’’நதியாவுக்காக எனக்கு ‘டல் மேக்கப்’ போட்டாங்க!’’ - கமலா காமேஷ் மனம் திறந்த பேட்டி 

By வி. ராம்ஜி

‘ஓஹோ... சினிமால இப்படியான செண்டிமெண்டெல்லாம் இருக்கா’னு தெரிஞ்சிகிட்டேன். எந்தக் கேரக்டர்ல நடிக்கிறோமோ அந்தக் கேரக்டருக்கு பிராண்ட் பண்றது... முத்திரை குத்துறது... செண்டிமெண்ட் பாக்கறதுன்னு அப்பதான் புரிபட்டுச்சு சினிமா எனக்கு. கமலாகாமேஷ் அம்மா கேரக்டர் பண்ணிருக்காங்களா. அப்படின்னா போடு அவங்களையேனு முடிவு பண்ணினாங்க. அதிலும் ஏழை அம்மா; பாவப்பட்ட அம்மா. பெரும்பாலும் பணக்கார அம்மாவா நான் நடிச்சதே இல்ல. பாவமான அம்மாதான்’’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் கமலா காமேஷ்.


‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' வீடியோ நிகழ்ச்சிக்காக, நடிகை கமலா காமேஷ், மனம் திறந்து பேசினார். மிக நீண்ட பேட்டியில் தன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, தன் அனுபவங்களை இயல்பாக விவரித்தார்.


கமலா காமேஷ் அளித்த நீண்டதான பேட்டியின் எழுத்தாக்கம் இது:


கமலா காமேஷ் பேட்டி தொடர்கிறது...


’’அழுறதுக்குன்னே ஒரு அம்மாவாதான் நடிச்சேன். எஸ்.பி.முத்துராமன் சொல்லுவார்...’கமலா நீங்க நடிக்கறதுக்கு ஓகே சொல்லிட்டீங்கன்னா, ஹேர் ஒயிட்டும் கிரேயும் கிளிசரின் பாட்டிலும் வாங்கிவைச்சாப் போதும்’னு சொல்லுவார். தவிர, மேக்கப்பும் ரொம்பப் போடமாட்டேன். எனக்கு மேக் - ‘அப்’ கிடையாது. மேக் - ‘டல்’தான். மேக் அப் கிடையாது. மேக் டெளன் தான்.


’மங்கை ஒரு கங்கை’ன்னு ஒரு படம். நதியாவின் வளர்ப்புத்தாயா நடிச்சிருப்பேன். மலையாள டைரக்டர் ஹரிஹரன் தான் டைரக்‌ஷன். முதல்நாள் எனக்கு ஷூட்டிங் நடந்துச்சு. அது டிராலி ஷாட். க்ளோஸப்லேருந்து எடுத்துக்கிட்டு நகரணும் கேமிரா. பர்த் டே சீன் அது.


அப்போ டைரக்டர் கூப்பிட்டார்... ’ஹீரோயின் பளிச்சுன்னு இருக்கணுமா, ஹீரோயின் அம்மா பளிச்சுன்னு இருக்கணுமான்னு கேட்டார். நான் பதறிட்டேன். ‘’சார்... நான் ஏதும் மேக்கப் போடலியே சார்’னு சொன்னேன். ’அதாம்மா. மேக்கப் போடாமலேயே நீங்க பளிச்சுன்னு இருக்கீங்க. கொஞ்சம் டல் பண்ணிக்கோங்க’ன்னு டைரக்டர் ஹரிஹரன் சொன்னார்.


அப்புறம் டல் பண்றேன் பேர்வழின்னு கருப்பா மேக்கப் போட்டுவிட்டாங்க. அன்னிக்கி ஷூட்டிங் முடியறதுக்கு லேட்டாயிருச்சு. நைட் வீட்டுக்குப் போகும் போது மணி ஒண்ணாயிருச்சு. உள்ளே வந்ததும் தூங்கிட்டிருந்த உமா (உமா ரியாஸ்கான்) பயந்து அழுதுட்டா. அப்போ அவ சின்னக்குழந்தைதானே.


இப்படி டல் மேக்கப்பா போட்டுப்போட்டு, சின்னவயசுலயே வயசானவளா மாறிடப் போறேன் சார்னு கிண்டலாச் சொல்லுவேன். இப்போ எனக்கு 72 வயசாவுது. இப்ப வரைக்கும் மூஞ்சில கோடு, கருப்புன்னு எதுவுமில்லை.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தினு பல மொழிகள்ல நடிச்சிருக்கேன். என்ன... எல்லாத்துலயும் சோக அம்மா. அழுகாச்சி அம்மா. ஏழை அம்மா. பாவப்பட்ட அம்மா. என்ன ஒரு கிரெடிட்னா... தமிழ்ப்படத்தை தெலுங்குல எடுப்பாங்க. தமிழில் நான் நடிச்ச அதே கேரக்டர்ல நடிக்கச் சொல்லி தெலுங்குல கூப்பிடுவாங்க. அதேபோல, தெலுங்குல ஒருபடம் நடிச்சிருப்பேன். அதை தமிழ்லயோ தெலுங்குலயோ கன்னடத்துலயோ எடுக்கும்போது, அந்தக் கேரக்டர் பண்றதுக்கு என்னைத்தான் புக் பண்ணுவாங்க. இப்படி நிறைய படம் நடிச்சிருக்கேன். ’குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தைக் கன்னடத்துல எடுத்தப்போ, இங்கே பண்ணின அந்தக் கேரக்டரை அங்கேயும் நான் தான் பண்ணினேன்.


‘மணல் கயிறு’ படம், எனக்கு நல்ல பேர் கிடைச்ச படங்கள்ல ஒண்ணு. இந்த டிராமாலயும் நான் நடிச்சிருக்கேன். டிராமால, முழு ஸ்கிரிப்டும் வசனங்களும் மனப்பாடம் பண்ணிவைச்சுக்கணும். யார் வரலேன்னாலும் அந்தக் கேரக்டரை நான் பண்றதுக்கு ரெடியா இருக்கணும். அப்படியே மைண்ட்ல ஏத்திக்குவேன்.
இதை எஸ்.வி.சேகர் ஒரு ஸ்டேஜ்லயே சொன்னார். ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ டிராமால நடிச்சேன். 150வது ஸ்டேஜ்க்கு விழா எடுத்தாங்க. அப்போ நான் சோவோட டிராமால நடிச்சிட்டிருந்தேன். அந்த விழால டிராமா போடும்போது என்னைக் கூப்பிட்டாங்க. நடிக்கச் சொன்னாங்க. கொஞ்சம் டயலாக்கையெல்லாம் பாத்துக்கறேன்னு சொன்னேன்.


அந்த விழாவுக்கு டைரக்டர் ப.நீலகண்டனும் கமலும் சீஃப் கெஸ்ட்டா வந்திருந்தாங்க. அப்போ டிராமா முடிஞ்சதும் ஷீல்டெல்லாம் கொடுத்தாங்க. அப்போ எஸ்.வி.சேகர், ‘கமலா காமேஷ் முன்னாடி எங்க டிராமால இருந்தாங்க. இப்போ இல்ல. இருந்தாலும் இன்னிக்கி நடிக்கக் கூப்பிட்டப்போ, வந்து நடிச்சுக் கொடுத்தாங்க. பிரமாதமான நடிகை’ன்னு சொன்னார்.


அதைக் கேட்ட ப.நீலகண்டன் சார் மறுபடியும் மைக் பிடிச்சு, ‘சினிமால ரீடேக் வாங்கிடலாம். டிராமால அதெல்லாம் முடியாது. இவங்க மிகச் சிறப்பா நடிச்சிருந்தாங்க. அவங்க நடிப்பு, ரொம்ப இயல்பா இருந்துச்சு. இப்படியொரு ஆர்ட்டிஸ்ட்டை நான் பார்த்தது இல்ல.


ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. மறக்கவே முடியாது’’ என்று சொல்லி நெகிழ்கிறார் கமலா காமேஷ்.


- நினைவுகள் தொடரும்


- கமலா காமேஷின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்