கரோனா அச்சத்தால் சாதாரண க்ளினிக்குகளைக் கூட திறந்துவைக்க மருத்துவர்களே அச்சப்படுகிறார்கள். அப்படியே மருத்துவமனைகள் திறந்திருந்தாலும் சிகிச்சையளிக்க உரிய மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக, கரோனா தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் பல் மருத்துவமனைகளும் அதன் மருத்துவர்களும் இந்த விவகாரத்தில் ரொம்பவே மிரட்சியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பல் வேர் சிகிச்சை மருத்துவர்கள் கரோனா தந்த தாக்கத்தால் கடும் மன உளைச்சலில் இருப்பதாக மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
சென்னையில் உள்ள ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்களான மருத்துவர்கள் கருமாறன், ரூபன், அனில்குமார் மற்றும் அம்மாப்பேட்டை ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரும் மனநல மருத்துவருமான அனுஷா ஆகியோர் இணைந்து இணைய வழியாக இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
ஆய்வு நடத்தியதற்கான நோக்கம் குறித்தும் ஆய்வு முடிவுகள் தந்த தாக்கம் குறித்தும் 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் விரிவாகப் பேசினார் மருத்துவர் கருமாறன்.
“இந்தியா முழுவதும் சுமார் 1.75 லட்சம் பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 15 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். பல் வேர் சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே தமிழகத்தில் சுமார் 350 பேர் இருக்கலாம். கரோனா தாக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட அத்தனை பல் மருத்துவமனைகளும் மூடித்தான் கிடக்கின்றன. காரணம், மற்ற மருத்துவர்களைவிட பல் மருத்துவர்களுக்கு கரோனா தொற்றுப் பரவலில் இருக்கும் கூடுதல் ரிஸ்க்தான்.
குறிப்பாக, பற்களுக்கு வேர் சிகிச்சை செய்யும் பல் மருத்துவர்களுக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பல் வேர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நோயாளியின் உமிழ்நீர் மற்றும் வாய் தசைகளை சிகிச்சையின்போது நேரடியாகத் தொடுவதாலும், அவர்களின் எச்சில் தெறிப்பதாலும் அவர்களுக்கு தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்தக் காரணத்தால் பல் வேர் சிகிச்சை மருத்துவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தனியாக க்ளினிக்குகளில் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்ப்பதையே நிறுத்திவிட்டார்கள்.
மாரடைப்பின் போது ஏற்படும் வலி எத்தகையதோ அதைவிட இரண்டரை மடங்கு கூடுதலான வேதனையைத் தரக்கூடியது பல் வேதனை. கரோனாவுக்குப் பயந்து பல் மருத்துவர்கள் நோயாளிகளைச் சந்திக்காமல் இருந்தாலும், சில நேரங்களில் உயிர் போகும் வலியோடு வருபவர்களைத் திருப்பி அனுப்ப முடியாது. அதுபோன்ற நேரங்களில் எங்களது சுய பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சிகிச்சையளிக்க வேண்டியிருக்கிறது. அத்துடன், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் எங்களைப் போன்றவர்கள் பணிகளைப் புறக்கணிக்கவும் முடியாது.
இப்படி தவிர்க்கமுடியாத தருணங்களில் பணிச் சுமையை ஏற்றுக் கொள்ளும் பல் மருத்துவர்களுக்கு, சிகிச்சையளிக்கும் நோயாளிகள் மூலம் தங்களுக்கும் கரோனா தொற்று பரவிவிடுமோ... அதன் மூலம் தன்னைச் சார்ந்த தனது குடும்பத்தாருக்கும் அது தொற்றிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.
கடந்த மாதம் சிகிச்சைக்காக என்னைச் சந்தித்த தொழிலதிபர் ஒருவர், சிகிச்சை முடிந்து வீட்டுக்குப் போன பிறகு எனக்கு போன் செய்து, ‘டாக்டர் என்னை மன்னித்துவிடுங்கள். நான் டெல்லிக்குப் போயிருந்தேன். அந்த விவரத்தை உங்களுக்குச் சொல்லாமல் விட்டுவிட்டேன். இதுவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன். நீங்களும் எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று சொன்னார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறு வழியில்லாமல், நானும் 15 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். இந்தியா முழுவதும் பெருவாரியான பல் மருத்துவர்கள் இதுபோன்ற அச்சத்தால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கிறார்கள்.
இது தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள பல் வேர் சிகிச்சை நிபுணர்களிடம் இணையம் வழியாக ஒரு ஆய்வை நடத்தினோம். ஏப்ரல் 8-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 1000 பல் வேர் சிகிச்சை மருத்துவர்களுக்கு ஆன்லைனில் 16 விதமான கேள்விகளை அனுப்பினோம்.
‘கோவிட் 19- சீனாவில் தொடங்கிய புதிதில் அங்குள்ள பல் மருத்துவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி பல் நோயாளிகளுக்கு வழக்கம்போல சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்கள். ‘கோவிட் 19’ தாக்கம் அங்கே அதிகரித்த பிறகு, அந்த பல் மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக அங்குள்ள மருத்துவர் குழு ஒன்று ஆன்லைன் வழியாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளைத்தான் எங்களுடைய ஆய்வுக்கும் பயன்படுத்தினோம்.
சீனாவில் பொதுவான பல் மருத்துவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள், கரோனா தொற்று ஆபத்து அதிகம் உள்ள பல் வேர் சிகிச்சை நிபுணர்களிடம் மட்டுமே ஆய்வு நடத்தினோம். நாங்கள் அனுப்பியிருந்த கேள்விகளுக்கு 586 மட்டும் பதில்களை அனுப்பினார்கள். தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பிஹார், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து அதிகமான மருத்துவர்கள் இந்த ஆய்வில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர். மற்ற மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையிலான மருத்துவர்களே பதில் அனுப்பி இருந்தார்கள். அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத் தீவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருவர்கூட இந்த ஆய்வில் கலந்துகொள்ளவில்லை.
எங்களுக்கு பதில் அனுப்பிய மருத்துவர்களில் சிலர் குழப்பமான பதில்களை அனுப்பியிருந்தார்கள். சிலர் உண்மையை மறைத்திருந்தார்கள். இதையெல்லாம் பகுப்பாய்வு செய்வதற்காகத்தான் எங்களது குழுவில் மனநல மருத்துவர் அனுஷாவையும் சேர்த்துக் கொண்டோம்.
நாங்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின்படி, ஆய்வில் கலந்துகொண்டவர்களில் ஐந்தில் நான்கு பேர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் 25 - 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட 3- 5 மடங்கு மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பல் வேர் சிகிச்சை மருத்துவர்கள் சாதாரண மனிதர்களை விட பல மடங்கு கரோனா தொற்றுப் பரவல் ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது” என்று சொன்ன கருமாறன், “பல் வேர் சிகிச்சை மருத்துவர்கள் என்னதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், சுய பாதுகாப்புக் கவசம், முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தினாலும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவினாலும் ‘கோவிட்-19’ தொற்று உள்ள ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவரது உமிழ்நீர், தூசுப் படலம் தெறித்து வேர் சிகிச்சை நிபுணர், அவரது உதவியாளர் மட்டுமல்லாது அவரிடம் சிகிச்சைக்கு வரும் மற்ற நோயாளிகளுக்கும் எளிதில் நோய்த் தொற்று ஏற்படலாம். இதன் மூலம் சமுதாயத் தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது.
ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளித்த பின்பும் சிகிச்சை அறையைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கும், ஒவ்வொரு முறையும் கவச உடையை மாற்றுவதற்கும் அதிக நேரமும் பணமும் செலவாகும். 300 சதுரடிக்கும் குறைவான அளவுகொண்ட ஒற்றை அறையில் க்ளினிக் நடத்துபவர்களுக்கு இதெல்லாம் எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்று தெரியவில்லை. அதேநேரம் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் நோய்த் தொற்று பரவிவிடக்கூடும். இந்த அச்சத்தில்தான், பல் வேர் சிகிச்சை நிபுணர்கள் பலரும் மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனக் குழப்பத்தில் இருப்பதாக எங்களது ஆய்வு உறுதி செய்கிறது.
பல் மருத்துவமனைகள் இயங்கவும் பல் மருத்துவர்கள் சேவையளிக்கவும் அரசு தடைவிதித்திருந்தாலும், அவசர கேஸ்களை பல் மருத்துவர்களால் புறந்தள்ளி வைக்கமுடியாது. அதனால் கூடுதல் ரிஸ்க்குடன் சில இடங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள். கரோனா தொற்று அச்சம் ஒருபுறம் இருக்க, க்ளினிக் மற்றும் மருத்துவமனைகள் மாதக் கணக்கில் மூடிக் கிடப்பதால் பெரும்பகுதியான பல் மருத்துவர்கள் வருமானத்தை இழந்து அதை வெளியில் சொல்லமுடியாத துயரத்தில் இருக்கிறார்கள். மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்ற நிச்சயமற்ற நிலையும் பல் மருத்துவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசும், இந்திய மருத்துவக் கழகமும், இந்தியப் பல் மருத்துவக் கழகமும், பல் வேர் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அனைத்து பல் மருத்துவர்களும் தொற்றுப் பரவல் அச்சமின்றி பணி செய்வதற்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி பொது மக்களைக் காக்கவும், நோய்த் தொற்று இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் மன அழுத்தத்தில் கிடக்கும் பல் மருத்துவர்கள் சகஜநிலைக்குத் திரும்பவும் வழிசெய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago