கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தின் தலைநகரான சென்னை. முன்பெல்லாம் பத்திரிகைகளில் மட்டுமே கரோனா நோயாளிகளைப் பற்றி படித்துக்கொண்டிருந்தவர்கள், இப்போது தங்கள் தெருவில், தங்கள் அடுக்ககத்திலேயே நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிய நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படும் நிலையில், மேலும் பல லட்சம் பேருக்குத் தொற்று இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்களே எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அதன் விளைவாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், சென்னையிலிருந்து வருபவர்களை வேறு மாதிரியாகக் கையாளத் தொடங்கிவிட்டது. ஆரம்ப காலங்களில் ஒருவர் எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அவரது இ-பாஸ் விண்ணப்பத்தை அனுமதிக்கிற அதிகாரம் அவர் குடியிருக்கிற மாவட்ட நிர்வாகத்திடமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்த அதிகாரம் அவர் எந்த மாவட்டத்துக்குச் செல்கிறாரோ அந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, ஈரோட்டிலிருந்து ஒருவர் நெல்லை செல்கிறார் என்றால், ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. இப்போதைய நடைமுறையின்படி, நெல்லை மாவட்ட நிர்வாகம்தான் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும். இது சென்னைவாசிகளுக்குப் பெரும் தொல்லையாகியிருக்கிறது. சென்னையிலிருந்து யார் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தாலும், தென் மாவட்டங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்துவிடுகின்றன.
திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்கே இந்த நிலை என்றால், ‘2 மாதமாக அலுவலகம் செல்ல முடியவில்லை. எனவே சொந்த ஊர் திரும்புகிறேன்’ என்கிற கோரிக்கையை எல்லாம் எப்படி அணுகுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம், ‘சிவப்பு மண்டலத்திலிருந்தும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தும் வெளியேற யாருக்கும் அனுமதி இல்லை’ என்பதுதான்.
(ஆளுங்கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் நெருக்கமானவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படுகின்றன. இதில் இ-பாஸ் வாங்கித்தருகிற புரோக்கர்களின் வேலை வேறு இருக்கிறது.)
இது ஒருபுறம் இருக்க இ-பாஸ் வாங்கிக்கொண்டோ, வாங்காமலோ சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வருவோரை அந்தந்த மாவட்டங்கள் வேறு மாதிரி நடத்துகின்றன. இ-பாஸைக் காட்டியோ, அல்லது நானும் அரசு ஊழியர்தான் என்று சொல்லியோ ஒவ்வொரு மாவட்ட எல்லையையும் எளிதாகக் கடந்துவரும் அவர்கள், தங்களது சொந்த மாவட்டத்துக்குள் நுழையும்போது தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்கள் இவ்விஷயத்தில் மிகக் கடுமையாக நடந்துகொள்கின்றன. சென்னையிலிருந்து வருபவர்களைச் செக்போஸ்ட்டில் பிடித்தவுடன் அவர்களை அருகிலேயே ஒரு வீட்டிலேயோ, கல்லூரியிலேயோ தனிமைப்படுத்திவிடுகிறார்கள். கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுத்து, பரிசோதனை முடிவு வரும் வரையில் அவர்கள் அந்த முகாமில்தான் இருந்தாக வேண்டும். பரிசோதனைக்கான மாதிரியை எடுத்துவிட்டால் 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு வந்துவிடும். ஆனால், பரிசோதனை மாதிரி எடுப்பதற்கே இரண்டு மூன்று நாட்களாகிவிடுகின்றன. யாராக இருந்தாலும் இதிலிருந்து விதிவிலக்கு கிடையாது.
சென்னையிலிருந்து சமீபத்தில் தன் சொந்த ஊருக்கு வந்த பத்திரிகையாளர் ஒருவரை, தென்காசி மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தியது மாவட்ட நிர்வாகம். “நான் மட்டும் என்றால் எத்தனை நாள் வேண்டுமானாலும் முகாமில் இருப்பேன் சார். சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள் தயவுசெய்து வீட்டிற்குச் செல்ல அனுமதியுங்கள். அங்கேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம். கரோனா ரிசல்ட் வந்ததும் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து அரசு நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு தருவோம்” என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்திருக்கிறார். அவரது வேண்டுகோள் எதுவும் ஏற்கப்படவில்லை.
தேனி மாவட்டத்துக்கு வந்தவர்கள் கரோனா 'நெகடிவ்' என்று பரிசோதனை முடிவு வந்த பிறகும்கூட கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். சென்னையிலிருந்து வந்த அனைவரின் செல்போனிலும் 'தேனி காவலன்' என்ற ஆப் நிறுவப்படுகிறது. அவர்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியே வந்தால், காவல் துறையிலிருந்து வீடு தேடி வந்துவிடுகிறார்கள். தெரிந்தே, நோய் பரப்புவதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன.
எனவே, அன்பார்ந்த சென்னை வாழ் தென் மாவட்ட மக்களே! தயவுகூர்ந்து சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் எண்ணம் இருந்தால் அதைத் தற்சமயத்துக்குக் கைவிட்டுவிடுங்கள். ஆம், தங்கள் மாவட்டம் தங்களை அன்புடன் வரவேற்கவில்லை.
அது மட்டுமல்ல, சென்னையிலும் கூடுதல் கவனமாக இருங்கள். வேலைக்குச் செல்வோரைத் தவிர வேறு யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். வெளியே செல்கையிலும் தேவையில்லாத இடங்களில் உட்காருவது, சாய்வது, பொருட்களைத் தொடுவதைத் தவிர்த்துவிடுங்கள். தனிமனித இடைவெளியைக் கட்டாயமாகக் கடைப்பிடியுங்கள். உங்களை நீங்கள் மட்டும்தான் தற்காத்துக்கொள்ள முடியும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago