இளையராஜாவின் குழுவில் பிரதான டிரம்மராகவும் பின்னர் இசை நடத்துனராகவும் பல ஆண்டுகள் இசைப் பங்களிப்பைச் செலுத்தியவர் புருஷோத்தமன். எல்லைகளைக் கடந்த அவரின் இசைத் திறமைகளை இசைக் கலைஞர்கள் சிலர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு ரசிகனை காலம் முழுவதும் பார்வையாளனாகவே வைத்திருக்காமல், பங்கேற்பாளனாகவும் ஆக்க முயல்வதுதான் ஒரு கலையின் குறிக்கோளாக இருக்க முடியும். அந்த வகையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு டிரம்ஸின் மீது ஓர் ஈர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்தது புருஷோத்தமனின் டிரம்ஸ் வாசிப்பு.
இசையை நுட்பமாக ஆராய்ந்து ரசிக்கும் இயல்புடையவர் சாகேத்ராம். ஒரு ரசிகராக டிரம்மர் புருஷ் குறித்து அவர் சொன்னது:
“இளையராஜாவின் பாடல்களை அவற்றில் ஒலிக்கும் வயலினுக்காக, புல்லாங்குழலுக்காக, தாள வாத்தியங்களுக்காக என பிரித்துப் பிரித்து ரசிக்கும் பழக்கம் உடையவன் நான். இளையராஜாவின் கண் பார்வைக்குத் தகுந்த மாதிரி பாட்டின் தாளங்களை உண்டாக்கிவிடும் வல்லமை கொண்டவர் டிரம்மர் புருஷோத்தமன் என்று திரை இசைத் துறையில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் சொல்வார்கள். புருஷும் அவருடைய அண்ணன் கிதாரிஸ்ட் சந்திரசேகர் இருவருமே அசாத்தியமான உயரம், அழகான தோற்றப் பொலிவோடு இருப்பார்கள். இவர்கள் நடிகர்களாகவே ஆகியிருக்கலாமே என்று நினைத்துக் கொள்வேன். புருவின் டிரம்ஸ் வாசிப்பே அலாதியானது. டிரம் மெஷின் வருவதற்கு முன்பாக அவர் வாசித்த மடை திறந்து, பூந்தளிராட, முத்தாடுதே முத்தாடுதே வானம் போன்ற பாடல்கள் எல்லாமே அவர் கையால் டிரம்ஸ் (Manual Playing) வாசித்த பாடல்களில் பெரிதும் கவனம் ஈர்த்தவை.
தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டவர். அதேசமயத்தில் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதற்காக அதீதமான, ஒரு டிரம்மரால் லைவ்வாக வாசிக்கமுடியாத விஷயங்களை டிரம் மெஷினில் புருஷோத்தமன் புகுத்தவே மாட்டார். அதுதான் அவருடைய சிறப்பு. `மன்றம் வந்த தென்றலுக்கு’ பாட்டில் `தாமரை மேலே’ என்னும் வரிக்கு முன்பாக ஒரு `சினேர்’ சத்தம் வரும். அந்தப் பாட்டில் அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் வரும். மீண்டும் வராதா என்று ஏக்கமாக இருக்கும். `நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாட்டின் சரணங்களுக்கு இடையிலான இசையில், 70, 80களில் வெளிவந்த இளையராஜா இசையமைத்த திரைப் பாடல்களில் ஒலிக்கும் டிரம்ஸின் ஒலியில் புரு என்றென்றைக்கும் இருப்பார்!”
நாகி (இளையராஜா குழுவில் தாள வாத்தியக் கலைஞர்)
எங்களின் குடும்ப நண்பர் புரு மாமா. நான் டிரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொண்டது சிவமணியின் தந்தை எஸ்.எம்.ஆனந்தனிடம். அப்போதே புரு மாமாவும் ரிக்கார்டிங் வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருடைய வாசிப்புப் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஹையட்ஸை அவர் கையாளும் விதமே அசாத்தியமாக இருக்கும். புரு மாமாவை என்னுடைய மானசீக குருவாகவே ஏற்றுக் கொண்டேன். ஹையட்சை செட் பண்ணுவதிலேயே இருக்கும் நுணுக்கங்களை எனக்கு அவர் சொல்லித் தந்திருக்கிறார். அதன் பிறகு அவர் புரோக்ராமிங் செய்யும் முறையே மிகவும் சிறப்பாக இருக்கும். இரண்டு கைகள் இரண்டு கால்களைப் பயன்படுத்தி வாசிப்பதுதான் டிரம்ஸ்.
பத்து கைகள், பத்து கால்களைப் பயன்படுத்தி வாசித்தால் எழும் சத்தங்களை புரோக்ராமில் அவர் புகுத்தமாட்டார். அதுதான் அவருடைய தனிச் சிறப்பு. ஒவ்வொரு வாத்தியத்திலிருந்து வெளிவரும் சத்தமும் ஒன்றோடு ஒன்று போட்டி போடாமல் ஒருங்கிணைந்து இருக்கும். அவருடைய புரோக்ராமிங் பாணியை என்னுடைய மாணவர்களுக்கும் விரிவாக எடுத்துச் சொல்லிவருகிறேன். புரு மாமா மியூசிக் கண்டக்ட் செய்து அண்மையில் நான் வாசித்தது பெரிய பாக்கியம். புரோக்ராமிங்கில் என்னைப் பொறுத்தவரையில் புரு மாமா ஒரு தாளத் தளபதி. இன்றைக்கு நிறைய டிரம்மர்களின் வாழ்வாதாரத்துக்கே புரு மாமா அளித்திருக்கும் இசைக் கொடைதான் முக்கியமான காரணம்.
சுரேஷ் (பயனியர் டிரம்ஸ் அகாடமி)
புரு அண்ணாவை என்னுடைய கல்லூரிக் காலங்களிலேயே சந்தித்து, அவருடைய ஆசியுடன் என்னுடைய டிரம்ஸ் பள்ளித் தொடக்க விழாவை மியூசிக் அகாடமியில் நடத்தினேன். இதில் சிவமணி அண்ணனுக்கு இண்டர்நேஷனல் டிரம்மிங் ஸ்டார் பட்டம் வழங்கி புரு அண்ணன் சிறப்பித்தார். எனக்கு டிரம்மிங் புரோக்ராமிங்கில் எழும் சந்தேகங்களை ரிக்கார்டிங் நேரத்திலும் முகம் சுளிக்காமல் நேரம் ஒதுக்கிக் கற்றுத் தருவார். அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் கலைஞர்கள் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்கவே மாட்டார்கள். ஆனால் அவ்வளவு அன்பாக எல்லோருடனும் பழகுவார். மனிதநேயம் மிக்கவர். அவர் புரோக்ராமிங்கில் கொடுக்கும் சத்தங்கள் ஒரு டிரம்மரால் ஏற்படுத்த முடிந்த அளவுக்கே இருக்கும். ரிதம் லூப்களை பயன்படுத்த மாட்டார். மேகம் கொட்டட்டும், சந்தோஷம் இது சந்தோஷம், மடை திறந்து, இது ஒரு நிலாக் காலம் போன்ற பாடல்களில் ஒரு லவுட்- இன்ஸ்ட்ரூமென்ட்டான டிரம்ஸை மெல்லிசைக்கான ஸ்வீட்டான இன்ஸ்ட்ரூமென்டாக மாற்றியவர் புரு அண்ணாவை தவிர யாருமில்லை.
சிவா (இளையராஜா குழுவில் ரிதம் பாக்ஸ் கலைஞர்)
கிக் ஃபுளோ, ஹையட் ஒர்க் என்று புரு அண்ணனின் டிரம்ஸ் வாசிக்கும் நுணுக்கத்தைப் பிரித்துப் பிரித்து என்னுடைய ரசனையை வளர்த்துக் கொண்டேன். `மீண்டும் மீண்டும் வா’ பாட்டு 7/8 தாளக் கட்டில் அமைத்திருப்பார். மிருதங்கத்தோடு ஒரு சிங்குபேஷன் அருமையாக இருக்கும். இப்படி ஒவ்வொரு பாடலிலும் ஒரு நுணுக்கம் இருக்கும். ஒரு பாடலை எப்படியெல்லாம் அழகுபடுத்துவது என்பது புரு அண்ணனின் வாசிப்பைக் கவனிக்கும் போதுதான் விளங்கும். `ராஜா ராஜாதி ராஜா’ பாடலுக்கு ரிதம் புரோக்ராமிங்தான். ஆனால் அவ்வளவு இனிமையாக இருக்கும். மெல்லிசைக் குழுக்களில் வாசிப்பவர்களும் பிரித்து வாசிக்க முடியும். இதுதான் அந்த புரோக்ராமின் சிறப்பு. எல்லாமே மேற்கத்திய இசை பாடங்களில் இருக்கும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டதுதான். ‘காதல் ஓவியம்’ பாட்டில் வெளிப்படும் புரு அண்ணனின் ஹையட் பாணி வாசிப்புக்கு நிகர் அவர்தான்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago