மனோரமா எனும் நான்கெழுத்து, ஆச்சி என மூன்றெழுத்தாகச் சுருங்கிக்கொண்டது என்றாலும் கூட, மனோரமாவின் வாழ்நாளும் சாதனைகளும் மிகப் பிரமாண்டமானவை. ‘நாமளும் இப்படி நடிப்போம்; ஜெயிப்போம்’ என்று எவரும் நினைத்துக் கூட பார்க்கமுடியாதவை.
தஞ்சாவூர்ப் பக்கம்தான் பூர்வீகம். வைத்த பெயர் கோபிசாந்தா. சிறுவயதிலேயே, அம்மாவை அப்பா புறக்கணித்தார். அம்மாவின் தங்கையையே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சிறுமி கோபிசாந்தாவை அழைத்துக்கொண்டு, காரைக்குடிப் பக்கம் வந்தார் அம்மா. கோட்டையூர் அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார். அங்கே, தெருமுனையில் பலகாரக் கடை போட்டார். பாதிவயிறு நிறைந்தது இருவருக்கும்!
ஆனாலும் அது வயிற்றுக்குத்தான் போதுமானதாக இருந்தது. ஆறாவதுடன் படிப்பு நின்றது. அங்கே உள்ள வீடுகளில் சிறுமி கோபிசாந்தா வேலை செய்தார். துறுதுறு சுறுசுறு என இருந்த சிறுமி கோபிசாந்தாவை, ஊரில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. அப்படிப் பிடிப்பதற்கு கோபிசாந்தாவின் குரல் காரணம். குரல் வழியே வந்த பாட்டு காரணம். பாட்டுக்குத் தக்கபடி ஆடி நடித்தது முக்கியக் காரணம். நடிப்பைப் பார்த்து எல்லோரும் அசந்துபோனார்கள். கடையில் சுடச்சுட வழங்கிய பலகாரங்களை விட, அவரின் பல பரிமாணங்கள் இன்னும் தித்தித்தன.
உள்ளூர் நாடகக்குழுவில் மேடையேறினார். எஸ்.எஸ்.ஆர், இவரின் நடிப்பைக் கண்டு பிரமித்துப் போனார். தன் நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார். கவியரசர் கண்ணதாசன், தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தார். இடம் மாறினார். ஊர் மாறினார். சென்னைக்கு வந்தார். முன்னதாக, கோபி சாந்தா என்ற பெயரும் மாறியது. மனோரமா என்றானார்.
சின்னச்சின்ன வேடங்கள். பிறகு காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரின் முகபாவங்களும் நக்கலான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்..ஆர், முத்துராமன், ஜெய்சங்கர் என அந்தக் காலத்தில் எல்லா நடிகர்களுடனும் நடித்தார். எல்லாப் படங்களிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, அஜித், விஜய் என அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்தார்.
» நக்கல் டைமிங், நையாண்டி ரைமிங்கில் கவுண்டமணி காமெடி ராஜா! - கவுண்டமணி பிறந்தநாள் இன்று!
» மாயக்குரலோன்... மயக்கும் குரலோன் டி.எம்.எஸ்! - இன்று டி.எம்.செளந்தர்ராஜன் நினைவுநாள்
ஏ.கருணாநிதி,தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் என ஏகப்பட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இதிலொரு ஆச்சர்ய சுவாரஸ்யம்... யாருடன் நடித்தாலும் அவர்களுக்கு சரியான ஜோடியாகப் பொருந்தினார். எல்லோராலும் புகழப்பட்டார். போற்றப்பட்டார்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி, பத்மினியையும் தாண்டி, ஜொலித்த ஜில்ஜில் ரமாமணியை மறக்கவே முடியாது. ‘ஏன்ன்ன்ன்ன்ன்...’ என்று இழுத்துப் பேசுகிற செட்டிநாட்டு பாஷை, மனோரமா ஸ்பெஷல். காரைக்குடிப்பக்கம், பெண்களை ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். பள்ளத்தூரில் இருந்த மனோரமாவை, நகரத்தார் என்று நினைத்தார்களோ என்னவோ... அல்லது மரியாதையாய் அழைக்கவேண்டும் என்றோ என்னவோ... ‘ஆச்சி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். ‘கோபிசாந்தா’, ‘மனோரமா’வானார். ‘மனோரமா’ ஆச்சி என்று அழைக்கப்பட்டார்.
அறிஞர் அண்ணாவுடன் நடித்திருக்கிறார். ‘உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியாக நடித்தார். கலைஞர் கருணாநிதியுடன் நடித்தார். எம்ஜிஆருடன் ஏகப்பட்ட படங்களில் நடித்தார். சிவாஜியுடன் எக்கச்சக்க படங்களில் நடித்தார். தேவர் பிலிம்ஸ், ஏவிஎம், பத்மினி பிக்சர்ஸ், முக்தா பிலிம்ஸ் என முக்கிய நிறுவனங்களில் நடித்தார். அதேபோல், கே.பாலாஜி தயாரித்த எல்லாப் படங்களிலும் மனோரமாவுக்கு ஓர் அற்புதமான கேரக்டர் நிச்சயம். ஏ.பீம்சிங், ஏபி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், கே.பாக்யராஜ், ஷங்கர் என அன்று தொடங்கி இன்றைய இயக்குநர்கள் வரை மிகப்பெரிய ரவுண்டு வந்தார்.
’எதிர்நீச்சல்’, ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘புதிய பறவை’, ‘அன்பே வா’, ’சூரியகாந்தி’ என பல படங்களில் இவரின் தனித்துவமான நடிப்பு எல்லோராலும் ஏற்கப்பட்டதுடன் மறக்கமுடியாததாகவும் அமைந்தது.
மனோரமா நல்ல நடிகை மட்டுமா? அற்புதப் பாடகியும் கூட. ‘வா வாத்யாரே வூட்டாண்டே...’, ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ என்று மெட்ராஸ் பாஷைப் பாடல்களும் ’தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்று பிராமண பாஷைப் பாடலும் ‘முத்துக்குளிக்க வாரீயளா’ என்று தூத்துக்குடி பாஷையிலும் பாடி அசத்தியிருக்கிறார். அவ்வளவு ஏன்... தெலுங்குப் பாடல் கூட பாடியிருக்கிறார்.
இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும்.
தன் அம்மாவுக்கு ஏற்பட்டது போலவே, மனோரமாவுக்கும் நிகழ்ந்தது அந்தச் சோகம். காதலித்து மணந்தவரை, பிரியும் சூழல் உருவானது. அதனால் துவண்டுவிடவில்லை. கலங்கிவிடவில்லை. ஒருபக்கம் அம்மாவை குழந்தையைப் போல் பார்த்துக்கொண்ட மனோரமா, இன்னொரு பக்கம்... மகனை கண்ணும்கருத்துமாக வளர்த்தார். வலி, வேதனை குறித்து நினைக்கக்கூட நேரமில்லாமல், படங்களில் நடித்துக்கொண்டே இருந்தார். நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தார். அதுதான்... மனோரமா எனும் ஆச்சியின் அசாத்திய சாதனை! இதையடுத்துதான் அவர் நடித்த படங்களின் 1,500க்கும் மேற்பட படம் எனும் எண்ணிக்கையும் கின்னஸ் சாதனையும்!
‘சம்சாரம் அது மின்சாரம்’ , ’இதுநம்ம ஆளு’, ’அனுபவி ராஜா அனுபவி’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’, ‘ஜென்டில்மேன்’, ‘கிழக்கு வாசல்’ என இன்னும் எத்தனையோ படங்கள், ஆச்சி மனோரமாவின் சோறுபத உதாரணங்கள்.
1937-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் ஆச்சி மனோரமா. 83-வது பிறந்தநாள் இன்று!
தமிழ்த் திரையுலகில், ஒரேயோரு மனோரமாதான்... ஒரேயொரு ஆச்சிதான்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago