எப்போதும் இப்படியும் அப்படியுமாக இரண்டு ஹீரோக்கள் இருப்பதுதான் தமிழ் சினிமாவின் நியதியோ என்னவோ. அந்த இரண்டு ஹீரோக்களை அடுத்து நான்கைந்து நடிகர்கள் நாயகப் பாத்திரம் தாங்கி வலம் வருவார்கள். இது எல்லாக் காலகட்டத்திற்கும் பொருந்தும். ஆனால், ஆறேழு நாயகர்கள் இருந்த காலகட்டத்தில், தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு, நடையிலோ நடிப்பிலோ வசன உச்சரிப்பிலோ எவர் சாயலுமில்லாமல், வலம் வந்த நடிகர்... ஜெய்சங்கர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஏவிஎம்.ராஜன் என பலரும் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. ஸ்டைலீஷான ரவிச்சந்திரன் ஒருபக்கமும் சிவாஜியை இமிடேட் செய்யும் ஏவிஎம்.ராஜனும் அப்போதுதான் வந்திருந்த காலகட்டம். ஆனால், எவர் மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார் ஜெய்சங்கர்.
மிகப்பெரிய வக்கீல் குடும்பம். ஆனால் இவருக்கோ நடிப்பில் ஆர்வம். சினிமாக் கம்பெனிகளுக்கு நடையாய் நடந்தார். ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ இருக்கு’ என்று உறுதியாக நம்பினார் இயக்குநர் ஜோஸப் தளியத். முதல் படத்திலேயே நல்லபெயர் கிடைத்தது. அந்தப் படம் ‘இரவும் பகலும்’.
கே.சங்கரின் ‘பஞ்சவர்ணக்கிளி’யிலும் வித்தியாசமான கேரக்டர். அடுத்து ஏவிஎம்மின் ‘குழந்தையும் தெய்வமும்’ திரைப்படமும் பெண்கள் பக்கம் இவரைக் கொண்டு சேர்த்தது. இவரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை வைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக படங்கள் பண்ணியது. ‘வல்லவன் ஒருவன்’, ‘சிஐடி.சங்கர்’ அவரை வசூல் சக்கரவர்த்தியாக்கிற்று. கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர். பின்னாளில், எம்ஜிஆர் ’ரகசிய போலீஸ் 115’, சிவாஜி ’தங்கச்சுரங்கம்’ மாதிரியான படங்கள் பண்ணுவதற்கு, இவரின் படங்களே அந்த ஆசையை வளர்த்தன என்பார்கள்.
» பாடகர், பாடகி, மியூஸிக் சப்ஜெக்ட்; இளையராஜா காலத்தில்தான் எக்கச்சக்கம்
» சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு... 100வது படங்களுக்கு இளையராஜாதான் இசை!
ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம், ’பஞ்சவர்ணக்கிளி’ மாதிரியான குடும்பக் கதைப் படங்கள், நடுவே ’பொம்மலாட்டம்’, ’வரவேற்பு’, ’பூவா தலையா’ என காமெடி படங்கள் என ரவுண்டு கட்டி வலம் வந்தார் ஜெய்சங்கர்.
பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு’ மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரைப் பெற்றுத் தந்தது. எம்ஜிஆர், சிவாஜிக்கு சம்பளம் கொடுக்க முடியாத சிறிய தயாரிப்பாளர்களெல்லாம் ஜெய்சங்கரை டிக் அடித்தார்கள். குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார் ஜெய்சங்கர். டார்ச்சர் கொடுக்காமல் நடித்துக் கொடுத்தார். ஈகோ எதுவும் பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார். மிகுந்த லாபத்துடன், தயாரிப்பாளர்கள் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைவான சம்பளத்திலும் பாக்கி வைத்தால் அதையும் கேட்பதுமில்லை. ‘அவங்ககிட்ட இல்லேன்னுதான் நமக்குத் தரமுடியாம இருக்காங்க. அவங்களுக்குக் கிடைக்கும் போது தரட்டும். கிடைச்சும் தரலையா... பரவாயில்ல’ என்று அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர் ஜெய்சங்கர்.
கால்ஷீட் சொதப்பமாட்டார், சொன்ன நேரத்துக்கு வந்துவிடுவார் என்று ஜெய்சங்கருக்கு குட்மார்க் சொல்கிறார்கள் திரை வட்டாரத்தில். இந்த நடிகையைப் போடுங்கள் அந்த வில்லனைப் போடுங்கள் என்றெல்லாம் சொல்லமாட்டாராம். தன்னுடைய வேலையை கண்ணும் கருத்துமாக இருந்து செய்து கொடுப்பாராம்.
ஜெய்சங்கரின் படங்கள் முக்கால்வாசி பட்ஜெட் படங்கள். ஆனால் போட்ட பணத்தைவிட மூன்று நான்கு மடங்கு லாபம் தந்தன. யூனிட்டில் உள்ள எல்லோரிடமும் கனிவாகப் பேசும் பண்பு கொண்டவர் என்கிறார்கள். யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ என்று சொல்லி, நட்புடன் பேசுவதுதான் ஜெய்சங்கர் குணம். பின்னாளில், இந்த ‘ஹாய்’ என்ற வார்த்தையே ஜெய்சங்கரை அடையாளமாகிற்று.
வெள்ளிக்கிழமை தோறும் படங்கள் வெளியாகும். இதிலென்ன சுவாரஸ்யம் என்றால்... ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கரின் படங்கள் வெளியாகும். சில சமயங்களில், ஒரே வெள்ளிக்கிழமையில், இவரின் இரண்டு படங்கள் கூட வெளியாகி, வெற்றிபெறும்.
ஒருபக்கம், ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூலமாக ஸ்டைலீஷ் மேனரிஸம் காட்டினார். இது எம்ஜிஆர் ரசிகர்களையும் கவர்ந்தது. இன்னொரு பக்கம், ‘பொம்மலாட்டம்’, ‘யார் நீ’, ‘பூவா தலையா’, ‘வைரம்’, ‘செல்வமகள்’, ‘டீச்சரம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘கண்ணன் வருவான்’, ‘மன்னிப்பு’, ‘அவசர கல்யாணம்’, ‘பட்டணத்தில் பூதம்’ , ‘உள்ளத்தில் குழந்தையடி’ மாதிரியான படங்களில் நடித்து, சிவாஜி ரசிகர்களையும் கவர்ந்தார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என பல ரூட்டுகளிலும் ஜெயித்தார் ஜெய்சங்கர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என உயர்ந்தார். தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் சத்தமில்லாமல், விளம்பரமில்லாமல் செய்தார். தனக்கென்று கொடி பிடிக்க ரசிகர்களை சேர்க்கவில்லை. துதிபாட கூட்டம் சேர்க்கவில்லை. ஆனால், திரையுலகிலும் வெளியுலகிலும் ஏராளமான நண்பர்களைச் சம்பாதித்தார்.
வயது கூடிக்கொண்டே வர, படங்கள் குறைந்துகொண்டே வந்தன. இப்போது கமல், ரஜினி காலகட்டம். எல்லோருக்கும் பிடித்த நடிகர், வில்லனாக நடித்தால் புதுமையாக இருக்கும் என ‘முரட்டுகாளை’யில் வில்லனாக நடிக்கக் கேட்டார்கள். சம்மதித்தார். இவரின் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டது. அடுத்தடுத்து வில்லனாக வலம் வந்தார். ‘அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘ஊமைவிழிகள்’ குணச்சித்திரக் கேரக்டர், அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களை வழங்கக் காரணமாக அமைந்தது.
எல்லோருக்கும் பிடித்த நடிகர்களின் பட்டியலில் ஜெய்சங்கர் இருப்பதற்கு, அவரின் நடிப்பும் வேகமும் சிரித்த முகமும் மட்டுமே காரணமில்லை. அவரின் பண்பும் அன்பும் கனிவும் கருணையும் நிஜ ஹீரோவாக்கிற்று!
தமிழ் சினிமாவில் தன்னுடைய பெயரே கேரக்டர் பெயராக, படத்தின் பெயராகக் கொண்டு அதிகம் நடித்தது ஜெய்சங்கராகத்தான் இருக்கும். ஜெய், சங்கர் என்றெல்லாம் இவருக்கு கேரக்டர் பெயர் அமைந்தன. அதேபோல், அறிமுகமான முதல் படத்திலேயே டபுள் ரோல் பண்ணிய நடிகரும் ஜெய்சங்கராகத்தான் இருப்பார். வெரைட்டி காட்டி அசத்தியிருப்பார்.
இன்னொரு விஷயம்... ’ஜெய்சங்கரின் ரசிகை’ என்ற கதையை வைத்துக்கொண்டே ‘சினிமா பைத்தியம்’ என்ற படத்தை இயக்கினார் முக்தா சீனிவாசன். ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த ஜெயசித்ரா, இதில் நடிகர் ஜெய்சங்கரின் ரசிகையாக நடித்திருப்பார். இதுவும் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத சாதனைதான்.
ஜெய்சங்கர் ஆகச்சிறந்த நடிகரோ இல்லையோ... ஆனால், தனித்துவம் மிக்க கலைஞர். அதனால்தான் இன்றைக்கும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். மக்கள் கலைஞர் என்று போற்றப்படுகிறார்.
- நடிகர் ஜெய்சங்கர் நினைவுதினம் இன்று (ஜூன் 3)
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago