தமிழக விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லையென்ற போதிலும், அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வெட்டுக் கிளிகள் தென்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இப்பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள்
ஆப்பிரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்து படையெடுத்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் வழியாக ஊடுருவிய வெட்டுக்கிளிகள் குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் காணப்படும் விளைநிலங்கள், பசுமைக் காடுகளில் உள்ள வேளாண் பயிர்கள், பசுந்தாவரங்களை உண்டு அழித்து வருகின்றன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதேபோல் தமிழகத்திற்குள் ஊடுருவினால், சாகுபடி வேளாண் பயிர்களைப் பாலைவன வெட்டுக்கிளிகளிடம் இருந்து பாதுகாப்பது எப்படி? என்று செய்வதறியாது நிற்கின்றனர், தமிழக விவசாயிகள். “இதுவரை பாலைவன வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியைக் கடந்து தமிழகத்திற்குள் நுழைந்ததில்லை என்பதால், மாநிலத்துக்குள் ஊடுருவ வாய்ப்பில்லை” என்று விளக்கமளித்துள்ளது, தமிழக வேளாண்மைத்துறை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஒருவேளை வெட்டுக்கிளிகளின் ஊடுருவலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழக வேளாண்மைத்துறை கோவை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி, 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
“உலகம் முழுவதும் உள்ள வேளாண் பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்களில் வெட்டுக்கிளிகளும் ஒன்று. ஆப்பிரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்ட வெட்டுக்கிளிகள் பாலவனப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து, பல்வேறு நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்கின்றன. கூட்டம், கூட்டமாக விளை நிலங்களுக்குள் நுழைந்து வேளாண் விளைப்பொருட்களை நாசம் செய்து வருகின்றன. பயிர் விளைச்சல் அதிகமாகக் காணப்படும் காலகட்டங்களில், அப்பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்று பயிர்களை அழித்து விடும்.
» என் கடை... என் பாத்திரம்!- பாலித்தீன் பை பார்சல் டீக்குத் தடைபோட்ட தண்டபாணி
» இறுதிக்காலம் வரை கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்ட செவிலியர் பிரஸில்லா காலமானார்
ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் குறித்தும், அவை பயிர்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு, அண்டை நாடுகளில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வெட்டுக்கிளிகள் காற்று வீசும் திசையின் மூலமாக பயிர்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து அங்கு படையெடுத்துச் செல்கின்றன. தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இதுவரை கண்டறியப்படவில்லை. எல்லையில் உள்ள தக்காண பீடபூமி, உயரமான மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றைக் கடந்து மாநிலத்துக்குள் நுழைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் வாழ்க்கை சுழற்சி சாலிட்டரி, கிரிகேரியஸ் என இருவகை நிலைகளைக் கொண்டது. சாலிட்டரி நிலையில் அதிகமான இனப்பெருக்கம் மற்றும் குறைவான வாழ்நாளும், கிரிகேரியஸ் நிலையில் குறைவான இனப்பெருக்கம் மற்றும் அதிக ஆயுட்காலமும் கொண்டது. எனவே வெட்டுக்கிளிகளின் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மேலாண்மை முறைகளை மேற்கொண்டால் இவற்றின் எண்ணிக்கையை கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
கண்காணிப்பும்- கட்டுப்பாடும்
மேலும், வெட்டுக்கிளிகள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து ஆர்.சித்ராதேவி கூறும்போது, 'விவசாயிகள் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கண்டறிய வேண்டும். ஏதேனும் பாதிப்பு தென்பட்டால் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
வயல்களிலும், வரப்புகளிலும் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேவையின்றி காணப்படும் களைச்செடிகளை அகற்ற வேண்டும். வெட்டுக்கிளிகள் மண்ணில் சற்று ஆழமான பகுதிகளில் முட்டையிடுவதால், நிலத்தை ஆழமாக உழவு செய்ய வேண்டும். வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை குறைவாக தென்பட்டால் வேம்பு போன்ற இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயலிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தெளிக்கலாம். வயல்களில் ஒலிப்பான்களைப் பொருத்தி வெட்டுக்கிளிகளை விரட்டலாம். மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பியூவெரியா பேசியானா போன்ற உயிரியியல் பூஞ்சாணங்களைப் பயன்படுத்தலாம். குளோர்பைரிபாஸ் மற்றும் மாலத்தியான் போன்ற பூச்சி மருந்துகளைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிப்பான்கள் மூலமாகவோ, டிராக்டர்கள் மூலமாகவோ ட்ரோன்கள் மூலமாகவோ தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்கலாம்' என்றார்.
கண்காணிப்பு தீவிரம்
இந்நிலையில் நீலகிரி மாவட்டம், கூடலூரைய அடுத்த தாளூர் அருகே உள்ளது வயநாடு. இது தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாகப் பறந்து வருவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதேபோல் ஊட்டியில் உள்ள காந்தல் பகுதியில் வெட்டுக் கிளிகள் பறந்து வந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட வேளாண்மைத்துறையினர், தோட்டக்கலைத்துறையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் கேரள மாநில எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ள ஆனைமலை, மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வட்டாரங்களில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேளாண் வட்டார அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 hour ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago