நகரத்து நாகரீக மனைவிக்கும் கிராமத்து பண்பாட்டு கணவனுக்கும் நடக்கிற சண்டையெல்லாம் சினிமாவுக்குப் புதிதில்லைதான். ஆனால் படம் வந்த சமயத்தில் இது ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. ‘இப்படியும் கூடவா மாமியார்க்காரி இருப்பாள்’ என அதிர்ச்சியடையச் செய்தது. சோழவந்தானையும் மூக்கையா சேர்வையையும் இன்னும் மறந்துவிடவில்லை மக்கள். ‘பட்டிக்காடா பட்டணமா’வையும் ‘என்னடி ராக்கம்மா’வையும் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
லண்டனில் இருந்து படித்துவிட்டு சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார் ஜெயலலிதா (கல்பனா). அவரை வரவேற்க, அப்பா வி.கே.ராமசாமியும் அம்மா சுகுமாரியும் விமானநிலையத்துக்கு வந்து அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர்களின் சொந்தக்காரப் பையன் குடியுடனும் இடுப்பில் கைவைத்து அணைத்தபடி ஒரு பெண்ணுடனும் வருகிறான்.
இதையடுத்து, மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற சோழவந்தானில் இருந்து, கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி, தாய்மாமா வி.கே.ஆருக்கு கடிதம் போடுகிறார் மூக்கையா சேர்வை (சிவாஜி). ‘அந்த குடுமிமாமாவை பாத்து ரொம்ப வருஷமாச்சு. கிராமத்தையும் சுத்திப் பாக்கலாம்’ என்று கல்பனா விரும்புகிறாள்.
எல்லோரும் சோழவந்தானுக்கு வருகிறார்கள். ஊரில் சிவாஜிக்கும் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அவரின் வீரத்தையும் அவருக்கு பயந்து நடுங்குகிறார்கள் என்பதையும் கண்டு ரசிக்கிறார் ஜெயலலிதா. வியக்கிறார்.
‘நான் மட்டும் லண்டன்ல படிச்சிருந்தேன்னா, உங்க பொண்ணுக்கு இந்நேரம் தாலி கட்டிருப்பேன்’ என்று விளையாட்டாகச் சொல்கிறார் சிவாஜி.
மதுரைக்கு வந்தவர்கள், தன் சொந்தத்தில் இருக்கிற அந்த குடிகாரப் பையனை, பெண்ணுடன் வந்தவனை தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார் சுகுமாரி. இதைக் கண்டிக்கிறார் வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் தெரிவிக்கிறார். அந்தக் கல்யாணத்தின் போது வந்து, ஜெயலலிதாவை தூக்கிக்கொண்டு சோழவந்தானுக்கு வருகிறார். ‘நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’ என்கிறார். ஆனால் ஊர்மக்களும் உறவுக்காரர்களும் ‘மணமேடைலேருந்து அவளைத் தூக்கிட்டு வந்தே. இனி அவளை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க’ என்கிறார்கள். ‘நீயே கட்டிக்கோ’ என்கிறார்கள்.
இதற்கு ஜெயலலிதாவிடம் சம்மதம் கேட்க, அவரும் சரியென்கிறார். திருமணம் நடக்கிறது. அவள் நாகரீகமாக இருக்க, சோபா, ஏ.ஸி, பாத்ரூமெல்லாம் கேட்க, அவற்றையெல்லாம் செய்துகொடுக்கிறார் சிவாஜி. மாடர்ன் டிரஸ்ஸில் இருப்பவருக்கு புடவைக் கட்டிவிடுகிறார்.
அவருக்கு பிறந்தநாள் வருகிறது. ஊரில் இருந்து நண்பர்களையெல்லாம் வரவழைக்கிறார். கேக் ரெடியாக இருக்கிறது. ஒரு பஞ்சாயத்துக்குச் சென்றிருக்கிறார் சிவாஜி. காத்திருக்கிறார்கள். பிறகு கேக் வெட்டுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் குடித்துவிட்டு ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் பதைபதைத்துப் பார்க்க, சிவாஜி வந்து கடும் கோபமாகிறார். சாட்டையால் எல்லோரையும் விளாசித் தள்ளுகிறார். விரட்டுகிறார். மனைவி ஜெயலலிதாவுக்கு சாட்டையால் வெளுத்தெடுக்கிறார்.
விடிந்ததும் ஜெயலலிதாவைக் காணவில்லை. மதுரைக்குச் சென்று அழைக்கிறார். விடமாட்டேன் என்கிறார் சுகுமாரி. வீட்டுக்கு வந்த சிலநாளில், வக்கீல் நோட்டீஸ் வருகிறது. திரும்பவும் சென்று கெஞ்சுகிறார். ‘ஊர்ல எனக்குன்னு மிகப்பெரிய மரியாதை இருக்கு. இதுவரைக்கும் கோர்ட் படியை நான் மிதிச்சதே இல்ல. இனி அடிக்கமாட்டேன். உன் இஷ்டத்துக்கு நடந்துக்கோ’ என்று கெஞ்சுகிறார். இதற்கு அம்மாக்காரி சுகுமாரியும் சம்மதிக்கவில்லை. மனைவி ஜெயலலிதாவும் மனமிரங்கவில்லை.
அடுத்தகட்டமாக, மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கே, ‘கணவர் எங்கே’ என்று கேட்க, ‘அவர் லண்டனில் இருக்கிறார்’ என்கிறார்கள். ‘பெயர் முகேஷ்’ என்கிறார்கள். இதையெல்லாம் கண்டு கொதிக்கிற வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் சொல்கிறார். அங்கே, சென்னையில் குடுமியும் கடுக்கனுமாய் மூக்குத்தியுடன் இருந்த சிவாஜி, ஹிப்பி கிராப்பும் பேண்ட்டுமாக ஸடைலாக வருகிறார். அன்றிரவு வீட்டுக்குள் புகுந்து, மனைவியின் சம்மதமில்லாமல், முரண்டு பிடிக்க, மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார். இதில் அவர் கர்ப்பமாகிறார்.
ஒரு பார்ட்டியில், ஜெயலலிதா தலைசுற்றி மயக்கமாக, அங்கே உள்ள பெண் மருத்துவர் சோதித்துப் பார்த்து கருவுற்றிருக்கிறார் எனும் விஷயத்தைச் சொல்ல,அங்கே வரும் சிவாஜி, ‘லண்டனில் மாப்பிள்ளை. இங்கே மனைவி கர்ப்பம். எப்படி?’ என்று கேள்வி எழுப்புகிறார். ‘அதானே’ என்கிறார்கள் அனைவரும்.
ஆனால், சிவாஜியின் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.மனமொடிந்து ஊர் திரும்புகிறார். இங்கே, சென்னையில், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறக்கிறது. பிறந்த கையுடன் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டு போட்டுவிடுகிறார். குழந்தை எங்கே என்று ஜெயலலிதா கேட்க, அம்மாக்காரி விஷயத்தைச்சொல்ல, கோபமாகி, அழுகையுடன் ஆஸ்ரமத்துக்கு ஓடுகிறார். அங்கே குழந்தையைக் கேட்கிறார். தத்து கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். எங்கே, யார், விலாசம் என்ன என்று கேட்க, ‘மூக்கையா சேர்வை, சோழவந்தான்’ என்கிறார்.
இந்தசமயத்தில், சிவாஜி சென்னைக்கு வருகிறார். சொந்தக்காரப் பெண் ‘ராக்கம்மாவுக்கு கல்யாணம்’ என்கிறார். பத்திரிகை கொடுக்கிறார். அதில் மணமகன் மூக்கையன் என்றிருக்க, அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்தநிலையில், தன் குழந்தையைக் கொடுங்கள் என்று கேட்க, சோழவந்தான் வருகிறார் ஜெயலலிதா. அப்போது திருமணம். ஊரும் உறவும் திரண்டிருக்க, ‘முதல் மனைவி நானிருக்கும்போது இவர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்கிறாரே நியாயமா?’ என்று முறையிடுகிறார். அப்போதுதான் மணமகனின் பெயரும் மூக்கையன், அவர் வேறொருவர் என்பது தெரியவருகிறது. சிவாஜியும் ஜெயலலிதாவும் ஒன்றுசேருகிறார்கள். மாமியார் சுகுமாரியும் மனம் மாறி மன்னிப்புக் கேட்கிறார்.
அந்தக் காலத்தில், மிகச்சிறந்த கதாசிரியர் என்று பெயர் பெற்றவர் பாலமுருகன். இவரின் கதை வசனம் என்றாலே படம் சூப்பர் என்பது முடிவாகிவிடும். அந்த அளவுக்கு நேர்த்தியாகக் கதை சொல்லுவதிலும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் வசனம் எழுதுவதிலும் கில்லாடி என்று பேரெடுத்தவர். ‘பட்டிக்காடா பட்டணமா’வுக்கு கதை, வசனம் பாலமுருகன் தான்!
அதேபோல், அந்தக்காலத்தில் சிவாஜி, பி.மாதவன், பாலமுருகன் கூட்டணி என்றாலே அது சக்ஸஸ்தான் என்பார்கள். சிவாஜியை ரசித்து ரசித்து படமாக்குவார் இயக்குநர் பி.மாதவன். சிவாஜி, ஜெயலலிதா, வி.கே.ராமசாமி, சுகுமாரி, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.என்.லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி முதலானோர் நடித்திருந்தார்கள்.
கணவனுக்கு அடங்காமல் இருக்கிற ஜெயலலிதா, கணவனை அடக்கியாளும் சுகுமாரி, கணவனைத் தேடி சென்னையில் அலையும் மனோரமா என்று அழகாகக் கேரக்டர் பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு முறை வி.கே.ஆர். பொங்குவதும் பிறகு தோற்றுப்போவதும் பார்க்கிற வீட்டுப் பணியாள் சாமிக்கண்ணு திக்குவாய். ‘என் பொண்டாட்டி மட்டும் இப்படிச் செஞ்சிருந்தா அவளைக் கொன்னுபோட்டிருப்பேன்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவதும் கடைசியில் வி.கே.ஆர்., சுகுமாரியை சாட்டையால் விளாசியதும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும் இன்னொரு டச்.
ஊரில் மைனராக அடாவடி பண்ணும் எம்.ஆர்.ஆர்.வாசுவை மனோரமாவுக்கு கட்டிவைப்பதும் இதனால் அவர் சோழவந்தானிலிருந்து சென்னைக்கு ஓடிவிடுவதும் அவரைத் தேடிப் பிடிக்க மனோரமா வருவதும் காமெடிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
படித்த திமிர், பணக்காரத் திமிர், நவநாகரீக நங்கை, எதிலும் அலட்சியம் என்பதெல்லாம் ஜெயலலிதாவின் கேரக்டர்கள். ஒவ்வொரு தருணத்திலும் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘குடுமி அங்கிள் குடுமி அங்கிள்’ என்று சிவாஜியைக் கொஞ்சுவதாகட்டும், திட்டியதையும் அடித்ததையும் பொறுக்கமாட்டாமல் இங்கிலீஷில் புலம்புவதாகட்டும், குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பதற்கு தவிக்கிற தவிப்பாகட்டும்... ஜெயலலிதாவின் திரை வாழ்வில் முக்கியமான படம் இது.
குடுமியும் முழங்காலுக்கு சற்றே கீழே வரை கட்டிக்கொண்டிருக்கிற வேஷ்டியாகட்டும், சில்க் ஜிப்பாவாகட்டும், காதில் கடுக்கனும் மூக்கில் மூக்குத்தியும் கொண்டு சோழவந்தான் மூக்கையா சேர்வையாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி. அப்பத்தாவுக்கும் ஊர்மக்களுக்கும் தாய்மாமாவுக்கும் கொடுக்கிற மரியாதையும் பண்பும் மதுரைக்காரராகவே அவர் நடை உடை பாவனையெல்லாம் காட்டியிருப்பது அசத்தல். ஜெயலலிதாவைப் போலவே சிவாஜியின் இன்னொரு முறைப் பெண் (புதுமுகம் சுபா) ராக்கம்மாவுடன் விளையாடுவதும் விகல்பமில்லாமல் பழகுவதும் நெகிழவைக்கும்.
மனைவிக்கு விட்டுக்கொடுப்பதும் கலப்பையைக் கொல்லையில் போட்டதால் மனைவியிடம் கோபம் கொள்வதும் பிரிந்து சென்றதும் வருந்திக் கெஞ்சுவதும் குடுமியும் கடுக்கனும் எடுத்துவிட்டு, நவநாகரீக வாலிபனாக கிடாருடன் பாடுவதும் ‘உன் மனைவி கூட வாழமுடியலை. நீ பஞ்சாயத்து பண்றியா?’ என்று ஊர்மக்கள் அவமதிப்பதைக் கேட்டு புழுங்கிப் போவதும் என சிவாஜிக்கு ப்ளேட் ப்ளேட்டாக கொடுத்ததையெல்லாம் மனிதர், அல்வா சாப்பிடுகிற மாதிரி அசத்தியெடுத்திருப்பார்.
டைட்டிலில் கட்டியம் கூறுவது போல் ஒரு பாடல். அதில் கொஞ்சம்கொஞ்சமாக சிவாஜியைக் காட்டும் ரசனை. டைட்டில் முடிந்ததும் ‘அம்பிகையே ஈஸ்வரியே’, அடுத்து ‘என்னடி ராக்கம்மா’, ‘கேட்டுக்கோடி உருமிமேளம்’, ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’ என்று எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. தன் இசையால் மாபெரும் ஹிட்டாக்கினார்.
மதுரை பாஷையில் சிவாஜி பிரமாதப்படுத்தியிருப்பார். மனோரமாவுக்கு சொல்லவா வேண்டும். சோழவந்தானில் முக்கால்வாசி படப்பிடிப்பு. நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்த ஊர் இதுதான். இங்கே படப்பிடிப்பு நடத்த பல உதவிகள் செய்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஆகவே, டைட்டிலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கும்.
1972ம் ஆண்டு, மே மாதம் 6ம் தேதி வெளியாகி, பல ஊர்களில் நூறுநாட்களைக் கடந்து ஓடியது ‘பட்டிக்காடா பட்டணமா’. அந்த சோழவந்தான் கிராமத்தை அழகாகப் படம்பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம். படத்தின் சண்டைக்காட்சிகளும் மலைக்கவைக்கும்.
சென்னையில், சிவாஜியை காரிலேற்றிக்கொண்டு, ஒவ்வொரு இடமாகக் காட்டி அடிப்பார்கள். ‘இதான் எல்.ஐ.சி’ என்று ஒரு அடி. ‘இதான் சாந்தி தியேட்டர்’ என்று ஒரு அடி. பிறகு சிவாஜி அடிக்கும் போது, ‘சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?’ என்று வெளுப்பார். அட்டகாசமான கிராமத்துப் படமாக, அழகான குடும்பப்படமாக, பிரமிக்க வைக்கும் சிவாஜி படமாக, வியக்கவைக்கும் பி.மாதவன் படமாக வந்து பட்டையைக் கிளப்பியது ‘பட்டிக்காடா பட்டணமா’.
படம் வெளியாகி 48 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் ‘பட்டிக்காடா பட்டணமா’வையும் சோழவந்தானையும் ‘மூக்கையா சேர்வை’யையும் முக்கியமாக ‘என்னடி ராக்கம்மா’வையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago