கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதனால் மட்டுமே அது சாத்தியமாகும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க நம்முடைய அன்றாட உணவிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்தான உணவுகளைச் சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் அனைத்து நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். அதிலும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் தற்போது கரோனா வைரஸை எதிர்கொள்ளும் மருந்தாக உள்ளது. மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிக மருந்துகளுடன் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவாகக் குணமடைந்துவிட முடியும்.
உணவே மருந்து
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன? அவற்றை எப்போது? எப்படி சாப்பிடவேண்டும்? என விளக்குகிறார் முதன்மை ஊட்டச்சத்து மருத்துவர் மற்றும் ‘ஊட்டு ஊட்டச்சத்து நிறுவன இணை நிறுவனர் ப்ரீத்தி ராஜ்.
“உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல் என்பது ஓரிரு நாட்களில் நடந்துவிடக் கூடிய நிகழ்வு அல்ல. ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால்தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குறைந்தபட்சம் நாற்பது நாட்களாவது தொடர்ந்து ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால்தான் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
தண்ணீரிலிருந்து தொடங்குவோம்
தினமும் காலை ஆறு மணிக்கு எழுந்துகொள்வதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். அதேபோல் எழுந்தவுடன் டீ, காபிக்கு முன்பு தண்ணீர் குடித்து அந்த நாளைத் தொடங்குவது உடலுக்கு நல்லது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள சத்துகளை ரத்தம்தான் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இவ்வாறு உடலின் அனைத்துப் பகுதிக்குமான சத்துகள் ரத்தத்தின் வழியாகச் சென்றடையத் தண்ணீரின் பங்கு முக்கியமானது. நாம் எந்த அளவிற்குத் தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகச் செயல்படமுடியும். இந்த வெயில் காலத்தில் ஒருவர் குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது கட்டாயமாகும்.
செம்பருத்தி தேநீர்
ஒரு சிலருக்குத் தினமும் தேநீர் அல்லது காபி குடித்தால்தான் அன்றைய நாள் உற்சாகமாக இருக்கும். டீ தூள் மற்றும் காபி பொடிகளில் உள்ள 'Caffeine’ என்ற வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இதனால் எப்போதும் குடிக்கும் தேநீர், காபிக்குப் பதில் பூக்காத செம்பருத்திப் பூவைத் தண்ணீரில் போட்டு லேசாகக் கொதிக்கவைத்து அதனுடன் தேன் கலந்து செம்பருத்தி தேநீராகப் பருகலாம். அதேபோல் எப்போதும் குடிக்கும் தேநீரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம் போட்டு தேநீர் குடிப்பதால் உடலில் உண்டாகும் நச்சுத் தன்மை குறைக்க உதவும். அல்லது கிரீன் டீ குடிக்கலாம். இதனால் உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும்.
நச்சை அழிக்க உதவும் உடற் பயிற்சி
கரோனா ஊரடங்கால் பெரும்பான்மையோர் வீட்டிலேயே இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் காரணத்தால் சாப்பிடுவதை மட்டும் வேலையாக வைத்துக்கொண்டு மற்ற நேரத்தில் சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கக்கூடாது. நன்றாகச் சாப்பிட்டுவிட்டு எந்த வேலையோ அல்லது உடற் பயிற்சியோ செய்யாமல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திதான் முதலில் குறையும். மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் உருவாகும். உடற்பயிற்சி, வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருந்தால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து செல்கள் பாதிக்கப்படும். இதனால் கண்டிப்பாக உடலுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய வேலைகளைச் செய்யவேண்டும். அதேபோல் தொடர்ந்து காலை ஆறு மணிக்கு எழுந்துகொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை வராது.
இட்லி, பால் அவசியம்
நம்முடைய பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசைகளில் உடலுக்கு மிகவும் நல்லது. அதேபோல் ஒருவர் ஒருநாளைக்கு முந்நூறு மி.லி பால் எடுத்துக்கொள்ளவேண்டும். பால் குடிக்கப் பிடிக்காதவர்கள் மோர், தயிராக எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் சத்து நிறைந்துள்ளது. இந்த வகை உணவுகள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெய் சாப்பிடுபவர்கள் ஆர்கானிக் நெய் எடுத்துக்கொள்வது நல்லது. ஆர்கானிக் நெய் என்றால் புல், இலைதழைகள் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த மாட்டின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யாகும். இந்த வகை நெய் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் மட்டும் போதுமானது.
எந்தமாதிரியான உணவுகள் சாப்பிடவேண்டும்
நாம் தினமும் சாப்பிடும் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தச் சத்துகள் அதிகமுள்ள வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு மூக்கடலை, ராஜ்மா, காராமணி, தட்டைப் பயிறு, பச்சைப் பயிறு ஆகியவற்றில் புரதமும் நார்ச்சத்தும் அதிக அளவு உள்ளது. இந்தப் பயிறு வகைகளை முளைகட்டி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முளைகட்டிய பயிறுகளை வேகவைத்து பச்சை வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளியுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இல்லையென்றால் சுண்டல் செய்து சாப்பிடலாம். முளை கட்டிய பயறுகளைக் குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். உதாரணத்துக்குக் கத்திரிக்காய் காராமணி சேர்த்துச் சமைக்கலாம். பச்சைப் பயிறை உசிலி மாதிரி செய்யலாம்.
அன்றாட உணவில் பயிறு வகைகளை எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும்.
தினசரி உணவில் பருப்பு வகைகள் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஒருநாள் பயிறு வகைகளைச் சேர்த்தால் மற்றொரு நாள் துவரம் பருப்பு, கடலை பருப்பு, சிறுபருப்பு போன்ற பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒருநாளைக்கு ஒருவர் கண்டிப்பாக முப்பது கிராம் பருப்பு எடுத்துக்கொள்ளவேண்டும். சாம்பார் வைக்கும்போது நீர்க்க வைக்காமல் கெட்டியாக அதிகளவு காய்களைச் சேர்த்து வைக்கவேண்டும். அதேபோல் ராகி, காம்பு, கோதுமை போன்ற சிறுதானியங்களை அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது அவசியம். சிறுதானியங்களில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலந்து சாத வகைகளில் எந்தச் சத்துகளும் இருக்காது. சமையலுக்குச் செக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. அதேபோல் வீட்டில் அரைத்த மசாலா பொடிகளைப் பயன்படுத்துவது நல்லது. பொட்டலத்தில் அடைத்து விற்கப்படும் மசாலா பொடிகள் கெட்டுப்போகாம்ல் இருக்க ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். வீட்டில் அரைத்த சாம்பார் பொடி, கறி மசாலா பொடிகளைக் குழம்பில் சேர்த்துக்கொள்வதால் அஜீரணக் கோளாறு வராது.
காய்கறி, பழங்கள்
எல்லாவகையான காய்கறிகளும் சாப்பிடவேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் அரை கிலோ காய்கறிகளைச் சாப்பிடவேண்டும்.
சிறுவர்கள் ஒருவேளைக்கு மூன்று டேபிள் ஸ்பூன் காய்கறி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பழங்களைப் பழச்சாறாகச் சாப்பிடுவதைவிட அப்படியே பழங்களாகச் சாப்பிடுவது நல்லது. ஒரு நாளைக்கு குழந்தைகள் இரண்டு பழங்களையும், பெரியவர்கள் மூன்று பழங்களையும் சாப்பிடவேண்டும்.
அசைவப் பிரியர்களுக்குக்கு
கோழி, மட்டன், மீன் போன்றவற்றைப் பொரித்துச் சாப்பிடாமல் குழம்பில் சேர்த்து சாப்பிட வேண்டும். கறி, மீன் போன்ற இறைச்சிகளை ஒருவர் எழுபது கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒருவரின் கைப்பிடி அளவு மட்டும் ஒருநாளைக்கு அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏரி மீன்களை விடக் கொழுத்த கடல் மீன்களைச் சாப்பிடவேண்டும்.
பாக்கெட் உணவைத் தவிர்க்கவும்
பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் வேர்க்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையுடன் தேங்காய், தேன் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது பொட்டுக்கடலை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாகப் பிடித்துச் சாப்பிடலாம்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago