உறவுகளுக்கு இடையே நடக்கும் சண்டையும் சவாலும் எப்போதுமே கவனிக்கப்படுபவை. அதிலும் சண்டையும் அதனால் ஏற்படுகிற சவாலும் அந்த சவாலை நிறைவேற்றுவதற்கு செய்கிற பிரயத்தனங்களும் சீரியஸாக சொல்லப்படாமல், காமெடியாகவே சொல்லப்பட்டால் அது மிகப்பெரிய கொண்டாட்டமாகிவிடும். கே.பாலசந்தர் அப்படியொரு கொண்டாட்டத்தைக் கொடுத்ததுதான் ‘பூவா தலையா’.
தன் முதல் படமான ‘நீர்க்குமிழி’யைக் கூட, சீரியஸாகவும் அதேசமயம் காமெடியகவும் கலந்தே கொடுத்திருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர். 65-ம் ஆண்டு, முதல்படம் ‘நீர்க்குமிழி’ வெளியானதைத் தொடர்ந்து வரிசையாக ஏகப்பட்ட படங்கள் பண்ணினார். மெசேஜ் சொல்லும் படங்களைச் செய்துகொண்டே, நடுநடுவே ஜாலியாய் காமெடிப் படங்களையும் கொடுத்தார்.
67-ம் ஆண்டில், ‘பாமா விஜயம்’ படத்தையும் அதே வருடத்தில் ‘அனுபவி ராஜா அனுபவி’யையும் இயக்கினார். இரண்டுமே காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டன. 68-ம் ஆண்டில் ‘எதிர்நீச்சல்’ தந்தார். இந்தப் படங்கள் அனைத்திலுமே நாகேஷ் உண்டு. ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’, ‘அனுபவி ராஜா அனுபவி’ மூன்று படங்களிலும் முத்துராமனும் உண்டு.
69-ம் ஆண்டில், இராம.அரங்கண்ணல் தயாரிப்பில், கே.பாலசந்தர் சுண்டிவிட்டதுதான் ‘பூவா தலையா’. ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷைக் கொண்டு ‘பூவா தலையா’ ஆடியிருப்பார் பாலசந்தர்.
» ’’ ‘ஜாக்ஸன் துரை’யா நடிச்சது நான் தான்!’’ - பழம்பெரும் நடிகரின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நினைவுகள்
கோடீஸ்வரர் ஜெமினியின் மாமியார் வரலட்சுமி. தன் மகள் இறந்துவிட்டாலும் ஜெமினி வீட்டிலேயே இருந்துகொண்டு, அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கிறார். எப்படியாவது தன் இரண்டாவது மகளான வெண்ணிற ஆடை நிர்மலாவை, தன் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து, மீண்டும் தன் மாப்பிள்ளையை மாப்பிள்ளையாக்குவதுதான் அவரின் மாமியார் ப்ளான்.
ஜெமினி கணேசனின் தம்பி ஜெய்சங்கர். இவருக்கும் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும். ஜெய்சங்கர் வரலட்சுமியின் அதிகாரத்தை தட்டிக்கேட்பார். இதில் இருவருக்கும் சண்டையும் அதனால் சவாலும் ஏற்படுகிறது. ‘யார் யாரை தோற்கடிப்பது, அவுட் ஹவுஸில் யார் யாரை வைப்பது’ என்று சபதம் போடுகிறார்கள். இது யாருக்கும் தெரியக்கூடாது என்பது கண்டீஷன்.
வரலட்சுமிக்கு இன்னொரு மகள் சச்சு. அவர், குதிரை வண்டிக்கார நாகேஷை காதலித்து திருமணம் செய்துகொள்வார். ‘என் பொண்ணு செத்துட்டா’ என்று சொல்லிவிடுவார். இதை அறிந்த நாகேஷ், வரலட்சுமி தட்டிக்கேட்க, இருவருக்கும் போட்டாபோட்டி. ஒருபக்கம் ஜெய்சங்கர் - வரலட்சுமி. இன்னொரு பக்கம் நாகேஷ் - வரலட்சுமி என போட்டி சூடுபிடிக்கும்.
இந்தநிலையில், ராஜஸ்ரீயைப் பார்க்கும் ஜெமினி, அவர் மீது காதல்வயப்பட, இருவருக்கும் காதல் பிறக்கும். வரலட்சுமிக்கு ஜால்ரா போடும் வேலைக்கார முத்துலட்சுமி. அவரின் மகன் ஸ்ரீகாந்தோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில். ஜெமினி ஜவுளிக்கடை மேனேஜர் மகள் மனோரமாவோ அரைக்கிறுக்கு. ஜெமினி - ராஜஸ்ரீ, காதலிக்கத் தொடங்கிய ஜெய்சங்கர் - வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீகாந்த், மனோரமா என எல்லோரும் வரலட்சுமிக்குத் தெரியாமல் குற்றாலத்துக்கு வர... அதன் பின்னர் நடக்கும் ‘பூவா தலையா’வும் பூ விழுந்ததா தலை விழுந்ததா என்பதும்தான் க்ளைமாக்ஸ். நாகேஷ் எபிசோடு எக்ஸ்ட்ரா எனர்ஜி.
பீரோவில் தொங்கிக் கொண்டிருக்கும் சாவிக்கொத்து, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. சாவிக்கொத்துக்கு வரலட்சுமி குரல். பொம்மைக்கு ஜெமினியின் குரல். மாமியாருக்கு அடங்கி நடக்கிற மருமகன் என்பதைச் சொல்லாமல் உணர்த்திவிடும் பாலசந்தர் டச் கள் ஏராளம்.
நாகேஷின் மனைவி சச்சு. எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு புலம்பியபடியும் வருத்தப்பட்டுமாக இருப்பார். ‘எதிர்நீச்சல்’ படத்தில் முழு காமெடிப் படமாக இருந்தபோதும் மனோரமாவை சீரியஸ் ரோல் பண்ணவைத்தது போல், இந்தப் படத்தில் சச்சுவுக்கு சீரியஸ் ரோல் கொடுத்திருப்பார் பாலசந்தர்.
ஜெமினி கணேசனின் பெயர் கணேஷ். ஜெய்சங்கரின் பெயர் சங்கர். நாகேஷின் பெயர் நாகேஷ். ‘சர்தான் போடி வாயாடி’ என்றொரு பாடல். ‘மதுரையில் பறந்த மீன்கொடியை’ என்றொரு பாடல். ‘போடச்சொன்னா போட்டுக்கறேன்’ என்றொரு பாடல். ’பூவா தலையா போட்டாத் தெரியும்’ என்றொரு பாடல். எம்.எஸ்.வி.யின் இசை. வாலியின் வரிகள். முக்கியமாக, ’மதுரையில் பறந்த மீன் கொடியே’ பாடல் கவிஞர் வாலிக்கு மிகப்பெரிய பேரைப் பெற்றுத் தந்தது. அதேபோல், ஜெமினி கணேசனுக்கு ஏ.எம்.ராஜா, பி.பி.எஸ். என்றுதான் பாடுவார்கள். ஆனால் இந்தப் பாடலை, டி.எம்.எஸ். பாடியிருப்பார். அசத்தலாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பாலசந்தரின் வசனங்கள் படுஷார்ப்.
நாடகத்தனமான கதை என்றாலும் அதை சினிமா விஷுவலாக்கியிருப்பார் பாலசந்தர். ‘பர்வதம்மா, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் போதும் ரெண்டும் ரெண்டும் நாலுதான். பி.ஏ. படிக்கும்போதும் ரெண்டும் ரெண்டும் நாலுதான். படிப்பு பெருசுங்கறதால ரெண்டும் ரெண்டும் எட்டாயிடாது’ போன்ற வசனங்கள் பல இடங்களில் கைதட்ட வைக்கும்.
டைட்டிலில், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், நாகேஷ் என்று மூவரின் பெயரும் ஒரே இடத்தில் வரும். அதேபோல், எஸ்.வரலட்சுமி, ராஜஸ்ரீ, நிர்மலா பெயர்கள் ஒரே இடத்தில் வரும்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே தோற்றுக்கொண்டு வரும் ஜெய்சங்கர், இறுதியில் ஜெயிப்பார். அதேபோல், வண்டிக்கார நாகேஷை, தன் மருமகன் என்று எல்லோர் முன்பாகவும் சொல்வார் வரலட்சுமி. மருமகன் ஜெமினி காதலை ஓகே சொல்லி, மகள் நிர்மலாவின் காதலை ஓகே சொல்லி, மகள் சச்சுவை அங்கீகரித்து, வரலட்சுமியையு மன்னித்து ஏற்க... என படம் சுபம் கார்டுடன் முடியும்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைப் போலவே, எல்லா மொழிகளிலும் ஹிட்டடித்து, வசூல் குவித்தது இந்த ‘ஸ்கிரிப்ட்’.
1969ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி வெளியானது ‘பூவா தலையா’. இன்றைக்கும் ‘ஹிட் ஸ்கிரிப்ட்’ எனக் கொண்டாடப்பட்டு வருகிறது, பாலசந்தர் சுண்டிய ‘பூவா தலையா’.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago