மதுரை அமெரிக்கன் கல்லூரியின் உளவியல் துறையின் முனைவர் சுரேஷ்குமார் முருகேசன் கரோனா ஊரடங்கின்போது, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல பகுதிகளிலிருக்கும் நிபுணர்களைக் கொண்டு கணினி மென்கூட்டம் வாயிலாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். நாடு முழுவதிலுமிருந்து பிரபல மன உளவியல் துறை வல்லுநர்களும் மாணவர்களும் இதனால் மிகப் பெரும் பயனை அடைந்துள்ளனர்.
இணைய வழியில் ஒரு புதிய முயற்சியான இதில் முக்கியமாக கேள்வி பதிலுக்காக திட்டமிட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை உரிய முறையில் உடனடியாக பெறும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
“இதுவரை, 60 தலைப்புகளில் இணையவழிக் கருத்தரங்கம் (Webinars) நடந்துள்ளது. இப்படி 365 அமர்வுகளுக்குத் திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் சுரேஷ்குமார்.
ஊரடங்கு காலத்தில், அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது, பல்வேறு பொருளாதார, சமூகப் பிரச்சினைகளாலும், நிச்சயமற்ற தன்மையினாலும், மனநலப் பாதிப்புக்குள்ளாகும் சூழலுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப் நிறுவனம் போன்ற உலக அமைப்புகள் உள நலனைக் காப்பது குறித்து பல்வேறு குறிப்புகள், பயிற்சிகள், வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மக்களுக்குப் பொதுவாக ஏற்படும் மனநலன் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, நேர்மறையான எண்ணங்களையும், நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகவும், மக்களின் மனநலன் மேம்பாட்டிற்கு உதவும் வண்ணம் கடந்த மே 9-ம் தேதி “உணர்வெழுச்சி விடுதலை முறை (Emotional Freedom Technique) என்ற தலைப்பில் கருத்துரையை உள சிகிச்சை நிபுணர் நளினி கங்காதுரை வழங்கினார்.
அதிலிருந்து ஒரு சிறிய பதிவு:
“பெங்களூருவில் (Address Health) அட்ரஸ் ஹெல்த் என்ற நிறுவனத்தில் பணியாற்றியதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மனநலனை மேம்படுத்தும் விளையாட்டுகள் மூலம் பயிற்சிகளில் பங்கெடுக்க முடிந்தது. (The Live Love Laugh Foundation) த லிவ் லவ் லாஃப்ஹ் ஃபௌண்டேஷன், சார்பாக பெங்களூரு, பூனே நகரங்களில் ஆயிரக்கணக்கான வளரிளம் மாணவர்களுடன் உரையாடல் மூலம் மனநலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது.
சென்னையில் நந்தவனம் என்ற பெயரில் உளவியல், உளசிகிச்சை மையம் நடத்தி வருகிறேன். மன அழுத்தம், பதற்றம், பயம், வீடு மற்றும் வேலை பார்க்குமிடங்களில் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றுக்கான உளவியல் ஆலோசனைகள், வளர் இளம் பருவத்தினருக்கான ஆலோசனைகள், குழந்தைகளின் மனநலன் மற்றும் கற்றல் குறைபாடுக்கான உளவியல் ஆலோசனைகள், உள சிகிச்சைகளை நேரிலும், இணையம் மூலமும் வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
நம் வாழ்க்கையில் உணர்வுகளின் பங்கு மகத்தானது. நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் நம்மை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பாதிக்கின்றன. அது எங்கோ நடந்த விபரீதத்தின் பத்திரிகை செய்தியாயிருக்கலாம் அல்லது நமக்கு நடக்கும் விபத்தாக இருக்கலாம். நாம் அன்றாடம் பேசும் நபரின் வார்த்தையாயிருக்கலாம், அல்லது சிறு வயதில் எப்பொழுதோ யாரோ நம்மிடம் சொன்ன வார்த்தையாயிருக்கலாம். அப்படி ஏதேனும் ஒன்றால் நாம் பாதிக்கப்பட்டால், நம் உடலில் , மனதில் தீர்க்கப்படாத குழப்பமாக, நோயாக, பயமாக, பதற்றமாக, அதீத பயமாக, பல்வேறு வகையாக அவை உருவெடுத்து விடும்.
நம் தினசரி வாழ்க்கையில் இந்த பதற்றமோ (Anxiety), பயமோ (Fear), அதீத பயமோ (Phobia), மன அழுத்தமோ (Depression), அதிர்ச்சிக்குப் பின் ஏற்படும் மன அழுத்தமோ (Post Traumatic Stress Disorder) நம் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் செய்துவிடும். உறவுச் சிக்கல்களாக மாறும்.
இப்படி நம் உணர்வுகளே உபாதைகளாக மாறும்போது, நம் எதிர்மறை எண்ணங்களே தடைக் கற்களாய் மாறும்போது, அல்லது நாம் ஏதாவது பழக்கத்திற்கு அதீதமாக ஆட்படும்போது, அதிலிருந்து எளிதில் மீள்வதற்கு ஒரு மாற்று சிகிச்சை முறையே இந்த இ.எஃப். டி எனப்படும் உணர்வெழுச்சி விடுதலை முறை.
இ.எஃப்.டி. ஓர் அறிமுகம்
கேரி க்ரைக், என்பவரால் உருவாக்கப்பெற்ற இந்த உள சிகிச்சை முறை, தொடுதல் மற்றும் உரையாடுதல் பேச்சு முறை என்ற இரண்டும் சேர்ந்து, பல்வேறு உள சிகிச்சைகளின் கூட்டாய் பரிணமித்துள்ளது.
நம் உடல் என்பது சக்தி பாயும் ஒரு நதி போன்றது. அதில் ஏதாவது சங்கடமான நிகழ்வின் மூலம் தடங்கல் ஏற்படுமாயின், அது எதிர்மறை உணர்வை (பயம், பதற்றம், கோபம், சோகம்) தோற்றுவிக்கும். அதுவே எதிர்மறை எண்ணமாகவும், எதிர்மறை நம்பிக்கைகளாகவும் உடலிலும், மனதிலும் தங்கி விடுகின்றது.
பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகள் செல்களின் சங்கடங்கள், அந்த சங்கடங்களை, நினைவுகளை எவ்வாறு புதிய செல்களுக்குக் கடத்துகின்றன, அதனால் ஏற்படும் நோய்களின் காரணிகள் குறித்து ஆய்வுகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த சங்கடத்தை இந்த தடங்கலை உடலில் குறிப்பிட்ட புள்ளிகளைத் தொடுவதின் (தட்டுவதின்) மூலம், சரி செய்ய முடியும். இதற்கு மூல ஆதாரமாக, சீன அக்குபன்ச்சர், அக்குப்ரெசர், ஜப்பானிய சியாட்சு, என்று உலகி ல் பல்வேறு இடங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இதைப் பின்பற்றி உடல், மன நோய்களைக் குணப்படுத்தி வந்துள்ளனர்.
இந்தக் குறிப்பிட்ட புள்ளிகளைத் தொடுவதின் மூலம் அந்தத் தடங்கல் சரி செய்யப்பட்டு, சங்கடம் விலகுவதால், உடலில் சக்தி (Energy) தடையறப் பாய (clears meridian), இந்த எளிய உள சிகிச்சை முறை உதவுகிறது.
மூன்று படிகள்!
இந்த இ.எஃப். டி (EFT, Emotional Freedom Technique) யில் மூன்று படிகள். முதலில், நம் பிரச்சினையின் தீவிரத்திற்கு 1 லிருந்து 10 என்ற அளவு கொடுக்க வேண்டும். 1 என்றால் எந்த வலியுமில்லை, சங்கடமில்லை, 10 என்றால் மிக அதிகமான வலி, மிக தீவிரமான பிரச்சினை, மிக அதிகமான பாதிப்பு, பிரச்சினையை ஒரு வாக்கியத்தில் அமைப்பது, நம் கையில் பக்கவாட்டில் தட்டிக் கொண்டே, “எனக்கு இந்தப் பிரச்சினை (எதிர்மறை உணர்வு, பிணி) இருந்தாலும், நான் என்னை நேசிக்கிறேன், என்னை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். (இப்படிச் சொல்வது பிரச்சினையை ஏற்றுக்கொள்ள உதவுகிறது. ஏனெனில் ஏற்றுக்கொள்ளுதல்தான் எல்லாப் பிரச்சினைகளின் தீர்வுக்கும் முதல் படி, ஏற்றுக்கொண்டால்தான், நாம் அதைச் சரி செய்வது குறித்து அடுத்த அடி வைப்போம்)
குறிப்பிட்ட உடல் புள்ளிகளைத் தொடுதல் அல்லது தட்டுதல், (Touching or Tapping) புருவம், கண் பக்கவாட்டு, கண் அடியில், மூக்கு அடியில், முகவாய்க்கட்டை, தோள்பட்டை எலும்பு, (கழுத்துக்கு கீழே), அக்குளுக்குக் கீழே, கை விரல்கள் பக்கவாட்டில், (நகத்திற்கு பக்கவாட்டில்), தட்டிக்கொண்டே பிரச்சினையின் தீவிரத்தைப் பேசுவது (உதாரணம்) மேடையில் பேசுவதை நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கிறது. எதிரில் இருப்பவர் என்ன நினைப்பாரோ என்று எண்ணும்போதே பயமாக இருக்கிறது, அந்த பயம் உடலில் வயிற்றில் ஒரு கருநாகம் போல நெளிகிறது, (அந்த உணர்விற்கோ, பிணிக்கோ, ஏதேனும், உருவம், சத்தம், நிறம் இருப்பின், அதையும் தெளிவாக கவனித்துச் சொல்ல வேண்டும்) என்று அது குறித்து திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டே தட்ட வேண்டும். இப்படித் தட்டுவது பிரச்சினையின் சங்கடத்தை நீக்கி உடலுக்கு அமைதியைத் தருகிறது.
கடைசியில் திரும்பவும், கை பக்கவாட்டில் தட்டிக்கொண்டே, எனக்கு இவ்வளவு பிரச்சினை, பிணி, இந்த அளவில் இருந்தாலும், நான் என்னை ஏற்றுக் கொள்கிறேன், நான் என்னுள்ளில் இருக்கும் (மாற்றாக உள்ள நேர்மறை உணர்வுகளான மகிழ்ச்சி, தைரியம், தன்னம்பிக்கை, சுயக் கட்டுப்பாடுடன்) இருக்க என்னைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று சொல்லி முடித்து , ஆழ்ந்த மூச்சு விட்டு, சிறிது நீர் குடிக்க வேண்டும். இதைச் செய்து முடிக்கையில் பிரச்சினையின் தீவிரத்தை மீண்டும் அளக்க வேண்டும்.
தேவைப்படின், மீண்டும் இதே முறையைச் செய்யலாம். கவனிக்க வேண்டியது, உணர்வு மாறியிருக்கலாம், உணர்வு இருந்த இடம் மாறியிருக்கலாம், அளவு மாறியிருக்கலாம். எதுவாக இருப்பினும் நன்று, அது மாற்றத்திற்கான தொடக்கம். நிறைய பேருக்கு, ஒரு அமர்விலேயே விடுபட்ட உணர்வு கிடைத்துவிடும். பொதுவாக இ.எஃப். டி. ஆறு அமர்வுகளில், அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தத்திலிருந்து 80 சதவீதம் மீள்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு (போரில் பங்கேற்று அதனால் அதிர்ச்சிக்குள்ளான போர் வீரர்களிடம் இந்த உளசிகிச்சையும், ஆய்வும் நடைபெற்றது.)
நாள்பட்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபடலாம்
பொதுவாக காபி குடிப்பது, போதை போன்ற பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு இந்த உள சிகிச்சை மிகுந்த பயன் தருகின்றது. ஏனெனில் இது உள்ளார்ந்த உணர்வை சந்திக்க ஆற்றுப்படுத்த உதவுவதால் எளிதில் எத்தகைய பழக்கத்திலிருந்தும் (Sex , Porn, alcohol, to be clean, to be perfect ) மீள உதவுகிறது.
பாம்பை நினைத்தாலே பயம், நீரைக் கண்டாலே பயம், மூடிய அறை குறித்து அதீத பயம் போன்ற ஃபோபியா (phobia) எனப்படும் அதீத பயத்திலிருந்து விடுபட இந்த உளசிகிச்சை உதவுகிறது, ஏனெனில் இது அந்த பயம் ஏற்பட காரணமாயிருந்த நிகழ்வுகள், அதன் காரணமாக ஏற்பட்ட சங்கடங்கள், நடைமுறைக்கு ஒவ்வாத நம்பிக்கைகள் முதலியவற்றை நேரடியாக நம்மை நாமே சந்திக்க வைத்து முறியடிக்க வைக்கிறது.
உதாரணம், நிறைய பேருக்கு, அதிகாரிகளிடம் பேச பயம் இருக்கும். என்னதான் மூளை சொன்னாலும், உடம்பு பயப்படும். அத்தகைய நபர்கள் எளிதாக இந்த சிகிச்சையினால் பயத்திலிருந்து மீள முடியும்.
இந்த உள சிகிச்சை முறையில், சில நேரம் நமக்கு நேர்ந்த அதிர்ச்சி குறித்து நாம் பேச விருப்பப்படாவிடின், அந்த நிகழ்விற்கு சம்பந்தமில்லாமல் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி, அது சம்பந்தமான உணர்வை மட்டும் பேசி, அதிலிருந்து மீள முடியும். (உதாரணம், இளவயதில் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டிருந்தால், அதைச் சொல்ல விருப்பம் இருக்காது, சில நேரம் தெளிவாக ஞாபகமும் இருக்காது, ஆனால் அது குறித்து எதிர்மறையான உணர்வு மட்டும் நம்மைச் சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கும் அதனால் இப்பொழுதுள்ள உறவுகள் மேம்படுவதில் சிக்கல்கள் தோன்றலாம்.) இ.எஃப் டி, இதற்கெல்லாம் எளிய சிகிச்சை முறையாக உள்ளது.
எவரேனும் சங்கடங்கள் தரும் நம்பிக்கைகளைக் (Limited Belief) கொண்டிருந்தால், உதாரணத்துக்கு, நான் யாருடன் நெருங்கிப் பழகினாலும் அவர்களுக்குக் கஷ்டம் வரும். அதனால் நான் அவளை / அவனை விரும்பினாலும் சொல்லமாட்டேன். உள சிகிச்சையின்போது இந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் இள வயதில் நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வின் அடிப்படையில் இருக்கும். இப்போது நாம் வளர்ந்துவிட்டாலும் , அந்தக் குறுகிய நம்பிக்கைகளிலிருந்து நம்மால் மீள முடிவதில்லை. இத்தகைய குறுகிய நம்பிக்கைகளை மாற்றி, நேர்மறை வளர்ச்சி தரும், நம்பிக்கைகளை/ எண்ணங்களை நம்மால் பதிய வைத்துக்கொள்ள முடியும். இதற்கு இ.எஃப்.டி.மிகச் சிறந்த சிகிச்சை முறை ஆகும்.
இதுகுறித்து நிறைய வாசிக்க கற்றுக்கொள்ள இணையத்தில் ஏராளமாக உள்ளது. ஆனால் முறையாக பயிற்சி பெற்றோரிடம் சிகிச்சை மேற்கொள்வது, கற்றுக் கொள்வது சரியான முறையில் பலன் தரும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago