உங்குத்தமா... எங்குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல?- திருப்பியடிக்கும் இ- பாஸ் அலப்பறைகள்

By கே.கே.மகேஷ்

கண்ணுக்குத் தெரியாத கரோனா கொஞ்ச நஞ்ச சேட்டையா செய்கிறது? பிழைக்கப் போன ஊரில் இருந்து சொந்த ஊருக்குப் போவதற்கே இ -பாஸ் எடுக்க வைத்திருக்கிறது.

கல்யாணம், இறப்பு, அவசர சிகிச்சை போன்ற காரணங்களுக்காக வெளியூர் செல்ல இ - பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தாலும் அப்படியெல்லாம் எளிதில் பாஸ் கிடைத்து விடுவதில்லை. நாம் கொடுக்கிற விவரங்களை எல்லாம், ‘அப்படியா... சரிண்ணே, சரிண்ணே...’ என்று தலையாட்டாத குறையாக வாங்கிக் கொள்ளும் இ - பாஸ் இணையப் பக்கம், ‘சாருக்கு ஒரு ஊத்தாப்பம்...’ என்பது போல கடைசியில் ரொம்ப எளிதாக, ‘யுவர் இ - பாஸ் அப்ளிகேஷன் ஈஸ் ரிஜெக்டட்’ என்று மெசேஜ் அனுப்பி விடுகிறது.

மறுபடியும் விண்ணப்பிக்க இன்னொரு கல்யாணப் பத்திரிகை வராதா, சாவுச் செய்தி வராதா? என்று காத்திருக்க வேண்டியதுதான். அதிர்ஷ்டவசமாக ஏதாவது ஒரு விண்ணப்பம் ஓகே ஆகலாம். அதற்காக இனியெல்லாம் சுகமே என்று இருந்துவிட முடியாது.

அந்த இ - பாஸைக் கார் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டால், யாரும் தடுக்க மாட்டார்கள் என்று இ -பாஸ் இணையதளம் சொல்கிறது. ஆனால், மாவட்ட எல்லைகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் சோதிக்கிறார்கள். ஒவ்வொரு இ - பாஸிலும் க்யூஆர் கோட் இருக்கிறது. அதை ஸ்கேன் செய்தாலே, வண்டி எண் முதல் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை, அவர்களின் ஆதார் எண், போன மாதம் ரேஷன் கடையில் வாங்கிய அரிசி, பருப்பு வரையில் எல்லாமே தெரிந்துவிடும். ஆனால், நம் போலீஸ்காரர்கள், "உன் ஊரு என்ன... எங்கிருந்து வர்ற, எங்க போற, அது எந்த போலீஸ் லிமிட்டு? அது யாரு (பொண்டாட்டியைக் கைகாட்டி) உன் தங்கச்சியா?"என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொலையாய்க் கொல்கிறார்கள்.

நான்கு சுங்கச் சாவடியைத் தாண்டினாலே பயண நேரம் 20 நிமிடம் வரையில் கூடிவிடும்போது, இந்த திடீர் சோதனைச் சாவடிகளால் ஏற்படுகிற நேர விரயத்தைச் சொல்லவும் வேண்டுமா? எல்லாம் முடிந்து ஊருக்குப் போனால் அடுத்த தொல்லை காத்திருக்கிறது. வீட்டில் உள்ளவர்களின் நலம் விசாரித்து முடிப்பதற்குள், அந்த ஏரியா ஹெல்த் இன்ஸ்பெக்டர் வந்துவிடுகிறார் நம் நலம் விசாரிப்பதற்கு... "உங்கள் வீடு தனிமைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இ - பாஸில் வந்திருக்கலாம். ஆனால், நீங்கள் ஊர் திரும்பிய பிறகும் இந்த வீட்டில் இருக்கும் உங்கள் பெற்றோர், திருமண வீட்டினர் 14 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள்" என்கிறார்கள்.

"என் மகன் ரெண்டு மாசமா மெட்ராஸ்ல தவிக்கான். இந்தப் பய மட்டும் ஊருக்கு வந்திட்டானே? என்ற பொறாமையில் சொந்தக்காரர்கள் மகேசுக்கு கொரனாவாம்... அதான் அவன் வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் ஒட்டியிருக்காங்க" என்று கிளப்பி விட்டுவிடுகிறார்கள். அதுவரை, "எப்படா ஊருக்கு வருவ?" என்று கேட்ட பெற்றோரே, "ஏன்டா வந்த?" என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

"ஏங்க... உங்க வீட்டுக்கு வந்தாச்சு. பக்கத்துலதான எங்க ஊரு... போலாமா?" என்று மனைவி கேட்பார். அப்படிக் கேட்டால்தானே அவர் மனைவி?! இருக்கிற இம்சைகள் போதாது என்று அதற்கும் தலையாட்டுவோம். நம் ஊரைத் தாண்டி 5 கிலோ மீட்டர் போவதற்குள் போலீஸார் பிடித்துக் கொள்கிறார்கள். "ஹலோ நீங்க திருநெல்வேலி மாவட்டத்துக்குத்தான் பாஸ் வாங்கியிருக்கீங்க. இப்ப வந்திருப்பது தென்காசி மாவட்டம்..." என்று ஏதோ வேறு நாட்டிற்குள் விசா இல்லாமல் வந்ததைப் போலப் பிடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள். மனைவி முன்னால் நம்மை ஒருமையில் திட்டி, கேவலப்படுத்துவார்கள். பிறந்த ஊர்ல பாஸ் இல்லாம நடமாடுறது தப்புங்களா ஏட்டய்யா?

எடப்பாடி ஐயா ஒவ்வொரு தாலுகாவையும் தனித்தனி மாவட்டமாக அறிவித்தபோது சந்தோஷமாகத்தான் இருந்தது. இப்ப, "ஏன்யா பிரிச்சீங்க?" என்று கதற வேண்டியதிருக்கிறது. கல்யாணம், கருமாதி எல்லாம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, "மறுபடியும் முதல்ல இருந்தா?" என்கிற அளவுக்குப் படுத்துகிறார்கள். "ஏன்டா ஊருக்குப் போனோம்? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமோ?!" என்று தோன்றும்.

திரும்பி வரும்போது, உங்கள் வீட்டில் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இதப் படிச்ச பிறகும் சொந்த ஊருக்குப் போகணுங்கிற ஆசை மட்டும் விடாது பாருங்க. அங்க நிற்கிறோம் சார் நாம...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

13 hours ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்