- மானா பாஸ்கரன்
என்னுடைய 20-வது வயதில் பாலகுமாரன் எழுத்து எனக்கு அறிமுகமானது. சுஜாதாவை சிலாகித்து… அவரது நைலான் கயிறு தொடங்கி… ’கணையாழி’யின் கடைசிப் பக்கம் வரையில் தேடித் தேடிப் படித்து வந்த எனக்கு, ஒரு தேன் தேதியில்தான் பாலகுமாரன் எழுத்து அறிமுகமானது. நான் அதுவரையில்… ரசித்து மூழ்கிக் கிடந்த சுஜாதாயிஸத்தில் இருந்து…. பாலகுமாரன் எழுத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினேன்.
அந்த வயதில் எனக்கு பாலகுமாரன் எழுத்து மாய நதியாக இருந்தது. சுழன்றடித்தது. நனையாமல் நனைத்தது. மனசுக்குள் குறுகுறுக்க வைத்தது. எனக்கு எதுவுமே தெரியவில்லை என்று என்னிடத்தில் என்னையே சொல்ல வைத்தது.
என்னுடைய அந்த வயதில் நான் பாலகுமாரனை வாசிக்கத் தொடங்கியது போலவே தமிழகத்தில் அந்த வயதில் இருந்த… வாசிப்பு மனநிலை கொண்ட பல இளைஞர்களை அவருடைய எழுத்து கூப்பிட்டது. வெட்டி அரட்டைகளில் அதுவரையில் நேரத்தைக் கரைத்த பல நூறு தமிழ் இளைஞர்கள்… பாலகுமாரனின் கதை மாந்தர்கள் பற்றி உரையாடினார்கள். பாலகுமாரனுடனும் அவரது மாந்தர்களுடனும் பயணித்தார்கள். அந்தப் பயணம்… சிலருக்கு உள் முக தரிசனத்தைக் கொடுத்தது. அவர்கள் அவர்களை அவர்களுக்குள் தேடினார்கள். வாழ்வின் பெருவீதியில் வெளிச்சமுமற்ற… இருளுமற்ற ஒருபொழுதாக பாலகுமாரன் எழுத்து அப்போது என்னைப் போன்ற எல்லா இளைஞர்களுக்கும் இருந்தது.
» பின்னணி இசையின் முன்னணி நாயகன்... இளையராஜா! - தமிழ்த் திரையுலகில் இது ராஜாவுக்கு 44வது ஆண்டு
» ’இசை -இளையராஜா (அறிமுகம்)’ ; ’மச்சானைப் பாத்தீங்களா’, ‘அன்னக்கிளி’ 44 ; இளையராஜா 44
என் வாலிப காலத்தில் பாலகுமாரன் எழுத்து என்னைப்போலவே மற்றவர்களையும் அன்பின் நிழலில் எப்படி உலர்த்தியது? ஆசையின் பேரெழிலை எப்படி எங்களுக்கெல்லாம் அடையாளம் காட்டியது?
திருவாரூரில்… வடக்கு வீதியும் மேல வடம்போக்கித் தெருவும் முட்டிக்கொள்கிற முனையில் விறகுக் கடை வைத்திருந்தார் செல்வேந்திரன். யாராவது கேட்டால் தன்னை ’’ தூரிகா குமாரின் அண்ணன்’’ என்று சொல்லிக்கொள்வார். அவரின் தம்பி குமார், ‘தூரிகா’ என்கிற பெயரில் மினி வேன், லோடு வேன் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் எலோருக்கும் தெரிந்த நபர். எனவே தம்பியை வைத்து தன்னை அறிமுகம் செய்துகொள்வார்.
80-களில் எல்லாம் எங்கள் வீட்டில் விறகு அடுப்புதான். செல்வேந்திரன் கடைக்கு விறகு வாங்கப் போய் அவருக்கு நண்பராகவே ஆகிவிட்டேன். ஒருநாள் சாயங்காலத்தில் அவரிடம் ‘’ஏண்ணே ஒங்கள, ஒங்க தம்பிய சொல்லி அறிமுகப்படுத்திக்கிறீங்க?”’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் இது:
‘’தம்பிதான் வூட்டுக்கு பாத்துப் பாத்து செய்றான். என்னோட அப்பா அம்மாவை பார்த்துக்கறான். என்கிட்டே நண்பன் மாதிரி உறவ கொண்டாடுறான். இதோ தங்கச்சி கல்யாணம் நடக்கப் போவுது. அவந்தான் எல்லாம் செய்றான். ஒன்னால முடியாதுண்ணே…. மனசு கஷ்டப்படாதே… நான் இருக்கேன்னு சொல்லிட்டான்… அதான் பாஸ்கர்’ ‘’ என்றார்.
’’தம்பிய கொண்டாடுற உங்களுக்கு…. தம்பி மேல பொறாமையோ… வீட்டுக்கு மூத்தப் புள்ளையா இருந்துக்கிட்டு நம்மால எதுவும் செய்ய முடியலீயேனு கழிவிரக்கமோ… உங்களுக்கு இல்லையாண்ணே ’’ என்று கேட்டேன்.
‘’எதுவும் இல்லை. அதுக்காக தம்பி செய்யட்டும்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன். என்னால முடிஞ்சதைச் செய்வேன். செய்யாம இருக்க மாட்டேன். அப்புறம் தம்பி மேல பொறாமையோ… என் மேல எனக்கே கழிவிரக்கமோ இல்லையான்னு கேட்டீல்ல…. பாலா சார் வாசகனுக்கு ஒறவுகள நல்லா புரிஞ்சிக்கவும் தெரியும்… அதை கட்டிக்காக்கவும் தெரியும்’’ என்றார்.
நான் வாயடைத்து நின்றேன்.
சாதாரண விறகு வியாபாரி… அவருக்கு சவுக்கை போத்து, சவுக்கைக் குச்சி, உருட்டுக் கட்டை, அடுப்புக் கரி… கோடாரி, அருவாள்… இதுதான் தெரியும் என்று நான் நினைத்த என் நினைப்பை, தனது பேச்சால் அடித்துப் பொளந்துவிட்டார். என்னைப் போலவே அவரும் பாலகுமாரன் ரசிகர் என்பது புரிந்துபோனது.
சற்று இடைவெளிவிட்டு செல்வேந்திரன் சொன்னார்…
‘’பாலா சார் ’பச்சை வயல் மனது’ படிங்க பாஸ். மனுசன் கொன்னெடுத்துடுவார். காசு குடுத்து அவரோட புத்தகத்த வாங்கிப் படிக்கிறவனுக்கு ஒறவுகளப் பத்தி… பாடம் எடுக்கறத்துக்கு இன்னிக்கு தமிழ்நாட்டுல பாலா சாரவிட்டா வேற ஆளேயில்ல பாஸ். அப்புறம் என்னமோ கேட்டீங்களே… பொறாம கழிவிரக்கம் கண்றாவி… இதெல்லாம் என்கிட்டேயும் இருந்திச்சு பாஸ். நான் ஆயன்காரன்புலத்துலேர்ந்து லோடு லோடா லாரில வெரவு கொண்டாந்து எறக்குற மாதிரி என்கிட்டேயும் லோடு லோடா... நீ கேட்ட கண்றாவியெல்லாம் இருந்திச்சு. பாலா சார் எழுத்து என்கிட்டேர்ந்து அத வெரட்டிட்டு.
என்னோட எச்சிப் பாலை குடிச்சவந்தானே என் தம்பி…. அவன எப்படி தப்பா பாக்க முடியும் பாஸ்?
பாஸு ஒண்ணு தெரியுமா? கூடப் பொறந்தவந்தான் கடவுள் குடுத்த முதல் சிநேகிதன். இத நான் சொல்லல. பாலா சார் கரையோர முதலையிலயோ…. அகல்யாவிலயோ…. சொன்னது...’’
ஒரு எழுத்தாளனின் எழுத்து இப்படியும் மேஜிக் நிகழ்த்துமா?
எட்டாங்கிளாஸ் தாண்டாத…. அந்த வெறகு வியாபாரி என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றார்.
பாலகுமாரன் என்கிற படைப்பாளி ஜெயித்த இடம் இதுதான். இங்கேதான்.
சாதாரணர்களின் மனசுக்குள் புகுந்து…. அவர்களை பளீர் என புளி போட்டு விளக்கி வைத்த நாச்சியார்கோயில் குத்து விளக்காக்கி விடுகிற எழுத்தும் அவரும் ஜெயித்த இடம் இதுதான்.
***** *****
சமீபத்தில் திருவாரூருக்குப் போனபோது… விறகுக்கடை செல்வேந்திரன் காலமாகிவிட்டதாக சொன்னார்கள். ஓடம்போக்கி பாலத்துக்கிட்டே இருந்த வாசன் கஃபேயில் காபி குடித்துவிட்டு இறங்கியபோது, கடை வாசலில் யதேச்சையாக ’தூரிகா’ குமாரை சந்தித்தேன். கட்டிப்பிடித்துக் கொண்டான்.
‘’அண்ணன், போன நவம்பர் மாசத்துல எறந்துட்டாருண்ணே… கடைசி வரைக்கும் சந்தோஷமாதான் இருந்தாரு. எங்க அண்ணனுக்கு ஒரே மகன். அவன் நரிமணத்துல ஓஎன்சிஜியில வேல பாக்குறான். கல்யாணம்லாம் ஆகி அவனுக்கு ஒரு பொண் கொழந்த…. பேரு அகல்யா. எங்கண்ணந்தான் பேரு வெச்சாரு’’ என்றார்.
நான் சென்னை திரும்பி... மீண்டும் ஒரு முறை ’அகல்யா’வை படிக்க ஆரம்பித்தேன்!
- எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள் இன்று (15.5.2020).
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
35 mins ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago