லாக்டவுன் கதைகள்: ஓர் அன்பின் இழப்பு

By முகமது ஹுசைன்

சிறு வயது முதல் எனக்கு நாய் என்றால் பயம். இரண்டு முறை நாய்க்கடியிலிருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறேன், இரண்டு முறையும் பூட்டிய கதவைத் தாண்டி வந்துதான் அது என்னைத் துரத்தியது. நாயை விடப் பெரிதாக வளர்ந்த பிறகும் என்னை விட்டு விலகாமலிருந்த அந்தப் பயத்தை தன் அன்பால் போக்கிய நாய் இன்று உயிருடன் இல்லை என்கிறார்கள். அதுவும் இறந்து ஐந்து நாள் ஆகிவிட்டதாம்.

அதன் பெயர் ஒஸ்தி. சாதாரண (நாயில் என்ன சாதாரணம்?) தெரு நாய்தான். கடந்த ஆறு மாதங்களாகத்தான் எனக்கு அதனுடன் பரிச்சயம். வீடு மாறி வந்த முதல் நாள்தான் அந்த நாயை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பினுள் பார்த்தேன். என் கண்ணில் பயத்தைப் பார்த்ததாலோ என்னவோ அது என் அருகில் வராமல் வாலை ஆட்டிய படி சற்று தள்ளியே நின்றது. ஆரம்ப சில நாட்கள் அப்படிதான் தள்ளியே கழிந்தது.

வீட்டுக்கு வந்த நண்பனைப் பார்த்துக் குரைத்தபோது சற்று அதட்டிப் பார்த்தேன். அது பயந்தபடி ஓடியது. அதன் பின் அவ்வப்போது அதட்டுவேன். அதுவும் பயந்தபடி வாலை ஆட்டி ஓடி மறையும். ஒரு முறை ஏதோ நினைத்தவனாக அதற்கு பிஸ்கட் கொடுத்தேன். ரொம்ப ஜாக்கிரதையாக அதன் பல் கையில் படாமல் பிஸ்கட்டைக் கவ்வியபடி ஓடிச் சென்று ஓரமாக வைத்துச் சாப்பிட்டது. அதன் ஜாக்கிரதை உணர்வை நான் உணர்ந்ததால் அதன் பின் அதற்கு பிஸ்கட் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது.

ஒருமுறை நான் விபத்துக்கு உள்ளாகி, வலியுடன் திரும்பி, மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதவிதமாக காயத்தை மறைத்துக்கொண்டு, வீட்டுக்குப் படி ஏறிச் சென்றேன். ரத்த வாடையை உணர்ந்தோ என் கண்களில் தெரிந்த வலியை உணர்ந்தோ அது என்னை அமைதியாகப் பின் தொடர்ந்து வந்தது. அன்று இரவு முழுவதும் என்னுடைய வீட்டு வாசலின் முன் அது படுத்திருந்தது. காலையில் கதவு திறக்கும்போதுதான் எனக்குத் தெரியும்.

என்னுடைய மனைவி காலையில் வாக்கிங் சென்றாலும் கடைக்குச் சென்றாலும் கூடவே சென்று தெருவில் இருக்கும் மற்ற நாய்களிடம் கடி வாங்கி பாவமாகத் திரும்பி வரும். என்னுடைய குழந்தை பள்ளிக்குச் செல்லும்போதும் இதே நிலைதான். ஒரு மாதத்துக்கு முன்பு சில நாட்கள் அது உடம்புக்கு முடியாமல், கொடுக்கும் எதையும் சாப்பிடாமல் மொட்டை மாடியில், சுருண்டு படுத்திருந்தது. பின்பு தானாகவே எழுந்து பழையபடி நடமாட ஆரம்பித்தது. அதன் பிறகு மீண்டும், நான் தெருவுக்குள் நுழையும்போது எல்லாம் வாலை ஆட்டியபடியே பாய்ந்தோடி வந்து வரவேற்று, வீடு வரை உடன் வரத் தொடங்கியது.

கடைசியாக நான் அதைப் பார்த்து ஆறு, ஏழு நாட்கள் இருக்கும். எப்படி இறந்தது என்றும் எனக்குத் தெரியாது. நிம்மதியாக வலியின்றி இறந்திருக்கும் என்பதை நான் நம்ப விரும்புகிறேன். நாயினுடைய இழப்பு என்பது அதன் அன்பை உணர்ந்தவர்களுக்கும் அந்த அன்பின் உன்னதம் புரிந்தவர்களுக்கும் எப்போதும் ஈடு செய்யமுடியாத இழப்புதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்