சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சி அது. எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான் அந்நிகழ்ச்சியின் பிரதான பாடகர். பாடல்களின் காப்புரிமை தொடர்பாக அவருக்கும் இளையராஜாவுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்த சமயமும்கூட (பின்னர், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து இரு கலைஞர்களும் இணைந்துவிட்டனர்!). மேடையில் தோன்றிய எஸ்பிபி, “தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை மட்டும்தான் பிராக்டிஸ் செய்து கொண்டு வந்திருக்கிறோம். எனவே, விருப்பப் பாடல் என்று யாரும் துண்டுச் சீட்டு அனுப்பிவிட வேண்டாம்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இளையராஜாவின் இசையில் உருவான ‘இளைய நிலா பொழிகிறதே’, ‘பொன்மாலைப் பொழுது’ போன்ற பாடல்களை எதிர்பார்த்து வந்திருந்த ரசிகர்களுக்கு இப்படி முன்கூட்டியே தனது நிலையைத் தெரிவித்துவிட்ட எஸ்பிபி, அந்நிகழ்ச்சியில் மூன்று முறை இளையராஜாவைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். அந்தப் பண்புதான் எஸ்பிபி எனும் ஆளுமையின் அடையாளம்!
அதே நிகழ்ச்சியில், இன்னொரு முன்னறிவிப்பையும் எஸ்பிபி வெளியிட்டார். “நிகழ்ச்சியின் நடுவே தயவுசெய்து என்னைச் சந்திக்க யாரும் மேடைக்குப் பக்கத்தில் இருக்கும் அறைக்கு வந்துவிட வேண்டாம். நான் அடுத்துப் பாட வேண்டிய பாடலைப் பிராக்டிஸ் செய்துகொண்டிருப்பேன்.” கிட்டத்தட்ட 40,000 பாடல்களைப் பாடியவர், ஏராளமான விருதுகளுக்குச் சொந்தக்காரரின் இந்தப் பணிவும் பாந்தமும் அதிசயிக்க வைப்பவை. அதனால்தான் இன்றுவரை வயோதிக நடுக்கத்தின் சாயல் இல்லாத குரலில் இனிய பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார் எஸ்பிபி.
70-களின் இளம் குரல்
பொறியியல் மாணவரான எஸ்பிபியின் குரலில் மயங்கிப்போன எம்ஜிஆர், அவருக்குச் சற்று உடல்நலம் குன்றியிருந்ததால் இரண்டு மாதங்கள் காத்திருந்து, ‘ஆயிரம் நிலவே வா’ பாடலைப் பாட வைத்தார். கே.வி.மகாதேவனின் இசையில் வெளிவந்த அந்தப் பாடலுக்கு முன்னர், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் ‘இயற்கை எனும் இளைய கன்னி’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் புதிய நிலவாக ஒளிவீசத் தொடங்கியிருந்தார் எஸ்பிபி.
டி.எம்.செளந்தர்ராஜன் எனும் மாபெரும் பாடகரின் ஆதிக்கத்துக்கு நடுவே, புதிய தலைமுறை நடிகர்களுக்கான இளம் குரலாக எஸ்பிபி மெல்ல உருவெடுத்துவந்தார். இளையராஜாவின் யுகம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ் ரசிகர்களின் மத்தியில் புகழ்பெறத் தொடங்கிவிட்ட எஸ்பிபி, 70-களில் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், வி.குமார், ஜி.கே.வெங்கடேஷ், விஜயபாஸ்கர், ஷ்யாம், தட்சிணாமூர்த்தி என்று பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் அற்புதமான பாடல்களைப் பாடினார்.
‘மங்கையரில் மகராணி’, ‘மதனோற்சவம்… ரதியோடுதான்’, ‘எனக்குப் பிடித்த ரோஜாப்பூவை எடுத்துச் செல்லலாமா…’, ‘தென்றலுக்கு என்றும் வயது’, ‘ஓடம் அது ஓடும்’, ‘காதல் விளையாட’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பட்டியலிடலாம். ‘ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம்’, ‘அன்பு வந்தது என்னை ஆள வந்தது’ போன்ற பாடல்களில் எஸ்பிபியின் இளம் குரலைக் கேட்க முடியும். காதலும் வெள்ளை மனதும் கொண்ட கல்லூரி இளைஞனைப் பிரதிபலிக்கும் குரல் அது. கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான படங்களில் எஸ்பிபிக்குச் சவாலான பல பாடல்களை எம்.எஸ்.வி தந்தார். அவற்றையெல்லாம் அநாயசமாகப் பாடித் தள்ளினார் எஸ்பிபி. ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ ஓர் உதாரணம்!
80-களின் இசை நாயகன்
இளையராஜாவின் வருகைக்குப் பின்னர், எஸ்பிபியின் பாடல்களின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்ல, டிஎம்எஸ்சுக்கு அடுத்த இடத்துக்கு யார் வருவது என்பதும் தீர்மானிக்கப்பட்டது. சிவாஜி, எம்ஜிஆர் என்று இரு பெரும் ஆளுமைகளுக்குப் பாடினாலும், இருவருக்கும் பொருத்தமாக அமையும்படி சில பிரத்யேக நுணுக்கங்களை டிஎம்எஸ் வெளிப்படுத்துவார். அதேபோல, கமல், ரஜினி என்று 80-களின் பிரதான நடிகர்களுக்குப் பாடிய எஸ்பிபி, தனது குரலில் நுட்பமான வித்தியாசங்களைக் காட்டுவார். கமலின் துடிப்பும், இளமை வேகமும் அவரது குரலில் துல்லியமாக வெளிப்படும். ‘வனிதாமணி’ (விக்ரம்), ‘ஏ… உன்னைத்தானே’ (காதல் பரிசு) போன்ற பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ரஜினியின் அலட்சியம், அதிநாயகத் தன்மை ஆகியவற்றை ஆர்ப்பாட்டத்துடன் வெளிப்படுத்துவார் எஸ்பிபி.
‘ராமன் ஆண்டாலும்’ (முள்ளும் மலரும்), ‘மை நேம் இஸ் பில்லா’ (பில்லா) போன்ற பாடல்களில் இந்த நுட்பத்தை உணர முடியும். ரஜினியின் உச்சரிப்பில் இருக்கும் விநோத வித்தியாசத்தையும் எஸ்பிபி கொண்டுவந்துவிடுவார். ‘என்னடா பொல்லாத வாழ்க்கெ…’ (தப்புத் தாளங்கள்), ‘நம்ம ஊரு சிங்காரி’ (நினைத்தாலே இனிக்கும்) போன்றவை அதற்கு உதாரணங்கள். மோகனுக்கு அவர் பாடிய பாடல்களில் ஒரு குழைவு, சுகந்தம் இருக்கும்.
அதேபோல, பாடல்களுக்கு இடையில் மென்மையான, கம்பீரச் சிரிப்பை உதிர்ப்பார். ‘சிறிய பறவை சிறகை விரிக்க’ (அந்த ஒரு நிமிடம்) பாடலில், ‘…பழைய கனவு உனக்கு எதற்கு? கலையட்டுமே’ எனும் வரிகளுக்கு முன்னால் ஒரு சிரிப்பு சிரிப்பார். கேட்டுப்பாருங்கள்!
60-களிலும், 70-களின் தொடக்கத்திலும் டிஎம்எஸ்-பி.சுசீலா இணை பிரதான இடத்தைப் பிடித்ததுபோல, 80-களில் எஸ்பிபி- எஸ்.ஜானகி இணை பிரதான இடத்தைப் பிடித்தது. இளையராஜாவின் இசையில் அதிக பாடல்களை இந்த இருவரும் பாடுவதற்கு, அநாயாசமான குரல்வளம் மட்டுமல்லாது, அபாரமான கற்பனை, அலாதியான உணர்ச்சி வெளிப்பாடு, குன்றாத உற்சாகம் போன்றவை முக்கியக் காரணங்கள். அதனால்தான், ‘நிழல்கள்’ படத்தில் ‘மடைதிறந்து பாடும் நதியலை நான்’ போன்ற உற்சாகப் பாடலையும், இயற்கையின் ஏகாந்தத்தை ரசிக்கும் ‘பொன்மாலைப் பொழுது’ போன்ற பாடல்களையும் எஸ்பிபிக்கே வழங்கினார் இளையராஜா.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த எஸ்பிபி, ஒரு நாளைக்கு 20 பாடல்கள்கூட பாடியிருக்கிறார். அந்த அளவுக்கு மிக வேகமாகக் கிரகிக்கும் தன்மையும், வெளிப்பாட்டுத் திறனும் அவருக்கு வாய்த்திருந்தன. இன்றைக்கும் மேடை நிகழ்ச்சிகளில் பல மணி நேரம் தொடர்ந்து நின்றபடி பாடக்கூடியவர் எஸ்பிபி. இத்தனைக்கும் ஒரு பாடகர் தவிர்க்க வேண்டியவை என்று சொல்லப்படும் பழக்கவழக்கங்களையெல்லாம் கைவிடாதவர் அவர். இன்னும் சொல்லப்போனால், பிற பாடகர்களை ஒப்பிட, முறைப்படியான இசைப் பயிற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.
வட நாட்டிலும் கொடி நாட்டியவர்
80-களில், ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’ போன்ற படங்களில் பாடி புகழ்பெற்ற எஸ்பிபி, பின்னாட்களில் சல்மான் கானுக்குப் பொருத்தமான குரலாக அற்புதமான பாடல்களைத் தந்தார். சல்மான் கானின் இரண்டாவது படமான ‘மைனே ப்யார் கியா’ தொடங்கி, ‘சாஜன்’, ’லவ்’, ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ என்று அடுத்தடுத்த படங்களில் சல்மான் கானுக்காக அவர் பாடிய பாடல்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தவை. லதா மங்கேஷர், ஆஷா போன்ஸ்லே போன்றோர் அதிகப் பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்பட்டாலும் எஸ்பிபி-யின் கணக்கே மிக அதிகம் என்று சொல்பவர்கள் உண்டு.
வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபி, லதா மங்கேஷ்கரைக் கவுரவித்தார் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளின்டன். அப்போது, “இத்தனைப் பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். இந்த எண்ணிக்கையிலான பாடல்களை நான் கேட்டிருக்கக்கூட மாட்டேன்” என்று எஸ்பிபியைப் பாராட்டினாராம் கிளின்டன்.
நட்பார்ந்த கலைஞர்
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்த எஸ்பிபி, அடிப்படையில் மிகச் சிறந்த ரசிகர். அதனால்தான், மற்ற பாடகர்கள் பாடி புகழ்பெற்ற சில பாடல்களைத் தானும் பாடி ஒரு கேஸட்டாக வெளியிட்டார்.
கண்டசாலா, கோதண்டபாணி, எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் என்று தன் வளர்ச்சிக்குத் துணை நின்றவர்களிடம் பெரும் மதிப்பும் நன்றியும் கொண்டிருப்பவர் அவர். அதேபோல, ஆரம்பகாலத்தில் தன்னுடைய இசைக்குழுவில் ஒருவராக இருந்த இளையராஜா, பின்னாளில் பிரம்மாண்டமான ஆளுமையாக உருவானதில் எஸ்பிபி-க்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. அதைப் பல மேடைகளில், சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
புதிதாக வரும் இசையமைப்பாளர்களை ஊக்கப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ் போன்ற இசையமைப்பாளர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு பாராட்டியிருக்கிறார். இன்றைக்கும் இசை தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்ளும் எஸ்பிபி, புதிய கலைஞர்களை மனம் திறந்துப் பாராட்டுவதைப் பார்க்க முடியும். அதுவும் குழந்தைகள் என்றால் அவரிடம் இயல்பாகவே குதூகலம் வெளிப்படும். ஆம், குழந்தைத்தனத்தைக் கைவிடாத உன்னத மேதை எஸ்பிபி.
அத்தகைய மாபெரும் கலைஞருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago