தமிழகத்தையும் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு!- சாட்சி சொல்லும் தமிழின் மூத்த படைப்பாளிகள் கி.ரா., சோ.தர்மன்

By கே.கே.மகேஷ்

ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருக்கிறது. ஆனால், நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற 98 வயதாகும் தமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன், தென்மாவட்டத்தைத் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தனது முன்னோர்கள் சொன்னதை அப்படியே படம் பிடித்திருக்கிறார்.

1976-ல் வெளியாகி, பல பதிப்புகள் கொண்ட 'கோபல்ல கிராமம்' என்ற நாவலில் இதுபற்றி கி.ராஜநாராயணன் எழுதியிருப்பதாவது:
’’ஸ்ரீனி நாயக்கரும் எங்க்கச்சியும் ஓடிவந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கறிவேப்பிலைச் செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக் கொண்டிருந்தன.

அவை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்குத் தெரியாது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலைகூட இல்லை!

அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண் ஒருச்சாண் என்றிருந்தது! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி, இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது; கேள்விப்பட்டதும் கிடையாது.

எங்க்கச்சி பயந்துபோய் புருஷனைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள். ‘என்ன இது! உலகம் அழிவு காலத்துக்கு வந்துவிட்டதா?
உலகம், பிரளயம் வந்து அழியப்போகும் போது மழை பெய்யுமாம்; நாள் கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம். அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம். ஆனால், யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லலையே?’
அவர் மனைவியை உதறிவிட்டு கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார். செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்றுகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அவருக்குத் தொண்டையை அடைத்தது. எந்தப் பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள். கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களைப்போலவும் காட்சி தந்தது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மனித அபயக்குரல்கள் கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன.

ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்துகொண்டு அழும் கூக்குரல் கேட்டது. காடுகளில், விளைந்த கம்மங் கதிர்களுக்குக் காவலாக பரண் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் திகைத்து, இறங்கிவந்து விட்டில்களை விரட்டிப்பார்த்தார்கள்.
கம்புகளால் அடித்துப் பார்த்தார்கள். சோ சோ என்று கூப்பாடு போட்டுப்பார்த்தார்கள். கதிர்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த விட்டில், பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது! ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள். அவைகள் மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்றுபோலக் கேட்டது.

எதைக் கொல்லுவது; எப்படிக் கொல்வது? விட்டிலைப் பிடித்தால், ரம்பம் போன்ற அதன் பின்னத்தங் கால்களால் உதைத்துக் கையை ரணமாக்கி விடுகின்றன. நல்ல மனசு திரவத்தி நாயக்கர் அவருடைய புஞ்சையில் காவல் இருந்தார். கதிர் நன்றாக விளைந்திருந்தது. அவருக்கு மட்டுமல்ல, அந்த வருசம் கிராமம் பூராவுமே அப்படி. நாளைக்குக் கதிரைப் பிரக்கணும் என்று நினைத்திருந்தபோது இப்படி ஆகிவிட்டது.

நல்லமனசு நாயக்கர் விட்டில்களை விரட்டிப் பார்த்தார். தன்னை மூடியிருந்த துப்பட்டியை எடுத்து அவைகளை அடித்து அடித்து விரட்டினார். அசையவே இல்லை. அடியினால் பல விட்டில்கள் விழுந்து குற்றுயிராயின. சிலது செத்தன; ஆனால், போகவே இல்லை.
அவ்வளவு பசி அவைகளுக்கு!

தன் கண்ணெதிரே தான் சிரமப்பட்டு உண்டுபண்ணிய மகசூல் அழிய எந்த சம்சாரிதான் சம்மதிப்பான். பக்கத்துப் புஞ்சைக்காரனைத் துணைக்குக் கூப்பிடலாமென்றால் அங்கேயும் இதே சோகம். நாயக்கர் ஓடி ஓடி அலுத்துப்போனார். வருஷத்துக்கு ஒரு மகசூல்; அடுத்த தை மாசத்தை இனி எப்படிப் பார்க்கிறது? மனுசருக்கு உணவு இல்லை; கால்நடைகளுக்குக் கூளம் இல்லை. எல்லாம் முடிந்தது. முடிந்தது எல்லாம்.
"அய்யோ தேவுடா . . ." என்று மண்ணில் விழுந்து அழுதார். கைக்குக் கிடைத்த தின்பண்டத்தை காக்கை பறித்துக் கொண்டு ஓடக் கீழே விழுந்து புரண்டு அழும் குழந்தை போலிருந்தது’’.
- கோபல்ல கிராமம் , கி.ரா (1976)

இதேபோல, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் இன்று தனது முகநூலில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-
’’சில நாட்களாக நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கும் வெட்டுக்கிளி கூட்டத்தைப் பற்றி என் தாத்தா நிறைய்யச் சொல்லியிருக்கிறார். அதாவது, மேகம் தரையிறங்கி வந்தால் எப்படியிருக்குமோ அப்படி வருமாம். அதன் உணவு, இலைகளில் உள்ள பச்சையம் மட்டுமே. தென்னை, பனை ஓலைகளையும் வெள்ளை வெளேர் என்று உரித்து விடுமாம். அப்படியென்றால் அதன் வலிமையை உணர்ந்து கொள்ளுங்கள். அவைகள் போன பின்பு பார்த்தால் கறுப்பு நிறத்தில் கடுகு அளவு உருண்டையான எச்சங்கள் தரை முழுக்க காயப்போட்டது மாதிரி கிடக்குமாம். அப்படியானால் அதன் கூட்டத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

எல்லாச் செடி, கொடி, பயிர்களும் தன் பச்சையத்தை இழந்து வெள்ளை வெளேர் என்று மாறிப்போகுமாம். பச்சையம் இல்லாமல் எல்லாச் செடிகொடிகளும் ஸ்டார்ச்சை உருவாக்க முடியாமல் அப்படியே கருகிப் பட்டுப் போகுமாம்.

நான் 2005-ல் வெளியிட்ட 'கூகை' நாவலில் 97_100 பக்கங்களில் இதே மாதிரி, ஒரு புழுக்களால் ஏற்படும் பேரழிவை எழுதியிருக்கிறேன். அவைகளும் பச்சையங்களைத்தான் சேதாரப்படுத்தும். இந்த நாவல்தான் லண்டன் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியால் 'Owl' என்ற பேரிலும் மலையாளத்தில் 'மூங்கா' என்ற பேரிலும் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்ற நாவல்.

"இயற்கையை நீ வஞ்சித்தால் அது உன்னை எந்த ரூபத்திலாவது பழி வாங்கியே தீரும்", "நீ இயற்கையை ஜன்னல் வழியாகத் தூக்கியெறிந்தால் அது உன் தலைவாசலில் வந்து கதவைத் தட்டும்" என்று ஜப்பானிய இயற்கை ஆர்வலர் மஸானோ புக்காகோ சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது’’.

இவ்வாறு எழுதியுள்ளார் சோ.தர்மன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்