இந்தியாவின் இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் துயர்மிகு நிலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நகர்ப்புறத்தில் வாழும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டிருந்தும் அப்பிரச்சினை உரிய கவனம் பெறவில்லை. இப்பெருந்தொற்று மற்றும் ஊரடங்கின் காலத்தில் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து அறிய சென்னையில் வசிக்கும் 67 குடும்பங்களிடம் நாங்கள் தொலைபேசி வழி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டோம்.
திட்டமிடப்படாத இரு மாத ஊரடங்கின் காரணமாக வேலையிழப்பு, வசிப்பிடம் சார்ந்த நெருக்கடிகள் மற்றும் கந்து வட்டி, தண்டல் போன்ற முறைசாராக் கடன் பிரச்சினைகளால் அவர்களின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது என்பதை இவ்வாய்வு உணர்த்துகிறது.
இந்த ஆய்வில் ஆட்டோ ஒட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், பாதுகாவலர்கள், கூலித்தொழிலாளிகள் போன்ற 15 சுயதொழில் புரிபவர்களும், 52 முறைசாரா தொழிலாளர்களும் பங்குபெற்றனர். இவர்களில் 71 சதவீதமானோர் ஊரடங்கின் காரணமாக வேலையிழந்துள்ளனர்.
எந்தவித சமூக பாதுகாப்போ வேலை பாதுகாப்போ இல்லாத இவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் தொழிலாளிகளின் சம்பளம் பிடித்தம் கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு பலனளிக்கவில்லை. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் நகரவாசிகளில் 50 சதவீதம் பேர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இதில் 33 லட்சம் குடும்பங்கள் எவ்வித எழுத்து ஒப்பந்தமும் இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முறைசாரா தொழிலாளர்களே. ஊரடங்கு காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாம் என்ற தமிழக அரசின் பெயரளவு அறிவிப்பு எவ்வித பயனும் அளிக்கவில்லை.
எங்கள் ஆய்வில் 76 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் வசிப்பதாக தெரிவித்தனர். ''நாங்கள் வாடகை செலுத்தாவிட்டால் இப்போது இல்லையென்றாலும் ஊரடங்கு முடிந்த பின்பு அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்'' என்று அவர்கள் கூறினர். மேலும் வீட்டு உரிமையாளர்கள் தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு அதீத கட்டணங்களை வசூலிக்கின்றனர். அரசின் மானியத்திற்குப் பிறகு மின்சாரக் கட்டணம் இலவசமாகவோ அல்லது 1.50 முதல் 6.60 வரையே (நுகர்விற்கேற்ப) உள்ள நிலையில், வீட்டு உரிமையாளர்கள் வாடகை இருப்போரிடம் ஏழிலிருந்து பத்து ரூபாய் வரை (இடத்திற்கேற்ப) பெறுகின்றனர். பெருகிவரும் நகர ஏற்றத்தாழ்விற்கு வீட்டு வாடகை மிக முக்கியக் காரணியாக உள்ளது. எந்த அறிவிப்புமின்றி வெளியேற்றப்படலாம் என்கிற அச்சத்தில் வாழும் நகர்ப்புற ஏழை மக்களின் வசிப்பிட பிரச்சினையை இந்த ஊரடங்கு முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே கந்து வட்டி, தண்டல் போன்ற முறைசாரா கடன் சுமைக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் ஆய்வில் 55 சதமானோர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முறைசாரா கடன் பெற்றோம் என்று தெரிவித்தனர். இதில் 19 பேருக்கு முன்னதாகவே இவ்வாறான கடன்கள் உள்ளது. மேலும், “ இந்த ஊரடங்கு நீடித்தால் எப்படி சமாளிப்பீர்கள் ?” என்று கேட்டபோது (முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது) 27 பேர் (40%) கடன் வாங்கவேண்டும் என்றும், 20 பேர் (30%) என்ன செய்வதென்று தெரியவில்லை, இதுவரையே எங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கியுள்ளோம் என்று தெரிவித்தனர். இக்காலக்கட்டத்தில் அரசிடமிருந்தோ பணியிடத்திலிருந்தோ போதுமான உதவி கிடைக்கப்பெறாத நகர்ப்புற தொழிலாளர்கள் முறைசாராக்கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர், இது வரும் ஆண்டுகளில் இவர்களின் வாழ்க்கையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.
கரோனா நிவாரண நிதிக்கென்று பல லட்சம் கோடிகள் ஒதுக்கியுள்ளோம் என்று மத்திய அரசு தம்பட்டம் அடித்தாலும் மக்களுக்குச் சென்றடையும் திட்டங்களுக்கு சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆய்வில் 88 சதவீதம் பேர் தமிழக அரசின் ஆயிரம் ரூபாயும் 60 சதவீதம் பேர் இலவச ரேஷனும் பெற்றதாக தெரிவித்தனர். 1000 ரூபாய் பெறாதோர் சரியான ஆவணங்கள் இல்லாததையும் இலவச ரேஷன் பெறாதோர் கூட்ட நெரிசலையும் காரணமாகக் கூறினர். இலவச ரேஷனும் ரூ.1000 நிவாரணமும் சென்றடைந்த அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களுக்கு இரண்டு தவணைகளில் வழங்கப்படும் எனக் கூறப் பெற்ற ரூ.2000 சென்றடையவில்லை. முறைசாரா தொழிலாளர் நலவாரியங்களில் தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படுவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2 கோடி முறைசாரா தொழிலாளர்களும் நகரப்பகுதிகளில் மட்டுமே 92 லட்சம் முறைசாரா தொழிலாளர்களும் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 17 முறைசாரா நலவாரியங்களில் 74 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர், அதிலும் 46 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கவில்லை. நலவாரிய உறுப்பினர் புதுப்பித்தலிலும் புது உறுப்பினர் சேர்க்கையிலும் தொழிற்சங்கங்கள் ஈடுபாட்டை குறைக்கும் நோக்கத்துடன் அரசு 2013 இல் நலவாரிய உறுப்பினர் பதிவு முறையில் மாற்றங்கள் செய்தது – 1) தொழிலாளர்களே நேரில் வர வேண்டும், 2) விஏஓ அல்லது தாசில்தார் கையொப்பம் பெறவேண்டும் 3) ஐந்தாண்டிற்கு ஒரு முறை புதுப்பித்தல். இந்த மாற்றங்களே நலவாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம். எங்கள் ஆய்வில் 40 சதவீதம் பேர் நலவாரிய உறுப்பினர்களாக உள்ளனர், அதிலும் 6 பேர் மட்டுமே நிவாரணத்தொகை பெற்றுள்ளனர். வெறும் 20%க்கும் குறைவான தொழிலாளர்களுக்கே நிவாரணம் சென்றடைந்துள்ள நிலையில், பல லட்சம் முறைசாரா தொழிலாளர்கள் வேலையின்றியும் நிவாரணத்தொகை பெறமுடியாமலும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, நலவாரியங்களில் உறுப்பினரல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவித்ததைப் போலவே எல்லா முறைசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயனாளிகளைக் கண்டடைவதிலும் நிவாரணத் தொகையை கொண்டுசேர்ப்பதிலும் தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
தங்கள் முதலாளிகளிடம் உழைப்பிற்கேற்ற கூலியைக் கேட்டுபெறுவதிலேயே சிரமம் உள்ள முறைசாரா தொழிலாளர்கள், ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள கடன் மற்றும் பொருளாதாரச் சுமையின் காரணமாக, ஊரடங்கு தளர்வுக்குப் பின் முன்பைவிட குறைவான கூலிக்கே வேலைக்குச் செல்லும் நிர்பந்தம் எற்படும். தொழிலாளர் நலன் பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், ஊரடங்கு காலத்தை வேலை நேரத்தை அதிகரிப்பதற்கும், தொழிலாளர் நலச்சட்டங்களை தளர்த்துவதுற்குமே பயன்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் போதுமான நிவாரணமும், ஊரடங்கிற்குப் பின்னர் முறைசாரா தொழிலாளர் நலனும் பாதுகாக்கப்படவில்லையெனில், நகர்ப்புற ஏழை மக்களின் நிலை இன்னும் மோசமாகும். நகர்ப்புற ஏழைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்தால், சரிவின் விளிம்பில் இருக்கும் இந்தியப் பொருளாதாரம் மேலும் தீவிரமான நுகர்வு நெருக்கடிக்குள்ளாகும்.
கட்டுரையாளர்கள்:
S. கிஷோர்குமார், பொருளியல் ஆய்வாளர், மாசச்சூசெட்ஸ் பல்கலைக்கழகம், USA.
A.P. அருண் கண்ணண், பேராசிரியர், லயோலா கல்லூரி.
நிவேதா சுந்தர், முதுகலை மாணவர், அசிம் பிரெம்ஜி பல்கலைக்கழகம்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago