கொஞ்சம் அறிவியல் 2- கரோனா குடும்பம்: ஏன்? எதற்கு? எப்படி?

By ஆதி வள்ளியப்பன்

2020 எத்தனையோ புதுமைகளைக் கொண்டுவரப் போகிறது என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், கரோனா வைரஸ் அதை பெருமளவு கலைத்துப் போட்டுவிட்டது. ஆனால், கரோனா வைரஸ் பற்றி நாம் கேள்விப்படுவதற்கு முன்பே கிருமிநாசினியான பழைய டெட்டால் பாட்டிலின் பின்புறம் கரோனா வைரஸையே இது தடுக்கும் என்று போடப்பட்டிருக்கிறதே? டெட்டால் கம்பெனிகாரனுக்கு மட்டும் கரோனா வைரஸ் பற்றி முன்னாடியே எப்படி தெரியும் என்று சமூக ஊடகங்களில் பரவிய கேள்வியைப் பற்றி நீங்களும் படித்திருக்கலாம்.

கரோனா வைரஸ் பற்றி கடந்த மூன்று-நான்கு மாதங்களாகத்தான் நமக்கெல்லாம் தெரியும். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது நாவல் கரோனா வைரஸ். கரோனா வைரஸ் குடும்பத்தில் கடைசியாகச் சேர்ந்த கடைக்குட்டி இது. அப்படியானால் கரோனா வைரஸ் குடும்பம் பெரிதா, அதன் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் யார் என்ற கேள்வி வரும். இதுவரை கண்டறியப்பட்ட ஆபத்தான வைரஸ் குடும்பங்களில் கரோனா வைரஸ் குடும்பம் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருந்துவந்துள்ளது.

கரோனா குடும்பத்தில் உள்ள சில வகைகள் சாதாரண சளியைத்தான் ஏற்படுத்துகின்றன. அதேநேரம் சார்ஸ் - 2002 (மிகத் தீவிரமான சுவாச நோய்க்குறி), மெர்ஸ் - 2012 (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி) போன்றவை உயிருக்கு ஆபத்தான தீவிர நோய்க்குறிகள். எல்லாமே சுவாசப் பாதை நோய்த்தொற்றுகள்தாம். இதுவரை கரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளுக்குத் தடுப்புமருந்தோ, சிகிச்சையளிப்பதற்கான மருந்தோ கண்டறியப்படவில்லை.

விலங்குத் தொற்று

கரோனா வைரஸ் குடும்பத்தின் மூதாதையின் வயது 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆனால், கடந்த நூற்றாண்டில்தான் மனிதர்களால் இந்த வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைக் கண்டறிய முடிந்தது. 1930-களில் கரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ஒன்று முதலில் கண்டறியப்பட்டது. அது வளர்ப்புக் கோழிகளின் மூச்சுக்குழலை வீங்கச் செய்யும் தீவிர நோய்த்தொற்றாக (Infectious bronchitis virus -IBV) இருந்தது. அது கண்டறியப்பட்ட இடம் இன்றைக்கு நாவல் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா. வடக்கு டகோடா மாகாணத்தில் இந்த நோய் தொற்றியிருந்ததை ஆர்தர் ஷால்க், எம்.சி. ஹாவ்ன் ஆகியோர் வெளிப்படுத்தினார்கள். அந்தப் பகுதியில் புதிய கோழிக் குஞ்சுகள் பிறந்தவுடன் மூச்சுத்திணறலுடனும் மந்தமாகவும் காணப்பட்டன. இறப்பு விகிதம் 40-90 சதவீதம்.

சில ஆண்டுகளில் இந்த நோய்க்கிருமி வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் விலங்குகளிடமிருந்து 'சுண்டெலி ஹெபாடிடிஸ் வைரஸ்', 'குடல் அழற்சி வைரஸ் தொற்று' ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டன. இந்த மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகைகள் என்பது, அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மூன்றுமே கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவைதாம். 1960-களுக்குப் பிறகு மேலும் பல விலங்கு கரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மனிதர்களுக்கு பாதிப்பு

சரி, விலங்குகளிடம் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 90 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதர்களிடம் எப்போது கண்டறியப்பட்டது? 60 ஆண்டுகளுக்கு முன். 'பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சிப் பேரவை' சார்பில் ஒரு சிறுவனிடம் சளியை ஏற்படுத்தும் 'B814' என்ற வைரஸ், 1960இல் கண்டறியப்பட்டது. ஆனால், அதுவரை தரப்படுத்தப்பட்டிருந்த தொழில்நுணுக்கங்களால் அந்த வைரஸை தனியாக வளர்த்தெடுக்க முடியவில்லை. அதிலிருந்து வழக்கமான சளியை ஏற்படுத்தும் ரைனோவைரஸ், அடினோவைரஸ் வகையைச் சேர்ந்ததல்ல அது என்பது புரிந்தது.

அந்த ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் டேவிட் டைரெல், மால்கம் பியோன் ஆகிய இருவரும் 1965இல் புதிய முறையைப் பயன்படுத்தி அந்த வைரஸை வெற்றிகரமாக வளர்த்தெடுத்தனர். இப்படி வளர்த்தெடுக்க முடிந்தால்தான், அந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்ய முடியும். கூடுதல் பரிசோதனைகள், சிகிச்சைக்கான மருந்து, தடுப்பு மருந்து ஆகியவை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். அதே காலத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் '229E' என்ற மற்றொரு வைரஸும் கண்டறியப்பட்டிருந்தது. இரண்டையும் தடு்ப்பூசி மருந்தாகச் செலுத்திப் பார்த்தபோது, சளியையே ஏற்படுத்தின.

இந்த இரண்டு வைரஸ் வகைகளையும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஜூன் அல்மெய்டா எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தார். வைரஸ்களின் மேற்புறத்தில் சிறு குண்டாந்தடியைப் போன்று நீ்ண்டிருந்த குமிழ் முனைகள், இரண்டின் அமைப்பும் ஒன்றுபோல் இருப்பதைப் பிரதிபலித்தன. வைரஸின் அமைப்பு மட்டுமல்லாமல், மூச்சுக்குழலில் தொற்றும் வைரஸ் என்ற வகையிலும் இரண்டும் ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன.

மூச்சுக்குழலை வீங்கச் செய்யும் இந்த ஐ.பி.வி. (IBV) வைரஸ் குழு, கரோனா வைரஸ் என்று அழைக்கப்படத் தொடங்கியது. அதற்குக் காரணம், அந்த வைரஸ் வகைகளின் மேல் நீண்டிருந்த குமிழ் போன்ற முனைகள்தான். அது கிரீடத்தை ஒத்திருந்தது. மனிதர்களிடம் தொற்றும் இந்த வைரஸ் குடும்பம் குறித்து முதலில் ஆராய்ந்த ஜூன் அல்மெய்டா, டேவிட் டைரெல் ஆகியோர் கரோனா வைரஸ் குடும்பம் என்று இதற்குப் பெயரிட்டார்கள். 1968இல் புகழ்பெற்ற 'நேச்சர்' அறிவியல் ஆய்விதழில் 'கரோனா வைரஸ்' என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

கரோனா தாக்கம்

இதுவரை ஆறு கரோனா வைரஸ் வகைகள் மனிதர்களைத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று கரோனா வைரஸ் வகைகளும் ஒரு துணைவகையும், மனிதர்களிடையே எப்போதும் சுற்றிக்கொண்டுதான் உள்ளன, அவை: OC43, HKU1, HCoV-229E (துணை இனம்), NL63. சளி போன்ற மிதமான பிரச்சினைகளையே இவை ஏற்படுத்துகின்றன. நமக்கு சளித் தொந்தரவை ஏற்படுத்துவதில் முதன்மைக் காரணமாக இருப்பவை ரைனோவைரஸ் எனப்படும், வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகைகள். அதேநேரம் 15 சதவீத சளித் தொந்தரவுக்கு கரோனா வைரஸ் வகைகள் காரணமாக இருக்கின்றன. வெப்பமண்டலப் பகுதிகளில் ஆண்டு முழுவதும், மிதவெப்பமண்டலப் பகுதிகளில் குளிர் மாதங்களிலும் இவை அதிகம் தாக்குகின்றன.

அதேநேரம் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் - 2002 (மிகத் தீவிரமான சுவாச நோய்க்குறி), மெர்ஸ் - 2012 (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி) போன்ற தீவிர நோய்த்தொற்றுகள் உலகை ஆட்டிப் படைத்தன. சார்ஸ் - சீனாவின் ஷுண்டே என்ற ஊரிலும், மெர்ஸ் - சௌதி அரேபியாவின் ஜெட்டா என்ற ஊரிலும் முதன்முதலில் கண்டறியப்பட்டன. சார்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 8,000, இறப்பு விகிதம் 9 சதவீதம். மெர்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2,500, இறப்பு விகிதம் 37 சதவீதம்.

அந்த வகையில் இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 மிக மோசமான நோய்த்தொற்று என்பதில் சந்தேகமில்லை. இதுவரையிலான கரோனா வைரஸ் தொற்றுகளில் இதுவே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. சமூகத்தின் அனைத்து விவாதங்களும் கரோனா வைரஸ் குடும்பம் பற்றியதாகத் திரும்புவதற்கு கோவிட்-19 என்ற தக்கினியூண்டுவைரஸே காரணம்.

கொரோனாவா, கரோனாவா?

அப்புறம் கடைசியாக இன்னொரு விஷயம். எல்லோரும் கொரோனா கொரோனா என்கிறார்கள், சிலர் மட்டும் கரோனா என்கிறார்கள். எது சரி? இந்தப் புதிய வைரஸின் மேற்புறத்தில் அரசர்களின் கிரீடத்தில் உள்ள குமிழ்களைப் போன்ற முனைகள் காணப்படுகின்றன. அதன் காரணமாகவே இந்த வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவற்றுக்கு கரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரவுன் என்ற ஆங்கிலச் சொல்லி்ன் மூலச்சொல், கரோனா என்ற லத்தீன் சொல். அந்தப் பெயரே இந்த வைரஸுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, கரோனா என்று சொல்வதே சரி. சந்தேகம் இருந்தால் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், மேக்மில்லன் அகராதிகளின் இணையதளங்களில் எட்டிப் பார்க்கலாம். எல்லாமே ஒன்றுபோல் கரோனா என்றே சொல்கின்றன.

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்