எந்த வேடமாக இருந்தாலும் அதில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் திறமை... ‘பசி’ சத்யாவுக்கு உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில், இரண்டே காட்சிகள் வந்தாலும் மக்களின் மனதில் பதியும்படி நடிப்பதில் வல்லவர். சோகமான காட்சியாக இருந்தாலும் காமெடியான சீனாக இருந்தாலும் ‘பசி சத்யா நடிப்பு பிரமாதம்’ என்று எல்லோரும் பாராட்டுவார்கள். அதுதான் ‘பசி’ சத்யா.
'RewindWithRamji' வீடியோ பேட்டிக்காக அவருக்கு போன் செய்தபோது, ‘’நானெல்லாம் சின்ன நடிகை சார். என்னையா பேட்டி எடுக்கக் கேக்கறீங்க?’’ என்று வெள்ளந்தியாகக் கேட்டார். ‘நடிகைல சின்ன நடிகை என்ன, பெரிய நடிகை என்னம்மா? நீங்க எவ்ளோ வருஷமா இருக்கீங்க? எப்படிப்பட்ட கேரக்டர்லாம் பண்ணிருக்கீங்க?’ என்று பட்டியலிட்டுச் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டார்.
இப்படி ‘பசி’ சத்யா அளித்த பேட்டி முழுவதுமே நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவே இல்லை. மளமளவென பதில் சொல்லிக்கொண்டே இருப்பதும் அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, அதற்குள்ளேயும் சென்று விவரமாய் விளக்குவதும் என ‘பசி’ சத்யாவின் பூரணத்துவமான பேட்டியாக அமைந்ததற்குக் காரணம்... ‘பசி’ சத்யாதான்!
‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' வீடியோ நிகழ்ச்சிக்காக, ‘பசி’ சத்யா அளித்த பேட்டியின் எழுத்தாக்கம் இது.
‘’சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னுதான் நான் என்னைச் சொல்லிக்குவேன். ஏன்னா... சினிமான்னாலே ஒரு அழகு, பொலிவு. அப்படித்தானுங்களே! அந்தக் காலத்துலேருந்தே அப்படித்தானே பாத்துக்கிட்டிருக்கோம். அதவது, சினிமால ஹைட்டு, வெயிட்டு, ஒயிட்டுன்னு இருக்கணும். இதுல எதுவுமே எங்கிட்ட கிடையாது.
சின்ன வயசிலிருந்தே நாடகத்துல நடிச்சிருக்கேன். நாடகம்னா இசை நாடகம். சொந்த ஊர் மதுரை எனக்கு. ஸ்கூல்ல படிச்சிக்கிட்டே நாடகத்துல நடிச்சேன். எந்த நாடகமா இருந்தாலும் அதுல எனக்கு ஏதாவது ஒரு வேஷம் கொடுத்துருவாங்க. ‘புலந்திரன்’ன்னு பாலபார்ட் வேஷமெல்லாம் போட்டு நல்லா நடிக்கிறேன்னு பேர் வாங்கியிருந்த சமயம் அது.
இசை நாடகத்துல நம்ம ‘டணால்’ தங்கவேலு அண்ணன் அவங்களைப் போல உள்ள நடிகருங்க வேஷம் கட்டுறதை பெரிய மரியாதையா நினைப்பாங்க. மதுரைல நிர்மலா ஹையர் செகண்டரி ஸ்கூல்னு இருக்கு. அங்கே ஒரு விழா... ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!’, ‘இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தா, இந்து மகா சமுத்திரத்தை இங்கேருந்தே தாண்டிருவேன்’னு தாவி, நான் விழுந்துட்டேன். ஆனாலும் அதை சமாளிச்சு நான் ஆடினேன். இப்படி நிறைய மெடல் வாங்கியிருக்கேன். மெடலை நெஞ்சுல குத்திக்கிட்டு, கம்பீரமா மதுரை வீதில நடந்துவரும்போது, ஆறாவதோ ஏழாவதோ படிச்சிட்டிருக்கேன்.
அப்பா பேரு ஜானகிராமன். கலைல ரொம்பவே ஆர்வம். ஆனா அவர் சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலைல இருந்தாரு. அம்மா ராஜாமணிம்மா. கர்நாடக சங்கீதம் தெரியும். பிரமாதமாப் பாடுவாங்க. அதனால எனக்கும் அப்படியே வந்துருச்சு. அப்பாவும் ரொம்ப என்கரேஜ் பண்ணினார்.
அப்புறம்... அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றலாச்சு. அதனால நாங்க இங்கே வந்தோம். இங்கே, அப்பாவுக்கு நண்பர் ஒருத்தர் அறிமுகமானார். நான் பத்தாவது வரைதான் படிச்சேன். அமெச்சூர் நாடகம்னு சொல்லுவாங்களே... அந்த நாடகத்துல அந்த நண்பரோட பொண்ணு நடிச்சாங்க. அதுல காமெடி வேஷம் போடுற நடிகை ஒருநாள் வரலை. அப்போ அப்பாகிட்ட அவர் நண்பர், ‘உன் பொண்ணு நடிக்கலாமேப்பா’ன்னு சொன்னார். அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.
அதுக்குப் பிறகு ரெண்டேநாள்ல, வசனமெல்லாம் பாடம் பண்ணி, கிருஷ்ண கான சபால மேடையேறி நடிச்சேன். அந்த நாடகம்... ‘மனிதருள் மாணிக்கம்’. இந்த டிராமாவை என்னால மறக்கவே முடியாது. ஏன்னா, நாடகத்துக்கு தலைமை வகிச்சது யார் தெரியுமா? நம்ம சிவாஜி ஐயா.
சிவாஜி ஐயாவுக்கு முன்னாடி நிக்கவே பயப்படுவாங்க. ஆனா அந்த வயசுல எனக்கு எதுவும் தெரியல. நடிச்சு முடிச்சேன். மேடையேறின சிவாஜி ஐயா, ‘இந்தா குட்டி இங்கே வா’ன்னு என்னைக் கூப்பிட்டார். ’இந்தப் பொண்ணு எதிர்காலத்துல நல்லா வருவா’னு ஆசீர்வாதம் பண்ணினார். ஆனா அப்போ எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆசையெல்லாம் இல்ல.
அதுக்குப் பிறகு தொடர்ந்து நாடகங்கள். அப்பலாம், அமெச்சூர் நாடகம் நிறைய நடக்கும். ஒரு டிராமால ஹீரோயின், இன்னொரு டிராமால வில்லி, இன்னொன்னுல காமெடி ரோல்னு பண்ணினேன். சென்னைல டிராமா போடாத ஏரியாவே இல்ல.
இந்த சமயத்துலதான் கல்யாணமும் ஆச்சு. அதுக்குப் பிறகு நடிக்கலாமா வேணாமானு யோசனை இருந்துச்சு. அந்த யோசனைல ரெண்டு குழந்தைங்களும் பொறந்துருச்சு. அதுக்கு அப்புறம், நிறைய பேர் நடிக்கக் கூப்பிட்டாங்க. கணவரும் சம்மதிச்சார். திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சேன். வாய்ப்புகள் வரணும்னா நல்ல மனிதர்கள் தேடி வரணும். ‘இவங்க நல்லா நடிப்பாங்க’ன்னு நம்ம மேல நம்பிக்கை வைக்கணும். அப்படித்தான் எனக்கு வாய்ப்புகள் கிடைச்சிச்சு.
’விதியின் விளையாட்டு’, ‘ஜமீன் ராணி’ன்னு நாடகத்துலலாம் நடிச்சேன். சங்கிலிமுருகன் சார் கம்பெனி நாடகங்கள்லயும் நடிச்சேன். ‘சக்கரைப்பந்தல்’னு நாடகம். அந்த சமயத்துலதான், ‘தேனாம்பேட்டைல ஒரு பொண்ணு இருக்கு. வசனம்லாம் நல்லாப் பேசும்’னு சொல்லி வந்த வாய்ப்புதான்... திரைப்பட வாய்ப்பு. முதல் படம்... ‘நேற்று இன்று நாளை’. எம்ஜிஆர் ஐயாவோட நடிச்சேன். ப.நீலகண்டன் ஐயாதான் டைரக்ஷன்.
முதன்முதல்ல கேமிரா முன்னாடி நின்னேன். நடிச்சேன். டயலாக்லாம் பேசி நடிச்சேன். எல்லாராலும் பாராட்டப்பட்டேன். அங்கே சிவாஜி ஐயா... இங்கே எம்ஜிஆர் ஐயா.
இதுக்கு அப்புறம் இன்னொரு படம்... ‘முயலுக்கு மூணு கால்’. எல்லா காமெடி நடிகர்களும் நடிச்சிருந்தாங்க. சத்யப்ரியா வில்லி. பானுசந்தர்லாம் நடிச்சிருப்பார். இதுல குறிப்பிட்டுச் சொல்லணும்னா... ஒரு வேடிக்கை... இந்தப் படத்துல மனோரமா ஆச்சிக்கு நான் அம்மா. எனக்கு கணவர் வி.கே.ராமசாமி ஐயா. நான் அம்மா கேரக்டர்னெல்லாம் யோசிக்கலை. ஒரு வாய்ப்பு. சிறப்பாப் பண்ணிடணும்னு ஒத்துக்கிட்டேன்.
இன்னொரு முக்கியமான விஷயம்... சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சிருக்கணும். எஸ்.என்.பார்வதிம்மா, காந்திமதி அக்கா, வி.ஆர்.திலகம்னு பலரையும் கேட்டிருக்காங்க. ஆனா அவங்களுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது. எனக்கு தெரியும். ஸ்கூல் படிக்கும்போது ஓட்டிருக்கேன். ஆனா அவ்வளவா தெரியாது.
15 நாள் இருக்கு ஷூட்டிங்குக்கு. கத்துக்குவோம்னு ஒரு நம்பிக்கை. தினமும் வீனஸ் காலனில சைக்கிள் பயிற்சி. ஐதராபாத்ல ஷூட்டிங். நல்ல ஹோட்டல்ல தங்கியாச்சு. முதல்நாள் வி.கே.ஆர். அப்பாவோட ஷூட்டிங். அடுத்தநாள் மனோரமா ஆச்சியோட நடிச்சாச்சு. மூணாம் நாள்... சைக்கிள் சேஸிங். லேடீஸ் சைக்கிள் கொண்டாந்தாங்க. நடுவுல ‘பார்’ இல்லாம இருக்குமே... அது! ஆனா எனக்கு பார் இருக்கற சைக்கிள் ஓட்டித்தான் பழக்கம். அதுதான் வேணும்னு கேட்டேன். ‘இல்லம்மா, இதான் லேடீஸ் சைக்கிள். இதைத்தான் ஓட்டணும்’னு சொன்னாங்க.
அடுத்தாப்ல... ‘சரி ஓட்றேன்... ஒரு ஸ்டூல் வேணுமே..’னு கேட்டேன். ’எதுக்கு’ன்னு கேட்டாங்க. ‘அதுல ஏறிட்டுதாங்க, நான் சீட்ல உக்கார்ந்து பெடல் போடுவேன்’னு சொன்னேன். சரின்னு ஸ்டூல் போட்டாங்க. ஏறிக்கிட்டேன். ஓட்டினேன். கொஞ்ச தூரம் போனதும் இறங்கச் சொன்னாங்க. நான் ‘ஸ்டூல் கொடுங்க. அப்பதான் இறங்கமுடியும்’னு சொன்னேன்.
வேற வழி... அப்புறம் திரும்பவும் ஸ்டூல் போட்டாங்க... சைக்கிளை விட்டு இறங்கினேன். எல்லாரும் சிரிச்சிட்டாங்க’’ என்று சொல்லிவிட்டு, கலகலவென சிரிக்கிறார் ‘பசி’ சத்யா.
- நினைவுகள் தொடரும்
‘பசி’ சத்யாவின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண:
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago