“கிட்டத்தட்ட 15 நாட்களில் 59 ரயில்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் அனுப்பிவிட்டோம். இன்னமும் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்து லட்சம் பேருக்கு மேல காத்திருக்காங்க. போகிற போக்கைப் பார்த்தால் இப்படியே ஒரு வருஷத்துக்கு இவங்களுக்காகவே சிறப்பு ரயில் விட்டுட்டே இருக்க வேண்டியதுதான் போல…” என்று புலம்பித் தள்ளுகிறார்கள் கோவை போலீஸார். புலம்பெயர் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதில் இன்னமும் நீடிக்கும் குழப்பங்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
உத்தரப் பிரதேசத்துக்குச் செல்ல வேண்டியவரை மத்தியப் பிரதேசத்திலும், பிஹார் செல்ல வேண்டியவர்களை ஒடிசாவிலும் என இடம் மாறி இறக்கிவிட்ட குழப்பங்கள் குறித்து நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுபோலவே தமிழகத்திற்கு வரும் ரயில் காட்பாடியில் நிற்காது, மதுரையில்தான் நிற்கும்; நாகர்கோவில் செல்லும் ரயில் நெல்லையில் நிற்காது என்றெல்லாம் சொல்லப்பட்டதால் அவதிப்பட்டவர்கள் பற்றிய செய்திகளும் ஏராளம்.
கோவை, திருப்பூரைப் பொறுத்தவரை அங்கங்கே இருக்கும் கிராமங்களில் உள்ளவர்களைத் திரட்டி நகரங்களுக்குக் கொண்டு வருவதிலேயே ஆயிரம் குழப்பங்கள். ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக்கொண்டவர்களிடம் போனிலேயே தகவல் சொல்லி சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரும் பொறுப்பு விஏஓ, வருவாய் ஆய்வாளர், தாசில்தாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முன்னதாகக் கோவை ரயில் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள நல்லாயன் பள்ளியில் அவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யவும் வேண்டும். அப்படி பரிசோதனை செய்து வருபவர்களுக்கு ரயில் கிடைக்காதது, ரயில் பாஸ் வாங்கியவர்கள் பரிசோதனை செய்யாமல் வருவது என இன்னும் பல குழப்பங்கள் தொடர்கின்றன.
உதாரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நல்லாயன் பள்ளிக்குப் பரிசோதனை செய்துகொள்ள வந்தவர்களில் பெரும்பான்மையானோர் மேற்கு வங்கம் செல்ல வேண்டியவர்கள். ஆனால், அன்றைக்குச் செல்லும் சிறப்பு ரயில்கள் உத்தரப் பிரதேசத்துக்குச் செல்லக்கூடியவை. அதனால் இங்கே வந்து தேங்கிய ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை விரட்டி விடவே ஒரு போலீஸ் படை இயங்கியது. புலம்பெயர்த் தொழிலாளர்களோ, “விஏஓ, தாசில்தார் சொல்லித்தான் வந்தோம். திரும்பி எப்படிப் போவது?” என்று இந்தியில் திருப்பிக் கேட்க, அதை மொழிபெயர்க்க ஆட்களை வைத்து போலீஸார் திணறும் காட்சியெல்லாம் அரங்கேறியது.
அவர்கள் எல்லாம் கோவை நகரிலிருந்து 10-15 மைல் கிழக்கே உள்ள காங்கயம்பாளையம், சூலூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள். தாங்கள் வேலை செய்து வந்த இடத்தில் வசித்த வீடுகளையும் காலி செய்து பெட்டி படுக்கைகளோடு வந்திருந்தனர். அதனால் ‘இனி நாங்கள் எங்கே திரும்பிப் போவது?’ என்ற கேள்வியுடன் கொதிநிலையின் உச்சத்திற்குச் சென்றிருந்தனர். போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரோ, “ஏய்யா, இது என்ன குஜராத்தா, உங்க சவுகரியத்துக்கு ஒரு நாளைக்கு 80 ரயில் வந்து நிற்கிறதுக்கு? போ, போ. உங்களுக்கு ரெண்டு நாள் கழிச்சுதான் ட்ரெயினு” என்று விரட்டினர். குழந்தைகளையும் பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு தொழிலாளர்கள் ஓடுவதும், திரும்பி வருவதும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
இந்த நிலை அடுத்தடுத்த நாளும் மாறவில்லை. இன்று மதியம் 1 மணிக்குக் கோவை ரயில் நிலையத்தில் ஏகப்பட்ட புலம்பெயர்த் தொழிலாளர்கள். அதில் யாருக்கு எப்போது ரயில், அவர்களின் இ-பாஸைப் பரிசோதிப்பது யார் என்பதே புரியாத புதிராக இருந்தது. பலரும், “போனில் தகவல் வந்தது… அதனால்தான் வந்தோம்” என்றே தெரிவித்தார்கள். பலரிடம் சாப்பாட்டுக்குக்கூட காசில்லை. அவர்களுக்கு ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், தன்னார்வலர்கள் சிலர் சாப்பாட்டுப் பொட்டலம் தருவதைக் காண முடிந்தது.
இப்படி அல்லாடிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களில், தமிழ் தெரிந்த ஒருவரைத் தேடிப் பிடித்துப் பேசினேன். அவர் பெயர் ஷ்ரவன் குமார். தன் மனைவி, 7 வயது மகனோடு மூட்டை முடிச்சுடன் வந்திருந்தார்.
“நான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். நான் இங்கே கே.என்.ஜி.புதூரில் இரும்புப் பட்டறையில் வேலை செஞ்சேன். பத்து வருஷமாச்சு. என் பெண்டாட்டி, பிள்ளைகளையும் இடையில கூட்டீட்டு வந்துட்டேன். 2,000 ரூபாய் வாடகை வீட்லதான் இருந்தேன். மாசம் 6,000 ரூபாய் சம்பளம். பையன் இங்கே ரெண்டாவது படிச்சுட்டிருந்தான். இப்ப மூணு மாசமா சம்பளம் இல்லை. வேலை இல்லை. இருந்த காசுல சாப்பிட்டாச்சு. அதுதான் உள்ளூர் ஆபீஸர்கிட்ட ஊருக்குப் போகணும்னு சொன்னேன். ஆன்லைன்ல போட்டாங்க. ரயில்வே ஸ்டேஷன் வந்துடுன்னு இன்றுதான் போன் வந்துச்சு. வந்துட்டோம்.
இங்கே டிக்கெட் எடுக்கணுமா? காசு கட்டணுமா? எதுவுமே எனக்குத் தெரியாது. சில பேர் பணம் கட்டணும்ங்கிறாங்க. அப்படி என்னை கட்டச் சொன்னா ஒரு ரூபாகூட எங்கிட்ட இல்லை. காலையில இங்கே வந்தது. அஞ்சு மணி நேரம் ஆச்சு. எங்களுக்கு போன் பண்ணின அதிகாரி யாரும் வந்து பார்க்கலை. ரொட்டித்துண்டு மட்டும் பையில இருக்கு. யாரோ பார்சல் சாப்பாடு கொண்டுவந்து கொடுத்தாங்க. சாப்பிட்டுட்டு உக்காந்திருக்கோம்” என்று சொன்னார் ஷ்ரவன் குமார்.
அவரது மனைவியிடம் பேசியபோது, “நாங்க குடியிருந்த இடத்துல எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கலை. அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் எதுவுமே தரலை. சில பேரு அப்பப்ப சோறு கொண்டு வந்து கொடுப்பாங்க. இப்பக் கொஞ்ச நாளா அதுவும் இல்லை” என்றார்.
“சரி, ஊருக்குப் போயிட்டு திரும்பி இங்கே வருவீங்களா?” என்றேன்.
“வருவோம்” என்றார்.
“எப்போ வருவீங்க?”
“கரோனா முடிஞ்சதுக்கப்புறம்.”
“கரோனா எப்போ முடியும்னு நினைக்கிறீங்க?”
“இப்பவே மூணு மாசம் ஆச்சு. இன்னமும் முடியலை. இது மாதிரிதானே ஊருக்குப் போனாலும் இருக்கும். அப்ப அங்கே மூணு மாசமோ, ஆறு மாசமோ, அப்புறம் கரோனாவே இல்லைன்னா மட்டும் வரலாம்னு இருக்கோம்” என்று அவர் சொல்லும்போதே, முகக்கவசத்தை மீறி அவர் கண்கள் கலங்கின.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago