தோல்வி எப்போதுமே தோல்வியைத் தொக்கிக்கொண்டே இருக்காது. அது வெற்றியை ருசித்தே தீரும் என்றொரு தத்துவம் உண்டு. இதுகுறித்து பிறகு பார்க்கலாம். எண்பதுகளின் சினிமா பொற்காலம் என்பார்கள். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல், ரஜினி, இளையராஜா, வைரமுத்து, மோகன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என்றொரு கூட்டமே அப்போது உண்டு. அந்த வெற்றிக் கூட்டத்தில் ஒருவர்... விசு.
இரண்டெழுத்துக்காரர்தான். ஆனாலும் பலப்பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர். நாடகத்தில் இருந்து வந்தவர்தான். அதேசமயம் நாடகபாணி படமாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் மூலம் யதார்த்தம் பேசியவர். கே.பி. எனும் பட்டறையில் இருந்து வந்த விசு, பழைமையையும் மறக்காமல், புதுமையையும் புறந்தள்ளாமல் இரண்டையும் களமாக்கி பேலன்ஸ் செய்து, பேலன்ஸுடன் நின்று ஜெயித்துக் காட்டியவர்.
82ம் வருடம் ’மணல் கயிறு’ படம்தான் முதல் இயக்கம். அதையடுத்து ’டெளரி கல்யாணம்’, ’புயல் கடந்த பூமி’, ’ராஜதந்திரம்’, ’வாய்ச்சொல்லில் வீரனடி’, ’நாணயம் இல்லாத நாணயம்’, ’அவள் சுமங்கலிதான்’ என்று வருடந்தோறும் படங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். 86ம் ஆண்டு எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியான திரைப்படத்தை வழங்கினார். எல்லோரும் என்றால் எல்லா மொழிக்காரர்களும்! அதுதான்... சம்சாரம் அது மின்சாரம். 86ம் ஆண்டு வந்த படம்.ஆனாலும் இன்னமும் ஃப்ரெஷ்ஷான ட்ரீட்மெண்ட்டாகவே கொண்டாடப்படுவதுதான் படத்தின் ஆகச்சிறந்த வெற்றி.
ஏவிஎம். சரவணன் விசுவை அழைத்து, படம் பண்ணலாம் என்று சொல்ல, பல கதைகள் சொன்னார். எதுவும் பிடிக்கவில்லை. வேற, வேற, வேற என்று சொல்லிக்கொண்டே வந்தார். அடுத்து இன்னொரு கதையைச் சொன்னார். ‘அட... நல்லா இருக்கே’ என்றார் ஏவிஎம்.சரவணன். ‘சார்... இது டிராமாவாப் போட்டு செம ஹிட்டு’ என்றார். ‘அப்புறமென்ன’ என்றார். ‘ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி படமா வந்துச்சு. உறவுக்கு கை கொடுப்போம்னு! படம் பெயிலியர்’ என்று விவரித்தார். ‘அப்புறமென்ன. ஓடலதானே. நாம ஓடவைப்போம்’ என்றார் உறுதியுடன்.
அதுமட்டுமா. கதையில் உள்ள வேலைக்காரப் பெண்மணி கேரக்டரை இன்னும் விரிவுபடுத்தச் சொன்னார். அப்படியே செய்யப்பட்டது. படமாக்கப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்டது. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம், மேக்ஸிமம் என்பதையெல்லாம் தாண்டிய வசூலைக் குவித்துத் தீர்த்த படம், ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படமாகத்தான் இருக்கும்.
’இவ என் பொண்ணு. பேரு சரோஜினி. கவிக்குயில் சரோஜினி நாயுடு பேரை வைச்சிருக்கேன். இது சிதம்பரம். வ.உ.சி, நினைவா வைச்சிருக்கேன். ரெண்டாவது பையன் சிவா. சுப்ரமணிய சிவாவை ஞாபகப்படுத்துற விதமா வைச்சிருக்கேன். இதான் என் மூணாவது பையன் பாரதி. இவனுக்கு அந்த மகாகவியோட பேரை ஏண்டா வைச்சோம்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கேன்’ என்று சொல்வதில் இருந்து தொடங்கும் கதையில், கதையும் குடும்பமும் சூழலும் பாசமும் எல்லா இடங்களுக்குள்ளேயும் காமெடியும் என 440 வோல்டேஜில் சரசரவென பாய்ந்துகொண்டிருக்கும் திரைக்கதை, விசுவின் டச்!
பாடல்களுக்குப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், இசைக்கு அதிகம் முக்கியத்துவம் தராமல், கேமிரா கோணங்களுக்கு அதிக மெனகெடல் இல்லாமல், வசனங்களுக்கும் நடிப்புக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பதில் விசு எப்போதுமே சூரர். அது சம்சாரம் அது மின்சாரத்திலும் நிரூபணமாகியிருக்கும்.
ரகுவரன், சந்திரசேகர், காஜாஷெரீப் மகன்கள். கமலாகாமேஷ் மனைவி. ரகுவரனின் மனைவி லட்சுமி. சந்திரசேகரின் மனைவி மாதுரி. மகள் இளவரசி. கிறிஸ்துவ திலீப்பைக் காதலிப்பார். திலீப்பின் அப்பா கிஷ்மு. வீட்டு வேலைக்காரப் பெண்மணியாக கண்ணம்மா... மன்னிக்கணும் மனோரமா! ஒரு வீடு. அவ்வளவுதான். மிகமிகக் குறைந்த பட்ஜெட்டில், ஆனால் மிக மிக உன்னதமான படமாக அமைந்தது ச.அ.மி!
தொட்டதற்கெல்லாம் கணக்குப் பார்க்கும் ரகுவரன். வேற்று மதத்தைச் சேர்ந்தவரைக் கல்யாணம் பண்ணுவதென்றால், பத்துப்பைசா கூட செலவு செய்யமாட்டேன் என்று நழுவுகிறார். ‘அப்பா, ஒருவேளை இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்கன்னா, கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்கப்பா. ஆபீஸ்ல பிஎப் லோன் அப்ளை பண்ணனும்’ என்பார் சந்திரசேகர். ‘ஸோ.. தங்கச்சியைக் கரையேத்தறதுக்கு ரெடிங்கறே’ என்பார் விசு, ஊஞ்சலாடிக்கொண்டே! ‘இல்லப்பா, அப்பாவோட பாரத்தைக் கொஞ்சம் சுமந்துக்கலாமேன்னுதான்...’ என்று சந்திரசேகர் சொல்ல, அப்படியே ஷாக்காகி நிற்பார் விசு.
மனைவி லட்சுமி பிரசவத்துக்குச் செல்ல, அங்கிருந்து தொடங்கும் பிரிவும் அப்பாவுக்குக் கொடுத்த கடனும் என எகிறியடிக்க, ‘கோதாவரி, வீட்டுக்கு நடுவே கோட்டைக் கிழிடி’ என்கிற லெவலுக்குப் போகும். ஒரே வீடு இரண்டுவீடாகும். மூத்தமகன் தனியே இருக்க, இளைய மகன் சந்திரசேகருக்கு தம்பி எப்படியாவது பாஸாகிவிடவேண்டும் என்று மனைவியை படிப்புச் சொல்லித்தரச் சொல்ல, அது மனைவிக்கு இடைஞ்சல். அதனால் முட்டிக்கொண்டும் முகம் திருப்பிக்கொண்டும் மாதுரி இருக்க, ஒருகட்டத்தில் பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடுவார்.
அங்கே, காதலனைக் கரம் பிடித்த இளவரசி, மாடர்ன் லைஃப்க்கு ஆசைப்பட, ’தலை நிறைய பூவைச்சுக்கிட்டு, நெத்தி நிறைய பொட்டு வைச்சுக்கிட்டு, தழையத்தழையப் புடவை கட்டிக்கிட்டு வந்ததைத்தான் நான் விரும்பினேன்’ என்று திலீப் சொல்ல, முற்றுகிற சண்டையில், பிறந்த வீட்டுக்கு வந்துவிடுவார் இளவரசி. ‘எனக்கு அவனைப் பிடிக்கலப்பா’ என்பார் அவர். ‘யாரைம்மா, உங்க வீட்டு வேலைக்காரனையா’ என்பார் விசு. தியேட்டரே கைதட்டும் பொளேர் காட்சி அது.
குழந்தை பெற்றுக்கொண்டு லட்சுமி வர, அடுத்தடுத்து நடப்பதுதான் படத்தின் ஹைலைட் பாடங்கள். வழக்கம்போல் விசு படத்து நாயகியின் பெயர் உமா. இதில் லட்சுமிதான் உமா. வீட்டு விஷயங்களையெல்லாம் தெரிந்துகொண்டு, தள்ளி இருந்துகொண்டே, மாமியாரையும் வேலைக்கார கண்ணம்மா மனோரமாவையும் இளவரசியின் மாமனார் கிஷ்முவையும் சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்தி, லட்சுமி செய்யும் நாடகம்தான்... அடுத்தடுத்த தவுசண்ட் வாலா பட்டாசு.
‘அப்ப சேந்து இருந்தோம். செலவு ஷேராயிரும். இப்ப எல்லாமே தனிதானே. இதெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, வீட்டுக்கு நடுவுல கோடு கிழிக்கவே விட்ருக்கமாட்டீங்கல்ல’ என்று நறுக்சுருக்கென குத்தும் லட்சுமியின் வசன உச்சரிப்பும் அவரின் நக்கல் பார்வையும் பார்வையினூடே ரகுவரனைக் கவனிக்கிற கூர்மையும் அப்ளாஸ் அள்ளும்.
‘அது’நடக்கலையே என்று ஏங்கும் மனைவியை ‘கூல்’ செய்ய மதுரைக்கு அழைத்துச் செல்ல, போன இடத்தில் அம்மை போட்டுவிட, அப்போது மனைவியை அன்னையைப் போல் பார்த்துக்கொள்ள, காமத்தை விட அன்பே உயர்ந்தது எனும் முடிவுக்கு மனைவி வர... அந்தக் காட்சிகள் எல்லாமே புதுக்கவிதை. அங்கே ரகுவரனும் இங்கே சந்திரசேகரும் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள்.
வழக்கம் போல கமலாகாமேஷ், அமைதிப்பூங்கா. ஆனால், அந்த வீட்டின் இடிதாங்கி. உணர்ந்து நடித்திருப்பார். நடிப்பில் உன்னதம் காட்டியிருப்பார்.
பத்தாவதை முக்கிமுக்கி பாஸாவதற்குத் திணறும் காஜாஷெரீப், அப்போது வருகிற பெண் நட்பை, காதலென நினைத்து கனவு காண்பதாக இருக்கட்டும், முழுமூச்சில் படிப்பில் கவனம் செலுத்தி பாஸ் மார்க் வாங்குவதாக இருக்கட்டும், அண்ணியிடம் நேரடியாகச் சொல்லமுடியாமல், ‘அம்மா, நான் பாஸான விஷயத்தை என் ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு வரேன்’ என்று தகவல் சொல்லிச் செல்லும் இடமாகட்டும். பயபுள்ள... இன்னும் ஜெயிச்சிருக்கலாம். என்னாச்சு? தெரியலை.
இடைவேளைக்குப் பிறகு, ஒருகால்மணி நேரம் மனோரமாவிடம் பந்தைக் கொடுத்து விளாசச் சொல்லிவிடுவார் விசு. ‘கண்ணம்மா...’ என்று கமலாகாமேஷ் சொல்ல, ‘கம்முன்னு கிட’ எனும் டயலாக், இன்றைக்கும் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. ‘கம்முன்னா கம்மு. கம்முநாட்டி கோ’ என்று மனோரமாவும் கிஷ்முவும் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொற்காசுச் சிதறல் போல், தியேட்டர் சுவர்களில் கைதட்டல்கள் தெறித்துத்தெறித்து, சிரித்துச்சிரித்து எதிரொலிக்கும்.
கணவருக்கு இன்னொரு கல்யாணம் என்று பதைபதைத்து சர்ச்சுக்கு ஓட, வாசலில் ‘உனக்காகத்தாம்மா அப்பலேருந்து டிபன் கூட சாப்பிடாம காத்துக்கிட்டிருக்கேன்’ என்பார் கிஷ்மு. அப்ப கல்யாணம்... கப்சா. பத்திரிகை... உடான்ஸ்... டைவர்ஸ்... அது ரீலும்மா என்று வசனம், அத்தனை ஷார்ப். காரில் மகனும் மருமகளும் கட்டிப்பிடித்திருக்க, டிரைவர் சீட்டில் இருந்தபடி, ‘மை சன். இது சர்ச். நான் ஃபாதர். வீட்ல போய் வைச்சுக்கலாமா’ என்பார் கிஷ்மு. டைமிங், ரைமிங், விசுத்தன வசனம் அது!
பையன் ரகுவரனுக்கு கொடுக்கவேண்டிய கடனைக் கொடுத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்வதும், ரகுவரன் மன்னிப்பு கேட்பதும், அப்போது லட்சுமி பேசும் வசனங்களும் இன்றைக்கு தனிக்குடித்தனங்களாகிப் போன குடும்பங்களுக்கு முள்ளும் அதுவே, மலரும் அதுதான்!
உடைஞ்ச பானை ஒட்டாது. விரிசல் விழுந்துருச்சு. இனியும் சேராது. தள்ளி நின்னு நலம் விசாரிச்சுப்போம். நீ செளக்கியமா, நான் செளக்கியம்னு தள்ளியிருந்து அன்பு பாராட்டுகிற சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்த வாத்தியாராகவே சம்சாரம் அது மின்சாரத்தைக் கொண்டாடினார்கள்; கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்மக்கள்.
படம் பார்க்கும் ரசிகர்களை ‘எப்படா சேரும் இந்தக்குடும்பம்’ என்றும் ’இந்தக் குடும்பம் சேரணுமே...’ என்றும் ஆடியன்ஸ் நகம் கடித்து தவித்து மருகிக் கொண்டிருக்க, அங்கே ஒரு ட்விஸ்ட் திரைக்கதையை வைத்து, தள்ளி நிற்பதே இயல்பு என்கிற நிஜத்தை அறைந்து சொல்லியிருப்பார் இயக்குநர் விசு.
வைரமுத்துவின் வரிகள் வைரமும் முத்துமாக ஜொலித்துப் பதிந்துவிடும் மனதில்! ’ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்துவைத்தாள்’ பாட்டு, ஒருவிதம். ’ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா’ என்று விசு போதையில் தள்ளாடி, ஆடிப் பாடுகிற பாடல் வேறொரு விதம். முத்தாய்ப்பாக, காட்சிகளை கனப்படுத்துகிற அந்த ’சம்சாரம் அது மின்சாரம்...’ எனும் பாடல், வார்த்தைக்கு வார்த்தை கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போகும். சங்கர் கணேஷ் இசையமைத்திருப்பார்கள்.
படம் வந்து ஓடியது. டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் கூட்டமாய் திரும்பிப் போகிற அளவுக்கு ஓடியது. 50 நாளைக் கடந்து 100 நாள் கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டி, சில்வர் ஜூப்ளி என்கிற 175 நாட்களையெல்லாம் கடந்து சக்கைப்போடுபோட்டது.
தெலுங்கு முதலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஷாக்கடித்தது, ரசிகர் மனங்களில்!
சிங்கிள் பேஸ் தகவல் ஒன்று... மனோரமா நடித்த கேரக்டரில், தெலுங்கில் செளகார் ஜானகி, ஆந்திரத்தின் லோக்கல் பாஷை பேசி பொளந்து தள்ளியிருப்பார். ‘இந்தக் கேரக்டரை எனக்கே கொடுத்திருக்கலாமே’ என்று மனம் நொந்து கேட்டார் மனோரமா. காரணம் சொல்லப்பட்டது. சரிதான் என்றாலும் மனம் ஏற்கவில்லை. ‘நல்ல கேரக்டர் தரோம், கவலைப்படாதீங்க ஆச்சி’ என்றது ஏவிஎம். சில வருடம் கழித்து அப்படியொரு லைஃப்டைம் கேரக்டர் கிடைத்தது ஆச்சி மனோரமாவுக்கு. அது... பாட்டி சொல்லைத் தட்டாதே!
இன்னொரு சிங்கிள் பேஸ் தகவல்... சம்சாரம் அது மின்சாரத்துக்கு எங்கிருந்தெல்லாமோ எத்தனையெத்தனையோ விருதுகள். முக்கியமாக, ஜனாதிபதியின் தங்கத்தாமரை விருது.
இதைவிட த்ரீபேஸாக ஒரு தகவல்... கூட்டுக்குடும்பத்தையும் குடும்ப உன்னதத்தையும் சம்சாரம் அது மின்சாரத்தையும் ஜென்மத்துக்கும் மறக்கமாட்டார்கள் தமிழ் ரசிகப் பெருமக்கள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago