தொழில்துறை, தனி மனிதப் பொருளாதாரம் என இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தேக்கம் அடையச் செய்திருக்கும் கரோனா, குடும்பங்களையும் கூட நிம்மதியாக இருக்க விடவில்லை என்றே சொல்லலாம். வேலையிழப்பு, ஊதியக் குறைவு இவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் உலக அளவில் 20 லட்சம் பெண்கள் இந்த பொதுமுடக்க காலத்தில் கர்ப்பம் தரித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், அதே நேரத்தில் குடும்ப வன்முறைகள் முன் எப்போதையும் விட இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
"இந்த கரோனா காலகட்டம் குடும்ப உறவுச் சங்கிலிகள் அறுபடுகின்ற சூழலையும் ஏற்படுத்திவிட்டது. நாடு தழுவிய அளவில் இதற்கு பல புள்ளிவிவரங்கள் இருந்தாலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய நகரான பண்ருட்டியில் நிகழ்ந்த சில சம்பவங்கள் இதற்கு உதாரணம் என்கிறார் பண்ருட்டி காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர்.
பொதுமக்களிடம் நெருங்கிப் பழகுவது, காவல் நிலையம் மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்ட அம்பேத்கரிடம் பொது மக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல எப்போதும் தயங்குவதில்லை.
அப்படி வந்த சில புகார்களை வைத்துத்தான் குடும்ப உறவுகளில் இந்தக் கால கட்டம் எந்தளவுக்குச் சீர்கேட்டை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிய முடிந்தது என்று சொல்கிறார்.
"இரண்டு நாட்களுக்கு முன் காவல் நிலையம் வந்த ஒரு சிறுமி என்னைப் பார்த்தும் அழுகையும் ஆத்திரமும் பொங்க, ‘எங்க அப்பா என் உண்டியல் பணத்தை எடுத்துட்டுப்போய்க் குடிச்சுட்டார், கேட்ட எனது அம்மாவையும் என்னையும் அடிச்சுட்டார். அவரைக் கூப்பிட்டு விசாரணை செய்யுங்க’ என்று சொன்னாள்.
உடனடியாக அந்த நபரைக் காவல் நிலையம் அழைத்துவந்து எங்கள் வழக்கப்படி விசாரித்தோம். அதைப் பார்த்ததும், ’வேண்டாம் சார். அப்பாவை ஒண்ணும் செய்யாதீங்க’ என்று அழுத சிறுமிக்காக அந்தத் தந்தையை எச்சரித்து அனுப்பினேன். அச்சிறுமியை அனைத்தவாறு அழைத்துச் சென்றார் தந்தை. மகளதிகாரத்தை உணர்ந்த நிலையில் அழைத்துச் சென்றதாகவே கருதினேன்.
அதேபோல நேற்று முன்னிரவில் வந்த அம்மா, மகள் இருவரும் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். தனது 17 வயது மகன், தன்னையும் கணவரையும் மகளையும் அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும், ’உடனடியாக அவனை அழைத்து விசாரிக்கவில்லை என்றால் எங்களது பிணம்தான் மிஞ்சும்; அவன் எங்களைக் கொலைகூடச் செய்துவிடுவான்’ என்று அந்த தாய் கதறினார்.
காவலர்களை அனுப்பி அவனை கூப்பிட்டு வரச் சொல்லி அவர்களின் பெற்றோர் முன்னிலையில் விசாரித்தேன். கரோனா பிரச்சினையில் வெளியே எங்கும் செல்லமுடியாத சூழலில் தனது அக்காவையே தனக்குப் போட்டியாளராக கருதி அவரைத் திட்டி அடிக்க ஆரம்பித்து விட்டான். அது படிப்படியாக அதிகரித்து பெற்ற அம்மா, அப்பா வரைக்கும் கை நீண்டிருக்கிறது.
எங்கோ ஓர் இடி இறங்கியது போல் உணர்ந்தேன். தற்போதைய சூழல் குழந்தைகளின் மன நிலையை எந்த விதத்திலோ பாதிக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டேன். பெற்றோர்களே கவனம், இது ஒரு எச்சரிக்கை ஒலிதான். அப்புறம் அந்த சிறுவனிடம் நயமாகப் பேசி பெற்றோர்களின் சிரமத்தைப் புரியவைத்து அனுப்பி வைத்தேன். இன்று காலையில் வீட்டிற்குக் காவலரை அனுப்பி வைத்து விசாரித்து விட்டு வரச் சொன்னேன். நலமாக இருப்பதாகத் தகவல்.
அடுத்ததாக, இன்று காலை ஒரு வயதான பாட்டி, ‘எனது மகள் என்னைச் சரியாகக் கவனிப்பதில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டேன். அதற்கும் பணம் கட்டவில்லை. அங்கு ஓசியில் சாப்பிட மனமில்லை. அதனால் மகளை அழைத்து விசாரியுங்கள்’ என்றார், மகளை அழைத்து விசாரித்துச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம்.
இப்படி மகள் - தந்தை பாசம், மகன் வளர்ப்பில் குறை, தாய்-மகள் உறவின் விரிசல் என்று உறவுகளை மையப்படுத்தி வரும் புகார்கள் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை மெல்ல மெல்ல உணர்த்திக் கொண்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்களிடம் நாம் இன்னும் நெருங்கிப் பழக வேண்டும் என்பதையும், பெரியவர், சிறியவர் என அனைவரிடமும் மனம்விட்டுப் பேசவேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. இதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் மக்களே. கரோனா இறுக்கத்தில் உறவுச் சங்கிலிகள் அறுபட இடம்கொடுத்து விடாதீர்கள்" என்றார் ஆய்வாளர் அம்பேத்கர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
20 hours ago
வலைஞர் பக்கம்
22 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago