ஆளுமை வளர்ப்போம்: கருத்துப் பரிமாற்றம் என்றால் என்ன?

By முகமது ஹுசைன்

வெறுமனே பேசுவதால் எழுதுவதால் மட்டுமே கருத்துகளைப் பரிமாறிவிட முடியாது. கருத்துப் பரிமாற்றம் என்பது “கருத்துகளை, எண்ணங்களை, உணர்ச்சிகளை, சொற்களின் மூலமோ ஒலிகளின் மூலமோ நடத்தைகளின் மூலமோ வெளிப்படுத்தும் ஒரு செயல் அல்லது நடைமுறை” என்று தி மெர்ரியம் வெப்ஸ்டர் அகராதியில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின்படி பல அடுக்குகளைக் கொண்ட கருத்துப் பரிமாற்றத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே அது சாத்தியம்.

கருத்து பரிமாற்றம் என்றால் என்ன?

ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்றொரு நபரிடம் தகவல் தெரிவிக்கிறீர்கள், அது உங்கள் நண்பர்களிடம் பேசுவதாக இருக்கலாம்; உங்கள் ஆசிரியர் உங்களிடம் பேசுவதாக இருக்கலாம். இரண்டிலும் கருத்துப் பரிமாற்றம் நடக்கிறது. இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் பல வகைகள் உள்ளன:

சொல் சார்ந்தது

நேரிலோ தொலைப்பேசி வாயிலாகவோ நடைபெறுவது சொல் சார்ந்த கருத்துப் பரிமாற்றம். இந்த முறையில் கருத்து பேச்சின் மூலமாகப் பரிமாறப்படும்.

சொல் சாராதது

உடல் மொழியாலும் முகபாவங்களாலும் வெளிப்படுத்தப்படுபவை சொல் சாராத கருத்துப் பரிமாற்றம். இந்த வகைப் பரிமாற்றத்தில் நடிகர்கள் மிகவும் தேர்ந்தவர்கள். அவர்கள் உணர்வுகளை உடல் மொழியாலும் முகபாவங்களாலும் வெளிப்படுத்தும் பயிற்சி பெற்றவர்கள்.

எழுத்து வழி

எழுதும் சொற்களின் மூலமாகத் தகவல்களையோ அறிவுறுத்தலையோ பரிமாறுவது எளிதானது. நேருக்கு நேர் பேசுவதில் தயக்கம் உள்ளவர்களுக்கு, இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மூன்று வகைப் பரிமாற்றத்திலும் சிறந்து விளங்குவது, உங்களைப் பின்னாளில் ஒரு சிறந்த, தலைமைப் பண்பு மிக்க ஆளுமையாக உருவாக்கும்.

வழிமுறைகளும் உத்திகளும்

நாம் நினைப்பதை வெளிப்படுத்த வெவ்வேறு விதமான கருத்துப் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தினாலும் தெளிவாகவும் செறிவாகவும் அவற்றை மாற்ற சில வழிமுறைகளையும் உத்திகளையும் கையாள வேண்டும்.

மௌனம்

ஆச்சரியமாக உள்ளதா? ஆம். தகவல் பரிமாற்றத்தில் மௌனம் சக்திவாய்ந்த உத்தியாகும். குறிப்பாக மற்றவர்களிடமிருந்து நீங்கள் தகவல்களைப் பெற விரும்பும்போது. ஒருவர் பேசி முடித்தவுடன் உடனே பதில் சொல்லாமல், மௌனமாக அதே நேரம் ஈடுபாட்டுடன் கவனித்தீர்கள் என்றால், அவர் மேலும் பல தகவல்களை, எந்த இடையூறுமின்றி உங்களுக்குத் தரக்கூடும்.

கேட்டல்

கேட்டல் என்பது காதுகளின் மூலம் ஒலியைக் கேட்பது மட்டுமல்ல. சொல்லப்படும் சொற்களைக் கவனித்து, பொருளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் கோர்வையாகவும் தெளிவாகவும் அறிவோடும் பதில் சொல்வதும் ஆகும்.

குறை நிறை அலசல்

தகவல் பரிமாற்றத்தில், கேட்பவரிடமிருந்தும் சொல்பவரிடமிருந்தும் வரும் குறை நிறை பற்றிய பின்னூட்டம் மிகவும் முக்கியமானது. கேட்பவர் குறைகளையும் நிறைகளையும் சொல்லும் விதத்தில் நீங்கள் தெளிவாகத் தகவல்களை முன்வைக்க வேண்டும். குழு விவாதங்கள் நடத்துவதன் மூலம் இந்தப் பண்பை வளர்த்துக்கொள்ளலாம்.

வாசிப்பு

வாசிப்பு உங்கள் அறிவைப் பெருக்குவதோடு சிந்திக்கும் ஆற்றலையும் அதிகரிக்கும். எழுத்து வழியான தகவல் தொடர்பில், திறன் குறைந்தவர்கள், வாசிப்பு மூலம் அதை மேம்படுத்தலாம். மேலும், படித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களுடன் விவாதிப்பதன் மூலம், உங்கள் சொல் சார்ந்த பரிமாற்றத் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம்.

மன அழுத்த மேலாண்மை

உங்களுடைய கருத்துப் பரிமாற்றத் திறன் மூலமாக ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போனால், மன அழுத்தம் உண்டாகலாம். இந்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லை என்றால், அது உங்கள் திறமையை இன்னும் பாதிக்கும். இந்த மாதிரிச் சூழ்நிலையில், உங்களைப் பாதிக்கும் விஷயத்திலிருந்து சிறிது விலகி, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்வது அதைச் சமாளிக்கும் எளிய வழியாகும்.

உற்சாகம்

நீங்கள் உற்சாகமாக இருந்தீர்கள் என்றால், மற்றவர்கள் உங்களிடம் தகவல்களை விரும்பிப் பரிமாறிக் கொள்வார்கள். அது மட்டுமின்றி நீங்கள் சொல்லும் விஷயத்தையும் நேர்மறையாக எடுத்துக்கொள்வார்கள். சோர்வாக இருந்தீர்கள் என்றால், யாருக்கும் உங்களிடம் பேசத் தோன்றாது. கண்ணைப் பார்த்துப் பேசுவதன் மூலமும், பிறர் பேசும்போது புன்னகையுடன் கவனிப்பது மூலமும், நீங்கள் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

மொழித் தேர்வு

திறன் மிக்க கருத்து பரிமாற்றத்துக்கு உங்களுக்கு எந்த மொழியில் ஆளுமையுண்டோ அதைப் பயன்படுத்துங்கள். உங்களைவிடவும் வயதிலும், பதவியிலும் சிறியவர்களாக இருந்தாலும் ‘நீ’, ‘உன்னை’ போன்ற ஒருமையில் விளிக்காமல் மரியாதையோடு பேசிப் பழகுவது இணக்கமான கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவும். குழுவினரோடு கலந்துரையாடும்போது ‘நான்’ என்று சொல்வதைத் தவிர்த்து நாம் என்று சொல்வது, அனைவருடன் தோழமையை உருவாக்கும்.

நகைச்சுவையுணர்வு

சிரிப்பது எல்லோருக்கும் பிடிக்கும். மேலும், சிரிப்பு மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். எந்த விவாதமாக இருந்தாலும், அது எவ்வளவு முரண் மிக்கதாக இருந்தாலும், உங்களிடம் நகைச்சுவை உணர்வு இருந்தால். அதை நீங்கள் எளிதாகக் கையாள முடியும். அதே நேரம் சூழ்நிலையைப் பொறுத்து, நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

தொடர்ந்து கற்றல்

கருத்துப் பரிமாற்றம் என்பது ஒரு கலை. அதை வளர்த்துக்கொள்ள, கற்றுக்கொண்டே இருப்பது மிகவும் அவசியம். கருத்துப் பரிமாற்றத்தில் புதுப்புதுத் தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் கற்றுக்கொள்ள மறுத்தீர்கள் என்றால், புதிய தொழில்நுட்பத்தைக் கற்றவர்களுடன் உங்களால் போட்டிப் போட முடியாது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொற்களில் சொல்வதென்றால் “எப்பொழுது நீங்கள் கற்பதை நிறுத்துகிறீர்களோ, அப்போது நீங்கள் மரணிக்க ஆரம்பிக்கிறீர்கள்”.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்