இளையராஜா இசையின் தனித்தன்மை எது?

By வா.ரவிக்குமார்

இசைஞானி இளையராஜா பிறந்த நாள் ஜூன் 2

“ஆன்மிகத்தையும் லௌகீக வாழ்க்கையையும் இணைக்கும் பாலம் இசை” என்பார் இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன். அந்த மேதையின் வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையின் நிதர்சனமாக்குகிறது இளையராஜாவின் இசை.

நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களிலும் போராட்டங்களிலும் நம்மை ஆற்றுப்படுத்தி கரை சேர்ப்பதின் மூலம் செவிகளின் வழியாக நம் மனத்துக்குள் நுழையும் ஆக்ஸிஜன் இளையராஜாவின் இசை.

பாபநாசம் சிவன், ஜி.ராமனாதன், வீணை எஸ்.பாலசந்தர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.பி.சீனிவாஸ், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, வேதா, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட மிகப் பெரிய இசை ஆளுமைகள் இளையராஜாவுக்கு முன்பாக தமிழ்த் திரை இசையை வளர்த்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆளுமைகளின் திறமையான இசையை சுவாசித்து வளர்ந்தவர்தான் இளையராஜா.

ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இசைப் பணியைத் தொடங்கினாலும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைதான் தன்னை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தது என்பதைப் பல மேடைகளிலும் கூறிவருபவர் இளையராஜா. ஆயிரம் திரைப்படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அவரிடம் சுரந்து கொண்டே இருக்கிறது இசையின் ஊற்று.

புலம் பெயர்ந்த தமிழர்களையும் இந்தியர்களையும்.. அவ்வளவு ஏன்? மொழியே தெரியாவிட்டாலும் இளையராஜாவின் இசையில் லயிப்பவர்களைப் பார்த்திருப்போம். கரகாட்டமும், ஜல்லிக்கட்டும், தெம்மாங்கும் எத்தனையோ ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் காட்டப்பட்டாலும், தமிழர்களின் பாரம்பரியமான தெம்மாங்குப் பாட்டுகளில் இயல்பாக பெண்கள் போடும் குலவை சத்தம் இளையராஜாவின் வருகைக்குப் பின்தானே நம்முடைய காதுகளை எட்டியது. கிராமியக் கலைஞர்களின் பாட்டில் பிரதான தாள வாத்தியத்தோடு ஊடாக ஒலிக்கும் `கடம் சிங்காரி’ எனும் வாத்தியம் எழுப்பும் ஒலியின் இனிமையை திரை இசையில் அறிமுகப்படுத்தியது இளையராஜாவின் இசைதானே!

தாளங்களில் புதுமை

`தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் வரும் `காதலின் தீபம் ஒன்று’ பாடலுக்கான மெட்டை, “மருத்துவமனையில் இருக்கும்போது விசிலைக் கொண்டே அமைத்துக் கொடுத்தேன்” என்பதை இளையராஜாவே கூறியிருக்கிறார். பல முறை இந்தப் பாட்டை மிகவும் ஊன்றிக் கேட்கும்போது எனக்குப் புரிந்த இன்னொரு அற்புதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் `ஆஹா..’ எனும் ஹம்மிங் திஸ்ரம் என்று சொல்லப்படும் 3/4 தாளக்கட்டில் இருக்கும். அதன்பிறகு பாடல் முழுவதும் சதுஸ்ரம் என்று சொல்லப்படும் 4/4 தாளக்கட்டில் அமைந்திருக்கும். இதுபோன்ற பாடல்கள் மிக அரிதாகவே இருக்கும். சூழ்நிலையின் இறுக்கம், காதலின் மயக்கம் போன்றவற்றை இளையராஜா பாடல்களுக்கு கொடுக்கும் தாளக்கட்டே உணர்த்திவிடும். `இதயத்தை திருடாதே’ படத்தில் வரும் `ஓம் நமஹ’ பாடல் காதலன், காதலியின் நெருக்கத்தை விளக்கும். ஈருடல் ஓருயிராக மாறும் நெருக்கத்தில் இருவருக்குமாக சேர்த்து ஒரே இதயம் துடித்தால்.. லப்டப்.. லப்டப்… என்றுதானே கேட்கும்? அந்த இதயத்தின் ஒலியை, டிரம்ஸின் பாஸ்ஸை மட்டும் ஒலிக்கவிட்டு, அது பாடல் முழுவதும் வரும்.

ஜாஸ் பாணியை தபேலாவில் கொண்டுவருவார். நையாண்டி மேளத்தை டிரம்ஸில் கொண்டுவருவார். இதெல்லாமே அவருடைய இசையில் வெளிப்படும் தனித்தன்மைதான்.

`இளையராஜாவின் இசையில் நீங்கள் உணரும் தனித்தன்மை எது?’ என்று கேட்டால், சிலரிடமிருந்து கண்ணீர் பதிலாக வருகிறது!

“என்னுடைய அம்மாவின் மடியில் நான் தலை வைத்துப் படுத்திருக்கும் உணர்வைத் தருகிறது..”

“என்னுடைய சுண்டுவிரலைப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பாக இந்த உலகத்தைச் சுற்றிக் காட்டுவதைப் போல் இருக்கிறது..”

- இப்படி இளையராஜாவின் இசையில் லயிக்கும் பலரிடமிருந்து பல விதமான உணர்வு அலைகள் நம்மை மூழ்கடிக்கின்றன.

தெளிவான `கார்ட் புரமோஷன்’

“அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் சார்ந்த இசையை அவர்தான் கொடுக்கிறார். `அரிசி குத்தும் அக்கா மகளே’ பாட்டின் இசையில் அவர் கொடுத்திருக்கும் இசையின் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த `நேட்டிவிட்டி’தான் அவரின் தனித்தன்மை. அதோடு, ஒரு ராகத்தில் டியூன் போட்டால்கூட அந்த ராகத்தில் என்னென்ன `கார்ட்ஸ்’ சேருமோ அந்த `பேக்கிங்’ அப்படியே தொடர்ந்து வரும். இது ஒரு கீபோர்ட் பிளேயராக, அவருடைய இசையில் நான் உணரும் தனித் தன்மை” என்கிறார் அவரின் மீது பெரும் அன்பையும் மரியாதையையும் வைத்திருக்கும் ஒரு கலைஞர்.

படைப்பாளிகளின் கூட்டு முயற்சி

இந்த இசைக் கலைஞரின் பேச்சில் இருக்கும் உண்மையை நிறைய பேர் உணர்ந்திருப்பார்கள். ஆனால், நினைத்ததை ஒரு கோர்வையாகச் சொல்வதற்கு சிலரால்தான் முடியும். இளையராஜாவின் இசை தனித்தன்மையோடு வெளிப்படுவதற்குக் காரணம், அவருக்குக் கிடைத்த பாடல்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், பாட்டுக்கான சூழ்நிலைகள்.. இப்படி ஒரு அபாரமான கூட்டுமுயற்சியால் உண்டான பாடல்களையே இன்றளவும் நாம் கொண்டாடி வருகிறோம். அதனால் இசையில் அவருடைய தனித்தன்மைக்கு இதர படைப்பாளிகளுடன் பயணித்த கூட்டு முயற்சியே காரணம் என்கின்றனர் சில ரசிகர்கள்.

பின்னணி இசையில் புதுமை

“இளையராஜாவின் இசையில் வெளிப்படும் தனித்தன்மை இதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. நான் உணர்ந்த ஒரு தனித் தன்மையை வேண்டுமானால் சொல்கிறேன். இளையராஜா இசையமைத்த காலத்துக்கு முன்பு நாம் கேட்ட பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் பெரும்பாலும் பல்லவி முடிந்து சரணம், அதற்கடுத்த சரணத்துக்கான பின்னணி இசை (Back Ground Music) எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இளையராஜா ஒவ்வொரு சரணத்துக்கும் தனித்தனியாக பின்னணி இசையை அமைத்தார். இது அவருடைய இசையில் நான் உணர்ந்த தனித்தன்மை. இன்றைக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் பலரும் அவரின் பாதிப்பில்லாமல் இசையமைக்க முடிவதில்லை. புதிய விஷயங்கள் என்னும் தனித்தன்மை அவரிடம் இருப்பதால் இசை உலகில் அவர் ராஜாவாகவே திகழ்கிறார்” என்கிறார் பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிவிதார்த்.

ஹரிவிதார்த்

அரேஞ்ஜ்மென்ட்டில் புதுமை

“இளையராஜாவுக்கு முன்பாக பல இசை மேதைகள் கர்னாடக இசையின் ராகங்களை அடியொட்டி இசையமைத்தனர். சிலர் அதிலிருந்து விலகி ஜனரஞ்சகமான மெல்லிசையை அளித்தனர். அப்போதெல்லாம் மேற்கத்திய இசையின் சாயலில் சில பாடல்களை மட்டுமே இசையமைத்திருப்பார்கள்.

பாஸ் கிதார் போன்ற வாத்தியங்களின் பயன்பாட்டை தமிழ்த் திரை இசை புரிந்து கொண்டதெல்லாம் இளையராஜாவின் வருகைக்குப் பின்தான். அவர் 70, 80-களிலேயே மேற்கத்திய பாணி இசையின் `கவுன்டர் பாயிண்ட்’ போன்ற பல நுணுக்கங்களையும் ஜாஸ் பாணி இசையையும் தமிழ்த் திரை இசையில் பயன்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் தனித் தன்மை அவரின் `அரேஞ்ஜ்மென்ட்’. மேற்கத்திய இசையை முறையாகப் படித்து, அதில் அவருக்கு இருக்கும் ஆழங்கால்பட்ட அறிவால்தான் அப்படியொரு அரேஞ்ஜ்மென்டை அவரால் உண்டாக்க முடிகிறது. வயலின், வியல்லோ, செல்லோ என ஒவ்வொரு வாத்தியத்துக்கும் உள்ள தனித் தன்மையை (Range) உணர்ந்து பயன்படுத்தும் ஆகச் சிறந்த கம்போஸர் இளையராஜா மட்டுமே. அதுதான் அவருடைய இசையின் தனித்தன்மை” என்கிறார் திரை இசையமைப்பாளர் சத்யா.

மனத்தை நனைக்கும் இசை

“அன்னக்கிளி’ படம் வெளிவந்த நாளிலிருந்தே இளையராஜாவின் இசையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவருடைய இசை எனக்குப் பிடிக்கும். அவருடைய இசையில் வெளிப்படும் தனித்தன்மை, கர்னாடக இசையின் ராகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் மெட்டமைத்த பாடல்களில் பளிச்சென்று வெளிப்படும்.

`ராஜபார்வை’ படத்தில் `அந்தி மழை பொழிகிறது’ எனும் பாடலை வசந்தா எனும் ராகத்தில் அமைத்திருப்பார். மழையில் குடை பிடித்தபடி நாயகனும் நாயகியும் திரையில் தோன்றுவார்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது நாமே மழையில் நனைவது போல் உணர்வு ஏற்படும். அதுதான் இளையராஜாவின் இசையில் இருக்கும் நுட்பம்.

வீயெஸ்வி

`அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வரும் `ஆயிரம் தாமரை மொட்டுக்களே..’ பாடலின் முகப்பு இசை முடிந்து பாடல் தொடங்கும் போதே பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் ஏற்படும்.

`பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் இடம்பெற்ற `ஆனந்த ராகம்’ பாடல், சிம்மேந்திர மத்யமம் ராகத்தில் அமைந்திருக்கும். உமா ரமணனை பாடவைத்திருப்பார். அந்தப் பாடலில் சிம்மேந்திர மத்யமம் ராகத்தின் நெளிவு சுளிவுகள் அத்தனையையும் கொண்டுவந்திருப்பார்.

ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்குவது, அதற்கு இன்னின்ன வாத்தியங்களைக் கொண்டு இசையை அளிக்க வேண்டும், எந்த பாடகரைக் கொண்டு பாடவைத்தால் நன்றாக இருக்கும்? என்பதில் அவருக்கு இருக்கும் தெளிவு, யுக்திதான் அவரின் தனித் தன்மை. அதனால்தான் இன்றைக்கும் இசையில் அவருடைய இளைய ராஜாங்கம் தொடர்கிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் இசை விமர்சகருமான வீயெஸ்வி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 hours ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்