தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றால், அதுவும் ஏழை அம்மா, பாவப்பட்ட அம்மா என்றால் ஒரே சாய்ஸ்... கமலா காமேஷ். நன்றாகப் பாடும் திறனும் மேடையேறி நடிக்கும் சாதுர்யமும் திரையுலகில் கேரக்டருக்கு உயிரூட்டுவதும் என கமலா காமேஷின் திரை வாழ்க்கை, நெடியது.
‘இந்து தமிழ் திசை’யின் 'RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, கமலா காமேஷை சந்தித்தேன். சினிமாவில்தான் சோகமெல்லாம். நிஜத்தில் சிரிக்கச் சிரிக்க, இனிக்க இனிக்கப் பேசுகிறார்.
கமலா காமேஷின் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :
‘’தஞ்சாவூர்ப்பக்கம் கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். வளர்ந்ததெல்லாம் சென்னைதான். பல்லாவரத்துல இருந்தோம். தாம்பரத்தில் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ். நாடகத்துக்கு வருவதற்குக் காரணம் என் கணவர் காமேஷ். ஆனால் நாடகத்துக்கு முன்பாகவே சினிமாவில் நடித்துவிட்டேன். அதன் பிறகுதான் நாடகத்துக்கு வந்தேன்.
என்னுடைய முதல்படம் ‘குடிசை’. ஜெயபாரதி இயக்கினார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக, ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தார்களாம். ஒரு டிராமாவைப் பார்ப்பதற்காக, நானும் காமேஷும் போயிருந்தபோது, ராபர்ட் - ராஜசேகரன் என்னைப் பார்த்தார்கள். ‘படத்துக்கு நீங்கள் மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்’ என்றார்கள். ’வேண்டாமே’ என்று சொல்லிவிட்டேன்.
பிறகுதான் நான் காமேஷின் மனைவி என்பதைத் தெரிந்துகொண்டார்கள். காமேஷும் ஜெயபாரதியும் நண்பர்கள். பிறகு எல்லோரும் காமேஷிடம் கேட்டு, ‘கன்வின்ஸ்’ பண்ணினார்கள். பல தயக்கங்களுக்குப் பிறகுதான் நடிக்க வந்தேன். என் முதல்படம் ‘குடிசை’. என் முதல் சினிமாவில் நான் ஹீரோயின்.
சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆர்வமோ ஆசையோ எனக்கு இல்லை. எல்லோரும் கேட்க, தட்டமுடியாமல் நடித்தேன். எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது.ஆனால், ‘குடிசை’ படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அதன் பிறகு எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை. நடிக்காமல்தான் இருந்தேன்.
‘குடிசை’ படத்தைப் பார்த்துவிட்டு, விசு சார் வந்தார். காமேஷுக்கு நெருங்கிய நண்பர் விசு சார். ‘கமலா, நீ ஏன் டிராமால நடிக்கக்கூடாது?’ என்று கேட்டார். ’எனக்கு டிராமாலலாம் நடிக்கத் தெரியாது’ என்றேன். அப்புறம் காமேஷெல்லாம் சொல்லி நடிக்கத் தொடங்கினேன். ’குடும்பம் ஒரு கதம்பம்’ படம், முதலில் டிராமாவாகத்தான் வந்தது. சினிமாவில் சுஹாசினி பண்ணின கேரக்டரை டிராமாவில் நான் பண்ணினேன். கிட்டத்தட்ட என்னுடைய நிஜ கேரக்டர் அப்படித்தான்.
படித்துவிட்டு, அமைதியா இருக்கற கேரக்டர். ஆனால் என்ன... நான் பார்ப்பதற்கு அமைதியா, சாஃப்ட்டா தெரிவேன். ஆனால், ஜாலியான பேர்வழிதான் நான்.மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த டிராமாவும் ஹிட்டு. எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அப்போதெல்லாம் ஸ்டேஜ் டிராமாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கூட்டம் அலைமோதும். டிக்கெட் கிடைக்காது. ‘பிளாக்’கில் விற்பார்கள். எல்லோருடைய டிராமாவிலும் நான் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் பெண்கள் நாடகத்தில் நடிப்பது குறைவு. அதைப் பார்ப்பதற்காக நிறைய இயக்குநர்கள் வருவார்கள். திடீரென மாலை 3.30 மணிக்கு கூப்பிடுவார்கள். 6 மணிக்கு ஸ்டேஜ் ஏறி நடிப்பேன். எஸ்.வி.சேகர் டிராமா, சோ டிராமாலாம் நடிச்சிருக்கேன். கிட்டத்தட்ட, மூவாயிரம் ஸ்டேஜ் டிராமா பண்ணியிருப்பேன்.
எஸ்.வி.சேகர் ஸ்டேஜ்லயே என்னைப் பத்தி சொல்லிருக்கார். ‘மூன்றரைக்கு டயலாக் பேப்பரைக் கொடுத்துட்டு, ஆறு மணிக்கு ஸ்டேஜ் ஏறணும்னு சொன்னாலும், கமலா காமேஷ் பிரமாதமா நடிச்சிருவாங்க’ன்னு சொல்லிருக்கார். டயலாக்கை மெமரில வைச்சுக்கணும். அதான் முக்கியம். மேடைல, ஏதாவது ஒரு டயலாக்கை விட்டுட்டாக்கூட, அடுத்தாப்ல டயலாக் பேசுறவங்களுக்கும் குழப்பமாயிரும். டயலாக் சொல்லமுடியாம போயிரும்.
அப்பதான் டிராமா பாக்கறதுக்கு பாரதிராஜா சார் வந்திருந்தார். மதியம் டிராமாவை பண்ணிட்டு, சாயந்திரம் வேற ஒரு டிராமால நடிக்கணும். அவசரமாக் கிளம்பும்போது, ‘என்னம்மா, நீங்களேதான் எல்லா டிராமாலயும் நடிக்கிறீங்க. வேற ஆளே இல்லையா?’ன்னு கேட்டார். ‘நல்லா நடிக்கிறீங்க’ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.
அப்புறம், ஒருநாள் ஆர்.டி.பாஸ்கர் வந்தார். இளையராஜாவோட சகோதரர் இவர். இளையராஜா, அவங்க சகோதரர்கள் எல்லாருமே காமேஷுக்கு நல்ல பழக்கம். பாஸ்கர் வந்த கையோட, ‘கமலா கிளம்பு கிளம்பு... டைரக்டர் பாரதிராஜா சார் கூட்டிட்டு வரச்சொன்னார்’னு சொன்னார். ’பாரதிராஜாவா?’ன்னு மலைச்சுப் போனேன். எனக்கு என்ன சிந்தனைன்னா... ‘பாரதிராஜான்னா, புது ஹீரோயினா நம்மளைக் கொண்டுவரப்போறார் போலருக்கு’னுதானே நினைப்போம். அப்படித்தான் நினைச்சிக்கிட்டேன்.
ஏற்கெனவே ஹீரோயினாத்தான் பண்ணிருக்கோம். ஸ்டேஜ்லயும் ஹீரோயினாத்தானே பண்ணிட்டிருக்கோம். ஹீரோயின்னுதான் நினைச்சேன். ஆனா மதர் கேரக்டர்னு சொன்னாங்க. ‘இதுமாதிரிலாம் பண்ணினதே இல்லியே’னு யோசிச்சேன். யாருக்குன்னு கேட்டேன். ‘முத்துராமன் பையன் ஹீரோ. அவருக்குத்தான் அம்மா’ன்னு சொன்னாங்க.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனா, பூஜை ரூம்க்குக் கூட்டிட்டுப் போய் அட்வான்ஸும் கொடுத்துட்டாங்க. வீட்டுக்குப் போய் கணவர்கிட்ட சொன்னேன். ‘தைரியமா நடி’ன்னு சொன்னார். சரின்னு சொல்லி நடிச்சேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துல கார்த்திக்கிற்கு அம்மாவா நடிச்சேன். அப்போ எனக்கு 31 வயசு’’ என்று சொல்லிச் சிரித்தார் கமலா காமேஷ்.
- நினைவுகள் தொடரும்
- கமலா காமேஷின் வீடியோ பேட்டியைக் காண :
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago