’’ ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் முக்கியமான சீன். தியாகராஜன் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுப் போவார். சாமான்களையெல்லாம் தூக்கிவீசுவார். மிகப்பெரிய ஷாட். ஒரே ஷாட். தமிழிலும் தெலுங்கிலும் ஒரேசமயத்தில் எடுக்கிறார்கள். மொத்த யூனிட்டும் இருக்கிறது. இதில் அழுதுகொண்டே நடிக்கவேண்டும். எனக்கோ அழுகையே வரவில்லை. டென்ஷனான பாரதிராஜா சார் பளார்னு அறைந்துவிட்டார். அந்த அவமானத்திலேயே நடித்தேன். முடிந்ததும் அப்படியொரு அமைதி. டைரக்டர் உட்பட எல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். அடிச்சதால வலியில்லை. அவமானப்பட்டதுதான் பெரிய வலியா இருந்துச்சு’’ என்று தன் அனுபவங்களை சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார் கமலா காமேஷ்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindwithRamji' வீடியோ நிகழ்ச்சிக்காக, கமலாகாமேஷ் நீண்டதான பேட்டியளித்தார். தன் மொத்த வாழ்க்கையையும் ஒரு கதை போல், வெகு சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.
அந்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது:
கமலா காமேஷ் பேட்டி தொடர்கிறது...
» ’’விஜயகாந்த் அற்புதமான மனிதர்; நட்பை மதிப்பவர்!’’ - நடிகர் சிவசந்திரன் மனம் திறந்த பேட்டி
» ’’பாரதிராஜா பளார்னு அறைஞ்சார்; எனக்கு அழுகையே நிக்கலை!’’ - கமலாகாமேஷ் பிரத்யேகப் பேட்டி
‘’’அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அந்தக் காட்சியை எடுத்து முடித்த போது இரவு மணி 1.30. அப்பாடான்னு வந்து உக்கார்ந்தேன். ‘கோபாலண்ணே. டீயோ காபியோ இருந்தா கொடுங்கண்ணே’ என்று கேட்டேன். டீ கொடுத்தார். அவரிடம் மெல்ல, ‘டைரக்டர் சார் எங்கே?’ என்று கேட்டேன். ‘அவரு லேசா தலைவலிக்குதுன்னு சொல்லி பின்னாடி இருக்கார்’னு சொன்னார். நான் அவரைப் பாக்கப் போனேன். ‘சார், ஸாரி சார். அவமானத்தால அப்படிக் கோபப்பட்டுட்டேன் சார்’னு சொன்னேன்.
என்னைப் பார்த்ததும் உடனே டக்குன்னு எழுந்துட்டார் பாரதிராஜா சார். ‘என்ன மாதிரியான, பிரமாதமான ஆர்ட்டிஸ்ட் நீங்க. இந்த சீன் ரொம்ப பிரமாதமா பண்ணிட்டீங்க. நான் தான் ஸாரி கேக்கணும். ஸாரிம்மா’ன்னு சொன்னார். உடனே நான், ‘இல்ல சார், நீங்க அடிச்சதாலதான் எனக்கொரு வெறியே வந்துச்சு. இந்த சீனை நல்லாப் பண்ணிடணும்னு வெறியோடயே நடிச்சேன்’னு சொன்னேன்.
அதுக்கு அப்புறம் பாரதிராஜா சாரோட, ரெண்டுமூணு படங்கள் பண்ணிருக்கேன். அந்தப் படத்துல நடிக்கும் போது, ‘சார், ரிகர்சல் வேணாம் சார், டேக் போகலாம் சார். நல்லாப் பண்ணிருவேன் சார்’னு கேப்பேன். உடனே பாரதிராஜா யூனிட்ல, ‘கமலா நேரா டேக் போகலாம்னு சொல்லிருச்சு. டேக் போயிடலாம்’னு என்னை முழுசா நம்பினார். ஒளிப்பதிவாளர் கண்ணன் கூட, ‘என்ன சார்... நேரடியா டேக் போகலாம்னு சொல்றீங்க?’ன்னு பாரதிராஜா சார்கிட்ட கேப்பாரு. ‘எவ்ளோ பெரிய சீனா இருந்தாலும் கமலா அட்டகாசமா பண்ணிருவாங்கய்யா. எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு டைரக்டர் சொன்னாரு. எனக்கு அப்படியொரு தைரியமும் என் மேல எனக்கு நம்பிக்கையும் வர்றதுக்கு காரணமே... பாரதிராஜா சார் விட்ட ‘அறை’தான்!
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துல பிராமணப் பெண்மணி. ‘கடலோரக் கவிதைகள்’ படத்துல ரவுடி கேரக்டருக்கு அம்மா. ஆனா சாஃப்ட்டான அம்மாதான். ரெண்டுமே ‘முட்டம்’ ஊர்லதான் எடுத்தாங்க. அந்த லொகேஷன் பாரதிராஜா சாருக்கு ரொம்பவே புடிச்ச ஏரியா.
’குடும்பம் ஒரு கதம்பம்’ பத்தியும் சொல்லணும். அதுல டிராமால நான் நடிச்சேன். சினிமால என் கேரக்டரை சுஹாசினி பண்ணினாங்க. படத்துல நடிக்கறதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. சரி... டிராமால பண்ணின ரோல் பண்றதுக்குத்தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சேன். அப்பலாம், ஒரு கேரக்டர் பண்ணினா, அதை அப்படியே ‘பிராண்ட்’ ஆக்கிடுவாங்கன்னெல்லாம் தெரியாது எனக்கு. ’மதர் கேரக்டர்’னு சொன்னாங்க. ’அப்படியா’னு கேட்டுக்கிட்டேன்.
அதுதான் சினிமால விசுவுக்கு முதல் படம். ’குடும்பம் ஒரு கதம்பம்’ படத்துக்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன். அவரும் என் கணவர் காமேஷுக்குத் தெரிஞ்சவர்தான். ஆக, எல்லாருமே தெரிஞ்சவங்களாத்தான் இருந்தாங்க.
டிராமால, செளந்தரவல்லி அம்மானு ஒருத்தங்கதான் அந்தக் கேரக்டரைப் பண்ணினாங்க. அதெல்லாம் நல்லாவே பாத்தவதானே நான். பாவமான அம்மா. அதனால நடிக்கிறதுக்கு எந்தக் கஷ்டமும் படலை.
படத்துல நடிக்கறதுக்கான நிறைய சீன்கள் எனக்குக் கிடைச்சிச்சு. முக்கியமா, படத்துல கடைசில, அந்த சீன் மறக்கவே முடியாது. என் கணவரா விசு நடிச்சார். மகள் நித்யா (அவரை சாந்தின்னுதான் கூப்பிடுவோம். அதான் அவங்க உண்மையான பேரு. சினிமாத்துறைக்குத்தான் நித்யா) கேள்வி கேட்டதும் கோபமாகி, சர்டிபிகேட்டெல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பும் போது, தடக்குன்னு என் கால்ல விழுவார் விசு. அதிர்ந்து போயிட்டேன். ஏன்னா, டிராமால இந்த சீன் இல்ல. சினிமாவுக்கு ரிகர்சல் பாக்கறப்பவும் இப்படியெல்லாம் இல்ல. ஆனா, ஷுட் பண்ணும்போது,விசு என் கால்ல விழுந்ததும் பக்குன்னு ஆயிருச்சு. தியேட்டர்ல அந்த சீனுக்கு செம க்ளாப்ஸ் கிடைச்சிச்சு. இந்தப் படத்துக்காக, விசுவுக்கு துணை நடிகர் விருதும் எனக்கு துணை நடிகை விருதும் கிடைச்சிச்சு.
‘குடும்பம் ஒரு கதம்பம்’ல நடிச்சிட்டிருக்கும் போது, சுஹாசினி சொல்லிக்கிட்டே இருந்தாங்க... ‘கமலாம்மா, பாருங்களேன், உங்களுக்கும் விசு சாருக்கும் அவார்டு கிடைக்கும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ‘இந்தப் படத்துல நீங்க ரெண்டுபேரும்தான் ஹீரோ, ஹீரோயின்’னு சொன்னாங்க.
இதுக்குப் பிறகு வரிசையா படங்கள் பண்ணினேன். ’கமலாகாமேஷைப் போட்டா, படம் அம்பது நாளாவது ஓடிரும். ராசியான நடிகை’ன்னு சினிமால பேசிக்கிட்டாங்க. அப்பதான், ‘ஓஹோ... சினிமால இப்படியான செண்டிமெண்டெல்லாம் இருக்கா’னு தெரிஞ்சிகிட்டேன். எந்தக் கேரக்டர்ல நடிக்கிறோமோ அந்தக் கேரக்டருக்கு பிராண்ட் பண்றது... முத்திர குத்துறது... செண்டிமெண்ட் பாக்கறதுன்னு அப்பதான் புரிபட்டுச்சு சினிமா எனக்கு.
கமலாகாமேஷ் அம்மா கேரக்டர் பண்ணிருக்காங்களா. அப்படின்னா போடு அவங்களையேனு முடிவு பண்ணினாங்க. அதிலும் ஏழை அம்மா; பாவப்பட்ட அம்மா. பெரும்பாலும் பணக்கார அம்மாவா நான் நடிச்சதே இல்ல. பாவமான அம்மாதான்’’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் கமலா காமேஷ்.
- நினைவுகள் தொடரும்
- கமலாகாமேஷின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago