கரோனாவை வெல்லும் பெண் தலைவர்கள்

By க்ருஷ்ணி

ஆதியில் இருந்த தாய்வழிச் சமூக மரபின் தொடர்ச்சி என்பதாகத்தான் உலகப் பெண் தலைவர்களின் தற்போதைய செயல்பாடுகள் இருக்கின்றன. இக்கட்டான சூழலிலும் நெருக்கடியான காலத்திலும் திறம்படச் செயல்பட்டு மக்களைக் காக்கும் தலைமைப்பண்பு பெண்களுக்கே உரித்தானது என்பதைக் கரோனாவிலிருந்து தம் மக்களைக் காக்கும் திறமையான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பெண் தலைவர்கள் உணர்த்துகின்றனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தன் கோரத்தாண்டவத்தை அரங்கேற்றிவரும் சூழலில் பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட நாடுகளின் செயல்பாடுகள் மெச்சத்தகுந்த வகையில் இருப்பதையும் உலக நாடுகள் கவனித்துவருகின்றன. ஒப்பீட்டு அளவில் அந்த நாடுகளில் கரோனாவின் பரவலும் பாதிப்பும் குறைவு. பாதிக்கப்பட்டோரை அணுகும்விதத்திலும் அவர்களே மேம்பட்டு இருக்கின்றனர். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆதர்ன், ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கெல், டென்மார்க்கின் மெடி ஃபிரெடரிக்ஸன், தைவானின் சாய் இங் வென், நார்வேயின் எர்னா சோல்பெர்க், பின்லாந்தின் சன்னா மரின் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆண்களின் தலைமையிலான நாடுகளைவிட இந்தப் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடுகள் கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.

நம்பிக்கை தரும் தலைவர்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திரையில் தோன்றி மக்களுக்குச் சேதி சொல்லும் தலைவர் கிடைத்தவகையில் கிட்டத்தட்ட இந்தியாவின் நிலையைப் போன்றதைத்தான் ஜெர்மனியின் நிலையும். ஆனால், கரோனா தொற்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அணுகுமுறையை மாற்றி அமைத்தது. அந்த வகையில் அந்த மக்கள் பேறு பெற்றவர்கள். உலகையே அச்சுறுத்திவரும் நோயின் பிடியில் மக்கள் சிக்குண்டு கிடக்கும்போது அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம், ‘எதற்கும் அஞ்ச வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம். நிலைமை விரைவில் சரியாகும்’ என்ற நம்பிக்கையும் ஆறுதலும் நிறைந்த வார்த்தைகள்தாம். தன் நாட்டு மக்களுக்கு அந்த நம்பிக்கையைத் தரத் தவறவில்லை ஏஞ்சலா. 15 ஆண்டு ஆட்சியில் எந்தவிதத் திட்டமிடலும் ஒத்திகையும் இல்லாத முதல் பேச்சிலேயே மக்களின் மனங்களில் அவர் நம்பிக்கையை விதைத்துவிட்டார்.

கரோனா பரிசோதனையைப் பரவலாக்கிய ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முன்னணியில் இருக்கிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அங்கே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொய்யான வாக்குறுதிகள் மக்களை மேலும் மன உளைச்சலுக்குத் தள்ளும் என்பதை உணர்ந்திருப்பதால்தான், ஊரடங்குத் தளர்வை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று ஏஞ்சலா சொல்லியிருக்கிறார். “நிலைமை இப்போது பரவாயில்லை. ஆனால், எதுவும் நம் கையை மீறிப் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கரோனா இன்னும் நீண்ட நாட்களுக்கு நம்முடன் இருக்கும்” என்று உண்மையை உடைத்துச் சொல்கிறார். அது மக்களை ஒருசேர விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்கச் செய்கிறது.

அறிவுப்பூர்வமான வழிநடத்துதல்

நியூயார்க் நகரத்தைவிடக் குறைவான மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து, கரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கோவிட்-19 நோயை எதிர்கொள்ளும் செயல்பாட்டை உலகமே ‘கரோனாவுக்கு எதிரான போர்’ என்று பிரகடனப்படுத்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆதர்ன், ‘கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற ஒற்றுமை முழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார். மக்களுக்குச் செய்தி சொல்லும் ஒவ்வொரு முறையும், ‘50 லட்சம் உறுப்பினரைக்கொண்ட நம் அணி’ என்று குறிப்பிடுகிறார். நாட்டு மக்கள் அனைவரும் ஒரே அணி என்று பிரதமர் ஜெசிந்தா சொல்ல, அது மக்களிடம் கட்டுப்பாட்டையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

கரோனா போன்ற வைரஸ் தொற்றை எதிர்கொள்ள அறிவியலும் அதிகாரமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை ஜெசிந்தா புரிந்துகொண்டிருக்கிறார். அதனால்தான் பிரதமரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்துறை இயக்குநரும் உடன் இருக்கிறார். கரோனா வைரஸ் குறித்த அறிவியல்பூர்வத் தகவல்களையும் வைரஸ் பரவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மக்களுக்குப் புரிகிற விதத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் விளக்க, அதைத் தொடர்ந்தே அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போதுமான விளக்கம் கிடைத்ததால் மக்களும் ஊரடங்குக்குக் கட்டுப்படுகின்றனர்.

மக்கள் மீதான அக்கறையும் வெளிப்படைத்தன்மையும் ஜெசிந்தாவின் தலைமைப்பண்புக்குச் சான்றுகள். ஃபேஸ்புக் லைவ் மூலம் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். புன்னகையோடு பதில் சொன்னாலும் நிலைமையின் தீவிரத்தை மட்டுப்படுத்தி, பொய்யான தகவல்களைச் சொல்வதில்லை. எந்தவொரு அறிவிப்பையும் திடீரென திரையில் தோன்றி அவர் வெளியிடுவதில்லை. ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடும்போதும் அதனால் யாரெல்லாம் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதைக் குறிப்பிடுவதுடன், விரைவில் அவற்றைச் சரிசெய்துவிடுவோம் என்ற நம்பிக்கையையும் ஜெசிந்தா தருகிறார். மருத்துவத் துறை ஊழியர்களும் பொறுப்புணர்ந்து செயல்படும் பொதுமக்களுமே கரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று பாராட்டையும் பொறுப்பையும் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். தன்முனைப்பு சிறிதும் இல்லாத இந்த அணுகுமுறைதான் ஜெசிந்தாவின் வெற்றிக்குக் காரணம்.

வேகமெடுக்கும் செயல்பாடு

சிறந்த கல்விமுறையைக் கொண்ட நாடாகக் கொண்டாடப்படும் பின்லாந்து, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் தனித்து நிற்கிறது. அந்நாட்டின் பிரதமர் சன்னா மரின், ஒரு பக்கம் வைரஸ் தொற்றைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் பணியை முடுக்கிவிடுறார்; இன்னொரு பக்கம் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் வழிமுறைகளையும் செயல்படுத்திவருகிறார். தங்கள் நாட்டில் கரோனாவால் முதல் மரணம் ஏற்படுவதற்கு முன்பே ஊரடங்கை மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதால் வைரஸ் பரவல் குறைவாக இருப்பதாகச் சொல்லும் சன்னா மரின், இப்போது ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தவும் அதுதான் காரணம் என்கிறார்.

பின்லாந்தில் கரோனா மரணம் ஏழு சதவீதமாக இருந்தபோதும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் சதவீதம் 93 என்பது அவர்களின் போர்க்கால நடவடிக்கைக்குச் சான்று. கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2 சதவீத மக்கள் மட்டுமே மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

தொழில்நுட்ப அறிவும் தலைமைப் பண்பும் பெண்களுக்குக் குறைவு என்று திரும்பத் திரும்ப பொய்யான கருத்தை வலியுறுத்துகிறவர்கள், இவர்களைப் போன்ற பெண் தலைவர்களின் அறிவார்ந்த செயல்பாடுகள் குறித்து அறிவார்களா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்