’’ எல்லா ஊர்லயும் ‘சம்சாரம் அது மின்சாரம்’ சூப்பரா ஓடுது; ஆனா குமாரபாளையத்துல மட்டும் சுமார்தான்! க்ளைமாக்ஸையே மாத்திட்டாங்க!’’ - விசு பகிர்ந்துகொண்ட நினைவுகள்

By வி. ராம்ஜி

’சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்கான பட்ஜெட் பதிமூணரை லட்ச ரூபாய். ஃபர்ஸ்ட் காப்பி. அதாவது ஃபர்ஸ்ட் காப்பின்னா, எல்லாத்தையும் சேர்த்துதான்! சரவணன் சார் அந்த வீடு கொடுப்பார்; நெகடீவ் தருவார். இந்த ரெண்டையும் வைச்சுப் படம் பண்ணனும். ஒருவேளை, அவுட்டோர், வீடு, நெகட்டீவ் செலவையும் சேர்த்தா, பதினாறு, பதினேழு லட்ச ரூபாய் ஆகியிருக்கும்.


’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை 41 நாள்ல எடுத்துமுடிச்சோம். அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகளோட கோ ஆபரேஷன்தான் காரணம்'' என்று விவரித்தார் விசு.
’இந்து தமிழ் திசை’யின் 'RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, கடந்த வருடம் நீண்டதொரு பேட்டியளித்தார் இயக்குநரும் நடிகருமான விசு.


‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்பட அனுபவங்களை அப்போது பகிர்ந்துகொண்டார்.


அந்தப் பேட்டியில் விசு தெரிவித்ததாவது :


‘’படத்தின் க்ளைமாக்ஸில், கோயிலுக்கு வந்து குழந்தையைப் போடுவதும் அப்போது பேசுவதும் நடிகை லட்சுமிதான் என முடிவு செய்திருந்தேன். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். மறுநாள் கோவூர் கோயிலில் படப்பிடிப்பு. திடீரென ஒரு யோசனை வந்தது. கோயிலுக்கு வந்து பேசுபவரும் லட்சுமி, தனித்தனியாகவே இருப்போம் என்று க்ளைமாக்ஸில் சொல்வதும் லட்சுமி என்றிருந்தால் நன்றாக இருக்காதே என்று யோசித்தேன்.


தடக்கென்று அதை மனோரமா ஆச்சி பேசினால் சரியாக இருக்கும் என மாற்றினேன். அதற்கு லட்சுமியும் ஒத்துக்கொண்டார். மனோரமா ஆச்சி, மறுநாள் நேரம் ஒதுக்கி, ஒரேமணிநேரத்தில் நடித்துக்கொடுத்தார். அப்போது நடிகர் நடிகைகளிடம் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. விட்டுக்கொடுக்கும் மனநிலை இருந்தது. எல்லோரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டார்கள்.


ஆனால் இதிலொரு விஷயம்...


படத்தின் கடைசியில் ‘நீங்க செளக்கியமா, நாங்க செளக்கியம்’ என்று பிரிந்து போவது போலவும் வாரம் ஒருமுறை எல்லோரும் சந்தித்துக்கொள்ளவும் என இருந்ததை ஏவி.எம். சரவணனே ஏற்றுக்கொள்ளவில்லை. ‘எல்லாரையும் சேர்த்து வைச்சிடுற மாதிரி க்ளைமாக்ஸ் வைங்களேன்’ என்கிறார் அவர். ‘இதுதான் சார் க்ளைமாக்ஸ்’ என்று பிடிவாதமாக இருந்தேன் நான்.


அப்புறம், ஏவி.எம்.சரவணன் சார் சார்பா, அம்பது பேர் படம் பாத்தாங்க. நாங்க டெக்னீஷியன்ஸ்லாம் இருபது பேர் பாத்தோம். எங்க சைடுலேருந்தும் அவங்க சைடுலேருந்துமா, போயிட்டு போயிட்டு வந்தாங்க. ’குடும்பத்தைச் சேக்கணும்’னு ஏவி.எம் சரவணன் சார் சொன்னார். ‘நான் முடியாது’ன்னு சொன்னேன். அவரும் பிடிவாதமா இருந்தார். நானும் பிடிவாதமா இருந்தேன்.


’அப்படீன்னா ஒரு நீதிபதியை நியமிச்சுக்கலாம்’னு சரவணன் சார் சொன்னார். ’யாரு’ன்னு கேட்டேன். ‘எங்க அம்மா’ன்னார். அவங்க அம்மா படம் பாத்துட்டு வெளியே வந்து சொன்ன முதல் வார்த்தை... ’சரவணா... அவருக்கு குடும்பங்களைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கு. மாத்தாதே’ன்னாங்க! ஆக, நான் சொன்ன க்ளைமாக்ஸ்தான் ஓகே ஆச்சு. அதுதான் படத்துலயும் அப்படியே வந்துச்சு.


‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் ரிலீஸ் ஆச்சு.. அப்போ அந்த சமயத்துல எனக்கு சொல்லமுடியாத அளவுக்கு உடம்புக்கு முடியலை. யாரையும் வரவேணாம்னு சொல்லிட்டேன். நானும் என் மனைவியும் ஆஸ்பத்திரிக்குப்போனோம். இந்த டெஸ்ட், அந்த டெஸ்ட்னு எடுக்கச் சொன்னாங்க. எல்லா டெஸ்ட்டையும் எடுத்துட்டு, ஆஸ்பத்திரில டாக்டரைப் பாக்க உக்கார்ந்திருந்தேன். அப்ப என் பக்கத்துல ஒருத்தர் உக்கார்ந்தார்.


‘உங்க படம் பாத்தேன் சார்’னு சொன்னாரு. ‘என்ன படம்’னு கேட்டேன். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம்தான் சார்’னு சொன்னார். ‘படம் எப்படி இருந்துச்சு?’ன்னு கேட்டேன். ‘சுமாரா இருந்துச்சு சார்’னு சொன்னார்.


படம் வெளியாகி, மூணு நாள் ‘நல்லாருக்கு நல்லாருக்கு நல்லாருக்கு’ன்னுதான் ரிப்போர்ட் வந்துச்சு எனக்கு. ஆனா அவர் சொன்னது வேறவிதமா இருக்கு.’ சுமாரா இருக்கு’ன்னு சொன்னாரு. எனக்கு உடம்பு சரியில்லேங்கறதையெல்லாம் மறந்துட்டேன். அதெல்லாம் போயிருச்சு. விசு விஸ்வரூபம் எடுத்துட்டான்.
‘என்ன நல்ல கதைதானே’ன்னு கேட்டேன். ‘சாதாரண கதைதானே. குடும்பத்துல சண்டை போடுறாங்க, பிரியுறாங்க.கடைசியா சேருறாங்க’ன்னு சொன்னார். ‘என்ன சேருறாங்க?ன்னு கேட்டேன்.


அதாவது, க்ளைமாக்ஸ்ல, லட்சுமி பேசுற சீனெல்லாம் இல்ல. வீட்டுக்குள்ளே குழந்தையும் பலூனுமா வருவேன் பாருங்க... அந்த இடத்துல, ‘சம்சாரம் அது மின்சாரம்’ பாட்டைப் போட்டு முடிச்சிட்டான், குமாரபாளையத்துல! அவர், குமாரபாளையத்தில் படம் பார்த்திருக்கார்.


அங்கே, ஆபரேட்டரே எடிட்டராயிட்டார். டைரக்டராயிட்டார். அப்பதான் மூணுநாளைக்கு முன்னாடி, சரவணன் சார், ‘எல்லா செண்டர்லயும் எல்லா தியேட்டர்லயும் நல்லாப் போவுது சார். குமாரபாளையத்துல மட்டும் சுமாராப் போவுது சார்’னு சொன்னார். அது ஞாபகம் வந்துச்சு.


உடனே ஆஸ்பத்திரிலேருந்தே சரவணன் சாருக்கு போன் பண்ணினேன். ‘தப்பா நினைக்காதீங்க. உங்களை நான் குத்திக்காட்றேன்னு நினைக்காதீங்க. குமாரபாளையத்துல படம் உக்கார்ந்ததுக்குக் காரணம்... படத்தோட க்ளைமாக்ஸை மாத்தினதுதான்!


எந்த க்ளைமாக்ஸை வைங்கன்னு சரவணன் சார் சொன்னாரோ, அதே க்ளைமாக்ஸை, அங்கே தியேட்டர்காரன் வைச்சிட்டான். படம் போகலை. இந்த விஷயத்தைச் சொன்னதும், உடனே குமாரபாளையத்துக்குப் போன் பண்ணி, உண்மையான க்ளைமாக்ஸை வைக்கச் சொன்னார் சரவணன் சார். எந்த ஈகோவும் பாக்காம, தோல்வி பத்தியெல்லாம் நினைக்காம செயல்படக்கூடிய புரொட்யூஸர் சரவணன் சார். இப்படியான புரொட்யூஸர்லாம் கிடைச்சாங்க எங்களுக்கு!’’ என்று நெக்குருகிச் சொன்னார் விசு.


விசுவின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்