‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்துக்கு வரவேற்பு; மதுக்கடைகளைத் திறந்ததால் அரசு மீது அதிருப்தி!- உளவுத்துறை எடுத்த ரகசிய சர்வே

By குள.சண்முகசுந்தரம்

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துச் செயல்படுத்திய ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக உளவுத் துறையினர் எடுத்த சர்வேயில் தெரியவந்திருக்கிறது.

பொதுமுடக்கம் அறிவித்ததுமே, உணவு, மருத்துவம், புலம்பெயர்தல் உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்கான உதவிகளைக் கேட்போருக்கு உதவிடும் வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார் ஸ்டாலின். இதற்காகச் சென்னையில் தனியாக ஓர் அலுவலகமே தொடங்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அந்தந்த மாவட்டத் திமுக செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இதற்காகக் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு அவை அனைத்தும் சென்னை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டன.

‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்துக்காக அறிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு உதவி கேட்டு வருபவர்களின் விவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு நாளும் அந்தந்த மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். மாவட்ட அலுவலகங்களிலிருந்து அந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகரத் திமுக செயலாளர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் என்ன உதவி கேட்டிருக்கின்றார்களோ அந்த உதவியைச் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று செய்து கொடுத்துவிட்டு அந்தத் தகவல்களை உடனுக்குடன் மாவட்ட அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட அளவில் தொகுக்கப்படும் இந்தத் தகவல்கள் அனைத்தும் தினந்தோறும் சென்னை தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளபடி நிவாரண உதவிகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்குக் கிடைத்ததா என்பதை அறிய அவ்வப்போது ஸ்டாலினே பயனாளிகள் சிலருக்கு போன் போட்டு விசாரிக்கவும் செய்கிறார். இப்படி ஒவ்வொரு ஒன்றிய, நகரத் திமுக செயலாளரும் தினமும் குறைந்தபட்சம் நூறு பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

கட்சிப் பாகுபாடு இல்லாமல் அழைத்தது யாராக இருந்தாலும் அத்தனை பேருக்கும் திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கி வருவதால் ஆங்காங்கே அதிமுகவினரும் திமுகவினரின் உதவிகளைப் பெற்று வருகிறார்கள். இது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் தங்கள் வீட்டுப் பெண்கள் மூலமாக ‘ஒன்றிணைவோம் வா’ இயக்க அலைபேசி எண்ணை அழைப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுதவிர, தமிழகம் முழுவதும் 22 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த நகரங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு தினமும் மதியம், இரவு இரு வேளையும் உணவு வழங்கும் பணியும் திமுகவால் முடுக்கிவிடப்பட்டது. இதில், திமுகவினரை நேரடியாக ஈடுபடுத்தினால் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் உதவிபெறத் தயங்குவார்கள் என்பதால் அந்தந்தப் பகுதியில் உள்ள தொண்டு நிறுவனங்களின் கையில் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு உணவை வழங்கும் வேலைகளில் அந்தந்தப் பகுதி திமுகவினரும் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு ஆகும் செலவுகள் அனைத்தும் திமுக தலைமையிலிருந்து நேரடியாகத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இப்படி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குறிப்பிட்ட 22 நகரங்களில் மட்டும் உணவு வழங்கி வந்த திமுக, தற்போது புதிய நகரங்களைத் தேர்வு செய்து அந்தப் பகுதிகளில் உணவு வழங்கும் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. கட்சிப் பொறுப்பாளர்களிடம் உரையாடுவது போல் தினமும் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியில் இருக்கும் ‘ஐபேக் டீம்’ மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடமும் காணொலி வாயிலாகப் பேசி அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார் ஸ்டாலின்.

‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பிலிருந்து 15 லட்சம் அழைப்புகள் வரப்பெற்றதாகவும் அவர்களுக்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்து கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், “இன்னமும் பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அப்படி அழைப்பவர்களின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் இனிமேல் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தப்படும்” என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படி, முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்கள், திமுக மக்கள் பிரதிநிதிகள் மூலமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்ற விவரத்தையும் ஐபேக் டீம் கண்காணிக்கப் போகிறதாம். இந்த மனுக்களுக்கு அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அதையும் மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கத் திமுக தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே திமுக கரோனா நிவாரண உதவிகள் வழங்குவதில் கரிசனம் காட்டுவதாகவும் சர்ச்சைகள் வெடிக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுக இப்போது எந்த உதவியும் செய்யாமல் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் ‘கவனித்துக்’ கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் பேச்சு ஓடத்தான் செய்கிறது.

இந்த நிலையில், திமுகவினரின் கரோனா நிவாரண உதவிகள் குறித்து தமிழகம் முழுவதும் ரகசிய சர்வே எடுத்துவரும் உளவுத்துறையினர், இந்தப் பணிகளில் திமுகவினருடன் இணைந்து பணியாற்றும் கட்சிக்கு அப்பாற்பட்ட தொண்டு நிறுவனங்கள் குறித்தும் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அதேசமயம், ‘ஸ்டாலின் அறிவித்த ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கமானது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேபோல், பொதுமுடக்க சமயத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தது பெண்கள் மத்தியில் அதிமுக அரசு மீது திடீர் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று அரசுக்குத் தகவல் தந்திருக்கிறதாம் உளவுத்துறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்