புதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்?- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ சர்ச்சை குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சொல்வது என்ன?

By பாரதி ஆனந்த்

நாவல் கரோனா வைரஸ் டிசம்பர் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டு 2020-ல் 6 மாதங்களை விழுங்கிவிட்டு இன்னும் உலகைச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.

கரோனாவில் இருந்து மீளும் நாளும், நேரமும் தெரியாமல் மனிதகுலம் ஸ்தம்பித்து நிற்கும் வேளையில், அது புது அவதாரம் எடுத்துவிட்டதாகவும் தமிழகத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு க்ளேட் ஏ13 ஐ என்ற வகையிலான கரோனாதான் காரணம் என்றும் சமூக வலைதளங்கள் அலற கரோனாவை விட வேகமாக இதுகுறித்த அச்சமும் பரவி வருகிறது.

க்ளேட் ஏ13 ஐ மீதான கற்பிதங்கள் குறித்தும் கரோனா தொடர்பான இன்னும் பல்வேறு சந்தேகங்கள் தொடர்பாகவும் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் பிரசார் நிறுவனத்தின் (விக்யான் பிரசார்) முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

அவருடனான பேட்டியில் இருந்து:

க்ளேட் ஏ13 ஐ என்பது கரோனாவின் புதிய அவதாரமா?

வைரஸ் தொற்று நோய்கள் மக்களைத் தாக்கும்போது, நோய் பாதித்தவர்களிடமிருந்து பெறப்படும் வைரஸ் ஐஸோலேட்ஸில் ( - Virus Isolates)-அதாவது ரத்த, சளி மாதிரிகளில் இருந்து சேம்பிள் சீக்வன்ஸிங் (Sample Sequencing) செய்யப்படும். அது மாதிரியாக உலக அளவில் 4000 மேற்பட்ட சேம்பிள் சீக்வன்ஸிங் நடந்துள்ளது.

இதை சாமானியருக்குப் புரியும்படி உதாரணத்தோடு விளக்க இப்படிச் சொல்லலாம். நமக்கு ஒரு பழமையான ஓலைச் சுவடி கிடைத்தால் அதில் எழுதப்பட்டுள்ளதை எல்லோரும் புரிந்துகொள்ள நடைமுறையில் உள்ள தமிழில் அதை எழுத முற்படுவோம் அல்லவா. அத்தகைய டீகோடிங் தான் இதுவும்.

பொதுவாக ஆர்என்ஏ வைரஸ் 15 நாட்களுக்கு ஒருமுறை திடீர் மரபணு மாற்றத்துக்கு உட்படுகிறது. அப்படி மரபணு மாற்றம் ஆனவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தான் ஏ1, ஏ2, ஏ3, பி2, பி3 என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். ஒரு மரத்தின் கிளைகள் போன்றவை இவை. இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட சேம்பிள் ஸீக்வென்ஸிங் நடந்தது. அதில் கண்டறியப்பட்ட மரபணு உலகம் முழுவதும் கண்டறியப்பட்டதில் இருந்து வித்தியாசமாக இருந்தது. அதனால், க்ளேட் ஏ13 ஐ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இதுவும் கரோனா வைரஸ்தான். இது புதிய வைரஸோ அல்லது கரோனாவின் புதிய அவதாரமோ இல்லை. மேலும், க்ளேட் ஏ13 ஐ வகை இந்தியாவில் மட்டுமே இருக்கிறது என்பதும் உண்மையில்லை.

ஏற்கெனவே உலக அளவில் கண்டறியப்பட்ட வகையில் இந்த வகை அன்க்ளாசிஃபைட் வகையில் இருந்தது. இப்போது இது வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் இதன் கீழ் வந்துவிடுகிறது.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டுவிட்டதா?

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் இன்னும் உச்சம் தொடவில்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அவர்களிடமிருந்து இருவேறு கணிப்புகள் வருகின்றன. ஜூலை 15, ஜூலை இறுதி என இந்த இரண்டு காலகட்டத்தில் இந்தியாவில் கரோனா உச்சம் தொடும் என்று சொல்கிறார்கள்.

கரோனாவைத் தடுக்க ஹெர்ட் இம்யூனிட்டி முறையைப் பின்பற்றலாம் என்று சொல்கிறார்களே? அது சரியா?

ஹெர்ட் இம்யூனிட்டி என்பது தடுப்பூசிகள் சம்பந்தமான கலைச்சொல். இதற்கும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் ஹெர்ட் இம்யூனிட்டியைப் புரிந்து கொள்வோம். ஒரு நோய்க் கிருமியிடம் இருந்து ஒரு தனிநபரைக் காப்பற்றவோ அல்லது ஒரு சமூகத்தைக் காப்பாற்றவோ தடுப்பூசி போடப்படுகிறது. பொதுநல மருத்துவம் எல்லோரையும் பாதுகாக்க முயல்கிறது. அதன்படி தடுப்பூசி போடும்போது அவர் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அப்படி இந்தியாவிலும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேண்டும் என்றால் தடுப்பூசி கண்டுபிடித்து 60% முதல் 70% மக்களுக்கு அதைச் செலுத்த வேண்டும். அப்போது அது மற்றவர்களுக்குப் பரவாது.

ஆனால், இதை எப்படித் தவறாகப் பரப்புகிறார்கள் என்றால், கரோனா வைரஸ் 70% முதல் 80% மக்களுக்குப் பரவட்டும். அதில் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும், தொற்றுக்குப் பலியானவர்கள் ஆகட்டும். அது அவர்களின் வயது சார்ந்ததாக இருக்கும். பிழைத்திருப்பவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவுவது கட்டுப்படும் என்று மிக மிகத் தவறாகத் திரித்துச் சொல்கிறார்கள். ஆகையால் ஹெர்ட் இம்யூனிட்டியை கரோனா தடுப்பு நடவடிக்கையுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

இனிமேல் கரோனாவுடனேதான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை காலம் இந்த அச்சுறுத்தல் இருக்கும்?

இதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், இந்தியாவில் 60% முதல் 70% பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட வேண்டும். இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 4 கோடி பேர் கரோனாவுக்குப் பலியாக வேண்டும். ஒருவேளை, அப்படி நடந்தால் மற்றவர்களுக்கு அது பரவுவது தடைப்படும். ஆனால், கரோனா நோய் இந்தியாவில் பரவும் வேகத்தை எடுத்துக் கொள்வோம். இன்றளவில் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அப்படியென்றால் 4 கோடி பேர் பலியாக எவ்வளவு காலமெடுக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் கரோனா வைரஸ் உண்மையிலேயே புதிய அவதாரம் எடுத்துவிடும்.

ஒரு நபருக்கு ஒருமுறை கரோனா தாக்கினால் மீண்டும் அவருக்குத் தொற்று ஏற்படுமா?

நிச்சயமாக வராது. ஒருவேளை அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவே இல்லை என்ற நிலையில் அது புதிய அவதாரம் எடுத்தால் அப்படி நடக்க வாய்ப்புள்ளது.

ப்ளாஸ்மா சிகிச்சை எந்த அளவுக்குப் பலனளிக்கிறது?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் இது நடக்கிறது. இந்தியாவிலும் மேற்கொள்ளப்படுகிறது. கரோனாவுக்கு மருந்து, தடுப்பூசி இல்லாத வரை இதுபோன்ற சோதனைகளைச் செய்துதான் ஆக வேண்டும். இந்தியாவில் ஓரளவுக்குப் பலனளிப்பதாகவே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

கரோனாவால் ஏற்படும் இளவயது மரணங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி உங்கள் கருத்து?

ஆம், நானும் கூட செய்திகளில் கவனித்தேன். ஆனால், இதன் சதவீதம் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. பொதுவாகவே இளம் வயதினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து குணமடைய மிகமிக அதிகமான வாய்ப்பு உள்ளது.

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?

ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தளர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே நான் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜயராகவனிடம் பேசினேன். அவர் 5 முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

1. முகக்கவசம் அணிதல் - என் 95 மாஸ்க் தான் அணிய வேண்டும் என்றில்லை. 3 அடுக்கு மாஸ்க் அது இல்லாவிட்டால் வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க், ஏன் ஏதேனும் சிறிய டவலாகக் கூட இருக்கலாம். இதை அணிவது உங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் மற்றவரிடமிருந்து உங்களுக்கும் தொற்று ஏற்படாமல் காக்கும்.

2. கைகளை அடிக்கடி சோப் - தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாகப் பொது இடங்களில் பலர் பயன்படுத்தும் பொருட்களைத் தொட நேர்ந்தால் நிச்சயமாகக் கை கழுவ வேண்டும். சோப்பு - தண்ணீர் கிடைக்காத இடங்களில் சானிடைசர் பயன்படுத்தவும்.

3. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.

அடுத்த இரண்டும் அரசாங்கம் செய்ய வேண்டியவை:

4. கறாரான பரிசோதனை. கரோனா பரிசோதனைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு தொற்றுள்ளவர்களைக் கண்டறிய வேண்டும். பின்னர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.

5. நோய் அறிகுறி, பாசிட்டிவ், தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையுமே தனிமைப்படுத்த வேண்டும். சாதாரண சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா பரவலைக் குறைக்க வேண்டுமானால் நாம் நன்றாக இருப்பது போல் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் அதாவது அக்கம்பக்கத்தினரும் நலமாக இருக்க வேண்டும். அதற்கு நான் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து, கைகளைச் சுத்தப்படுத்தி, தேவையில்லாமல் வெளியில் திரிவதைத் தவிர்த்து சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE