நிஷா என் கையை மீண்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறாள், அம்மா. அவள் பள்ளியின் சைக்கிள் நிறுத்துமிடத்தில் என் கையைப் பிடித்து நடப்பாளே, அதைப் போல் இல்லை இது. இது வேறு மாதிரி. இது ஏதோ ஒரு தேவையின் வெளிப்பாடாக, முற்றிலும் எதிர்பாராததாக, பாசாங்கு அற்றதாக இருந்தது.
என் கவனம் அவளை விட்டுச் சிறிது விலகினாலும், சட்டென்று தன் கையை நீட்டி என்னை இறுக்கமாக, முரட்டுத்தனமாகப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்குகிறாள். அவளது இறுக்கமான அந்த உலுக்கல் என்னை எப்போதும் ஆச்சரியப்படவைக்கும். இரவில் அவளுக்குப் போர்த்திவிடும்போது அவள் நெற்றியில் முத்தமிட்டு, ‘உன்னை மிகவும் நேசிக்கிறேன் என் செல்லமே’ என்று அவள் காதருகில் சொல்வேன் (ஏனென்றால் இறக்கும்வரை நீங்கள் அப்படித்தானே செய்தீர்கள்). அவளும் பதிலுக்கு என் கையைப் பிடித்து மென்மையாக அழுத்தி, ‘நானும் உங்களை நேசிக்கிறேன் அம்மா’ என்று சொல்கிறாள்.
அன்றொரு நாள் பள்ளிக்கு என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள். ‘பெற்றோரின் அன்பு ஒரு நாள் இல்லாமல் போகும்’ என்ற மடத்தனமான ஒரு விளம்பரத்தை அங்குள்ள சுவரில் பார்த்தாள். என் கையை இறுகப் பிடித்தவள், பள்ளி சென்று சேரும்வரை இறுக்கத்தைத் தளர்த்தவில்லை. எனக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம் அவள்.
இந்தக் குழந்தை அற்புதமானவள் அம்மா. அவள் சோர்வாக இருக்கும்போதோ, ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும்போதோ, செய்வதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும்போதோ எப்படித் தன்னுள் புதைந்துகொள்வாள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவள் எப்படித் தோள்களை வளைத்துக்கொண்டு, அடர்ந்த கூந்தலுள்ள தன் தலையைக் குனிந்துகொண்டு, இமைகளைச் சுருக்கிக்கொண்டு செல்வாள் என்று நினைவிருக்கிறதா? என் ஞாபகம் சரியாக இருக்கும் என்றால், நீங்கள்கூட அவளை ஆமை என்று கூப்பிட்டீர்கள் என்று நினைக்கிறன்.
இப்போது அவளுக்குப் 13 வயதாகிறது. ஏறக்குறைய என் உயரம் இருக்கிறாள். தோள்களை உயர்த்தி, தலையை நிமிர்த்தி, பையன்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறாள். அவளைப் பற்றி உங்களுக்கு எதுவெல்லாம் தெரியும் என்று எனக்குத் தெரியுமோ, அதைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிய வேண்டும்.
ஒரு நாள் இரவு அவள் என் கையைப் பிடித்துக்கொண்டு தூங்கினாள். எனக்கு என்னவோ அதைப் பார்க்கும்போது நமது கைகள் சேர்ந்திருந்ததுபோல் தோன்றியது. கண்களைக் கசக்கிப் பார்க்கிறேன். அது நாம்தான், நீங்களும் நானும்தான். நமது எதிர்காலத்தை அதில் பார்த்தேன். எனக்கும் உங்களுக்குமான, எனக்கும் அவளுக்குமான எதிர்காலத்தை நான் பார்த்தேன் அம்மா. இந்தக் கையைப் பிடித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையிலிருந்து, அவள் என் கையை விடுத்துச் செல்லும் தவிர்க்க முடியாத எதிர்கால நிகழ்வை நினைத்துப் பார்த்தேன். நம் எல்லோருக்கும் தெரிந்த, வரப்போகும் பிரிவைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன்.
பெண் குழந்தையை வளர்ப்பதற்கு நிறைய அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட அவள் முகத்தில் உங்களை நான் காண்பதை எப்படி நிறுத்துவது என்று சொல்லவில்லை. வாழ்வில் மிகவும் முக்கியமான, மனதுக்குப் பிடித்த பெண்ணை இழந்தபோதும், யாரும் என்னிடம் இன்னொரு பெண்ணை எப்படித் திறந்த மனதுடன் நேசிப்பது எனச் சொல்லவில்லை. மிக முக்கியமாக, வளர்ச்சியின் காரணமாக என் இதயம் நொறுங்கும் வண்ணம் ஒரு நாள் பிரியப்போகும் மகளிடம் எப்படித் தோழமையுடன் இருக்க வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை.
நான் ஆமையைப் போல் ஆக விரும்புகிறேன், நீங்கள் மறைந்த பின் என்ன செய்தேனோ அதைப் போல். அவள் வேகமாக வளர்வதைப் பார்க்க மனதுக்குச் சற்றுப் பாரமாகத்தான் உள்ளது. ஆனால், இந்த வளர்ச்சியின் துடிதுடிப்பு எனக்கு உங்களை ஞாபகமூட்டுகிறது. எப்படி அனைத்தும் மாறியது, எப்படி அனைத்தும் சென்று முடிந்தது, வேகமான இதயத் துடிப்பைப் போன்று எல்லாம் நடந்து முடிந்தன அல்லவா?
அவள் சீக்கிரம் ஒரு இளம்பெண்ணாக வளர்ந்துவிடுவாள். அதன்பின் ஒரு மனைவியாக, தாயாக மாறக்கூடும். அவள் ஒரு தலைவியாவாள் என்று நான் நினைக்கிறேன். அவள் பயமற்றவளாக இருக்கிறாள். எப்படி நான் அவளால் மாறினேனோ, அதுபோல் அவளது உலகமும் சிறந்ததாக மாறும் என நினைக்கிறேன்.
ஆனால், இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அவள் பிடியை விடுவிக்கும் பொழுதிலிருந்து, என் கை வலிக்க ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். அதற்கான எச்சரிக்கைகளை இப்பொழுதே நான் உணர்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதும் தெரிகிறது. தன்னைப் பாதிக்கும் என்று தெரிந்த ஒன்றில் இருந்து தப்பிப்பதற்காக, ஆமையைப் போல் என்னுள் புதைந்து, மறைந்துகொள்ள விரும்புகிறேன்.
அந்த நாளில் அலங்கோலமாக, கையை நீட்டியபடி, எதிர்பார்ப்புடன் விரல்கள் சற்றுப் பிரிந்த நிலையில் என் கையை அங்கேயே விட்டுவிடப் போகிறேன். அவள், என் விரல்களின் இடையே அவள் விரல்களை நுழைத்து இறுக்கமாகப் பிடிப்பாள் என்ற நப்பாசையான எதிர்பார்ப் பில் அப்படிச் செய்ய நினைக்கிறேன். ஆனால், அந்த நாள் வரும் பொழுது, அவள் என் கையை மீண்டும் பிடிக்கமாட்டாள். ஏனென்றால் அது அப்படித்தான் நடக்கும். அதுதான் இயல்பு, அவளின் வளர்ச்சிக்கு அதுதான் நல்லது.
ஒருவேளை அப்போது நான் இதயம் நொறுங்கி விழுந்தேன் என்றால், நான் உங்களிடம் கேட்க விரும்புவது இதைத்தான் அம்மா: ‘தயவுசெய்து என் கையைப் பிடித்துத் தூக்கிவிடுங்கள், நான் விழுந்து கிடப்பதை அவள் பார்ப்பதற்குள் சீக்கிரமாகத் தூக்கிவிட்டுவிடுங்கள். நான் உறுதியானவள் என்று என்னைப் பற்றி அவள் நம்புவது எனக்கு அவசியம். நான் எப்படி உங்களைப் பற்றி நினைத்தேனோ, அதைப் போல.’
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago