‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துல கார்த்திக்கிற்கு அம்மாவா நடிச்சேன். அப்போ எனக்கு 31 வயசு’’ என்று சொல்லிச் சிரித்தார் கமலா காமேஷ். முதல் படத்தில் ஹீரோயின். அடுத்தடுத்து நாடகங்கள். பாரதிராஜா அழைத்துத் தந்ததோ அம்மா வேடம். அப்படி ‘அலைகள் ஓய்வதில்லை’யில் அம்மா வேடமிடும்போது 31 வயது என்று வெள்ளந்தியாகச் சிரிக்கும் கமலா காமேஷ், இன்னுமான சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindwithRamji' நிகழ்ச்சிக்காக கமலா காமேஷ் அளித்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது:
பேட்டி தொடர்கிறது :
‘’அம்மா வேஷத்துக்குக் கூப்பிட்டது எனக்கு வலிக்கலை. அதேசமயம், ஹீரோயினா நடிச்சிருந்தா நல்லாருக்குமேன்னு தோணுச்சு. அவ்ளோதான். இன்னொரு விஷயம்... அந்த சமயத்துல என் கணவரோட கால்கள் எடுக்கப்பட்டிருந்ததால, ஒருபக்கம் ஆஸ்பத்திரி செலவு. இன்னொரு பக்கம் குடும்பத்தை ஓட்டியாக வேண்டுமே. அதனால சம்பாதிச்சாகணும் நான்.
கர்னாடக சங்கீதத்தில் நான் லோயர், ஹையர் பாஸ் பண்ணிருக்கேன். எனக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் முதலில் எடுக்கப்பட்ட ஷாட்... ‘விழியில் விழுந்து’ பாட்டுக்கான ஆரம்பக் காட்சிதான். பாரதிராஜா சார் என்னிடம், ‘பாட்டு ஆரம்பத்துல ஒரு ஸ்வர வரிசை வரும். அதை நல்லாக் கேட்டுக்கங்க. அப்புறம் ஒரு மானிட்டர் பாத்துட்டு, சீன் எடுத்துடலாம்’னு சொன்னார்.
அப்புறம் அந்தப் பாட்டு போட்டாங்க. கூடவே நானும் பாடினேன். உடனே பாரதிராஜா சார், ‘உங்களுக்கு மியூஸிக் தெரியுமா’னு கேட்டார். ’தெரியும் சார்’னு சொன்னேன். அப்போது, மனோபாலா அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தார். அவர் பாரதிராஜாவிடம் ‘இவங்க மியூஸிக்ல டிப்ளமோ ஹோல்டர் சார்’ என்று சொன்னார். ’என்னய்யா இது. முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா? இவங்களைப் பாடவைச்சே ட்ராக் எடுத்திருக்கலாமே’ன்னு பாரதிராஜா சார் சொன்னார்.
அப்புறம் அந்த சீன் ஒரே டேக்ல ஓகே ஆயிருச்சு. அதுக்குப் பிறகு, யூனிட்ல உள்ளவங்ககிட்ட கலகலப்பாப் பழக ஆரம்பிச்சேன். எல்லாரும் எங்கிட்ட நல்லாப் பழகினாங்க. ரெண்டாவது ஷெட்யூல் வந்துச்சு.
பாரதிராஜா சாருக்கு காமேஷை நல்லாத் தெரியும். அவர் என்னையும் காமேஷ்னுதான் கூப்பிடுவார். ஒருநாள் பாரதிராஜா சார், ‘காமேஷ். நல்ல பாட்டா ஒண்ணு ரெடி பண்ணிவைச்சிக்குங்க’ன்னார். ’அலைபாயுதே கண்ணா’ பாட்டை பாடினேன். அதை எடுத்துக்கிட்டாங்க. படத்துலயும் பயன்படுத்தினாங்க.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துல என்னால மறக்கவே மறக்கமுடியாததுன்னா, அது க்ளைமாக்ஸ் காட்சி எடுத்ததுதான். தியாகராஜன் எங்க வீட்டுக்கு வந்து, மிரட்டுவாரே... அது மொத்தமும் ஒரே ஷாட்ல எடுத்தாங்க. அதுக்குப் பிறகு கட் பண்ணி, கட் பண்ணி படத்துல போட்டாங்க.
எப்பவும் நைட் ஒன்பது மணி வரைக்கும் ஷூட் பண்ணுவாரு. ஒரே சமயத்துல தமிழ், தெலுங்கு ரெண்டுலயும் எடுத்தாங்க. முதநாள், ஷூட்டிங் 9 மணியைத் தாண்டியும் போயிட்டிருக்கு. அது ரொம்ப சின்னவீடு. முட்டத்துலதான் படப்பிடிப்பு. எல்லாரும் அங்கே நிக்கிறாங்க. அப்போ, தியாகராஜன் சார் வந்து பாத்திரத்தையெல்லாம் தூக்கிவீசுவாரு. நான் தூரத்துல ஓரமா நின்னுக்கிட்டு நடிக்கணும். அப்போ, எனக்கு அழுகையே வரலை. கிளிசரின் போட்டும் அழுகை வரலை.
அப்போ பாரதிராஜா சார் எங்கிட்ட வந்தார். ‘அழுகை வரலையா?’ன்னு கேட்டார். ’அய்யய்யோ... இவர் அடிப்பார்’னு கேள்விப்பட்டிருக்கோமே. அடிச்சிடப் போறார்னு யோசிச்சிக்கிட்டே, ‘இல்ல’ன்னு சொன்னேன். தலைகுனிஞ்சபடியே இருந்தேன். ‘அழுகை வரலையா?’ன்னு திரும்பவும் கேட்டார். இந்த முறை குரல் கொஞ்சம் உசந்துச்சு. அடுத்தும் கேட்டார். இன்னும் குரல் உசந்துச்சு. லேசா தலையைத் தூக்கி ‘அழுகை வரலை சார்’னு சொன்னேன். கொஞ்சம் கூட தாமதிக்காம ‘பளார்’னு அறைஞ்சார் பாரதிராஜா. அவ்ளோதான். பொசுக்குன்னு அழுகை வந்துருச்சு.
படத்துல வில்லன் தியாகராஜன் என்னை அடிச்சாரோ இல்லையோ... பாரதிராஜா சார் என்னை அறைஞ்சார். அழுகையோட நடிச்சேன். அந்த சீன் ஒரே டேக்ல ஓகேயாச்சு. நான் அந்த வீட்டோட கொல்லைப்பக்கமா போய் உக்கார்ந்திட்டேன். அழுதுக்கிட்டே இருந்தேன்.
அப்போ மணிவண்ணன் வந்தார். அவர்தான் படத்துக்கு டயலாக். அஸிஸ்டெண்ட் டைரக்டர் வேற. மணிவண்ணன் வந்து டயலாக் தருவார். அதை நான் பிராமண பாஷைல சொல்லுவேன். அதை அவர் எழுதிக்குவார். அப்போ வந்து டயலாக்கை மாத்தித்தரும்படி கேட்டார். நானும் அழுதுக்கிட்டே, அந்த வசனத்தையெல்லாம் மாத்திக் கொடுத்தேன்.
வசனம்லாம் எழுதி முடிச்சபிறகு, அடுத்த சீன் ரிகர்சல் பாக்கக் கூப்பிடுறாரு டைரக்டர்னு சொன்னாங்க. ‘நான் ரிகர்சலுக்கெல்லாம் வரமாட்டேன். நேராவே வந்து நடிச்சுக்கறேன்’னு சொன்னேன். க்ளைமாக்ஸ் சீன் அது இதுன்னு சொல்றாங்க. ‘எனக்குத் தெரியாது. நான் ரிகர்சலுக்கு வரமாட்டேன். நேரா நடிக்கிறேன்’னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அதுவும் எப்படி? அழுதுக்கிட்டே இருக்கேன்.
எனக்கு அடிச்சது வலிக்கலை. தமிழ், தெலுங்கு படப்பிடிப்பு ஆளுங்க எல்லாரும் இருக்கும் போது அடிச்சது, எனக்கு பெரிய அவமானமாப் போயிருச்சு. அசிங்கமா இருந்துச்சு. ஏதோ உலகத்துலயே இதான் பெரிய அவமானம்னும் இதான் பெரிய அசிங்கம்னு நினைச்சு, வீம்பு பண்ணிட்டிருக்கேன்.
மணிவண்ணன், பாரதிராஜா சார்கிட்ட சொல்ல, அவரே வந்துட்டாரு. இன்னும் கோபமும் வீம்பும் அதிகமாயிருச்சு. ’எவ்ளோ பெரிய ஷாட்’னு சார் சொன்னார். ‘நான் நேரா நடிக்கிறேன்’னு சொன்னேன். ’ரீடேக் வாங்கினா கஷ்டம்’னு சொன்னார். ‘ரீடேக் வாங்கமாட்டேன். அப்படி வாங்கினா, நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்’னு சொன்னேன். அது அவமானம் கொடுத்த உறுதி. வைராக்கியம்.
டேக் போச்சு. எல்லாரும் நடிச்சோம். நானும் நடிச்சேன். ஷாட் ஓகேன்னு பாரதிராஜா சார் சொன்னார். அப்படியே சைலண்ட்டா இருந்த யூனிட், அப்படியே கை தட்டினாங்க. அதுவரைக்கும் இருந்த அழுகை எங்கேபோச்சுன்னே தெரியல!’’ என்று அழுகை சம்பவத்தை சிரித்துக்கொண்டே விவரித்தார் கமலாகாமேஷ்.
- நினைவுகள் தொடரும்
கமலாகாமேஷின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago