உள்ளுக்குள்ளிருப்பதை அப்படியே வெளியே பேசுவது அத்தனை சுலபமான விஷயமல்ல. ஆனால் அப்படிப் பேசுவதுதான் மிகச் சுலபம். நடிகர் சிவசந்திரன் உண்மையை மட்டுமே பேசுகிறார். ‘இந்தக் கேள்வி வேண்டாமே, அதற்கு உண்மையைச் சொன்னால் நல்லாருக்காதே’என்று எதையும் புறக்கணிக்காமல் எல்லாவற்றுக்கும் பதிலளித்தார் சிவசந்திரன்.
‘இன்னொரு விஷயம். இதுதான் நான் தருகிற முதல் வீடியோ பேட்டி’ என்றும் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் நீண்டதான பேட்டியளித்தார்.
சிவசந்திரன் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :
» கே.பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ அழைப்பு; மொட்டைத்தலையுடன் வந்த மோகன்
» ‘மரோ சரித்ரா’வை இன்னமும் காதலிக்கிறார்கள் ; - 42 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை
‘’நடிகை லட்சுமி. ‘என் உயிர் கண்ணம்மா’ உள்ளிட்ட பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். ’என் உயிர் கண்ணம்மா’வுக்கு முன்பே மூன்று நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பின்னர், என் இயக்கத்திலும் தொடர்ந்து நடித்திருக்கிறார்.
நாங்க ரெண்டுபேருமே மெச்சூர்டு ஆட்கள்தான். சைல்டீஷான லவ்வெல்லாம் இல்லை. இதுவரைக்கும் நிறையபேர் கேள்வி கேட்டிருக்காங்க... ‘ஏன் சார் கல்யாணம் பண்ணினீங்க?’ன்னெல்லாம் கேட்டிருக்காங்க. ‘இதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லமுடியாதுய்யா. நீங்க கேக்கறதுல எந்த அர்த்தமும் இல்லை. பார்த்தோம்... விரும்பினோம்... கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுல லவ்வு, கிவ்வு, மாலை கொடுக்கறது ரோஜா கொடுக்கறது அதெல்லாம் இல்ல.
எல்லாத்தையும் தாண்டின வயது. எனக்குப் பிடிச்சிருந்துச்சு. அவங்களுக்கும் பிடிச்சிருந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுல எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. நான் எதிர்பார்த்து கல்யாணம் பண்ணிருந்தா, எங்க வாழ்க்கை ஒருவருஷத்துக்குள்ளே முடிஞ்சிருக்கும். அதுவரைக்குக் கூட ஓடியிருக்காது.
லட்சுமியும் எங்கிட்ட எதையும் எதிர்பார்க்கலை. எங்கிட்ட கோடிக்கணக்குல பணம் இருக்கோன்னோ பெரிய நடிகர்னோ ஏகப்பட்ட சொத்து இருக்கோன்னோ பார்த்தெல்லாம் என்னை அவங்க கல்யாணம் பண்ணிக்கலை. நான் சராசரியாக சம்பாதிக்கக் கூடியவனாத்தான் இருந்தேன்.
வாழ்க்கைல நமக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும். அதை நாம ஒண்ணுமே சொல்லமுடியாது. அதைப் புரிஞ்சு உணரணும். நாம உலகத்துல ஏன் பொறந்திருக்கோம், எதுக்காகப் பொறந்திருக்கோம்? இதெல்லாமே சில கடமைகளைச் செய்றதுக்காக!
இன்னொரு முக்கியமான விஷயம்... நம்ம தொழில் வெற்றிதான் நம்ம வாழ்க்கை இல்லை. இதை அண்டர்லைன் பண்ணிக்கோங்க. ’ஐயோ... நீங்க பெரிய ஸ்டாராகலையே...’ ‘ஐயோ... நீங்க பெரிய கோடீஸ்வரர் ஆகலையே’ங்கறதுல இல்ல வாழ்க்கை. நீ எதுக்காக வந்திருக்கியோ அதைச் செய். எப்படி இருக்கியோ... ஆனா சந்தோஷமா இரு. அமைதி, சந்தோஷம். இதுதான் வாழ்க்கைல முக்கியம்.
சூப்பர்ஸ்டார் ரஜினியாகணும்னு நினைச்சா, அது முடியாது. அவர், முதல் 35 வருஷம் கஷ்டப்பட்டிருந்தாரே... அதையெல்லாம் பார்த்திருந்தா, ஓடிருவோம். அந்தக் கஷ்டத்துக்கு பிரதி உபகாரம்... நீ இப்படி வரணும்னு. அப்படி வந்து நிக்கிறார் இப்போ!
இதேபோல எனக்கு எழுதப்பட்டிருக்கு... லட்சுமியைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு! நான் லட்சுமிகிட்ட கேட்டேன்... என்னை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டேன். ஒரேவார்த்தைல சொன்னாங்க... ‘ஐ லைக் யூ’ன்னு! இதேதான் என்னோட பதிலுமா இருந்துச்சு.
நாங்க கணவன் மனைவிதான். அதேசமயம் நண்பர்கள். இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குக் கல்யாணமாகி 32 வருஷமாச்சு. இந்த 32 வருஷ காலத்துல, நாங்க இன்னமும் ஃப்ரெஷ்ஷா இருக்கோம். ஃப்ரெண்டா இருக்கோம். அதேபோலவே பேசிக்கிட்டிருக்கோம். சிரிச்சிக்கிறோம்.
காலைல காபி சாப்பிடும்போது, நான் படிச்சதை அவங்ககிட்டயும் அவங்க படிச்சதை எங்கிட்டயுமா டிஸ்கஸ் பண்ணிக்குவோம். எந்த விஷயமா இருந்தாலும், எதைப் படிச்சோமோ... அதைப் பத்திப் பேசிக்குவோம். தத்துவம், மதம், வாழ்க்கை, அரசியல், லாஜிக்னு எல்லாமே பேசிக்குவோம்.
நான் லெக்ச்சர் கொடுக்கறதுக்காகவோ, இந்தப் பேட்டில ஸ்டைலா சொல்றதுக்காகவோ சொல்லல... எல்லாரும் படிங்க. நிறைய்யப் படிங்க. சும்மா உக்கார்ந்துக்கிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. ஸ்கூல்ல, காலேஜ்ல படிக்கும்போது இருக்கறதை எழுதிடுவோம். மனப்பாடம் பண்ணி, ஒப்பேத்தி எழுதிடுவோம். சரித்திரத்தை ‘போர் சப்ஜெக்ட்’னு சொல்லுவாங்க. சரித்திரம்தான் பேஸ். அடித்தளம். அஸ்திவாரம். அதைப் படிங்க.
இப்போ... தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தைத் தெரியாம எப்படி அரசியல் பேசமுடியும். பெரிய பெரிய விஷயங்களெல்லாம் நடந்திருக்கு. பெரியாரைத் தெரிஞ்சுக்குவோம். மதங்களைத் தெரிஞ்சுக்குவோம். அதுல இருக்கற நல்லவிஷயங்களை எடுத்துக்குவோம்.
வேதங்களை கேலி பண்ணவேணாம். அது சமஸ்கிருதத்துல இருக்குன்னு புறக்கணிக்க வேணாம். அதைப் புரிஞ்சுக்குவோம். இதுல இருக்கிற வைப்ரேஷன் என்னனு தெரிஞ்சுக்குவோம். இந்த உலகமே வைப்ரேஷன்லதான் இயங்குது. வைப்ரேஷன்னா என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.
நான் சினிமாக்காரனா இருக்கலாம். நீங்க வியாபாரியா இருக்கலாம். யாரா இருந்தா என்ன... எல்லாத்தையும் கத்துக்கறதுல தப்பே இல்ல.
சினிமா நம்ம தொழில். அதுல ஏற்றம் இருக்கும். இறக்கம் இருக்கும். இறங்கிப் போச்சுன்னா அதுக்குக் கவலைப்படக்கூடாது. எனக்கு லட்சுமி மாதிரி ஒரு நல்ல மனைவி... சினிமால இருக்கறதால எங்களை நாங்க நல்லாவேப் புரிஞ்சுக்கமுடியுது. ஏற்றத்தாழ்வுள்ள ஒற்றுமை.
இதே வேற ஒருத்தங்களை நான் கல்யாணம் பண்ணிட்டிருந்தேன்னா... ‘என்ன இந்த ஆளு... இந்த ஆளை நம்பி வந்தோம். கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு உதவாக்கரையை கல்யாணம் பண்ணிக்கிட்டோமே... காசு வருமானம் இல்லையே’னு நினைச்சிட்டாங்கன்னா? குழப்பம் வரும். அவளோட எதிர்பார்ப்பு என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் என்ன கேக்கறான்? அவர் நல்லவரா கெட்டவரான்னா கேக்கறான்? மாப்பிள்ளை என்ன வேலை செய்றாரு, எவ்ளோ சம்பாதிக்கிறாரு? சொந்தமா வண்டி வைச்சிருக்காரா?வீடு வைச்சிருக்காரா? இதானே கேக்கறான்?
நம்ம பொண்ணை செக்யூரிட்டியா கொண்டு ஒரு இடத்துல சேக்கணுங்கற எண்ணம்தான் இது. ஆனா, சினிமால ஏது செக்யூரிட்டி?
நடிகர் அசோகன் சாரை என் வாழ்நாள்ல மறக்கமாட்டேன். மைசூர்ல பாத்தேன். ‘பல்லாண்டு வாழ்க ஷூட்டிங். ‘தம்பி... இங்கே வாங்க’ன்னு கூப்பிட்டார். ‘நீங்க படிச்ச புள்ளதானே. படிச்சவருன்னு கேள்விப்பட்டேன். இந்தத் தொழிலுக்கு ஏன்யா வந்தே?’ன்னு கேட்டார். முதல்ல என்னை பயமுறுத்தினதே அந்த வார்த்தைதான்.
அசோகன் சார் பி.ஏ., வெண்ணிற ஆடை மூர்த்தி சாரும் டிகிரி வாங்கினவர். ஒய்.ஜி.மகேந்திரன் கோல்டு மெடலிஸ்ட். சினிமாவே இல்லேன்னாலும் டிராமா போட்டுக்கிட்டிருக்காரு. அவரையெல்லாம் பாராட்டணும்.
மனைவி என்பதையும் தாண்டி, நான் லட்சுமிக்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கறேன்னா.. அவங்க மாபெரும் நடிகை. ஆத்மார்த்தமா நடிக்கக் கூடிய நடிகை. 800 படங்கள்ல நடிச்சு, நாலு மொழிகள்ல ஆக்ட் பண்ணி, அவங்க வாங்காத விருதுகளே கிடையாது. ரெண்டு தடவை, மூணு தடவைன்னெல்லாம் விருதுகள் வாங்கிருக்காங்க.
இன்னிக்கிக் காலைல கூட அவங்கதான் சமைப்பாங்க. காபி போட்டாங்க. டிபன் பண்ணினாங்க. சமைச்சாங்க. எல்லா வேலைகளையும் அவங்கதான் செய்றாங்க. எங்களோட தொழிலையும் வாழ்க்கையையும் மிக்ஸ் பண்ணிக்கறதே இல்லை’’ என்று மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகத் தெரிவித்தார் சிவசந்திரன்.
- நினைவுகள் தொடரும்
- சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago