’’ராதிகா, ரஞ்சனி, ரேவதின்னு ‘ஆர்’ வரிசைல என் பேரை மாத்தலை பாரதிராஜா; நானும் சம்மதிச்சிருக்க மாட்டேன்’’ - வடிவுக்கரசி ஓபன் டாக்

By வி. ராம்ஜி

வலியையும் வெற்றியையும் ஒரேவிதமாக ஏற்றுக்கொள்வது என்பது சாதாரணமல்ல. செல்வத்தின் உச்சியில் இருந்ததையும் ஹோட்டலில் வேலைக்குச் சென்றதையும் சரிசமமாகவே பார்க்கிற மனசுதான், நடிகை வடிவுக்கரசிக்கு. எவரையும் குறை சொல்லாதவராகவும் இருக்கிறார். தன் வாழ்வில் ஏணியாக இருந்தவர்களையும் அப்படி உயருவதற்குக் காரணமாக அமைந்த படங்களையும் மறக்காமல் இருக்கிறார்.


‘இந்து தமிழ் திசை’ யின், 'RewindWithRamji' எனும் வீடியோ நிகழ்ச்சிக்காக, வடிவுக்கரசி தன் வாழ்க்கையை விவரித்த ஒவ்வொரு சம்பவங்களும் வரிகளும் எல்லோர்க்குமான பாடம்.


வடிவுக்கரசி வழங்கிய வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் தொடர்கிறது..


’’டான்ஸ்லாம் கத்துக்கணும்னு நினைக்கவே இல்லை. அப்போ நேரமும் இல்லை. ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் வந்த கையோட, ‘ஏணிப்படிகள்’ படம். அந்தப் படம் பண்ணிட்டிருக்கும் போதே, ‘கன்னிப்பருவத்திலே’. திருச்சில படப்பிடிப்பு. பட ஷூட்டிங்லாம் முடிச்சிட்டு, சென்னைக்கு வந்ததும் ‘கண்ணில் தெரியும் கதைகள்’. இப்படி மளமளன்னு படங்கள். வேலைகள். இதுல டான்ஸ் கத்துக்கறதுக்கு நேரமுமில்லை. பெருசா அதுல ஆசையும் இல்லை.


ஆனா, சினிமாதான் வாழ்க்கைன்னு முடிவெடுத்தவங்க, டான்ஸ்லாம் கத்துக்கணும். எல்லாத்தையும் கத்துக்கிட்டு களத்துல நிக்கணும். அப்படி கத்துக்காததால், எம்.என்.ராஜம் அத்தைகிட்ட, ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துல டான்ஸ் ஆடத்தெரியலைன்னு திட்டு வாங்கினேன்.


இந்தப் படம் முடிஞ்ச உடனேயே கிடைச்ச படம்தான் ‘மெட்டி.’ மகேந்திரன் சார் படம். மிகப்பெரிய இயக்குநர், லெஜண்ட்னெல்லாம் மகேந்திரன் சாரை இன்னிக்கும் கொண்டாடிட்டிருக்கோம். எவ்ளோ பெரிய இயக்குநர்னு வியந்துக்கிட்டிருக்கோம். ஆனா இதெல்லாம் எல்லாரும் சொல்லும்போதுதான் ‘ஆமாம்ல, எவ்ளோ பெரிய லெஜண்ட்னு தெரியுது. ஏன்னா... இது எதுவுமே காட்டிக்காம இருப்பார் அவர். ரொம்ப ரொம்ப சிம்பிளானவர் மகேந்திரன் சார்.


நான் மகேந்திரன் சாரை ஒரு அண்ணனாத்தான் பாத்தேன். அப்படித்தான் அவர் தெரிஞ்சார். பாரதிராஜா சாரையும் இப்படித்தான். பெரிய இயக்குநர் அப்படி இப்படின்னெல்லாம் எல்லாரும் பிரமிச்சுப் போய் சொல்லிட்டிருக்காங்க. ஆனா பாரதிராஜா சாரை நான் பார்த்து பயந்ததே இல்லை. இப்பவும் பயப்படமாட்டேன். அவர் மேல மரியாதையும் அன்பும் உண்டு. ஆனா என்னவோ, பயம் வந்ததே இல்ல.


அதேபோல, பாரதிராஜா சார், தான் அறிமுகப்படுத்தின நடிகைகளுக்கு ‘ஆர்’ வரிசைல ‘ராதிகா, ரஞ்சனி, ரேவதி, ரஞ்சிதா’ன்னெல்லாம் பேர் வைச்சார். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துல, ஒரு சின்ன ரோல்ல என்னை அறிமுகப்படுத்தினதால, ‘ஆர்’ வரிசைல எனக்கு பேர் வைக்கலியோ என்னவோ? ஒருவேளை, என்னோட பேரை மாத்தறதா சொல்லியிருந்தா, நான் கூடவே கூடாதுன்னு சொல்லியிருப்பேன். பேர் மாத்த ஒத்துக்கிட்டிருந்திருக்க மாட்டேன்.


ஏன் சம்மதிச்சிருக்க மாட்டேன்னா... எனக்கு ‘வடிவுக்கரசி’ன்னு பேர் வைச்சது, என் பெரியப்பா ஏ.பி.நாகராஜன்.’வடிவுக்கு வளைகாப்பு’ படம் சமயத்துல பொறந்ததால, எனக்கு அந்தப் பேர் வைச்சாரு. அடுத்தது என்னன்னா... நான் கன்னிமரா ஹோட்டல்ல ஹவுஸ்கீப்பரா வேலை பாக்கும்போதும் வடிவுக்கரசியாத்தான் இருந்தேன். தூர்தர்ஷன்ல காம்பியரா இருக்கும்போதும் வடிவுக்கரசியாத்தான் இருந்தேன். டீச்சரா இருக்கும்போதும் வடிவுக்கரசியாத்தான் இருந்தேன். சினிமாவும் இப்படியொரு வேலைதான். இதுல மட்டும் நான் ஏன் பேரைமாத்தணும்? இந்த விஷயங்களையெல்லாம் சொல்லி, பாரதிராஜா சார்கிட்ட சட்டமாப் பேசியிருப்பேன்.
அன்னிக்கி அவரும் மாத்த நினைக்கலை. அப்படியொரு சூழலும் எனக்கு வரலை. இன்னிக்கி வரைக்கும் வடிவுக்கரசிங்கற பேர்லதான் பாஸ்போர்ட்லயும் இருக்கேன். ஓடிட்டிருக்கேன்.


மகேந்திரன் சாருக்கு வரேன். ’மெட்டி’ படம். ராஜேஷ் நடிச்சார். ‘கன்னிப்பருவத்திலே’ படத்துல நடிக்கும்போது நானும் ராஜேஷும் நல்ல நண்பர்களாகிட்டோம். இந்த சமயத்துல நான் கார் வாங்கிட்டேன். அதுவும் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் வைச்சிருந்த கார். செகண்ட் ஹேண்ட்ல வாங்கினேன். அந்தக் கார், எம்.எஸ்.வி.சாருக்கு, எம்ஜிஆர் கொடுத்தது. டிஎம்எஸ் 8485. இந்தக் காரும் எம்ஜிஆரோட 4777 காரும் ஒரே மாதிரி இருக்கும். ஒரே மாடல்; ஒரே கலர். மாடல் 3 அம்பாசிடர்.


இந்த சமயத்துல, ‘கன்னிப்பருவத்திலே’ படம் பெரிய ஹிட்டாயிருச்சு. மதுரைல 365 நாள் ஓடுச்சு. எல்லா ஊர்லயும் நல்லா ஓடுச்சு. அப்போ 50-வது நாள் விழாவுல, பாலகுரு சார், பாக்யராஜ் சார், ராஜேஷ் சார், நான் எல்லாரும் ஒவ்வொரு ஊருக்கும் படம் ஓடுன தியேட்டருக்கும் போனோம். அதுக்கு அப்புறம் எல்லாரும் பிஸியாயிட்டாங்க. அதுலயும் பாக்யராஜ் சார்லாம் ரொம்பவே பிஸி. அவரைப் பிடிக்கவே முடியாதுன்னு 50-வது நாள்லயே விழா. தியேட்டர்களுக்குப் போனோம்.


இங்கே, சென்னைல, சபையர் எமரால்டு தியேட்டர்ல, ஒருவருஷம் ஓடுச்சு. அந்தப் படத்துல பாக்யராஜ் சார், ‘கண்ணம்மா, ஒரு அஞ்சுநிமிஷம் ஒதுங்கினா, உனக்கும் சுகம், எனக்கும் சுகம். ஓடிப்பிடிச்சு விளையாடணும்னு நினைச்சா, உன் ஒடம்புல ஒட்டுத்துணி கூட இருக்காது’ன்னு டயலாக் பேசியிருப்பார். இந்த வசனத்தை ஆடியன்ஸுக்கு முன்னாடி ஸ்டேஜ்ல சொல்லிக் காட்டச் சொல்லி கேப்பாங்க. அவரும் சொல்லுவார். உடனே நான், ‘இது மதுரை. கண்ணகி வாழ்ந்த ஊரு. இவர் இப்படிக் கேட்டா, நீங்க விட்ருவீங்களா?’ன்னு கேப்பேன். இப்படி ஸ்டேஜ்ல பாக்யராஜ் சாருக்கும் எனக்கும் போட்டாபோட்டியே நடக்கும்.


அப்போ என் கார்லதான் வருவார் ராஜேஷ் சார். அவர், அவரோட நாலுதம்பிங்க, தங்கச்சின்னு எல்லாரும் ஃபேமிலி நண்பர்களாவே ஆகிட்டோம். இன்னிக்கி வரைக்கும் அப்படியொரு உறவு எங்க குடும்பங்களுக்குள்ளே! அதேபோல ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முதல் ஆளா, மறக்காம எனக்கு வாழ்த்து சொல்லிருவாரு. ஸ்ரீப்ரியாவுக்குக் கூட என் பிறந்தநாள் ஞாபகம் இருக்குமா தெரியலை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு புடவை எடுத்துக்கொடுக்கவோ, வேற ஏதாவது கிஃப்ட் கொடுக்கவோனு இன்னும் தொடர்ந்திக்கிட்டிருக்கு. அப்படியொரு மனுஷன் அவர்.


அதேபோல சினிமா சம்பந்தப்பட்ட தகவல் வேணும்னாலும் ராஜேஷ் சாரைக் கேப்பேன். ஒரு நல்ல மனிதர் அவர். எங்களுக்குக் கிடைச்ச நல்ல நண்பர். அருமையான மனிதர். ஷோபா நல்ல தோழியா கிடைச்சது போல, ஸ்ரீப்ரியா இனிய ஸ்நேகிதியா கிடைச்சது போல, ராஜேஷ் சார் அப்படியொரு நண்பனா எங்களுக்குக் கிடைச்சார்.’’ என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்துமாகச் சொல்லுகிறார் வடிவுக்கரசி.


- நினைவுகள் தொடரும்


வடிவுக்கரசியின் முழு வீடியோ பேட்டியைக் காண :


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 hour ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்