க காமெடியாகவும் ரகளை பண்ணினார் கிரேஸி மோகன். ’கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ எனும் நாடகத்தை எழுதினார். அது செம ஹிட்டு.
பார்த்தவர்கள் எல்லோரும் குலுங்கிச் சிரித்தார்கள். அப்படி மனம் விட்டுச் சிரிப்பதற்காகவே மீண்டும் வந்து பார்த்தார்கள். மோகன் ரங்காச்சாரி ஆர்.மோகன் என்றானார். பிறகு யார் மோகன் என்று எல்லோரும் கேட்க... கிரேஸி மோகன் ஆனார்.

‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ உதயமாயிற்று. இயக்குநர் மெளலியின் சகோதரர் எஸ்.பி. காந்தன் இயக்கினார். கிரேஸி மோகனின் கதை வசனத்துக்கு அவரின் சகோதரர் பாலாஜி நாயகனானார். மோகன் கிரேஸி மோகனானது போல், பாலாஜி மாது பாலாஜி என அடையாளம் காணப்பட்டார். இதெல்லாம் கிரேஸியின் ஆரம்ப சாதனைகள்.

இவரின் கதை, டைமிங் காமெடிகளால் பாலசந்தரையே ஈர்த்தார். வியந்து பாராட்டினார். இவரை அழைத்தார். கோடம்பாக்கத்துக்கு கைப்பிடித்து அழைத்து வந்தார். இவரின் நாடகம் சினிமாவாயிற்று. அதுதான் ‘பொய்க்கால் குதிரைகள்’.

குரு பாலசந்தரை ஈர்த்தது போலவே சிஷ்யன் கமலையும் கிரேஸியின் எழுத்துகள் ஈர்த்ததில் வியப்பில்லை. ’சத்யா’ படப்பிடிப்பு சுடுகாட்டில் நடந்துகொண்டிருந்தது. அப்போது சாலையில், ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்த கிரேஸி மோகனை அழைத்தார். அவர்களின் சந்திப்பு சுடுகாட்டில் நடந்தது. அந்த சுடுகாட்டில் பிறந்தது அவர்களின் நட்பு. ‘அபூர்வ சகோதரர்கள்’ மூலம் வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். தெறித்துச் சிரித்தார்கள் ரசிகர்கள். அந்த வகை வசனங்கள், தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருந்தன. எண்பதுகளின் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். திரும்பத் திரும்பப் பார்த்து கொண்டாடினார்கள். குள்ள கமலுக்காகவும் குட்டிகுட்டி காமெடிகளையும் ரொம்பவே ரசித்தார்கள்.

‘இந்திரன் சந்திரன்’, ‘மகளிர் மட்டும்’, சதிலீலாவதி’ என கமல் தொடர்ந்து கிரேஸி மோகனைப் பயன்படுத்தினார். கமல் கிரேஸி கூட்டணி என்றாலே சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்பது ஒவ்வொரு படத்திலும் நிரூபணமானது.

அதேசமயத்தில், பிரபுவுக்கு ‘தேடினேன் வந்தது’, ‘சின்ன மாப்ளே’ முதலான படங்களுக்கும் வசனம் எழுதினார் கிரேஸி. இவர் வசனம் எழுதிய படங்களை திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். ஒரு வசனத்துக்கு கைத்தட்டி, விசிலடித்து, குபீரெனச் சிரித்து அடங்குவதற்குள் நான்கு காமெடி சரவெடிகளைப் போட்டுக்கொண்டே போயிருப்பார் கிரேஸி. அதற்காகவே இன்னொரு முறை, இன்னொரு முறை என்று வந்தார்கள் ரசிகர்கள்.

‘அப்பா... இவர் என் கூடப் படிச்சவர்’’
‘நீ ஏன் குறைச்சலாப் படிச்சே?’
***************************
‘’முதலாளி... துப்பாக்கியால சுடப்போறீங்களா? கழுத்தை நெரிச்சுக் கொல்லப்போறீங்களா?’’
‘’ஏன்டா கேக்கறே?’’
‘’கையாலதான் கொல்லப் போறீங்கன்னா துப்பாக்கியை எங்கிட்ட கொடுத்துடுங்க’’
***************************
‘’கபடநாடகவேடதாரி’’
‘’ஏய் அப்பு... இந்த சின்ன உடம்புக்குள்ளேருந்து எவ்ளோ பெரிய வார்த்தை’’
‘’ஆமாம் முதலாளி... அதுவாவே வந்துருச்சு’’
***************************
‘’வயசு என்ன?’’
‘’27 ஆச்சுங்க’’
‘’எது? அந்த 26க்கு அப்புறம் வருமே... அந்த இருபத்தி ஏழா?’’
***************
‘’அய்யா... ராஜா’’
‘’என்னடா இது... மீதி எங்கேடா?’’
‘’இவ்ளோதாங்க கிடைச்சுது’’
*****************************
‘’சின்னவீட்டுக்கு பெரிய காரா?’’
‘’அம்மா கொஞ்சம் பெருசு’’
*******************

இப்படி ‘அபூர்வ சகோதரர்கள்’ என்கிற ஒரு படமே... ஒருசோறு பதம்.


சினிமா, பேர்புகழ் என கிடைத்து விட்டதால், நாடகத்தைக் குறைத்துக்கொள்ளவே இல்லை கிரேஸி மோகன். வரிசையாக நாடகங்கள் போட்டுக் கொண்டே இருந்தார் கிரேஸி. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை கூட வராமல் போகலாம். ஆனால் சென்னையில் இவரின் டிராமா இல்லாத ஞாயிறே இருக்காது. குடும்பம் குடும்பமாக வந்து ரசித்துச் சிரித்துவிட்டுச் செல்ல பெருங்கூட்டமே இருந்தது. அது, கிரேஸி பட்டாளம்!

இவரின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ டிராமாவை எத்தனை முறை அரங்கேற்றியிருப்பார்கள் என்பது அந்த ட்ரூப்புக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால் ரசிகர்கள், பால் கணக்கு போல பளிச்சென்று சொன்னார்கள். கிருஷ்ணரை வைத்துக்கொண்டு, கிரேஸி மோகனின் கற்பனை ரகளையைக் காண, அந்தக் கிருஷ்ணரே கிருஷ்ணகான சபா வந்திருப்பார்.

கிரேஸி மோகன் என்றதும் நினைவில் வரும் விஷயங்கள்... மாது, சீனு, ஜானகி. இவரின் எல்லா நாடகங்களிலும் நாயகன் பெயர் மாதுதான். அதேபோல் ஏதேனும் ஒரு கேரக்டருக்கு சீனு எனப் பெயர் வைத்திருப்பார். நாயகியின் பெயர் ஜானகியாகத்தான் இருக்கும். ஜானகி... கிரேஸி மோகனின் டீச்சர். அவர் மேல் கொண்ட அன்பு, மரியாதை. அவர் எழுதிய படங்களிலும் ஜானகி வந்துவிடுவார்.

ரஜினியின் ‘அருணாசலம்’, சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’, கமலின் ‘பஞ்ச தந்திரம்’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ’அவ்வை சண்முகி’, ராஜமவுலியின் ‘ஈ’ என பல படங்களுக்கு வசனம் எழுதி, அப்ளாஸ் அள்ளிக்கொண்டே இருந்தார்.


‘’ஸாரி... அவருக்கு கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி’’
‘’எனக்கு பின்கோபம் ஜாஸ்தி’’
***********************
‘’சமையல் வேலைன்னா மட்டமா? அன்னபூரணின்னுதான் சொல்லுவா. கூல்டிரிங்ஸ்பூரணின்னு சொல்லமாட்டாங்க’’
*********************
’’முதலியார்கிட்ட சொன்னதையே உங்ககிட்டயும் சொல்லிடுறேன்’’
‘’முதலியாரா?’’
‘’முதல்ல யார்கிட்ட என்ன சொன்னேனோ அதையே சொல்லிடுறேன்’’
*****************
‘’உங்களுக்கு ஒரு செல்லம்மா இல்லியா, அதுபோல எனக்கொரு செல்லப்பா இருக்கார்’’
************************

‘’ஒருவேளை உம்புருஷன் வந்துட்டான்னா, உங்களுக்கு டைவர்ஸ் வாங்கிக் குடுத்துடுறேன்’’
‘’உங்களுக்கு வேற வேலையே இல்லியா? உங்க பொண்ணுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்தேள். அதுபோதாதா?’’
********************
‘’விரல் அஞ்சு இருக்கு. மோதிரம் போட்டுக்கலாம். ஆனா கழுத்து ஒண்ணுதான் இருக்கு, ஒருதாலிதான்’’
******************
கணவன் மனைவி டைவர்ஸ் பண்ணலாம், ஆனா அப்பா அம்மா டைவர்ஸ் பண்ணப்படாது.
************************

அச்சுப்பிச்சு காமெடி இருக்காது. ஆபாசம் கொஞ்சம் கூட எட்டிப்பார்க்காது. யாரையும் காயப்படுத்துகிற வார்த்தைகள் துளியும் இடம்பெறாது. ஆனால், வார்த்தைகளைக் கொண்டே கபடி விளையாடுவார் கிரேஸி.

காமெடி நறுமணம் தெறிக்கிற கிரேஸியை சந்தித்தால், எப்போதும் வெற்றிலை நறுமணம்தான். மனிதர், வெற்றிலை போட்டுக்கொண்டே இருப்பார். இவரின் வெற்றிலையைப் பெட்டியைக் கொண்டுதான், ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் டெல்லி கணேஷின் வெற்றிலைப் பெட்டியை எஸ்.என்.லட்சுமி லபக்கும் காட்சி ஐடியாவே தோன்றியதாம்.

கடகடவென காமெடி கொட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்தான் கிரேஸி. அதேசமயம் நுணுக்கி நுணுக்கி, பொறுமையாக, ஓவியம் வரைவதிலும் கில்லி. கிரேஸியின் அப்பாவிடம் இருந்துதான் அவருக்கு ஹீயூமர் சென்ஸே வந்திருக்குமோ என்னவோ...
ஒருமுறை மகாலக்ஷ்‌மியின் படத்தை வரைந்து, அப்பாவிடம் காட்ட... அவர் சொன்னார்... ‘நம்ம வீட்டு வேலைக்காரியை அவ்ளோ தத்ரூபமா வரைஞ்சிருக்கியே’ என்று!

சமீபகாலங்களில், வெண்பாவும் எழுதினார். கிருஷ்ணர் பற்றியும் ரமண மகரிஷி பற்றியும் வெண்பா எழுதியதைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. கலகல டிராமா, சினிமாவுக்கு வசனம் என கலந்துகட்டி ரவுண்டு வந்தவர், கூட்டுக் குடும்பமாகவே கலகலவென வாழ்ந்தார்.

‘’அட... இப்பவும் கூட்டுக்குடும்பமா?’’என்று யாரேனும் கேட்டால். ‘அட நீங்கவேற... இப்பலாம் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து இருந்தாலே அது கூட்டுக்குடும்பம்னு ஆயிடுத்து’’ என்று வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே, நகைச்சுவையைக் கொட்டுவார்.

கைதூக்கிவிட்ட கமலுக்கு ப்ரியன். ‘அவர் கமல்ஹாசன் அல்ல. கமல்ஹாஸ்யன்’’ என்பார் கிரேஸி. கிரேஸிக்கு கோபம் வந்தால் அவரின் ட்ரூப்புக்கு கொண்டாட்டம்தான். யாரையும் கடிந்துகொள்ளமாட்டார். சுள்ளென்று பேசமாட்டார். பதிலுக்கு நாலு காமெடிக்குப் பதிலாக நாற்பது காமெடிகளை, காட்சிகளை, வசனங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இதுவும் கிரேஸி ஸ்டைல்தான். அவரின் வாழ்க்கை ஸ்டைல்.


‘என்னய்யா இது... திறந்த வீட்ல எச்சக்கலை நுழைஞ்ச மாதிரி...’’


‘’ஏய்... யாரைப் பாத்து எச்சக்கலை நாய்ங்கறே’’


‘’அய்யோ.. எச்சக்கலைன்னா நாய்தானா. எச்சக்கலை சிங்கம், எச்சக்கலை புலி’’


கிரேஸி மோகனைச் சொல்ல, எத்தனையோ படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்களில் இருந்து நான் நாற்பது சொன்னால், நீங்கள் நானூறு சொல்லுவீர்கள். ‘அந்தப் படத்துல அந்த சீன்ல...’ என்று அப்படியே சொல்லிக் கொண்டிருக்க, தன் எழுத்துக்களைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார் கிரேஸி மோகன்.

அந்தப் படங்களை நாளைக்கு திரையிடுவார்கள். அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று திரையிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து, சிரித்துச் சிரித்து கிரேஸி கிரேட் என்று கொண்டாடிக்கொண்டே இருப்போம்.


ஆனால் கிரேஸிதான் இல்லை இப்போது!


மிஸ் யூ கிரேஸி சார்!


இன்று (ஜூன் 10ம் தேதி) கிரேஸி மோகன் நினைவுநாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்