சென்னை, பெரியமேடு கால்நடை மருத்துவமனை எதிரில் இருக்கும் பவானி அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு கால பூஜை செய்துவருபவர் திருநங்கை அன்பம்மா.
கடந்த ஏப்ரல் 30 அன்று இவர் வசிக்கும் வீட்டுக்கு வந்த சுகாதாரத் துறை ஊழியர்கள், பக்கத்தில் இருக்கும் தெருக்களில் இருக்கும் சிலருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அதற்கான பரிசோதனையே செய்துகொள்ளும்படியும் கூறியிருக்கின்றனர்.
“இதையடுத்து கரோனா பரிசோதனையை நான் செய்துகொண்டேன். மே 1 அன்று எனக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகச் சொன்ன சுகாதாரத் துறை ஊழியர்கள் என்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டனர். தினமும் எனக்குப் பரிசோதனைகள் நடக்கும். தினமும் மூலிகைச் சாறு, வேப்பஞ்சாறு போன்றவற்றை எனக்கு அளிப்பார்கள். மஞ்சள் கலந்த இஞ்சிச் சாறு போன்றவற்றை எனக்குக் கொடுத்தனர். அதோடு பால், முட்டை போன்ற சத்தான உணவும் வழங்கப்பட்டன. 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம் என்றவர்கள் கடந்த மே 10-ம் தேதி அன்றே என்னைப் பல கட்டங்களில் பரிசோதித்துப் பார்த்தபின், என்னையும் இன்னும் சிலரையும் கரோனா பாதிப்பில்லை என்று ஆம்புலன்ஸில் எங்களின் இருப்பிடத்துக்கே வந்து இறக்கிவிட்டனர். இன்னும் 14 நாள்களுக்கு வீட்டிலேயே தனிமையில் இருக்கச் சொல்லி எனக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
பவானி அம்மனுக்குப் பூஜை செய்து நைவேத்தியம் படைப்பதை தினமும் ஆத்மார்த்தமாக கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருபவள் நான். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் கொடுப்பதில் என்னால் எந்தப் பாதிப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருக்கிறேன். என் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்னிடம் மிகவும் அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த என்னை, அவர்கள் தீண்டத்தகாதவள் போல் நடத்துவதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குணமான என்னிடம் சாதாரணமாகப் பேசுவதற்குக் கூட அவர்களுக்கு மனமில்லாமல் கதவை அடைத்துக் கொண்டது, கரோனா பாதிப்பை விடக் கொடூரம். கரோனா விழிப்புணர்வை வீட்டுக்கு வீடு அளிப்பவர்கள், அதிலிருந்து மீண்டவர்களையும் கரிசனத்தோடு அன்பாக நடத்த வேண்டும் என்னும் விழிப்புணர்வையும் அளிக்க வேண்டும்.
என்னைப் பாதித்த கரோனா வேறு யாரையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் அதிலிருந்து மீண்டாலும், என் தம்பி அளிக்கும் ஒருவேளை உணவை இரண்டு வேளைக்கு உண்டு வருகிறேன். திருநங்கை தோழிகள் சிலர் வந்து கொடுத்த பொருள்களும் தீர்ந்துவிட்டன. இன்னும் சில நாள்களுக்குக் கோயிலையும் திறக்க முடியாது. யாராவது மளிகைப் பொருள்கள், அரிசி போன்றவற்றை வழங்கினால் நானே கூட சமைத்து சில நாள்களை ஓட்டிவிடுவேன்” என்கிறார் அன்பம்மா.
“கரோனா பாதிப்பிலிருந்து நீங்கியவர்களின் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் பிளாஸ்மா, கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உதவும் சிகிச்சைக்குப் பயன்படும். அதுபோன்று அடுத்தவர்களுக்கு உதவும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் செய்வீர்களா?” என்றோம்.
“என் மூலமாக மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்றால் நிச்சயமாகச் செய்வேன்” என்றார் அன்பம்மா.
சக மனிதர்களின் நட்புக்கு அன்பம்மா காத்திருக்க, அன்பம்மாவுக்காக பவானி அம்மனோ கோயிலில் காத்திருக்கிறாள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago