’முந்தானை முடிச்சு’ போலவே ‘மெளன கீதங்கள்’ ;  ’ஆல்டைம்’ ஹிட்டடிக்கும் பாக்யராஜின் திரைக்கதை ஜாலம்! 

By வி. ராம்ஜி

கதை சொல்வது லேசுப்பட்ட காரியம் அல்ல. கதை சொல்வதில் ஒரு சுவாரஸ்யமும் அழகும் இருக்கவேண்டும். அப்படி நேர்த்தியாக கதை சொல்லத்தெரியாவிட்டால், கம்ப ராமாயணம் கூட போரடித்துவிடும். அப்படியொரு நறுவிசு சொல்லும் விதத்தில் இருந்துவிட்டால், பாட்டி வடை சுட்ட கதையைக் கூட வாயைப் பிளந்துகொண்டு கேட்கலாம். தமிழ் சினிமாவுக்கு அப்படியொரு அட்டகாச கதைசொல்லியாக இருப்பவர் கே.பாக்யராஜ். கதை சொல்வதில் மன்னன். திரைக்கதை அமைப்பதில் மன்னாதிமன்னன்!


இவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான வெற்றியைச் சுவைத்தன. குறிப்பாக, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு இணையாக வேறொரு படத்தை படம் வெளியான காலகட்டத்தில் சொல்லவே முடியாது என்பார்கள் ரசிகர்கள். இந்தப் படம் இப்போது நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில், ரீமேக் செய்யப்படுகிறது.


கிட்டத்தட்ட பாக்யராஜின் இந்தப் படத்தையும் ரீமேக் செய்யலாம். அப்படியான ஆல்டைம் படங்களில் முக்கியமானது... ‘மெளன கீதங்கள்’.

அசகாய வித்தைக்காரரான பாக்யராஜின் மூன்றாவது படம் மெளனகீதங்கள். மூன்று படங்களில் எப்படியான வெற்றிகளும் புகழும் கிடைக்கவேண்டுமோ அவை அனைத்தும் இந்த ஒரே படத்தில் கிடைத்தது அவருக்கு!

79ம் ஆண்டு ’சுவரில்லாத சித்திரங்கள்’ பண்ணினார். நல்ல படம் எனும் பெயர் கிடைத்தது. ஆனால் சுமாராகத்தான் ஓடியது. 80ம் ஆண்டு ’ஒரு கை ஓசை’ இயக்கினார். அதுவும் அவ்விதமாகவே பார்க்கப்பட்டது. 81ம் ஆண்டு ஜனவரி குடியரசு தின வெளியீடாக, 23ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டது ’மெளனகீதங்கள்’ திரைப்படம். அவ்வளவுதான். ‘யாருப்பா இந்த பாக்யராஜ்’ என்று எல்லோரும் விசாரித்தார்கள். ஒரு இயக்குநராகவும் நடிகராகவும் பாக்யராஜை தலையில் வைத்துக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகப்பெருமக்கள்.

’புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜ்தான் நாயகன். ஆனால் அதில் அவருக்குக் குரல் கொடுத்திருப்பது கங்கைஅமரன். ’சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் இரண்டாவது ஹீரோ. ’ஒரு கை ஓசை’யில் நாயகன். ஆனால் வாய்பேச முடியாதவர். ’மெளனகீதங்கள்’தான் முழு ஹீரோவாக, அவரே அவர் குரலில் அவருக்கே உண்டான டச்...களுடன் தனக்கனெ ஒரு ஸ்டைல் பிடித்தார்; மக்கள் மனங்களிலும் இடம் பிடித்தார்.

பாக்யராஜின் மைனஸ் பாயிண்ட் என்று இரண்டைச் சொல்வார்கள். முதலாவது... மூக்குக்கண்ணாடி. இன்னொன்று... அவரின் கீச்சுக்கீச்சுக் குரல். தமிழ் சினிமா வரலாற்றில், மூக்குக்கண்ணாடி ஹீரோவாகவும் ஒளிர்ந்தார். கீச்சுக்கீச்சுக் குரல் நாயகனாகவும் பேசப்பட்டார். இது ரெண்டுமே மிகப்பெரிய சாதனை. தன் பலஹீனங்களையே பலமாக்கிக் கொள்கிற சூட்சுமமும் சாமர்த்தியமும் கொண்ட பாக்யராஜின் வெற்றி, அசாதாரணமானது. அத்தனையிலும் இருக்கிறது அவரின் அசாத்தியத் திறமை!

இன்னொரு விஷயம்... வாரப் பத்திரிகை ஒன்றில், தொடர்கதையாக இந்தப் படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, கதை முழுவதுமே சொல்லப்பட்டது. அப்படியிருந்தும் ’மெளனகீதங்களை’ ஆர்ப்பரித்துக் கொண்டாடியது தமிழ் சினிமா.

81ம் ஆண்டு வந்த படம் இது. 39 வருடங்களாகிவிட்டன. அடுத்த வருடம் 40-வது வருடம். ஆனாலும் இன்றைக்கும் மெளனகீதங்கள், மக்கள் மனதில் பசுமரத்தாணி.

படத்தின் டைட்டிலில் இருந்தே தொடங்கிவிடும் பாக்யராஜின் ரவுசு. கோவையில் இருந்து கம்பீரமாக காரில் சென்னைக்கு வருவார் பகவதி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கே.கோபிநாதன். படத்தின் டைரக்டரான பாக்யராஜ் ஹீரோயின் தொடங்கி படத்தின் அத்தனை டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்தி வைப்பார். டைட்டில் ஆரம்பமாகும். காரில், பிறகு டாக்ஸியில், அடுத்து ஆட்டோவில், அதற்குப் பிறகு நடந்து வருவார் தயாரிப்பாளர். ஆனால் இப்படியான காட்சிக்கு நேர்மாறாக, போட்ட தியேட்டர்கள் அனைத்திலும் படம் பார்க்க உள்ளே சென்றவர்களைவிட, ஹவுஸ்புல் போர்டு பார்த்துவிட்டு வெளியேறியவர்கள்தான் அதிகம். தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது இந்தப் படம்.

மூன்றாவது மாடியில் இருக்கும் பெண்ணின் கூந்தல், தரைக்கு வருவதும் அந்த கூந்தலை நடுவே இன்னொரு மாடியில் இருந்து ஒருவர்வெட்டுவதும், அப்போது எடிட்டிங் என்று டைட்டில் போடுவதும் ரசனை ப்ளஸ் ரகளை. இசைக்கான மெட்டுகளை இளையராஜா போட்டுக்கொண்டிருப்பார். பின்னணியில் ’மாமன் ஒரு நா மல்லிகைப்பூ கொடுத்தான்’ என்ற டியூன். அந்த மெட்டுக்கள் கொண்ட பேப்பரில் இருந்து சிலவற்றை கங்கைஅமரன் லபக்கிவிடுவார். இசை கங்கை அமரன் என்று டைட்டில் வரும்.

’மெளனகீதங்கள் படம் பாக்கப்போறியா. டிக்கெட் கிடைக்காது சீக்கிரமே போயிரு. முக்கியமா, டைட்டிலைப் பாக்க மறந்துடாதே. செம காமெடி போ’ என்று சொன்னார்கள் அப்போது.

கோயம்புத்தூர். பையனுடன் பஸ் ஏறும் சரிதா. ஆடியன்ஸ் அப்படியே ஷாக்காகிப் போவார்கள். என்னடா இது சரிதாதான் ஹீரோயின். அதுவும் பையனோட என்ட்ரி. அப்படீன்னா ஹீரோ? என்று யோசிக்கும்போதே பெட்டிபடுக்கை சகிதமாக, அதே பஸ்சில் ஏறுவார் பாக்யராஜ். அட ஹீரோயின் மகனோட வர்றாங்க. ஹீரோ என்னடான்னா, தனியா வர்றாரு. சீட்டின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ஆடியன்ஸ்.

அதன் பிறகு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குப் பயணமாகும் பஸ். கூடவே கதை பின்னோக்கிப் பயணிக்கும். ஒற்றைவரியில் பின்னோக்கிப் பயணிக்கும் என்று சாதாரணமாகச் சொல்லிவிடமுடியாது. அங்கே, ஆங்காங்கே ஜிம்மிக்ஸ் வித்தை திரைக்கதையை செருகிக் கொண்டே வருவார் இயக்குநர் பாக்யராஜ்.

இருவரும் பார்த்துக்கொண்டதும் அங்கே ஒருபெண்ணுடன் இருக்கிற பாக்யராஜ், அடுத்து சரிதாவுடன் டூயட் பாடுகிற பாக்யராஜ், குடித்தனம் நடத்துகிற காட்சி என பரபரவென, தடதடவென வந்து போகும். ‘ஓ... இவர்கள் பிரிந்ததற்கு அந்தப் பெண் காரணம்’ என்பதை நமக்குச் சொல்லிவிட்டு கதைக்குள் செல்வார் பாக்யராஜ்.

இண்டர்வியூ. பாக்யராஜ், சரிதா இருவருமே வேலைக்காக வந்திருக்க, அங்கே ஒரு பொய் சொல்லுவார் சரிதா. அதையடுத்து வருகிற காட்சிகளெல்லாம் காமெடி அலப்பறைதான். சரிதா சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி, கடனை உடனை வாங்கி கேட்டதெல்லாம் வாங்கித் தருவார். ஒருகட்டத்தில், சரிதாவுக்கு வேலை கிடைத்த அதே இடத்தில், மேலதிகாரியாக வரும் போதுதான் உண்மை தெரியவரும்.

‘உங்க பாட்டிக்கு பகவத்கீதை. உன் தங்கச்சிக்கு ஸ்கிப்பிங் ரோப்பு. உன் தம்பிக்கு கிரிக்கெட் பேட்டு. எங்க அப்பன் என்ன நோட்டு அடிக்கிறான்னு நெனைச்சியா?’ எனும் வசனம் செம பேமஸ் அந்தக் காலத்தில்.

அதன் பின்னே மலருகிற காதல், கல்யாணத்தில் முடிவதும், அங்கிருந்து தொடங்கும் தாம்பத்ய வாழ்வில், அடிக்கடி தேவையே இல்லாமல் முட்டிக்கொள்வதும் அன்றாடம், எல்லார் வீடுகளிலும் நடக்கிற சின்னச்சின்ன ஊடல்கள். ’அதை திரையில் அப்படியே காட்டிருக்கான்யா இந்த ஆளு’ என்று பாக்யராஜை ஆராதித்தார்கள். வரவேற்று உச்சிக்குக் கொண்டு சென்றார்கள். ‘இவர் நம்ம ஆளுய்யா’ என்று மனசுக்கு நெருக்கமாக்கிக் கொண்டார்கள்.

சரிதாவின் விதவைத் தோழிக்கு வரவேண்டிய எல்.ஐ.சி. பணச்சலுகைக்காக தன் கணவன் பாக்யராஜை உதவிக்கு அனுப்ப, ஒருகட்டத்தில் இருவருமே சந்தர்ப்பவசத்தால், வசமிழக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் புழுங்கித் தவிக்கும் பாக்யராஜ், ஒருகட்டத்தில் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்க, அங்கே வெடிக்கிறது குடும்ப பூகம்பம். பாசம் வைத்தவர்கள், பாளம்பாளமாகப் பிரிகிறார்கள். அப்படிப் பிரிந்தவர்கள், அப்போதுதான் பஸ்சில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

இப்போது பிரிவு வளர்ந்தது போலவே, தம்பதிக்குப் பிறந்த பையனும் வளர்ந்திருக்கிறான்.

ஒரே அலுவலகம். வீடும் எதிரெதிராக. ஆனாலும் கணவனை மன்னிக்கத் தயாராக இல்லை. இதனிடையே பையனுடன் ரகசிய சந்திப்பு. அடிக்கடி ஒட்டிக்கொண்டு உறவாடுதல். இதனால் மேலும் முட்டிக்கொள்கிறார்கள். இதேநிலை நீடிக்க, மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை அழகு ததும்ப, பாசம் பொங்க, உறவின் உன்னதம் உணர்த்தி, கணவன் மனைவி உறவின் நீள அகலங்கள் விவரித்து தன் திரைக்கதை ஜாலத்தால் அசத்தியிருப்பார் பாக்யராஜ்.

ரகுநாதன், சுகுணா எனும் அவர்களின் கேரக்டர்களின் பெயர்கள் கூட மக்கள் மனங்களில் பதிந்துவிட்ட ஒன்று.

பஸ் வழியில் நிற்க, அங்கே பெண் சம்பந்தமாக ஒரு களேபரம். மாட்டிக்கொண்டு முழிப்பார் பாக்யராஜ். அங்கிருந்து ஒரு பிளாஷ்பேக். ’மீனவநண்பன்’ படத்தை பாக்யராஜும் சரிதாவும் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்க, பாத்ரூம் சென்றுவிட்டு, இருட்டில் வேறு பெண்ணுக்கு அருகில் அமர்ந்துவிட, அங்கே நடக்கும் அதகளத்தை நினைத்துப் பார்ப்பார் சரிதா.

இன்னொரு காட்சி. இருவருக்கும் சின்ன சண்டை. மாடியில் தனியே படுத்துக்கொள்வார் பாக்யராஜ். அங்கே எதிர்வீட்டு மாடியில் ஒரு குழந்தை நின்றிருக்க, அதற்கு பறக்கும் முத்தம் தருவார். புருஷன் யாருக்கு பறக்கும் முத்தம் தருகிறார் என்று வெளியே வந்து பார்க்க, அங்கே குழந்தை இருந்த இடத்தில், பெண்மணி இருப்பார். அதுவும் வயதான பாட்டியம்மா. அவ்வளவுதான். மீண்டும் களேபரம். அழுகை. சத்தியம். ‘ஒரு சின்னத்தப்பு பண்ணினீங்கன்னாக் கூட தாங்கமாட்டேன்’ என்று சொல்லும்போதெல்லாம் சரிதா நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார்.

வேலை விஷயமாக வெளியூர். அங்கே ஹோட்டலில் சின்ன சபலம். சரி என்று ஸிலிப்பாகும் தருணத்தில், டிரங்க்கால். மனைவி போன். அட்டெண்ட் பண்ண திரும்ப வருவார். போலீஸ் ரெய்டு. ’நீங்க தப்பிச்சதே பெரிய விஷயம். எல்லாம் மாங்கல்ய பலம்’ என்பார் ஒருவர். படம் பார்க்கிற ஆண்கள் ஜெர்க்காகி, சுதாரித்துக்கொள்கிற தருணம் அது!

மனைவிக்கு அந்த மூன்று நாள் என்பதும், அப்போது கணவன் கோபப்படுவதும் திரைக்கு கொஞ்சம் புதுசுதான். ஆனால் மூன்றுநாளின் வேதனையை பொளேரென்று வசனங்களாலும் சரிதாவின் நடிப்பாலும் உணர்த்திவிடுவார். அதனால்தான் பாக்யாரஜை ஆண்களைவிட பெண்கள் இன்னும் இன்னும் என கொண்டாடினார்கள். ’ஜாக்கெட் ஹூக்கை கொஞ்சம் மாட்டிவிடுங்க’ என்று சரிதா கெஞ்சுவார். ஆபீஸ் போற நேரத்துல... என்று எரிந்துவிழுவார். ‘ஒரு ஹூக்கை மாட்டுறதுக்கு எவ்ளோ நேரமாகும். கழட்டுறதுன்னா மட்டும் வேகமாக் கழட்டுறே’ என்று திட்டுவார். கொஞ்சம் சரசம், கொஞ்சம் கேலி, கொஞ்சம் ஆணின் மனம் என எல்லாவற்றையும் சொல்லிவிடுவார், அந்தக் காட்சியில்!

ஆபீஸில் உடன் வேலை பார்க்கும் கிருஷ்ணமூர்த்தி, பஸ் ஸ்டாப்பில் சரிதாவிடம் ஒருமாதிரியாகப் பேசுவார். அவரை செருப்பால் அடித்துவிடுவார் சரிதா. பிறகு சரிதாவை ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து, ரூமில் நெருங்கக்கூட மாட்டார். ‘உன்னைத் தொடக்கூடமாட்டேன்’ என்று முடியை, சட்டையைக் கலைத்துக்கொள்வார். வெளியே சென்றால்... அலுவலக ஊழியர்கள். புதுவிதமாக, நாயகியைப் பழிவாங்கும் வில்லன் கதாபாத்திர குணமும் பகீர் கிளப்பும்.

அந்தக் குட்டிப் பய மாஸ்டர் சுரேஷ். பட்டையக் கிளப்பியிருப்பான். பாக்யராஜ் போலவே பேசுவதும் இமிடேட் செய்வதும் செம ரகளை. ‘விஷம் குடிச்சு செத்துடலாம்டா’ என்பார் சரிதா. ‘நீ வேணா விஷம் குடிச்சிக்கோ. நான் எங்கப்பாவோட கொஞ்சகாலம் இருந்துட்டு, அப்புறமா செத்துப்போறேன்’ என்பான். தியேட்டரே கைத்தட்டும்.

உடன் வேலை பார்க்கும் பெண்மணி. தன் தங்கையையே கணவனுக்கு கட்டிவைத்து ஒன்றாகவே வாழ்வார்கள். ‘வாழாவெட்டியா இருக்கறதைவிட, இது பெட்டர்’ என்பார்.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் மனைவி இறந்துவிடுவார். ‘லச்சுமி. பத்துவருஷம் என்னை குழந்தை மாதிரி பாத்துக்கிட்டியே. என்னை விடுங்க., நானும் இந்தத் தீயில விழுந்து செத்துடுறேன்’ என்று கதறுவார். அவரே அடுத்த மாதம் இன்னொரு கல்யாணம் என்று வந்து நிற்பார்.

பொண்டாட்டி செத்த உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற இவரு எங்கே. விவாகரத்தே நடந்தாலும் நீதான் வேணும்னு உன்னையே சுத்தி வர்ற உன் புருஷன் எங்கே என்பார்.

படத்தின் கால் மணி நேரம், க்ளைமாக்ஸில், டயலாக்கே இருக்காது. வசனங்களால் கைதட்டுகள் அள்ளுகிற பாக்யராஜ், வசனமே இல்லாமல் இயக்கியிருப்பார். ரசிகர்களை தன்பக்கம் மயக்கியிருப்பார்.

ஒரு குடும்ப வாழ்க்கையை, இல்லற மேன்மையை, அன்பின் அடர்த்தியை அழகிய டிராமாவாக்கி அசத்தியிருப்பார் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ்.

கங்கை அமரன் இசை. ’மூக்குத்திப் பூமேலே’, ’மாசமோ மார்கழி மாசம்’, ’டாடிடாடி’ என்றெல்லாம் பாட்டுகள் எப்பவுமே கேட்கலாம் ரகம்! தான் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் என்பதை அப்போதே நிரூபித்திருந்தார் கங்கை அமரன். அவரின் பன்முகங்களில் இதுவும் ஒன்று.

வெள்ளிவிழா படம். மிகப் பிரமாண்டமான வெற்றிப்படம். பெண்களின் பல்ஸை சரியாகப் பிடித்து, அதை உணர்ந்து கதைப்படுத்தியிருப்பதும் காட்சிப்படுத்தியிருப்பதும்தான் பாக்யராஜ் எனும் கலைஞனின் மகா வெற்றி! ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்க்கவேண்டும். பார்த்தால், உண்மையாக வாழத்தொடங்கிவிடுவார்கள். இப்போதும் உண்மையான வாழ்க்கைதான் என்றால், இன்னும் உண்மையாய், அன்பாய் இருக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இன்னும் மனதுள் இசைத்துக்கொண்டே இருக்கின்றன... மெளன கீதங்கள்!


ஒரு தலைமுறையைக் கடந்தும் இன்றைக்கும் மனதில் நிற்கிறது இந்தப் படம். ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் செய்யப்படுவது போல், இந்தப் படத்தையும் எப்போது வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். ஹிட்டடிக்கிற சப்ஜெக்ட் இது. மேலும் தமிழ் சினிமாவின் கதைக்களம் வேற ரூட் பிடித்துப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ‘முந்தானை முடிச்சு’, ‘மெளன கீதங்கள்’ மாதிரியான படங்கள், அழகான பேமிலி டிராமாவுக்கும் நகரத்து வாழ்க்கைக்கும் கிராமியப் பின்னணிக்குமான யதார்த்தப் படங்களுக்கு மீண்டும் கட்டியம் கூறி மலர்ந்தாலும் மலரும்.


‘மெளன கீதங்கள்’ படத்தை ரீமேக் செய்வாரா பாக்யராஜ்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்