தென்னை மரங்களில் மகசூல் குறைவால் தேங்காய் பற்றாக்குறை: மகசூலை அதிகரிக்க வேளாண் நிலையம் பரிந்துரைக்கும் ஆலோசனைகள் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தென்னை மரங்களில் மகசூல் குறைவால் இந்த கரோனா ஊரடங்கில் தேங்காய்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகசூலை அதிகரிக்க கோடைகால பராமரிப்பு முறைகளை மதுரை வேளாண் அறிவியல் நிலையம் வேளாண் வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வைகை கரை பாசனப்பகுதிகள் மட்டுமில்லாது ஆங்காங்கே கிணற்றுப்பாசனம், கால்வாய் பாசனம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவு நடக்கிறது.

மாவட்டத்தில் கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, செல்லம்பட்டி, மேலூர் மற்றும் மதுரை கிழக்கு ஆகிய வட்டாரங்களில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தமிழகத்தில் சராசாரியாக ஒரு ஆண்டிற்கு ஒரு ஏக்கரில் தென்னை மரங்களில் இருந்து 4,468 தேங்காய்கள் அறுவடையாகிறது.

ஆனால், மதுரை மாவட்டத்தில் சராசரியாக ஒரு ஆண்டிற்கு 3,412 காய்கள் மட்டுமே ஒரு ஏக்கரிலிருந்து கிடைக்கின்றன. தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் கடந்த 2 மாதமாக தென்னை மரங்கள் பராமரிப்பில் விவசாயிகள் கவனம் செலுத்தவில்லை. தேங்காய் உற்பத்தியும் குறைந்து அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்தது.

தற்போது விவசாயத்திற்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மீண்டும் அன்றாட விவசாயப்பணிகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள், இந்த கோடைக்கால தொழில்நுட்பங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலம் தேங்காய் மகசூலை அதிகரிக்கலாம் என மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் மற்றும் தொழிலநுட்ப வல்லுநர்கள் முனைவர்கள் இரா.அருண்குமார், சீ.கிருஷ்ணகுமார் மற்றும் ப.உஷாராணி ஆகியோர் கூறியதாவது:

பயிர் எண்ணிக்கை

குறைந்த இடைவெளியுள்ள தோட்டங்களில் அணில், எலி மற்றும் மரநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படும். மிக நெருக்கமாக மரங்கள் உள்ள தோட்டங்களில் மரங்களின் எண்ணிக்கையினைச் சரிசெய்தாலே அதிக மகசூல் பெறலாம். குறைந்த மகசூல் தரக்கூடிய மரங்களை அப்புறப்படுத்தியப்பின் ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

உர மேலாண்மை

நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சிறுத்துப் போய் இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இலைகளின் அளவும் பெருமளவில் குறைந்து வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். போராக்ஸ், துத்தநாக சல்பேடடு, மக்னீசியம் சல்பேட், தாமிர சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் அளவும் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் அளவும் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 மீட்டர் அரைவட்ட பாத்திகளில் ஊற்றவேண்டும்.

ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இந்தக்குறைப்பாட்டைச் சரி செய்து விடலாம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய நாற்றுகளை நடவு செய்யலாம். ஒரு மரத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையினை தொழுஉரத்துடன் 10;1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு மாதம் வரை நிழலில் வைத்து செறிவூட்டி மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

நீர் மேலாண்மை

5 முதல் 7 ஆண்டு மரங்களுக்கு வட்டப்பாத்திகளில் நீர் பாய்ச்சும் போது 135-160 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தென்னை நார்கழிவுகளால் நிரப்பப்பட்ட ஒரு அடி நீள, அகல, ஆழ குழிகள் அமைத்து, குழிக்குள் 16 மி.மீ விட்டமுடைய பி.வி.சி குழாய்களை சாய்வாக வைத்து அதில் சொட்டு நீர் விழும்படி அமைக்க வேண்டும். இக்குழிகள் மரத்திலிருந்து 1 மீட்டர் தூரத்தில் 4 பக்கமும் அமைக்கப்படவேண்டும்.

முதலாம் ஆண்டு ஒருநாள் விட்டு ஒருநாளும் இரண்டாம் ஆண்டு முதல் காய் பிடிக்கும் காலம் (5–7 வருடம்) வரை வாரம் இருமுறையும் நீர்பாய்ச்சுதல் சிறந்தது. பிப்ரவரி–மே மாதகளில் நீர் அதிகமுள்ள பகுதிகளில் 65 லிட்டரும் வறட்சியான பகுதிகளில் குறைந்தது ஒரு நாளுக்கு 22 லிட்டரும் தண்ணீர் கொடுக்கவேண்டும்.

கோடைகாலங்களில் நீர் ஆவியாவதலைத் தடுப்பதற்கு 1.8 மீட்டர் ஆரம் கொண்ட வட்ட பாத்திகளில் குவிந்த பகுதி மேல் நோக்கியவாறு 100 தேங்காய் மட்டைகளை அடுக்கி அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகள் அல்லது 10 செ.மீ உயரத்திற்கு தென்னை நார்கழிவினைப் பரப்பி மண்ணின் வளத்தினை பாதுகாக்கலாம்.

25 கிலோ தென்னை நார் கழிவினை தென்னை மரத்திலிருந்து 1.5மீட்டர் தூரத்தில் 30 செ.மீ அகலமும் 60 செ.மீ ஆழமும் கொண்ட குழிகளில் இடவேண்டும். இந்த மட்டைகளை தென்னை மரத்திலிருந்து 3 மீட்டர் தள்ளி நீண்ட குழிகளில் 150 செ.மீ (5 அடி) அகலத்தில் மட்டைகளை போட்டு மூடி வைக்கலாம். இதன் மூலம் பருவமழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்கமுடியும். தென்னை பராமரிப்பு குறித்த சந்தேகங்களுக்கு 0452 2424955 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE