சினிமாவில்தான் வில்லி. டெரர் முகம் காட்டி, கிடுகிடுக்க வைப்பார். ஆனால் நிஜத்தில், நான்கு வார்த்தை பேசுவதற்குள் நாற்பது முறை சிரித்துவிடுகிறார். எதிரில் இருப்பவர்களையும் சிரிக்கவைத்துவிடுகிறார் நடிகை சத்யப்ரியா. ’கருப்பு வெள்ளை’ படங்களில் இருந்து கலர்ஃபுல் சீரியல் வரைக்கும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
‘இந்து தமிழ் திசை’யின் ’Rewind With Ramji' வீடியோ பேட்டி நிகழ்ச்சிக்காக, நடிகை சத்யப்ரியா நீண்டதான பேட்டியளித்தார்.
அவரின் கலகலப்பான பேட்டியின் எழுத்தாக்கம் இது:
’’ஆந்திராவில் குச்சிப்புடிங்கற கிராமம்தான் அப்பாவுக்கு பூர்வீகம். அப்பா பேரு நாகேஸ்வர ராவ். கலைக்குடும்பம். அந்த ஊர் முழுக்கவே அப்படித்தான். அப்புறமா, விஜயநகரம்ங்கற ஊருக்கு வந்து செட்டிலானோம். அப்பாவுக்கு கலைன்னா ரொம்ப இஷ்டம். சொந்தமா ஒரு டிராமா ட்ரூப் வைச்சிருந்தார். நடிகர் சாய்குமாரோட அப்பா, சோமாயஜுலுவோட தம்பி, என்னோட அப்பா இவங்களாம் சேர்ந்து டிராமா பண்ணிட்டிருந்தாங்க.
» பின்னணி இசையின் முன்னணி நாயகன்... இளையராஜா! - தமிழ்த் திரையுலகில் இது ராஜாவுக்கு 44வது ஆண்டு
» கோடரியிலும்... பூ பூக்கும்! - எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள்
விஜயநகரமும் கலைநகரம்தான். கண்டசாலா அந்த ஊர்தான். பி.சுசீலாம்மா பொறந்து வளர்ந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதும் அந்த ஊர்தான். அங்கேதான் சத்யப்ரியாவும் பிறந்தேன். அஞ்சு வயசுலயே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். நான் தான் மூத்த பொண்ணு. அதுக்குப் பிறகு தங்கச்சிங்க, தம்பின்னு இருக்காங்க.
அப்பா அம்மாவுக்கு கல்யாணமாகி, பல வருஷமா குழந்தையே இல்ல. அப்போ குழந்தை வேணும்னு சத்யநாராயண பூஜை பண்ணினாங்களாம். அதன் பிறகுதான் நான் பொறந்தேன். அதனால எனக்கு சத்யவதின்னு பேர் வைச்சாங்க. சினிமாவுக்கு வந்தப்பதான் சத்யப்ரியாவானேன். இதுக்குள்ளே இன்னும் கதையெல்லாம் இருக்கு.
சம்பத்குமார் சார்ங்கறவர்கிட்ட ஆரம்பத்துல டான்ஸ் கத்துக்கிட்டேன். பெரிய மாஸ்டர் அப்புறம் சென்னைலேருந்து ஸ்ரீராமமூர்த்திங்கறவர் இங்கே வந்து டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சார். அவர்கிட்ட நிறையவே கத்துக்கிட்டேன்.
விஜயநகர ராஜா பேர்ல காலேஜ் உண்டு. வுமன்ஸ் காலேஜ். நான் நல்லாப் படிப்பேன். படிப்புல நம்பர் ஒன் நான். டென்த்ல ஃபர்ஸ்ட் நான். அந்த மார்க்கைப் பாத்துட்டு, ‘இவளை டாக்டருக்கு படிக்கை வைக்கலாமே’னு பலரும் சொன்னாங்க. டீச்சர்ஸ்லாம் சொன்னாங்க. அம்மாவும் ஆசைப்பட்டாங்க. நானும் விரும்பினேன்.
அதேநேரம், எங்க மாஸ்டர், வெல்விஷர்தான். அவர், ‘உங்களுக்கு நிறைய பொண்ணுங்க. மூத்த பொண்ணு படிப்புக்காக, வீடு வாசல்னு வித்துப் படிக்கவைச்சா, மத்த பொண்ணுங்களைப் பத்தி யோசிச்சுப் பாருங்க’ன்னு சொன்னார். அப்புறம் வீடும் அதை ஏத்துக்கிச்சு. அடுத்தாப்லதான், இந்தக் காலேஜ்ல பி.ஏ.ஆர்ட்ஸ் சேர்ந்தேன். இதுக்கு நடுவுலயே நாடகங்கள்ல நடிச்சிட்டிருந்தேன்.
அது அமெச்சூர் டிராமாஸ். நிறையப் பண்ணினேன். காலேஜ்ல, ‘தர்மஜோதி’ன்னு ஒரு டிராமா. அதுல ராஜநர்த்தகி கேரக்டர். அதுல எல்லாமே யுனிவர்ச்சிட்டில வேலை பாத்தவங்கதான் பண்ணினாங்க. ராஜநர்த்தகி கேரக்டர் நான் பண்ணினேன். அப்புறம் பி.ஏ. பாஸ்.
அடுத்து, வைசாக்ல, ஆந்திரா யுனிவர்சிட்டில எம்.ஏ. பண்ணினேன். இதுல என்னன்னா, பத்தாவதெல்லாம் சூப்பரா படிச்ச நான், ஆர்ட்ஸ்ல மனசு போகலை. தவிர, டான்ஸ், டிராமான்னு நாட்டம் அதிகமாயிருச்சு. கிட்டத்தட்ட, ரெண்டாயிரம் ஸ்டேஜ் ஏறியிருப்பேன். அதனால, 45 மார்க்தான் கிடைச்சிச்சு.
இந்த மார்க்குக்கு எம்.ஏ. எப்படிக் கொடுப்பாங்க? ஆனா எனக்குக் கொடுத்தாங்க. ஸ்டேட் லெவல்ல நடந்த இண்டர் காலேஜ் போட்டில நான் கலந்துக்கிட்டு, டான்ஸ்ல பரிசு வாங்கியிருக்கேன். இதெல்லாம் பாத்துட்டு, எனக்காகவே ஒரு சீட் கிரியேட் பண்ணிக் கொடுத்தாங்க.
அப்புறம், படிப்பு, டிராமா, டான்ஸ்னு போயிட்டிருந்துச்சு. அந்த சமயத்துல காலேஜ் எதுக்காகவோ லீவு. அந்த சமயத்துல பாம்பேலேருந்து ஒரு புரொட்யூசர் வந்திருந்தார். டான்ஸ் ஆடத் தெரிஞ்ச நடிகை வேணும்னு கேட்டார். அப்ப என் போட்டோவைப் பாத்துட்டு, இந்திப் படத்துல நடிக்க என்னைக் கூப்பிட்டாங்க. ஆக, என்னுடைய முதல் படம் இந்திப்படம். ஆந்திராலேருந்து சென்னை வரலை. நேரா பம்பாய்க்கே போயிட்டேன். அந்தப் படம் ‘பக்த துருவா’. இதுல என்னன்னா... அதுலயும் நான் வில்லிதான். அப்பவே நான் வில்லிதான்!
என்ன... இயல்பான என் கேரக்டருக்குப் பொருந்தாத கேரக்டர்தான். ஆனாலும் வில்லியா நடிச்சேன். வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம். இந்தியும் எனக்குப் பிரச்சினை இல்லாத மொழி. காலேஜ்ல என் செகண்ட் லேங்க்வேஜ் இந்திதான். தவிர, விஜயநகரத்துல நிறைய இந்தி தோழிகள் இருந்தாங்க. அதனால இந்தி கஷ்டமாவே இல்ல.
படம் பண்ணிட்டிருக்கேன். பாத்தா... காலேஜ் ஓபனாயிருச்சு. ஆனா எப்படி நடுவுல போகமுடியும்? அந்த இடத்துலதான் என் படிப்பு நின்னுச்சு. அப்புறம்... ஒருவழியா படம் முடிஞ்சிச்சு. அடுத்தாப்ல படம் வந்தாலும் ஒரு பயம்.
ஏன்னா... ஹேமமாலினி நடிகை இருந்தாங்களே... அனந்தசுவாமின்னு நினைக்கிறேன். அவர்கிட்ட அஞ்சு வருஷ அக்ரிமெண்ட் கொடுத்து, அதனால பெரிய பிரச்சினையெல்லாம் வந்துன்னு இருந்ததால, இந்திப் படம் பண்றதுக்கு ஒரு பயம்.
எங்க அப்பாவும் இப்படி அக்ரிமெண்ட் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தாரு. அவங்களும் என்னை கண்ட்ரோலுக்குக் கொண்டு வரப் பாத்தாங்க. ’பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப்போறோம்’ அப்படி இப்படின்னு சொல்லி ஒருவழியா கேன்சல் பண்ணிட்டு வந்தோம். அந்தப் படத்துக்கு கொடுத்த சம்பளத்தையும் அக்ரிமெண்ட் போட்டிருந்தவர்கிட்டயே கொடுத்துட்டு வந்துட்டோம். அப்புறம்தான் அப்பாடான்னு இருந்துச்சு’’ என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் சத்யப்ரியா.
- நினைவுகள் தொடரும்
சத்யப்ரியாவின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago